Durga (Mahishasura Mardhani) in Mahabalipuram,Tamil Nadu
கட்டுரையாளர் : லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண். 945 தேதி- 31st March 2014.
முந்தைய கட்டுரைகளில் தொல்காப்பியதில் இந்திரன், வருணன் குறித்தும் தொல்காப்பியர் காலம் தவறு ( Four Parts Article ) என்றும் எழுதியிருந்தேன். இப்பொழுதைய கட்டுரை துர்கை, சூரியன், சந்திரன், அக்னி வழிபாடு பற்றியது. தொல்காப்பியத்தில் சில மர்மங்கள் நீடிக்கின்றன. அவர் பயன்படுத்திய கொடிநிலை, கந்தழி என்ற சொற்கள் சங்க இலக்கியத்திலோ பிற்கால பக்தி இலக்கியத்திலோ இல்லை. அவர் என்ன அர்த்தத்தில் இந்தச் சொற்களைப் பிரயோகித்தார் என்பதிலும் உரைகாரர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டு.
சிவன் பற்றி அவர் யாங்கனுமே செப்பாதது வியப்பானது. சிந்து சமவெளியில் இருக்கும் பசுபதி முத்திரைதான் ஒரிஜினல் “திராவிட” சிவன் என்று ‘ஆரிய திராவிட’ இன பேதம் பேசுவோருக்கு தொல்காப்பியம் அறைகூவல் விடுக்கிறது. சிவனைப் பற்றிய புறநானூற்றுக் குறிப்புகள் யஜூர் வேதத்தில் உள்ள சம்ஸ்கிருதச் சொற்களின் மொழி பெயர்ப்பாகவே இருக்கின்றன. அப்பரும் சம்பந்தரும் இதை உறுதியும் செய்கின்றனர்.
தொல்காப்பியக் கடவுளரைக் காண்போம்:–
“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேயதீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”
(தொல்காப்பிய, அகத்திணை இயல் சூத்திரம்)
என்று நான்கு முக்கிய தெய்வங்களை பழந் தமிழர் தெய்வங்களாக தமிழினத்தின் மிகப் பழைய நூலான தொல்காப்பியம் குறிக்கிறது. வேதங்களில் மிக முக்கிய இடம் வகிப்பது இந்திரனும் வருணனும்தான். அவ்விரு தெய்வங்களையும் இந்த சூத்திரத்தில் குறித்தவர் இன்னொரு சூத்திரத்தில் மற்றொரு வேத கால முக்கியக் கடவுளான அக்னி பகவானையும் (கந்தழி) குறிப்பிடுகிறார்.
முல்லை= திருமால்
குறிஞ்சி = முருகன்
மருதம் = இந்திரன்
நெய்தல் = வருணன்
Durga from Java, Indonesia in US Museum.
கீழ்வரும் சூத்திரத்தில் காளி வழிபாடு பற்றிப் பாடுகிறார்.
கொற்றவை = துர்கை = காளி (பாலை நிலக் கடவுள்)
“மறம் கடை கூட்டிய துடிநிலை, சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே”
(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)
கதிரவன், தீ, சந்திரன் என்னும் இயற்கைப் பொருள்களையும் தொல்காப்பிய காலத்துத் தமிழர்கள் தெய்வங்களாக வழங்கி வந்தனர்.
“கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே”
(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)
:கதிர், தீ, மதி இம்மூன்றை வாழ்த்துவதும் கடவுள் வாழ்த்துப் போலவே எண்ணப்பட்டு வரும் என்பது இதன் பொருள்.
கொடிநிலை = சூரியன்
கந்தழி = நெருப்பு (அக்னி பகவான்)
வள்ளி = சந்திரன்
(இந்த விளக்கம் இளம்பூரணர் உரையை ஆதாரமாகக் கொண்டது. வேறு உரைகாரர் இதற்கு மாற்றுப் பொருள் கூறினாலும் வேத கால வருணனையும் இந்திரனையும் பழந்தமிழர்கள் வழிபட்டதாகக் கூறுவதால், அக்னி என்று இளம்பூரணர் எழுதிய உரையே நன்கு பொருந்தும் என்பது என் கருத்து).
புறநானூற்றில் பிராமணர் வீட்டு மூன்று தீ
இந்த தருணத்தில் வேறு ஒரு முத்தீயை நினைவு கூறுதல் சாலப் பொருத்தம். இதோ புறநானூற்றில் உள்ள அவ்வையார் பாடல்:
“ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்தீப் புரையக் (போல) காண்தகு இருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்!
