
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9137
Date uploaded in London – –13 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து வாரம் தோறும் திங்கள்கிழமை மாலை இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 11-1-2021 அன்று ஒளிபரப்பான உரை. இதை www.facebook.com/gnanamayam தளத்திலும் youtubeலும் எப்போதும் காணலாம்.
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.

சிங்கப்பூரிலிருந்து ஸ்ரீ லக்ஷ்மி அவர்கள் கேட்டுள்ள கேள்வி ய என்ற குறில் எழுத்துக்கு என்ன பொருள்? என்று.
திரு சுவாமிநாதன் எழுதிய கட்டுரை ஒன்றில் ஜே – J மற்றும் ஒய் Y ஆகிய இரு எழுத்துக்கள் மாறும் விதத்தைச் சுட்டிக் காட்டி ஜீஸஸ் எப்படி யேசுவாக ஆகிறது என்பதையும் எடுத்துக்காட்டாகக் காட்டியுள்ளார்.
இதே போல வங்காள மொழியில் பாகபதம் என்பது தமிழில் பாகவதம் ஆகும். ஷிப் சாகர் என்பது தமிழில் சிவ சாகர் ஆகும். பெங்கால் என்பது வங்காளம் ஆகும்.
இதே போல ஸ்தோத்திரம் என்ற சம்ஸ்கிருதச் சொல் தமிழில் தோத்திரம் ஆகும்; ஸ்துதி துதி ஆகும் இப்படி மாறுவது பிரதேச ரீதியிலான இயற்கையாகும்.
இனி ஆதார எழுத்துக்கள் 51. இவற்றில் ‘ய’வும் ஒன்று. அதைப் பற்றிய கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.
ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியே ஒரு தேவதை உண்டு. பல அர்த்தங்கள் உண்டு. இவற்றை தந்திர சாஸ்திரங்களில் காணலாம். பிரயோக முறையை சிறந்த தாந்த்ரீகர்களே சொல்ல முடியும்.
ய என்ற எழுத்திற்கு மந்த்ராபிதானம், ப்ரகாராந்தர மந்த்ராபிதானம், ஏகாக்ஷர கோச, பீஜ நிகண்டு, மாத்ருகா நிகண்டு, காமதேனு தந்த்ரம் உள்ளிட்ட ஏராளமான தந்திர சாஸ்திரங்களில் பல அர்த்தங்கள் தரப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டாக ப்ரகாராந்தர மந்த்ராபிதானம் என்ற தந்த்ர சாஸ்திரத்தில்
ய என்ற எழுத்திற்கு கீழ்க்கண்ட அர்த்தங்கள் தரப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டலாம்.

Ya denotes : Vani, Vasudha, Vayu, Vikrti, Purusottama, Yuganta, Svasana, Sighra, Dhumra, Arci, Pranisevaka, Brahma, Jati, Lola இவை உள்ளிட்ட சுமார் 55 அர்த்தங்கள் உண்டு. இன்னும் பல்வேறு தந்திர சாஸ்திரங்கள் இன்னும் பல அர்த்தங்களைத் தருகின்றன.
ஸித்த சாபர தந்திரம், சேஷ சம்ஹிதா, பாத்ம சம்ஹிதா ஆகிய நூல்கள் ஒவ்வொரு எழுத்தின் தேவதை, நிறம், அந்த எழுத்தை உச்சரிப்பதால் ஏற்படும் பலன் உள்ளிட்டவற்றைத் தருகின்றன.
‘ய’ பற்றி சித்த சாபர தந்திரமும், பாத்ம சம்ஹிதாவும் என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம்:
‘ய’ பற்றி சித்த சாபர தந்திரம் தரும் அபூர்வ உண்மைகள் :-
இந்த ‘ய’கார தேவியின் பெயர் தீபிநீ. வெண்மையான சரீரத்துடன் 8 கைகளோடு சிம்ம வாஹனம் ஏறி 1) சூலம் 2) வில் 3) பாணம் 4) பாசம் 5) கத்தி 6) கேடயம் 7) வாத ஹஸ்தம் 8) அபயம் என இப்படி 8 வகை ஆயுதத்துடன் பிரகாசிப்பவள் ஆகும்.

