WRITTEN by London Swaminathan
Date: 17 DECEMBER 2017
Time uploaded in London- 7-35 AM
Post No. 4507
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
ஆஸ்திரிய நாட்டு இசை மேதையும் சாஹித்ய கர்த்தாவுமான மோசார்ட் (Mozart) திரு ஞான சம்பந்தர் போல இளம் வயதிலேயே பாடல்களை எழுதியவர்; பாடியவர். அவரிடம் ஒரு பையன் வந்தான்.
ஐயா, எப்படி ஸிம்பனி (symphony ஸ்வரத் தொகுப்பு) எழுதுவது என்று எனக்குச் சொல்லுங்கள் – என்றான்
“அட, நீ ரொம்பச் சின்னவன். முதலில் நாட்டுப் பாடல், கதை பாட்டு (ballads) ஆகியவற்றை எழுதிப் பழகு” – என்றார்.
“என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? நீங்கள் மட்டும் பத்து வயதிலேயே ஸ்வரங்களை எழுதினீர்களே!”
அது உண்மைதான். ஆனால் ஸிம்பனி எப்படி எழுதுவது என்று நான் யாரிடமும் போய்க் கேட்கவில்லையே – என்றார்.
வான மயிலாடக் கண்டு தானும் அதுவாகப் பாவித்த வான் கோழியின் கதை போல உள்ளது அந்தப் பையன் கதை!
XXXX
பிரபல ஜெர்மன் தத்துவ ஞானி (Nietzsche) நீட்ஸே, வாக்னருடன் பேசிக்கொகொண்டிருந்தார்.
“நான் நினைக்கிறேன்; மோசார்ட் எழுதிய F பிகாரொவில் (Figaro) அற்புதமான இசையைக் கண்டு பிடித்து இருக்கிறார்”.
வாக்னர் (Wagner) சொன்னார்: அவர் அற்புதமான இசையைக் கண்டுபிடிக்கவில்லை. நீங்கள் சொன்னதற்கு நேர்மாறாக நடந்தது. அவர் இசையில் அற்புதத்தைக் கரைத்துவிட்டார்”.
XXX
அற்புத நினைவு சக்தி!
பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த குனோட் (Gunod) ஒரு சாஹித்யகர்த்தா (composer) ; பியானோ வாத்யக்காரர். அவர் மற்றொரு மேதையான பெர்லியோஸ் (Berlioz) எழுதிய ரோமியோவும் ஜூலியட்டும் என்ற இசை நிகழ்ச்சியின் ஒத்திகைக்குப் போயிருந்தார். மறுநாள் வீட்டுக்கு பெர்லிசோவை அழைத்தார். முதல்நாள் கேட்ட இசையை அப்படியே அ ட்சரம் பிசாகாமல் பெர்லியோஸுக்கு வாசித்துக் காண்பித்தார்.
அவருக்கு ஒரு பக்கம் வியப்பு; மற்றொரு பக்கம் திகைப்பு.
நன்றாக வாசித்தீர்கள் ஆனால் இதை எங்கிருந்து தெரிந்து கொண்டீர்கள்? என்று வியப்புடன் கேட்டார்.
அவருக்கு ஒரு சந்தேகம்; யாரோ தன்னுடையதைத் திருடிக் கொடுத்து இருக்க வேண்டும்; அல்லது இரண்டு பேர் ஒரே மாதிரி இசை அமைத்த உலக அதிசயம் நடந்திருக்க வேண்டும் என்று.
குனோட் சொன்னார்: “நான் உங்கள் ஒத்திகை நிகழ்ச்சிக்கு வந்தேனல்லவா?அப்போது கேட்டதைத்தான் நினைவில் வைத்து எழுதினேன்!”
XXX
அருவருக்கத்தக்க இசை!!!
சீஸர் ப்ராங்க் (Caesar Frank) என்பவர் நல்ல இசை அமைப்பாளர்; மிகவும் சாது. அதிகமாக வெளியே வந்தவர் அன்று; இதனால் அவரைப் பலருக்கும் தெரியாது. அவர் அமைத்த இசை முழங்கிய கச்சேரியில் அவர் ரஸிகப் பெருமக்களுடன் உட்கார்ந்திருந்தார். பொதுவாக புதிய இசை அமைப்பாளர்களுக்கு கடும் எதிர்ப்பு இருக்கும். அவருக்கும் பிற்காலத்தில்தான் அங்கீகாரம் கிடைத்தது.
அவர் உட்கார்ந்திருந்த வரிசைக்குப் பின்னால் செல்வச் செருக்குள்ள ஒரு சீமாட்டி உட்காந்திருந்தாள். அவள் அகந்தையின் உறைவிடம். ஒரு பாட்டுக்கும் இன்னொரு பாட்டுக்கும் இடையே ஏற்பட்ட இடைவெளி நேரத்தில் அந்தப் பெண் உரத்த குரலில் எந்த மடையன் அருவருக்கத்தக்க இந்தப் பாட்டை எழுதினானோ! என்று நகைத்தாள்.
ஸீஸர் ப்ராங்க் மெதுவாகப் பின்னால் திரும்பி, அம்மணி, இந்தப் பாட்டை எழுதியவன் நான்தான் – என்றார்
TAGS:- இசை ,மேதைகள், நினைவு சக்தி, இளம் வயது, மோசார்ட், குனோட், மடையன்
–subham–