யான் அறி அளவையோ இவ்வே வானத்து
வயங்கித் தோன்றும் மீனினும் இம்மென
இயங்கும் மாமழை உறையினும்
உயர்ந்து சமந்தோன்றிப் பொலிக நும் நாளே (புறம் 367)
((சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கு இருந்தாரை அவ்வையார் பாடியது))
சேர ,சோழ, பாண்டிய மன்னர்கள் மூவரும் சோழன் பெருநற்கிள்ளி நடத்திய ராஜசூய யாகத்தில் ஒருங்கே அமர்ந்திருந்ததைக் கண்ட அவ்வைப் பாட்டிக்கு ஒரே அதிசயம், ஆச்சர்யம்!! தமிழ் மன்னர்களை போர்க்களம் தவிர வேறு எங்கும் ஒருங்கே பார்க்க முடியாது. இங்கு அதிசயமாக , மஹா அதிசயமாக, உலக அதிசயமாக, மூன்று தமிழ் தலைவர்கள் இருந்தவுடன் அவர்களை எப்படிப் பாராட்டுவது என்றே அவருக்குத் தெரியவில்லை. சொல்லப் போனால் தலை, கால் புரியவில்லை. ஏனெனில் உவமையாகக் கூறப்படும் பொருள் மன்னர்களைவிட உயர்ந்ததாக இருக்கவேண்டும் என்பது செய்யுள் இலக்கண விதி. இவர்களை என்னதைச் சொல்லி திருப்திப் படுத்துவது? என்று திகைத்தார்.
இமய மலை, பொதிய மலை, விந்திய மலை என்று புகழலாமா? அதுவும் பொருத்தம் இல்லை. ஏனெனில் மூன்றும் ஒரே இடத்தில் இல்லை. கன்னியாகுமரி சரியான பொருத்தம். ஏனெனில் மூன்று கடல்களும் ஒருங்கே கூடுகின்றன. ‘’அடா, அடா, உப்புக் கடல்களைப் போய் இந்த தருணத்தில் ஒப்பிடுவது பொருந்தாதே’’– என்று எண்ணிக் கொண்டிருந்தார். திடீர் என்று ஒரு ‘ஐடியா’ வந்தது. மூன்று மன்னர்களும் க்ஷத்ரிய வம்சத்தினர்; சூரிய, சந்திர, அக்னி குலத்தைச் சேர்ந்தவர்கள். கொடிநிலை, கந்தழி, வள்ளி என்று தொல்காப்பியர் ‘ஸ்டைலில்” ஒரு போடு போட்டிருக்கலாம். ஆனால் அதைவிட உயர்வாக எதையாவது சொல்ல வேண்டும் என்று துடியாய்த் துடித்தார் அவ்வையார்.
பிராமணர் வீடுகளில் முத்தீ – அதாவது ஆகவனீயம், கார்கபத்யம், தக்ஷிணாக்கினீயம் — என்று மூன்று தீ எரியும். உடனே சேர சோழ பாண்டியர்களை—- “ஐயர் வீட்டு முத்தீ போல அருமையாக ஒருங்கே இருக்கிறீர்களே!! நீங்கள் மழைத்துளிகளின் எண்ணிக்கையை விட, வானத்திலுள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட அதிக வாழ்நாட்களோடு வாழுங்கள்”— என்று வாழ்த்தினார். மேலே கொடுத்த பாட்டை இப்போது மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.
கண் இமைக்காத தேவர்கள்
தேவர், இமையோர் என்ற சொற்களும் தொல்காப்பியத்தில் வருகின்றன.
தேவர் என்பது சம்ஸ்கிருத சொல். அதுமட்டுமல்ல, இமையோர் என்ற சொல் ,புராணச் செய்திகளைக் கூறும் சொல்— கண் இமைக்காதவர்கள் தேவர்கள்.
இதுபற்றி நான் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் இவர்கள் வெளிக் கிரகவாசிகளாக இருக்கலாம் என்று எழுதி இருக்கிறேன். நம் எல்லோ ருக்கும் ஒரு கேள்வி மனதில் எழும். அந்தக் காலத்தில் தேவர்கள், நாரதர் முதலானோர் பூமிக்கு அடிக்கடி வந்தார்களே. இப்போது ஏன் வருவதில்லை என்று. இதற்கு ஆதிசங்கரர் பதில் கொடுத்து இருப்பதை எம்.ஆர்..ஜம்புநாதன் எழுதிய யஜுர் வேதக் கதைகள் என்ற புத்தகத்தில் படித்தேன்:–
“பிராமணன், ராஜசூய யாகத்திலே க்ஷத்ரியனுக்குக் கீழாகவே உட்காரவேண்டும்…….. ஆனால் அவர்களைவிட ஒழுக்கம் நிறைந்தவர்களை நாம் பார்ப்பது அரிது. அவர்களின் ஒழுக்கங்களைக் கண்டு தேவர்களும் மனிதர்களுடன் சேர்ந்து புசித்தார்கள். ஆனால் நாளடைவில் ஒழுக்கம் குன்றி ‘’எனக்கு அதுவேணும், இதுவேணும்’’ என சனங்கள் சொல்லவே பிச்சை எடுப்பவர்களை விரும்பாமல் தேவர்கள் பிற்காலத்தில் புவி நீங்கினார்கள் என ஆதி சங்கரர் கூறுகிறார்”. (பக்கம் 12, யஜுர்வேதக் கதைகள், எழுதியவர் எம்.ஆர்.ஜம்புநாதன், கலா சம்ரக்ஷண சங்கம், தஞ்சாவூர், 2004)
இதுதவிர பலராமனின் பனைக் கொடி பற்றிய குறிப்பும் தொல்காப்பியத்தில் உண்டு. ஆகையால் கண்ணன், பலராமன் வழிபாடும் இருந்திருக்கவேண்டும். எனது முந்திய கட்டுரையில் முழு விவரம் காண்க.