பாத்ம சம்ஹிதா தரும் விவரங்கள் :
இந்த ‘ய’காரத்திற்கு வாயு தேவதையாகும். தாம்ர வர்ணம். இரண்டு கைகளிலும் 1) அங்குசம் 2) த்வஜம் தரித்து ஸர்வாபரணங்களுடன் மான் மீது ஏறிக் கொண்டு கம்பீரமாக விளங்குவார்.
இது வாயு தேவதை ஆனதால் காற்று போல் எல்லாவற்றையும் பரிசுத்தமாக்கும் தன்மை உடையது. மேலும் எல்லா பாவங்களிலிருந்தும் விடுவிக்கும் சக்தி உடையதாகும்.
அருட்பிரகாச வள்ளலார் சிவாய நம என்பதை விளக்கி அருளும் போது சி என்பது பதி என்றும் வா சத்தி என்றும் ய என்பது ஜீவன் என்றும் ந என்பது திரோதை என்றும் ம என்பது மாயை என்றும் குறிப்பிடுகிறார். நமசிவாய என்ற பஞ்சாக்ஷரத்தால் ஏம சித்தியும் தேக சித்தியும் உண்டாகும். ‘சிவாய நம’ எனச் செப்ப செம்பு பொன்னாயிடும் என்ற திருமூலர் வாக்கையும் ‘சிவாய நம் என்று சிந்தித்திருப்பார்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை’ என்ற அவ்வையார் வாக்கையும் அவர் பிரமாணமாகச் சுட்டிக் காட்டுகிறார்.
சைவ சித்தாந்த நூல்கள் ய என்ற எழுத்திற்கான சிறப்பு அர்த்தத்தை விரிவாக எடுத்துரைக்கின்றன. உமாபதி சிவாசாரியார் அருளியுள்ள கொடிக் கவியில் நான்காம் பாடல் நம சிவாய என்பதன் ஆழ்ந்த அர்த்தத்தையும் ரகசியத்தையும் தருகிறது.
சிவாய நம என்பதில் சிகாரத்தில் சிவமும், வகாரத்தில் அருளும், யகாரத்தில் உயிரும், நகாரத்தில் திரோதான சக்தியும் மகாரத்தில் மலமும் உள்ளன. சிகார வகாரங்களை முதலில் வைத்து உச்சரித்தால் அது வீடு பேற்றைத் தரும். இதை நல்லாசிரியர் அல்லது குருவிடமிருந்து உபதேசம் மூலம் பெறுதல் வேண்டும். அப்போது பலன்கள் தெரியும்.
மந்த்ர ராஜம் என்று அழைக்கப்படும் காயத்ரி மந்திரத்தில் – ஓம் தத் ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி; தியோயன: ப்ரசோதயாத் என்பதில் வரும் 24 எழுத்துக்களும் 24 விதமான சக்தியைத் தருகின்றன.
இதில் வரும் ஸ்ய என்பது இடது மார்பைக் குறிக்கிறது. யாத் என்பது தலையைக் குறிக்கிறது. காயத்ரி என்பதில் வரும் மூன்று எழுத்துக்களில் க என்பது கங்கையையும் ய என்பது யமுனையைய்ம் த்ரி என்பது த்ரிவேணி சங்கமத்தையும் குறிக்கிறது.
காயத்ரி என்பதில் வரும் ய என்பது விஷ்ணுவைக் குறிப்பதாக அருட்பிரகாச வள்ளலார் குறிப்பிடுகிறார்.
காயத்ரி மந்திரத்தில் வரும் எழுத்துக்களின் பயன் குறித்து காயத்ரி வர்ணமாலா ஸ்தோத்ரம் என்று ஒரு ஸ்தோத்ரம் உள்ளது. ஒவ்வொரு அக்ஷரத்தையும் பற்றிய ரகசியத்தை அருளும் ஸ்தோத்ரம் இது.
அதில் ஸ்ய எழுத்து பற்றி வரும் ஸ்லோகம் இது:-

