Written by London swaminathan
Date: 13 January 2017
Time uploaded in London:- 9-04 am
Post No.3540
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
2000 ஆண்டுக்கு முந்தைய தமிழ்ச் சங்க இலக்கியத்தில் டாக்டர்கள் பற்றிய குறிப்புகள் மிகவும் குறைவே. ஆனால் மருத்துவம் பற்றிய பழமொழிகளும் பிற்காலத்தில் எழுந்த இலக்கியங்களில் வரும் மருத்துவக் குறிப்புகளும் தமிழர்களின் மருத்துவ அறிவை விதந்து போறுவனவாய் உள. குறிப்பாக சங்க காலத்துக்குப் பின் எழுந்த திருக்குறளில் மருந்து என்ற தலைப்பில் வள்ளுவர் பாடிய பத்துக் குறள்களும் பத்தரை மத்துத் தங்கக் கட்டிகளே!
வாயைக் கட்டுப்படுத்து; பசித்த பின் சாப்பிடு– இதுதான் பத்து குறள்களின் ஒட்டுமொத்த முடிபு. ஆயினும் கடைசி இரண்டு குறள்களில் வரும் கருத்துகள் அக்காலத்தில் டாக்டர், கம்பவுண்டர் /நர்ஸ் ஆகியோர் இருந்ததையும் மருத்துவன் என்பவன் எப்படிப்பட்டவன் என்பதையும் காட்டுகின்றன.
சங்க இலக்கியத்தில் நற்றிணையில் ஒரே ஒரு டாக்டர் (மருத்துவன்) உவமை உள்ளது:-
அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடாது
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல
(பாடல் 136, நற்றிணை, நற்றங்கொற்றனார்)
“ஒரு நோயாளி கேட்டதை எல்லாம் கொடுக்காமல் அவனுக்கு நோய் தீருவதற்கான மருந்தை ஒரு டாக்டர் (அறவோன்) கொடுப்பது போல” — என்ற உவமையைப் புலவர் பயன்படுத்துவதிலிருந்து அக்கால மருத்துவர் நிலையை நாம் அறிய முடிகிறது.
திருவள்ளுவர், திருக்குறளில்,
நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் (குறள் 948)
பொருள்:
முதலில் நோய் என்ன என்று ஆராய்க; பின்னர் நோய் ஏன் வந்தது என்று அறிக; பின்னர் அதற்கான மருத்து என்ன என்பதைக் காண்க; அதற்குப் பின்னர் நோயாளியின் உடலுக்கு ஏற்ற மருந்தை கொடுக்க — என்று அழகாக நான்கு நிலைகலையும் ரத்தினச் சுருக்கமாகச் சொல்லுவான் வள்ளுவன்.
இதே போல
உற்றவன், தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் என்று
அப்பால் நாற்கூற்றே மருந்து (குறள் 950)
பொருள்:-
நோயாளி, டாக்டர், மருந்து, பக்கத்தில் இருந்து உதவி செய்யும் கம்பவுண்டர் அல்லது நர்ஸ் என்ற நான்கு அம்சங்களைக் கொண்டதே மருத்துவம்.
இதிலிருந்து அந்தக் காலத்திலேயே டாக்டருக்கு உதவி செய்யும் ஒருவனும் இருந்ததை அறிகிறோம். சிலர் நர்ஸ் என்றும் மற்றும் சிலர் கம்பவுண்டர் என்றும் உரை எழுதியுள்ளனர். எதுவாகிலும் மருத்துவம் உச்ச கட்டத்தை அடைந்து இருந்ததை இது காட்டும்.
பரிமேல் அழகர் எழுதிய உரையில் நான்கு என்பதை விரித்து 4 x4 = 16 ஆக குண நலங்களை விரித்துரைக்கிறார். அவர் முழுதும் ஆயுர்வேதம் என்ற மருத்துவத்தையே முழுதும் சுட்டிக்காட்டுகிறார்.
புத்தர் காலத்தில் ஒரு பிரபல டாக்டர் கண் ஆபரேஷனுக்கு எவ்வளவு கட்டணம் வசூலித்தார் என்பதை முன்னரே எழுதியுள்ளேன். அது போல அருணகிரிநாதர் கொடுக்கும் வியாதிகளின் பட்டியல், முருகன் ஒரு டாக்டர் என்ற திருப்புகழ் பாடல்கள் பற்றியும் எழுதியுள்ளேன். ஒருவேளை உண்பான் யோகி என்ற கட்டுரையிலும் உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கழகு என்ற கட்டுரையிலும் பல விவரங்களைக் கொடுத்து விட்டேன்.
