போஜ மஹாராஜன் : கொடுத்தே சிவந்த கொடைவள்ளல்! (Post No.7527)

போஜனைப் பற்றிய அடுத்த கட்டுரை இது.

போஜ மஹாராஜன் : கொடுத்தே  சிவந்த கொடைவள்ளல்! (Post No.7527)

WRITTEN BY S NAGARAJAN            

Post No.7527

Date uploaded in London – – 3 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ச.நாகராஜன்

மாமன்னன் போஜ மஹாராஜன் அனைத்துக் கலைகளிலும் வல்லவனாக இருந்தான். சிறந்த சிவபக்தன் என்பதாலும் அனைத்து நூல்களையும் ஆராய்ந்தவன் என்பதாலும் வாழ்வின் நிலையாமையைப் பற்றி நன்கு அறிந்திருந்தான்.

அவனது அவையில் ஒரு நாள் நடந்த சமபவம் இது:

சிம்மாசனத்தில் போஜன் அமர்ந்திருக்க அருகில் இருந்த அடைப்பக்காரன் போஜனுக்கு வெற்றிலையை மடித்துக் கொடுத்தான். அதற்குள் வைக்க வேண்டிய பாக்கு மற்றும் வாசனைப் பொருள்களை அவன் எடுத்துக் கொடுப்பதற்குள் போஜன் வெற்றிலையை அப்படியே வாயில் போட்டுக் கொண்டு மென்று தின்ன ஆரம்பித்தான்.

இந்தச் செய்கையைக் கண்ட அரசவை அறிஞர்கள் சற்று வியப்படைந்தனர். அவர்களில் ஒருவர் இதற்கான காரணத்தைக் கேட்க போஜன் கூறினான்: “ மனிதன் மரணத்தின் பற்களில் எப்போதும் சிக்கி இருப்பவன். அவன் எப்போது பிறருக்குக் கொடுக்கிறானோ, அவன் எப்போது ஒரு பொருளை அனுபவிக்கிறானோ அப்போது மட்டும் தான் – அந்தக் கணம் தான் அவனுக்குச் சொந்தம். அடுத்து வருவதெல்லாம் சந்தேகத்திற்கு இடமானது தான்.”

இதைக் கூறி விட்டுப் போஜன் தொடர்ந்தான்:

“ஆகவே ஒவ்வொரு நாளும் மனிதன் படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது தனக்குத் தானே. ‘இன்று நான் எந்த நல்ல காரியத்தைச் செய்ய முடியும்’ என்று கேட்டுக் கொள்ள வேண்டும். சூரியன் மாலையில் மேற்கே அஸ்தமிக்கும் போது ஒருவனது வாழ்க்கையின் ஒரு பகுதியையும் எடுத்துக் கொண்டு செல்கிறான். பலரும் என்னைக் கேட்கிறார்கள் :” இன்று என்ன செய்தி? நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறீர்களா” என்று.

உடலின் ஆரோக்கியத்தை எப்படிப் பாதுகாக்க முடியும்? ஒவ்வொரு நாளும் நாம் வாழ்க்கையை விட்டுச் சென்று கொண்டிருக்கிறோம் இல்லையா? ஆகவே நாளை செய்ய வேண்டியதை இன்றே செய். மதியம் செய்ய வேண்டியதை அதற்கு முன்பே செய். மரணம் நீ பகலில் செய்ய வேண்டியதைச் செய்து முடித்தாயா, முடிக்கவில்லையா என்று பார்க்காது. மரணம் என்ன, மரணம் அடைந்து விட்டதா? ஒருவனது ஆபத்துக்கள் எல்லாம் அழிந்து விட்டனவா? உடலை நோக்கிப் பாய்ந்து வரும் வியாதிகள் தடுக்கப்பட்டனவா? அனைவரும் உல்லாசத்தில் திளைக்கின்றனரா?”

போஜன் இப்படிக் கூறி முடித்தவுடன் அவனது மனதை நன்கு அறிந்த ஒரு கவிஞர் அவனை நோக்கி, “ விரைந்து செல்லும் போர்க்குதிரையின் மீது அமர்ந்த மரண தேவன் உன்னை நெருங்கிக் கொண்டிருக்கிறான்.

ஆகவே மன்னர் மன்னா, நீ எப்போதுமே தர்ம காரியங்கள் செய்வதிலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்க வேண்டும்.” என்றார்.

மன்னன் மகிழ்ந்தான். அனைவரும் போஜனின் மனப்போக்கையும் அவனது அறம் சார்ந்த வாழ்க்கையையும் போற்றிப் புகழ்ந்தனர்.

போஜராஜன் பெரிய கொடை வள்ளல். இல்லை என்று இரப்போர்க்கு இல்லை என்று சொல்லாமல் வேண்டியதைத் தருபவன்.

தனது வாயிலில் காத்திருப்போர்க்குத் தங்கக் காசுகளைத் தருவது அவன் வழக்கம். அவனது காவலாளிகள் ஒவ்வொருவரையும் வரிசையாக அனுமதிக்க ஒவ்வொருவராக வந்து வாங்கிச் செல்வது வழக்கம்.