ஸ்யகாரம் தாம்ரவர்ண ச தரண்யா ச சதார்ச்சிதம் |
பசு ஹத்யாக்ருதம் பாபம் ஷகாரோ தஹதே க்ஷணாத் ||
The Syllable ‘Sya’ is of the colour of copper and always worshipped by Dharani (mother earth). The Sins accrued on account of killing or slaying animals will get washed away.
ஸ்ய’ என்ற எழுத்து தாமிரத்தின் நிறத்தைக் கொண்டது. அது பூமாதேவியால் சதா வணங்கப்படுகிறது. மிருகங்களை வதை செய்த பாவம் மொத்தமாக ஒரு க்ஷணத்தில் நீங்கி விடும்.
இப்படிப் பல ஆழ்ந்த அர்த்தங்களைத் தருவது நமது எழுத்துக்கள்.
இவற்றையெல்லாம் நல்ல முறையில் தொகுத்து அமைத்து செய்யப்பட்டவைகளே நமது அஷ்டோத்திரங்கள், சஹஸ்ரநாமங்கள். அதிலிருந்தே நமது பெயர்களையும் நம் முன்னோர்கள் நமக்குச் சூட்டுகின்றனர்.
இவ்வளவு நன்மைகளையும் தெரிந்து கொண்டு நமசிவாய என்று சொல்லலாம். காயத்ரி மந்திரத்தைச் சொல்லலாம். ஓம் நமோ நாராயணாய என்று சொல்லலாம்.
இல்லக விளக்கு அது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கு அது ஜோதி உள்ளது
பல்லக விளக்கு அது பலரும் காண்பது
நல்லக விளக்கு அது நமசிவாயவே
அன்பர்கள் ராம் குமார் ராய் தொகுத்துள்ள Dictionaries of
tantra Sastra (prachya prakashan, Varansi 221002) என்ற ஆங்கில புத்தகத்தையும், ஊரன் அடிகள் எழுதியுள்ள இராமலிங்க அடிகள் வரலாறு என்ற நூலையும், வீராசாமி பத்தர் எழுதிய Gyatri Mantra என்ற ஆங்கில புத்தகத்தையும் படித்துத் தெளிவு பெறலாம். ஆங்கிலத்தில் உள்ள இன்னொரு நூல் The Glories of Gayatri. இதை எழுதியவர் பாண்டுரங்காசார்யா சீனிவாசாரிய வாக்கர் என்பவர். குருக்ருபா பரகாஸனா. 606, 14வது குறுக்குத் தெரு, Magadi chord Road, Bangalore 560040 வெளியீடாக இது வந்துள்ளது.
நன்றி, வணக்கம்.
அபிசாரம் பற்றி ஒரு அன்பர் கேள்வி கேட்டிருக்கிறார். ஆபிசாரம் என்னும் செய்வினை என்பதை யாரும் செய்யக் கூடாது. அது செய்தவரையே திருப்பித் தாக்கும். ஆனால் அதனால் பாதிக்கப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஆசார்யர்களை அணுகி தக்க நிவாரணத்தை அடையும் உபாயத்தைப் பெறலாம்.
Insects – பூச்சி பற்றி ஒருவர் கேள்வி கேட்டிருக்கிறார் – அவரது ஆராய்ச்சி நூலுக்காக. அவருக்குத் தனியே பதில் அனுப்பப்படும். அனைவரும் பயன்பெறத் தக்க விதத்தில் கேட்கப்படும் கேள்விகளே இந்தப் பகுதியில் இடம் பெறும். நன்றி, வணக்கம்.
***

tags – ‘ய’ , குறில் எழுத்து,