சம்ஸ்கிருத நூல்களில் டாக்டர்!
இந்து மதத்தில் கடவுளை டாக்டர் (பிஷக்) என்றே அழைப்பர்; ஏனெனில் அவர் பிறவிப் பிணிக்கு மருந்து தருபவர்! யஜுர் வேதத்தில் பிஷக் என்றே சிவபெருமானை அழைப்பர்.
உலகப் புகழ் பெற்ற நூல்கள் எழுதிய சரகரும் சுஸ்ருதரும் சம்ஸ்கிருதத்தில் டாக்டர் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதையும் காண்போம்:-
ஒரு சர்ஜனின் (சஸ்த்ர சிகிச்சை செய்யும் டாக்டர்) குண நலன்கள்– சுஸ்ருத (சூத்ர) 5-10:-
சௌர்யம் = பயப்படாமல் ஆபரேஷன் செய்க;
ஆசுக்ரியா= லாவகமாக, டென்ஷன் ஆகாமல் ஆபரேஷன் செய்க;
அஸ்வதேவேபது= கை நடுங்கக் கூடாது; வியர்த்து ஒழுகக் கூடாது;
அசம்மோஹக = மனதில் குழப்பம் இருக்கக் கூடாது (என்ன செய்யப் போகிறோம் என்பதை தெளிவாக நினைவில் வைத்துக்கொள்க)
சௌர்யமாசுக்ரியா சஸ்த்ரதைக்ஷயமஸ்வேதபது
அசம்மோஹஸ்ச வைத்யஸ்ய சஸ்த்ர கர்மணி சஸ்யதே
–சுஸ்ருத (சூத்ர) 5-10
xxxx
சிறந்த வைத்யனின் குணாதிசயங்கள் (பிஷக்தமஸ்ய ஞானம்):-
ஹேது= நோய்க்கான காரணத்தை அறிபவன்;
லிங்க = நோயின் தன்மையை அறிவான்;
ப்ரசமன = என்ன சிகிச்சை தரவேண்டும் என்பதைத் துணிவான்
ரோகாணாம் அபுனர்பவ = அந்த நோய் மீண்டும் வராதபடி தடுப்பான்.
இந்த நான்கையும் அறிந்தவனே சிறந்த டாக்டர்!
ஹேதௌ லிங்கே ரோகாணாமபுனர்பவே
ஞானம் சதுர்விதம் யஸ்ய ச ராஜார்ஹோ பிஷ்க்தமஹ
–சரக (சூத்ரம்) 9-19
xxxx
நல்ல டாக்டரின் நாலு தகுதிகள்:–
ச்ருதே பர்யவதாதத்வம் = மருத்துவ நூல்களில் பேரறிவு;
பஹுசோ த்ருஷ்டகர்மதா = நல்ல அனுபவ அறிவு;
தாக்ஷ்யம் = திறமை;
சௌசம் = கை சுத்தம், உடல் சுத்தம் , மன சுத்தம், கிளினிக் CLINIC/SURGERY சுத்தம்
ஸ்ருதே பர்யவதாதத்வம் பஹுசோ த்ருஷ்டகர்மதா
தாக்ஷ்யம் சௌசமிதி ஞேயம் வைத்யே குணசதுஷ்டயம்
–சரக சூத்ரம் 9-6
xxx
நோயாளியை கவனிக்கும் முறை:-
மைத்ரீ = நோயாளியை நண்பனாகப் பார்;
காருண்யா = அவனிடம் இரக்கம் காட்டு ( எவ்வளவு கட்டணம் வைத்து ஆளிடம் கறக்கலாம் என்று திட்டம் போடாதே)
ப்ரீதி = அவனுக்கு மகிழ்ச்சி தரும் விதத்தில் செய்திகளைக் கொடு;
உபேக்ஷணம் = அவனிடம் அனுதாபம் காட்டு ( நோய் வந்ததற்காக அவனைக் குற்றவளிக் கூண்டில் நிறுத்தாதே)
மைத்ரீ காருண்யமார்தேஷு சக்யே ப்ரீதிருபேக்ஷணம்
ப்ரக்ருதிஸ்தேஷு பூதேஷு வைத்யவ்ருத்திஸ்சதுர்விதா
–சரக சூத்ர 9-26
Please read my old articles:
டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்–திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை2 ((Posted on 15 January 2015))
ஒரு வேளை உண்பான் யோகி (ஆமை போல நீண்ட காலம் வாழும் ரகசியம்) posted on 15-11-2012
–subham–
You must be logged in to post a comment.