Written by S NAGARAJAN
Date: 11 January 2017
Time uploaded in London:- 6-22 am
Post No.3533
Pictures are taken from different sources; thanks.
Contact: swami_48@yahoo.com
பாரதி இயல்
மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 19
ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 4
ச.நாகராஜன்
ஏ.கே. செட்டியாரின் குமரி மலரில் வெளியான கட்டுரைகள்
குமரி மலரில் வெளியாகியுள்ள இன்னும் சில கட்டுரைகள் பற்றிய செய்திகளை காண்போம்
35) நவசக்தியில் திரு.வி.க. எழுதிய உப தலையங்கம் இது.
காலஞ்சென்ற பாரதியாரின் நூல்கள்
தென்னாட்டு தாகூரென போற்றப்பட்டு வந்த ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதியின் மனைவியார் நமக்கு அனுப்பியுள்ள ஒரு நிருபத்தை மற்றொரு இடத்தில் வெளியிட்டிருக்கிறோம்.
காலஞ்சென்ற பாரதியாரின் பாடல்களும் வசனங்களும் ஒழுங்காக வெளியிட முயற்சி செய்யப்படுகிறது என்பதை அறிந்து நாம் பெரிதும் சந்தோஷிக்கிறோம்.
அதற்காகப் பொருளுதவி செய்யும்படி தமிழ்நாட்டாரை ஸ்ரீமான் பாரதியாரின் மனைவியார் கேட்கிறார். இவ் வேண்டுகோளுக்குத் தமிழ்நாட்டார் எவ்விதத்திலும் பின்வாங்க மாட்டார் என்று நம்புகிறோம்.
ஸ்ரீமான் பாரதியார் ஐரோப்பாவிலேனும் அமெரிக்காவிலேனும் பிறந்திருப்பாராயின் அவருக்கு இது காலை எத்தனை ஞாபகச் சின்னங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் என்பதை நாம் கூற வேண்டுவதில்லை.
தமிழ்நாட்டாரிடமிருந்து அவ்வளவு பெரிய நன்றியறிதலை நாம் எதிர்பார்க்கவில்லையே யாயினும், அவருடைய நூல்கள் நல்ல முறையில் வெளிவருவதற்கேனும் போதிய துணைபுரிவார்கள் என்று நம்புகிறோம்.
- ‘நவசக்தி’
உப தலையங்கம் 30-9-1921
ஆசிரியர் திரு.வி.க
இந்த்க் குமரி மலர் கட்டுரை 1921இல் பாரதியாரின் மனைவியார் எவ்வளவு மனக் கஷ்டத்துடன் இந்த வேண்டுகோளை வைத்திருப்பார் என்பதை அறிய வைக்கிறது.
36) குமரி மலரில் அடுத்து இடம் பெறுவது
உ.வே.சாமிநாதையரின் நினைவு மஞ்சரி நூலில் இடம் பெற்றிருக்கும் கட்டுரை
இதை நமது தொடரில் எதிர் வரும் பகுதியில் தனி அத்தியாயத்தில் காண்போம்.
37) குமரி மலரில் அடுத்து இடம் பெறுவது ‘பஞ்சாமிர்தம்’ என்ற பத்திரிகையில் வெளி வந்த ஒரு சிறு கட்டுரை
சுப்பிரமணிய பாரதியார் கவிதை
[சென்னை உயர்நீதி மன்றத்தில் பிரதம் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றுள்ள ஸ்ரீ மா.அனந்த நாராயணன் அவர்கள், தாம் மாணவராக இருந்த பொழுது தம் தந்தையார் ஸ்ரீ அ.மாதவையா அவர்கள் வெளியிட்ட ‘பஞ்சாமிர்தம்’ என்னும் சிறந்த மாதப் பத்திரிகையில் பாரதியார் கவிதை குறித்து இரண்டு கட்டுரைகளை எழுதியுள்ளார். அதில் ஒரு ப்குதியை இங்கு வெளியிடுகிறோம்]
உவமைகளைக் கையாளுவதில், பாரதியாரைப் போல் சிறந்தவர், தற்காலக் கவிஞர்களில் எவருமில்லையென்று தடையின்றிச் சொல்லலாம்.
