பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை (Post No.3531)

Written by London swaminathan

 

Date: 10 January 2017

 

Time uploaded in London:-6-24 am

 

Post No.3531

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

பட்டினத்தார் பாடல் எளிமையான வரிகளில் பெரிய கருத்துக்களைப் போதிக்கிறது. எல்லோருக்கும் தெரிந்த பஞ்சதந்திரக் கதையைக் கூட அவர் ஆன்மீகச் செய்தியைப் பரப்பவும், உணர்த்தவும் பயன்படுத்துகிறார்.

 

கவர் பிளந்த மரத்துளையிற் கால் நுழைத்துக் கொண்டே

ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல

அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே. — பட்டினத்தார் பாடல்

 

 

அது என்ன குரங்கு கதை?

 

ஏற்கனவே பஞ்ச தந்திரக் கதைகள் படிக்காதவர்களுக்கும், படித்து மறந்தவர்களுக்கும் சுருக்கமாகத் தருகிறேன்:-

 

 

ஒரு ஊரில் பணக்கார வணிகன் ஒருவன் கோவில் கட்டுவதற்கு ஆசைப்பட்டான். ஊருக்கு வெளியேயுள்ள தோப்பில் நிலம் ஒதுக்கினான். நிறைய கட்டிடக் கலைஞர்கள் வேலைகளைத் துவக்கினர். சிலர் கல் தச்சர்கள் ; மற்றும் பலர் மரத் தச்சர்கள். மத்தியானம் உணவு நேரம் வந்துவிட்டால் ஊருக்குள் போய்ச் சாப்பிட்டுவிட்டு தோப்புக்குத் திரும்பி விடுவர். ஒரு நாள் ஒரு பெரிய கருங்காலி மரத்தைப் பாதி அறுத்த தச்சன் அதன் பிளவில் ஒரு மரத்தால் ஆகிய ஆப்பு ஒன்றைச் சொருகி வைத்துவிட்டுச் சாப்பிடச் சென்றான்.

 

அந்தத் தோப்பில் நிறைய குரங்குகள் இருந்தன. ஒரு குரங்குக்கு “விநாச காலே விபரீத புத்தி” என்ற பழமொழிக்கு இணங்க கோணல் புத்தி வந்தது. மரத்திலிருந்து கீழே இறங்கி வந்து அந்தக் கருங்காலி மரத்தின் பிளவுக்குள் காலை வைத்துக் கொண்டு பலம்கொண்ட மட்டும் அந்த ஆப் பை இழுத்தது. ஆப்பு வெளியேவந்த அதே நேரத்தில் மரத்தின் பிளவு மூடுபட்டு குரங்கின் காலைக் கவ்விப்  பிடித்தது. குரங்கு தப்பிக்க முடியாமல் கீச்சு கீச்சு என்று கத்தியது. இதுதான் “வேண்டாத சனியனை விலை கொடுத்து வாங்கிய”தற்குச் சமம்.

இப்படி குரங்கு போய், ஆப்பு வைத்த இடத்தில் கால் சிக்கியது போல, நாம் எல்லோரும் ஆசை வயப்பட்டு சிக்கிக் கொள்கிறோம். குரங்கு சப்தமிட்டது போலவே நாமும் துயரம் வருகையில் ஓலம் இடுகிறோம். இதைப் பட்டினத்தார் மிக அழகாகப் பாடுகிறார்:-

 

“நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி

நலம் ஒன்றும் அறியாத நாரியரைக் கூடிப்

பூப்பிளக்கப் பொய்யுரைத்துப் புற்றீசல் போலப்

புலபுலெனக் கலகலனப் புதல்வர்களைப் பெறுவீர்

காப்பதற்கும் வழியறியீர் கைவிடவும் மாட்டீர்

கவர் பிளந்த மரத்துளையிற் கால் நுழைத்துக் கொண்டே

ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல

அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே.

— பட்டினத்தார் பாடல்

(நவ நிதியம்= ஒன்பது பெரிய நிதிகள், நாரி=பெண், பூப்பிளக்க= பூமியே பிளக்கும் அளவுக்கு/ நாக்கு கிழிய)

 

விலைமாதுடன் பட்டினத்தார் மோதல்

செல்வச் செழிப்பில் மிதந்த பட்டினத்தார், ஒருமுறை  விலை மகளிர் வீட்டுக்கு இன்பம் துய்க்கப் போனார். அந்த இருமனப் பெண்டிரோ இந்த ஆள் நல்ல காம வேட்கையுடன் வந்துள்ளான். ஆளை கொஞ்சம் காக்கப்போட்டு நன்றாகப் பணம் கறக்கலாம் என்று திட்டமிட்டாள். இவர் வாசல் திண்ணையில் நெடுநேரம் காத்திருந்தபின் அந்தப் பெண் மினுக்கி குலுக்கி நடந்து வந்தாள். பட்டினத்தாருக்கு கொஞ்சம் ஞானம் பிறந்தது.

ஒரு பட்டுப் பாடினார்:-

சீ போ, கழுதை! உன்னுடன் இன்பம் துய்க்க /அனுபவிக்க வந்த ஆள் போய்விட்டான். இனி நான் உன்னைத் தொட்டால் என்னைக் காலால் எட்டி உதை. நீ என்னைத் தொட்டாலோ நான் உன்னை எட்டி மிதிப்பேன்.

 

தோடவிழும் பூங்கோதைத் தோகை உனை இப்போது

தேடினவர் போய்விட்டார் தேறியிரு — நாடி நீ

என்னை நினைந்தால் இடுப்பில் உதைப்பேன், நான்

உன்னை நினைத்தால் உதை.

–பட்டினத்தார் பாடல்

 

–Subham–