அவனது கையில் அணியும் கங்கணத்தில் அவன் ஒரு ஸ்லோகத்தைப் பொறித்து வைத்திருந்தான்.

அதன் பொருள் : “ மனிதனின் செல்வம் இயற்கையாகவே நிலையில்லாதது. துரதிர்ஷ்டம் உன்னை சீக்கிரமே அடைவது நிச்சயம். நல்லதைச் செய்ய உள்ள வாய்ப்பைக் காண்பதற்கு நேரம் கடந்து விட்டது. ஓ! பௌர்ணமி நிலவே! உன்னிடம் இருக்கும் செல்வத்தால் உலகெங்கும் வெண்மையான பிரகாசமான கிரணங்களை அள்ளி வீசு!

உனது செல்வ வளத்தால் பாதிக்கப்படாதவன் விதி! அது நீடித்து நிலைத்து இருக்காது!

ஓ! ஏரியே! உனது பாய்ந்து செல்லும் அழகிய நீரைப் பாய்ச்ச இதுவே தகுந்த தருணம்! மேலும் இப்போது நீர சுலபமாகக் கிடைக்கிறது. சுவர்க்கத்தில் மேகங்கள் நெடுநேரம் மிதக்காது.கொஞ்ச நேரம் தான் நீர் வெள்ளமெனச் செல்லும் -அதன் வேகம் நீரை உயரத்திற்குக் கொண்டு சென்ற போதிலும் கூட! அந்த வெள்ளத்தின் குறும்பு நீண்ட காலம் இருக்காது. நதியின் இரு புறமும் உள்ள உயரமான மரங்களை அது தாழ வளைத்து வைத்திருக்கிறது.”

இந்த ஸ்லோகத்தின் மூலமாக நிலையாக இருக்காத செல்வத்தை அது இருக்கும் போதே பிறருக்குக் கொடுத்து விடு என்று அவன் தனக்குத் தானே அறிவுறுத்திக் கொண்டான்.

போஜன் ஒரு தாயத்தை வேறு தன் கழுத்தில் அணிந்திருந்தான்.

அதில் உள்ள பதக்கத்தில் அவனே இயற்றிய ஒரு செய்யுள் பொறிக்கப்பட்டிருந்தது.

அதன் பொருள் : “பிரகாசமான சூரியன் அஸ்தமிப்பதற்கு முன் இரப்போர்க்கு நான் என் செல்வத்தைக் கொடுக்காவிடில், இந்தச் செல்வம் நாளைக்கு யாருக்குச் சொந்தமாகும் என்பதை யாராவது எனக்குச் சொல்ல முடியுமா?”

இப்படிக் கொடுத்துக் கொண்டே இருந்தால் போஜனின் கஜானா என்ன ஆவது?

அது குறைந்து கொண்டே போனது.

இதைப் பார்த்தார் அவனது அமைச்சர் ரொஹக். அதிர்ந்து போனார் அவர். ஆனால் அதை போஜனிடம் நேரடியாகச் சொல்ல அவருக்குத் துணிச்சலும் இல்லை.

ஆகவே போஜன் தானம் வழங்கும் கூடத்தில் ஒரு நாள் இரவு சென்று அங்கிருந்த ஒரு கரும்பலகையில் எழுதி வைத்தார் இப்படி:

“தேவையான காலத்திற்கு உதவும் வகையில் ஒருவன் செல்வத்தைக் காத்து வைக்க வேண்டும்.”

இதை மறுநாள் காலை பார்த்தான் போஜன். சிரித்தான்.

அதன் அடியில் எழுதினான் இப்படி:

“நல்லவனுக்குத் தீங்கு எப்படி வரும்?”

அன்று இரவு அமைச்சர் போஜன் எழுதியதற்குக் கீழாக இப்படி எழுதினார்:

“சில சமயம் உண்மையிலேயே விதி கோபத்துடன் எழும்”

மறுநாள் காலை இதைப் பார்த்த போஜன் தனது அமைச்சருக்கு முன்னாலேயே இப்படி எழுதினான்:

“அப்படியெனில் குவித்து வைத்திருக்கும் பொற்குவியல்கள் உண்மையிலே மறைந்து போகும்.”

இப்படி எழுதி விட்டுத் தன் அமைச்சரை நோக்கிய போஜன், “ மதியில் சிறந்த பிரதம மந்திரியினால் கூட எனது யானை போன்ற உறுதி மொழியை அவரது அங்குசத்தினால் மாற்ற முடியாது.”

நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட அழகிய ஆடையை அணிந்த போதும் கூட போஜனின் மனம் எளியவர் பால் எப்போதும் இருந்தது.

இது போன்ற நூற்றுக் கணக்கான சம்பவங்கள் இன்னும் போஜனின் வாழ்க்கையில் உண்டு.

King Bhoja’s Coin with Varaha Avatara of Vishnu.

இப்படிப்பட்ட ஒரு மன்னனை உலகின் எந்த நாடேனும் கண்டதுண்டா?

இல்லை என்றே சந்தேகமின்றி உரக்கக் கூறலாம்!

Tags – போஜ மஹாராஜன், கொடைவள்ளல்

–subham-