லலிதா சஹஸ்ரநாமம் சொல்வதில் ஒரு இரகசியம் (Post No. 2472)

Shri-Kuzhandhaiyanandha-Swamigal

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

 

Date: 9 January 2016

 

Post No. 2472

 

Time uploaded in London :–  5-45 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

ஆன்மீக இரகசியம்

 

லலிதா சஹஸ்ரநாமம் சொல்வதில் ஒரு இரகசியம்

 

ச.நாகராஜன்

 

குழந்தையானந்த ஸ்வாமிகள்

 

பல நூறு ஆண்டுகளாக பாரதத்தில் லலிதா சஹஸ்ரநாமத்தைச் சொல்லி வருவது இயல்பான ஒரு பழக்கமாக பல்லாயிரம் குடும்பங்களில் ஆகி விட்டது.

 

ஆனால் இதைச் சொல்லுவதில் உள்ள இரகசியத்தை குழந்தையானந்த ஸ்வாமிகள் தன் பக்தை ஒருவருக்கு அனுக்ரஹித்துள்ளார்.

 

சுவையான அந்த சம்பவத்தின் மூலம் இரகசியம் அனைவருக்கும் வெளிப்பட அனைவரும் அதன் மூலம் பலன் பெறும் பாக்கியமும் ஏற்பட்டுள்ளது.

 

1927ஆம் ஆண்டு. புதுக்கோட்டை சீஃப் கோர்ட் வக்கீல் சுவாமிநாத ஐயரும் அவரது மனைவி பாகீரதி அம்மாளும் ஸ்வாமிகளின் அநுக்ரஹத்திற்குப் பாத்திரமான சிறந்த பக்தர்கள். ஸ்வாமிகளின் மீது பரம் பக்தி அவர்களுக்கு.ஸ்வாமிகள் இரு முறை அவர்கள் வீட்டிற்கு விஜயம் செய்து பல நாட்கள் அங்கு தங்கி இருக்கிறார்.

இரண்டாம் முறை (1927இல்) ஸ்வாமிகள் அவர்கள் வீட்டிற்கு விஜயம் செய்த போது பாகீரதி அம்மாள் ஒன்பது மாத கர்ப்பிணி.

ஸ்வாமிகள் வாய் சிறு குழந்தைகள் குழறுவது போலக் குழறிச் சொற்களை வெளிப்படுத்தும்.

‘பாயி’ என்று பாகீரதி அம்மாளை மாடியிலிருந்து விளித்து ஸ்வாமிகள் கஞ்சியோ காப்பியோ கொண்டு வரச் சொல்லுவது வழக்கம்.

 

நிறைமாத கர்ப்பிணி படி ஏறி வருதைப் பார்த்து, “உனக்கு சிரமமாய் இருக்கிறதா?” என்று ஸ்வாமிகள் பரிவோடு கேட்பார்.

“நல்ல காரியங்கள் நடக்கும் போது சற்று சிரமம் கூடவே இருக்கும்.ஆனால் அதைப் பொருட்படுத்தக் கூடாது” என்று அருளுரை வழங்கிய ஸ்வாமிகள்,” ஸ் என்று சொல்லாதே! ஸ் என்று போய் விடும்’ என்று அன்பாகக் கூறினார்.

om tamil

 

கரை கட்டி ஸஹஸ்ர நாமத்தைச் சொல்

 

லலிதா சஹஸ்ர நாமம் சொல்லும் வழக்கத்தை பாகீரதி அம்மாள் கொண்டிருந்தார்.

 

ஒரு நாள் அவரிடம் ஸ்வாமிகள்,”லலிதா சஹஸ்ர நாமம் சொல்லும் போது ஆற்றுக்குக் கரை கட்டுவது போல ஒவ்வொரு நாமத்திற்கும் முன்னும் பின்னும் பிரணவமாகிய ஓம் என்பதைச் சேர்த்துச் சொல்” என்று அருளினார்.

 

ஸ்வாமிகள் மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் வளர்த்த மீனாட்சி அம்மையின் அருள் குழந்தை.

 

தன் அன்னையை எப்படி வழிபட்டால் முழுப் பலனும் கிடைக்கும் என்ற இரகசியத்தை அவர் அருளியது அனைவருக்குமான காலத்திற்கேற்ற உபதேசம்.

 

 om swasik

ஓம் என்னும் உயரிய மந்திரம்

தானம் யக்ஞம் போன்ற சகல காரியங்களையும் ஆரம்பிக்கும் போது ப்ரணவமாகிய ஓம் மந்திரத்தைச் சொல்ல வேண்டும் என்று சாட்யாயனர் அருளியுள்ளார்.

 

அதே போல காத்யாயனர் ப்ரண்வத்தை சொல்லியே அனைத்துக் காரியங்களையும் ஆரம்பிக்க வேண்டும் என்று அருளியுள்ளார்.

தால்ப்ய பரிசிஷ்டம் என்ற நூலில் ஓம்காரத்தைச் சொல்லாமல் கூறும் சகல மந்திரங்களும் சித்தியைக் கொடுக்க மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது.

ஆகவே தான் லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் ஒவ்வொரு நாமாவுக்கு முன்னரும் பின்னரும் ஸ்வாமிகள் ஓம்காரத்தைச் சேர்த்துச் சொல் என்றார்.

 

முதலில் சொல்லாவிட்டால் மந்திரம் ஒழுகி விடுமென்றும் கடைசியில் சொல்லாவிட்டால் மந்திரம் பொங்கி வழிந்து விடும் என்றும் காளிகா புராணம் போன்றவற்றில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

 

இந்த அரிய இரகசியத்தை ஸ்வாமிகள் பக்தைக்கு அருளினார்.

 

பக்தைக்கு ஆண் குழந்தை பிறக்க அது புஷ்ய நட்சத்திரத்தில் பிறந்ததைக் கேட்டு அறிந்த ஸ்வாமிகள், “புஷ்ய நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறான். ஜெகதீசன் என்று பெயர் வை. நன்றாக இருப்பான்” என்று ஆசீர்வாதம் செய்தார்.

ஒவ்வொரு மந்திரம் சொல்லும் விதத்தையும் ஆசார்யர் மூலமாகவே கற்றுத் தெளிந்து உச்சரிக்க வேண்டும் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம்.

காலம் கலி காலமானதால் நமக்குத் தெரியாத இரகசியங்களை இப்படிப் பெரும் மகான்கள் கூறி அருளுவது வழக்கம்.

ஆக லலிதா சஹஸ்ரநாமம் கூறும் வழியை பெரும் மகானான குழந்தையானந்த ஸ்வாமிகள் அருளியுள்ளார். அதைக் கடைப்பிடித்து சஹஸ்ர நாமம் சொல்லி முழுப்பலனையும் அன்னையின் அருளால் பெறுவோமாக!

 

*****