
WRITTEN BY S NAGARAJAN
Post No. 8019
Date uploaded in London – – – 22 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஞானம் பெற்று விட்டேனா, குருவே!
ச.நாகராஜன்
அதனால் யாருக்கு என்ன லாபம்?
பெரிய மகான் ஒருவர் நகர்ப்புறத்தில் குடில் ஒன்று அமைத்து தவம் செய்து கொண்டிருந்தார்.
தொலைதூரத்தில் வசித்து வந்த அவரது சீடன் ஒருவன் அவருடன் கடிதம் மூலம் தொடர்பு கொள்வது வழக்கம். தனது முன்னேற்றம் பற்றி அவ்வப்பொழுது அவன் தெரிவித்துக் கொண்டே இருந்தான்.
‘மாதம் ஒரு முறை கடிதம் எழுது’, என்றார் குரு.
முதல் கடிதம் வந்தது : “நான் சொர்க்கத்தை என் அகக் கண்ணில் தரிசனம் செய்கிறேன். என்னை தேவதைகள் தூக்கிச் சென்று பறப்பது போல ஒரு ஆனந்தம். மேலிருந்து அகில உலகத்தையும் பார்க்கிறேன்.”
ஹூம் என்று முனகிய குரு அதைக் கசக்கித் தூக்கிப் போட்டார்.
அடுத்த மாதக் கடிதம் வந்தது : “பிரபஞ்சம் முழுவதையும் பார்க்கிறேன். நானே பல உலகங்களைப் படைக்கிறேன். எனது அகத்தில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்கிறேன்.”
ஹூம் என்று முனகிய குரு அந்தக் கடிதத்தைக் கிழித்துப் போட்டார்.
அடுத்த மாதம் கடிதம் வந்தது : “ஒரு மாதம் தியானத்தில் அமர்ந்தேன். சாப்பிடக்கூட இல்லை. எனது மனம் வெறும் கடல் போல இருக்கிறது. எவருடைய ஔராவையும் (Aura) என்னால் பார்க்க முடிகிறது. ஒரு க்ஷணத்தில் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் என்னால் பார்க்க முடிகிறது.”
குரு வருத்தமான முகத்துடன் அதைச் சுக்கல் நூறாகக் கிழித்துப் போட்டார்.
இதே போல பல சீடர்களிடமிருந்தும் அவருக்குக் கடிதம் வருவது வழக்கம்.
ஆறு மாதங்கள் உருண்டு ஓடின.

ஆனால் மாதாமாதம் தவறாமல் தன் முன்னேற்றத்தை எழுதி வந்த சீடரிடமிருந்து ஆறு மாதங்களாகக் கடிதமே வரவில்லை.
குரு உடனே அவருக்குக் கடிதம் எழுதினார்: ”ஏன் ஆறு மாதங்களாகக் கடிதமே எழுதவில்லை. உடனே என்ன நடக்கிறது என்று பதில் போடு” என்று!
பதில் கடிதம் வந்தது : ”அதனால் யாருக்கு என்ன லாபம்?”
குரு புன்முறுவல் பூத்தார்.
ஆஹா, ஞானம் வந்து விட்டது என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்.
*
நீர் போல இரு!

களரி தற்காப்புக்கலை கற்றுக் கொள்ள வந்த மாணவன் ஒருவன் மைதானத்தில் மாஸ்டர் சொன்னபடி பயிற்சி செய்ய முயன்று கொண்டிருந்தான்.
ஏராளமான மற்ற மாணவர்கள் ஆங்காங்கே மைதானத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். மற்ற மாணவர்கள் ஆங்காங்கே இருந்ததால் அந்த மாணவனால் உரிய முறையில் பயிற்சி செய்ய முடியவில்லை.
அவன் விரக்தியுடன் சோகமாக இருந்தான். மாஸ்டர் அவன் அருகே சென்றார். தோளைத் தட்டி. “என்ன பிரச்சினை?” என்றார்.
“எனக்குத் தெரியவில்லை. எவ்வளவு முயன்றாலும் எதையும் சரியாகச் செய்ய முடியவில்லை” என்றான் அவன்.
“பயிற்சியைக் கற்பதற்கு முன்னால் லயம் என்றால் என்ன என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும். என்னுடன் கூட வா” என்றார் மாஸ்டர்.
மைதானத்தை விட்டு வெளியே வந்த மாஸ்டர் அருகிலிருந்த பசுமையான மரங்கள் அடர்ந்த காட்டிற்கு அவனை அழைத்துச் சென்றார்.
அங்கு ஒரு அழகிய பெரிய நதி பாய்ந்து கொண்டிருந்தது. வெள்ளமெனத் தண்ணீர் அதில் வேகமாகப் பாய்ந்து சென்று கொண்டிருந்ததை மாஸ்டர் அந்த மாணவனுக்குச் சுட்டிக் காட்டினார்.
“அதோ, பார். நதி செல்லும் வழியில் சிறிதும் பெரிதுமாக எத்தனை பாறைகள் இருக்கின்றன! நதி சற்றேனும் சுணக்கப்படுகிறதா? அது தன்வழியே பாறைகளைச் சுற்றி வேகமாக முன்னேறிச் சென்று கொண்டே இருக்கிறது. அந்த நீர் போல இரு. அப்போது தான் உனக்கு லயம் என்றால் என்ன என்று தெரியும்.”
மாணவனுக்கு விஷயம் புரிந்தது. மாஸ்டரின் உபதேசத்தை மனதில் கிரஹித்துக் கொண்டான்.
மைதானத்திற்குச் சென்றான். தனது பயிற்சியில் மட்டும் கவனம் செலுத்தினான். ஏராளமான மாணவர்கள் இருப்பதையும் அவர்கள் கூச்சலுடன் பயிற்சி செய்வதையும் பற்றி அவன் அலட்டிக் கொள்ளவே இல்லை.
என்ன ஆச்சரியம், எல்லா உத்திகளும் தாமாக வந்தன! அனைத்தையும் அவன் சுலபமாகப் பயின்றான்.
மாஸ்டர் சிரித்தார்; அவனும் சிரித்தான்!
நீர் போல இரு என்பது ஒரு பெரும் மகத்தான உபதேசம். வெள்ளமெனச் சுழித்தோடும் பெரும் ஜீவ நதி தயங்குவதே இல்லை; நெகிழ்வுடன் ஜிலுஜிலுவென அது தன் வழியே பாய்ந்தோடுகிறது!
அதற்குள்ள மகிழ்ச்சியும் செயல்திறனும் அந்த நீரோட்டத்தைப் பார்த்தவர்களுக்கும் பற்றிக் கொள்கிறது.
வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் நீர் போல இருக்க வேண்டும்!
tags — நீர் போல, ஞானம், குரு

You must be logged in to post a comment.