தென்புலத்தார் வழிபாடு
இறந்தோர்கள் தெற்கு திசைக்குச் செல்வர் என்ற இந்துமதக் கோட்பாட்டை வள்ளுவர் பாடியதை எல்லோரும் அறிவோம் (குறள்–43). தொல்காப்பியரும் இறந்தோர் (நடுகல்) வழிபாடு பற்றிப் பேசுகிறார்.
காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்
சீர்தரு மரபின் பெரும்படை, வாழ்த்தல்
(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)
இது ஆறு கட்டங்களாக செய்யப்படும்:–
1.காட்சி= கல்லைக் கண்டு தேர்ந்தெடுத்தல் (சேரன் செங்குட்டுவன் புனிதமான இமயமலைக்குச் சென்று கல் எடுத்தான். ஒரு முறை தனது தாய்க்கும் மறுமுறை கண்ணகிக்கும் 3000 மைல் பயணம் செய்து கல் எடுத்தான் என்றால் அவன் பக்தியை என்னவென்று மெச்சுவது)
2.கால்கோள்= மரியாதையாக எடுத்து வருதல்
3.நீர்ப்படை=புனித நீரில் நீராட்டுதல் (சேரன் செங்குட்டுவன் புண்ய கங்கை நதியில் நீராட்டினான்)
4.நடுகல்= குறித்த இடத்தில் நடுதல்
5.வீரனுடைய பெயரும் பெருமையும் கல்லில் பொறித்தல்
6.தெய்வமாகக் கொண்டாடி விழா எடுத்தல் (கண்ணகி கற்சிலை துவக்க விழாவுக்கு பல சிறப்பு விருந்தினர்களை (Special Invitations) செங்குட்டுவன் அழைத்தான். கடல் சூழ் இலங்கை கயவாகு வேந்தன் (கஜபாகு) ஒரு பிரதம (Chief Guest) விருந்தினர். அந்தக் காலம் முதல் நாமும் இலங்கையும் அவ்வளவு நெருக்கம்!. முதல் மன்னனான விஜயனுக்கு பாண்டிய நாட்டுப் பெண்தான் மனைவி!!)
நல் அமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் (அகம் 67)
என்ற அகநானூற்றுப் பாடல் அக்கற்களுக்கு மக்கள் மயில் பீலி சூட்டி வழிபட்டதைக் கூறுகிறது.
சங்கத் தமிழ் இலக்கியத்தில் பாட்டுக்குப் பாட்டு இந்துமதக் கடவுளர்கள் பவனி வருவதைக் காணலாம்.. சிவன் என்ற சொல் திருமுறை-தேவார காலம் வரையில் கையாளப்படாவிடினும், தொல்காப்பியத்தில் இல்லாவிடினும், புறநானூற்றின் மிகப்பழைய பாடல்களில் நீலகண்டனையும் முக்கண்ணனையும் காண்கிறோம்.
சங்க காலத்துக்குப்பின் வந்த சிலப்பதிகாரத்தை இந்து மத ‘என்சைக்ளோபீடியா’ (கலைக் களஞ்சியம்) என்று சொல்லும் அளவுக்கு இந்து கலாசாரம், கடவுளர்கள் பற்றி ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.
இது தொடர்பான எனது முந்தைய கட்டுரைகள்:—
தொல்காப்பியர் காலம் தவறு—பகுதி1, 2, 3, 4 (posted 9-9-12 முதல் 13-9-12 வரை)
தொல்காப்பியத்தில் இந்திரன் posted on 14 ஜூன் 2013
தொல்காப்பியத்தில் வருணன் posted on 8 ஜூலை 2013
மூன்று தமிழ் சங்கங்கள் கட்டுக்கதையா? (25-2-2012)
No Brahmins ! No Tamil ! (posted on 12/1/2012)
Tolkappian- A Genius ( posted on 12/9/2012)
Indra in the Oldest Tamil Book
Varua In the Oldest Tamil Book
Contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.