WRITTEN BY S.NAGARAJAN
Date: 25 September 2016
Time uploaded in London: 5-35 AM
Post No.3187
Pictures are taken from various sources; thanks.
உத்வேகமூட்டும் கதைத் தொடரில் இன்னும் ஒரு கதை!
இரண்டு கூழாங்கற்கள்!
ச.நாகராஜன்
பல ஆண்டுகளுக்கு முன்னால் இத்தாலியில் ஒரு சிறிய நகரில் நடந்த சம்பவம் இது.
ஒரு வியாபாரி லேவாதேவிக்காரர் ஒருவரிடம் பெரிய தொகை ஒன்றைத் தன் வணிகத்திற்காகக் கடன் வாங்கி இருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது வியாபாரம் பெரும் நஷ்டமடைந்து வாங்கிய கடனைக் கொடுக்க முடியாமல் போனது. அவருக்கு அழகிய மகள் ஒருத்தி உண்டு. அவள் புத்திசாலியும் கூட.
கடன் கொடுத்த லேவாதேவிக்காரருக்கு வியாபாரியின் அழகிய மகளின் மீது ஒரு கண். எப்படியாவது அவளை மனைவியாக அடைய அவர் திட்டம் தீட்டினார்.
வியாபாரியிடம் வந்தார்.
“இனியும் கடன் தொகையைப் பெறாமல் இருக்க முடியாது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். ஒன்று கடன் தொகையைத் திருப்பித் தாருங்கள்.அல்லது உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுத்து விடுங்கள். அப்படித் திருமணம் செய்து கொடுத்து விட்டால் கடன் தொகையைக் கேட்கவே மாட்டேன். என்ன சொல்கிறீர்கள்?”
லேவாதேவிக்காரரின் இந்தப் பேச்சைக் கேட்டவுடன் வியாபாரியும் அவரது மகளும் திடுக்கிட்டனர்.
லேவாதேவிக்காரர் அவரது மகளின் அபிப்ராயத்தைத் தெரிந்து கொள்ள ஒரு வழியைச் சொன்னார்.
ஒரு பையில் கறுப்பு நிறக் கூழாங்கல் ஒன்றும் வெள்ளை நிறக் கூழாங்கல் ஒன்றும் போடப்படும்.அதில் கையை விட்டு ஏதேனும் ஒன்றை அவரது மகள் எடுக்க வேண்டும். கறுப்பு நிறக் கூழாங்கல் கையில் வந்தது என்றால் லேவாதேவிக்காரரின் மனைவியாக் அவள் ஆகி விடுவாள். கடன் தொகையும் தள்ளுபடியாகி விடும். வெள்ளை நிறக் கூழாங்கல்லை அவள் எடுத்தாலோ அவள் அவரை மணந்து கொள்ள வேண்டாம். ஆனாலும் அப்போதும் வியாபாரியின் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும். ஆனால் அவள் எந்த ஒரு கல்லையும் எடுக்க மறுத்து விட்டால் அவளது தந்தையார் போலீஸ் வசம் ஒப்புவிக்கப் படுவார்.
அவர்கள் ஒரு கூழாங்கற்கள் நிறைந்த ஒரு நடைபாதை வழியே சென்று கொண்டிருந்தனர். திடீரென்று குனிந்த லேவாதேவிக்காரர் இரு கற்களை எடுத்தார்.
வியாபாரியின் மகளின் கூரிய கண்கள் அவர் கைகளைக் கவனித்தன. அவர் எடுத்தது இரண்டுமே கறுப்பு நிறக் கூழாங்கற்கள்.
அவரது சதித்திட்டத்தை மகள் நன்கு புரிந்து கொண்டாள்.
இப்போது என்ன செய்வது?
லேவாதேவிக்காரர் மகளை நோக்கிக் கூறினார்: “பைக்குள் இருக்கும் கற்களில் ஏதேனும் ஒன்றை எடு!”
மகள் பையில் கையை விட்டு ஒரு கல்லை எடுத்தாள்.
அதைத் திறந்து காண்பிக்கும் முன்னர் தானாக அது விழுவது போல நழுவ விட்டாள்.
அந்தக் கல் கூழாங்கற்களின் குவியலில் விழுந்தது.
“அடடா” என்று அலறிய அந்தப் பெண், “அதனால் என்ன, பரவாயில்லை. பைக்குள் இருக்கும் கல் எது என்று பார்த்து விட்டால் நான் எடுத்த கல்லின் நிறம் தெரிந்து விடுமே” என்றாள்.
உள்ளே இருந்தது கறுப்பு நிறக் கல். அப்படியானால் அவள் எடுத்தது வெள்ளை நிறக் கல்லாகத் தானே இருக்க வேண்டும்.
லேவாதேவிக்காரர் தலை குனிந்தவாறே அங்கிருந்து அகன்றார்.
சில சமயம் மாற்றி யோசிக்க வேண்டும். அதுவும் ஒரு கணத்தில் யோசித்து சரியாக முடிவை எடுக்க வேண்டும்.
உலகில் சாமர்த்தியமாக வாழும் வழி இது தான்!
********
You must be logged in to post a comment.