பாரதியாரின் கற்பனா சக்தி சாதாரணமானதன்று. இதனால், சிறிய, தனிப்பட்ட உவமைகளன்றி, நீடித்த உருவக நூல்களை இயற்றும் திறமையும், பாரதியாருக்குண்டு. இப்படிப்பட்ட வசன நூல் ‘ஞான ரதம்’, செய்யுள் நூல் ‘குயிற் பாட்டு;. பிற் கூறியதன் வெளிப் பொருள் அழகான உருக்கமான ஒரு குயிலைப் பற்றிய கதை. இந்தக் கதையை, பாரதியார் வேண்டுகோளின் படி வேதாந்தமாக விரித்துரைக்க வல்லவர் ஒருவர் இருந்தால், அவர் மஹா மேதாவியாவார்.
‘கண்ணன் பாட்டு’ம், பாரதியாரின் உருவக வன்மையை நன்கு விளக்கும். கண்ணபிரானைத் தாயாகப் பாவித்துப் பாடிய ‘கண்ணன் – என் தாய்’ என்ற சிந்து முழுதும், ஒரு நிகரற்ற உருவகத் தொடர்ச்சியாம்.
பாரதியாரின் சிறிய உவமைகளும் கவனிக்கத் தககவை. ம்கா யுத்தத்தில், எல்லா நாடுகளிலும், சின்னதும் பலம் குறைந்ததுமான பெல்ஜியம், தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் பொருட்டு, படைச் செருக்குற்ற ஜெர்மனியைத் தன்னந்தனியே முதலில் எதிர்த்தது, பாரதியாருக்கு அதில் உற்சாகத்தை அளித்தது. ‘பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து’ என்ற கவியில், அவர் மிக அழகாக உவமையொன்றை அமைத்திருக்கிறார்.
‘அறத்தினால் வீழ்ந்து விட்டாய், அன்னியன் வலியனாகி
மறத்தினால் வந்து செய்த வன்மையைப் பொறுத்தல் செய்யாய்
முறத்தினால் புலியைக் காக்கும் மொய்வரைக் குறப்பெண் போலத்
திறத்தினால் எளியையாகிச் செய்கையால் உயர்ந்து நின்றாய்”
காதற் பாட்டொன்றில், காதலன் காதலியை நோக்கி ,
“வட்டங்களிட்டும் குளம் அல்லாத
மணிப் பெரும் தெப்பத்தைப் போல – நினை
விட்டு விட்டுப் பல லீலைகள் செய்தும், நின்
மேனி தனை விடலின்றி” என்கிறான்.
பின் வரும் உவமையும் பல விதத்தில் சிறந்தது –
“ஆங்கொரு கல்லை வாயிலிற் படி என்று
அமைத்தனன் சிற்பி; மற்றொன்றை
ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்று
உயர்த்தினான்; உலகினோர் தாய் நீ;
யாங்கணே எவரை எங்ஙனம் சமைத்தற்கு
எண்ணமோ, அங்ஙனம் சமைப்பாய்”
பாரதியாரின் எளிய நடையைப் பற்றிப் பேச வேண்டியது ஒன்றுமில்லை? ஏனெனில், வேறெந்த நடையும் அவர் உபயோகிக்கவில்லை. ‘செந்தமிழ் நாடு”, “பாப்பா பாட்டு”, “முரசு”, “சுதந்திரப் பள்ளு” முதலிய செய்யுட்களில் சாதாரண வழக்கில் காணப்படாத வார்த்தைகளே இல்லை. அப்படியிருந்தும், இசை இனிமையும், கருத்துயர்வும் பொருந்தியிருப்பது தான் கவித்திறன்.
- பஞ்சாமிர்தம்
- 1925 ஆனி
குமரி மலரில் ஏ.கே. செட்டியார் அவர்கள் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்த கட்டுரைகளைத் தான் நாம பார்த்து வருகிறோம்.
இவை அவரால் தொகுத்துத் தரப்படவில்லையெனில் இப்படிப்பட்ட கட்டுரைகள் வந்திருப்பதை தமிழுலகம் அறிந்திருக்காது.
தமிழகத்தின் தவப் பயனாய் வந்த பாரதியாரைப் போற்றி அவர் பற்றிய இலக்கியச் செல்வங்களை அளித்த தவம் செய்த செல்வருள் ஒருவர் ஏ.கே. செட்டியார் என்பதை குமரி மலர் கட்டுரைகளின் மூலம் அறியலாம்.
இன்னும் சில கட்டுரைகளை அடுத்து இந்தத் தொடரில் பார்ப்போம்.
-தொடரும்
***