கங்கை, காவிரி, குமரி பற்றி அப்பரும் ஆழ்வாரும் பாடியது ஏன்? (Post No.4101)
Written by London Swaminathan
Date: 21 July 2017
Time uploaded in London- 13-45
Post No. 4101
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
இந்த நாட்டை வெள்ளைக்காரன்தான் ஒற்றுமைப் படுத்தினான், அதற்கு முன்பாக இந்தியர்களுக்கு பரந்த இந்த பாரத நிலப்பரப்பு ஒரே நாடு என்பதே தெரியாது என்று பல திராவிடங்களும் மார்கஸீயங்களும் பிதற்றுவதைக் கேட்டிருப்பீர்கள். அவர்கள் சாலை போடாவிடில், ரயில்வே லைன் போடாவிடில் நாடே ஒற்றுமை அடைந்திருக்காது என்று அதுகளும் இதுகளும் திண்ணையில் உட்கார்ந்து அங்கலாய்ப்பதையும் பார்த்திருப்பீர்கள் இதெல்லாம் உண்மையில்லை என்பதற்குச் சான்று சங்கத் தமிழ் நூல்கள் முதல் பாரதி பாடல் வரை உள்ளது.
ஒரு சில எடுத்துக் காட்டுகளை மட்டும் பார்ப்போம்-
கங்கை- காவிரி இணைப்பு பற்றி அடிக்கடி பேசுகிறோம். ‘கங்கையை விட புனிதமான காவிரி’ என்று ஒரு ஆழ்வார் பாடுகிறார். இன்னும் ஒரு இடத்தில் ‘கங்கை ஆடிலென், காவிரி ஆடிலென்’ என்று புண்ய தீர்த்தத்தில் குளிப்பது பற்றிப் பாடுகிறார்.
இதோ அப்பர் வாக்கு:-
கங்கை யாடிலென் காவிடி யாடிலென்
கொங்கு தண்குமரித்துறை யாடிலென்
ஓங்கு மாகடல் ஓத நீராடிலென்
எங்கும் ஈசனெனா தவர்க்கில்லையே
–ஐந்தாம் திருமுறை
நமது தந்தையர் காலத்தில் வாழ்ந்த பாரதியோ ‘கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்’ என்கிறான்.
கம்ப வர்மனின் திருவாமூர்க் கல்வெட்டில் ‘கங்கையிடை குமரி இடை எழுநூற்றுக் காதமும்’ – என்ற வரி உள்ளது.
கம்பவர்மனின் திருவாமூர்க் கல்வெட்டு
ஸ்ரீ கம்ப பருமற்கு
யாண்டு இருபதாவது
பட்டை பொத்தனுக்கு ஒக்கொண்ட நாகன் ஒக்க
தித்தன் பட்டைபொத்தன் மேதவம் புரிந்ததென்று
படாரிக்கு நவகண்டங் குடுத்து
குன்றகத்தலை அறுத்துப் பிடலிகை மேல்
வைத்தானுக்கு
திருவான்மூர் ஊரார் வைத்த பரிசாவது
எமூர்ப் பறைகொட்டக்
கல்மேடு செய்தராவிக்குக் குடுப்பாரானார்
பொத்தனங் கிழவர்களும் தொறுப்பட்டி நிலம்
குடுத்தார்கள்
இது அன்றென்றார்
கங்கையிடைக் குமரி இடை எழுநூற்றுக் காதமும்
செய்தான் செய்த பாவத்துப் படுவார்
அன்றென்றார் அன்றாள் கோவுக்கு
காற்ப்பொன் றண்டப்படுவார்
கங்கை நதி உலகின் மிகப் பழமையான, உலகின் முதல் கவிதைத் தொகுப்பான ரிக் வேதத்திலும் உள்ளது. எதற்காக இப்படி கங்கையையும் காவிரியையும் இணைத்துப் பேசுகின்றனர்?
இந்த நாடு ஒன்றே!
இந்தப் பண்பாடு ஒன்றே!!
என்பதை எடுத்துரைக்கத்தான் காரிகிழார் முதல் (புறநானூறு பாடல் 6) பாரதி வரை இமயம்-குமரி பற்றிப் பாடுகின்றனர்.
சேரன் செங்குட்டுவனும், கரிகால் சோழனும் இமயம் வரை சென்று சின்னங்களைப் பொறித்தது ஏன்?
கண்ணகி சிலைக்காக, இமயத்தில் கல் எடுத்து, கங்கையில் அதைக் குளிப்பாட்டிக் கொண்டு வந்தது ஏன்?
காளிதாசனின் ரகு வம்ச காவியத்தில் ஈரான் முதல் பாண்டியநாடு வரை ரகுவின் திக்விஜயம் செல்கிறது. இந்துமதி சுயம்வரத்துக்கு வந்த அரசர்களும் பாண்டியநாடு முதல் ஆப்கனிஸ்தான் வரை பல நாடுகளிலிருந்து வந்துள்ளனர். ஆக 2000 ஆண்டுகளுக்கு முன்னரே நாம் ஒரு நாடு, நாம் ஒரே பண்பாடு என்ற கொள்கை மனதில் ஆழ வேரூன்றிவிட்டது.
திருமூலர் இமயத்தையும் சிதம்பரத்தையும் இலங்கையையும் இணைத்துப் பாடியது ஏன்?
“மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூரும் இவ்வானில் இலங்கைக் குறியுறுஞ்
சாருந்திலை வனத் தன் மாமலயத்து
ஏறுஞ் சுழுனை இவை சிவபூமியே”. (திருமந்திரம் – 2747)
(திருமூலரும் தீர்க்கரேகையும் என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் இப்பாடல் பற்றி மேல்விவரம் காண்க)
கல்வெட்டிலும் கூட கங்கை காவிரி பற்றி இருக்கிறது! ஆக நமது நாட்டில் அப்பர் காலத்துக்கு முன்னரே, காளிதாசன் காலத்துக்கு முன்னரே, சங்க காலத்துக்கு முன்னரே இமயம் முதல் குமரி வரை ஒன்று என்ற கொள்கை இருந்திருக்கிறது.
வெள்ளைக்காரன் ரோடு போட்டதும், ரயில் பாதை போட்டதும் அவனுடைய படைகளையும் விற்பனைப் பொருட்களையும் கொண்டு வந்து நம்மை அடக்கி வைக்கவும், கோஹினூர் போன்ற பொக்கிஷங்களைக் கடத்தவும்தான் என்பதை அறிக.
தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுக்க அகத்தியனை இமய மலையிலிருந்து சிவபெருமான் அனுப்பியதும் வரலாற்று உண்மை. தொல்காப்பியம் முதல் பாரதி பாடல் வரை இது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது
நமது வரலாற்றுப் புத்தககங்களை மாற்றி எழுதி நம் பிள்ளைகளுக்கு சரியான வரலாற்றைக் கற்பிக்க வேண்டும்.
இது நமது தலையாய கடமை!
–SUBHAM–
TAGS:– கங்கை, காவிரி, குமரி, ஒற்றுமை, வெள்ளைக்காரன்
You must be logged in to post a comment.