அதர்வண வேத ரத்தினங்கள்

purnahuti

(நான் (London Swaminathan) செப்டம்பரில் இந்தியாவுக்குச் சென்ற போது வழக்கம் போல சென்னை ‘ஹிக்கின்பாதம்ஸ்’ Higginbothams புத்தகக் கடையில் நுழைந்தேன். அதர்வண வேதம் பற்றிய ஒரு நல்ல புத்தகத்தைக் கண்டேன். என்னிடம் ஆங்கிலத்தில் நிறைய வேதப் புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் தமிழில் மிகவும் அரிது. அதை உடனே படித்து முடித்தேன் அனைவரும் வாங்கி படிக்கவேண்டிய அந்த நூலின் விவரங்கள் இதோ: அதர்வ வேதம் அருளும் ஆனந்த வாழ்வு- எழுதியவர் கவிமாமணி தமிழ் மாறன், வெளியீடு: ரம்யா பதிப்பகம், தியாகராய நகர், சென்னை-600 017, தொலைபேசி 24340599)
அந்தப் புத்தகத்தில் பக்கம் 212-ல் பொன்மொழிகள் தொகுப்பு உள்ளது. அதிலிருந்து சில பகுதிகள் இதோ:

இனிமை (காண்டம் 1-34)
தேனைப் போல எங்களை இனிமை செய்; என் நாக்கின் நுனியில் தேன்; அடிவரையில் இனிய தேன்; நாம் மொழிவதும் தேன் மயமாகவேண்டும்.
(மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும் என்ற பாரதி பாடலும் மந்திரம் போல் சொல்லின்பம் வேண்டும் என்ற அவரது வேண்டுதலும் ஒப்பிடற்பாலது)

மருந்து (1-4)
ஜலங்களின் நடுவே அமிர்தம் உண்டு; ஜலங்களில் சிகிச்சை உண்டு.
வானின்று உலகம் வழங்கி வருதலால்தான் அமிழ்தம் என்றுணரற்பாற்று—என்ற வள்ளுவன் வாக்கு ஒப்பிடற்பாலது)

கல் (2-13)
இங்கு வா! கல்லின் மேல் நில்; உனது தேகம் கல் போலாகட்டும். நூறு சரத் காலத்தைக் காண்பாயாகுக!

பயம் (2-15)
வானமும் பயப்படுவதில்லை; பூமியும் பயப்படுவதில்லை. அதனால் துன்பமோ நஷ்டமோ அடைவதில்லை. பிராணனே! நீயும் அங்ஙனே பயப்படாதே! அச்சம் தவிர்.

காதல் (2-30)
எப்படி காற்று பூமியிலுள்ள புல்லை இப்படியும் அப்படியும் அசைக்கின்றதோ, அப்படி உன் மனத்தை என்னிடமிருந்து நீங்காமல் இருப்பதற்கு விருப்பம் உள்ளவளாக, பிரியாதவளாக இருக்க அசைக்கிறேன்

குடும்ப ஒற்றுமை (3-30)
மகன் தந்தையின் ஆணையை அனுசரித்து தாயோடு ஒரு மனம் உடையவன் ஆகுக; கணவனிடம் மனைவி அமைதியுடன் தேனினும் இனிய சொற்களை சொல்பவளாகுக. சகோதரன் சகோதரியை வெறுக்காமல் அனைவரும் ஒற்றுமையாக மங்கல மொழி பேசுங்கள் காலையிலும் மாலையிலும் நல்ல எண்ணம் உங்களுடன் இருக்கட்டும்.

மூன்றும் தெரியும் (4-16)
ஒருவன் நிற்பது, குறுக்கு வழியில் ரகசியமாகப் போவது, மறைந்து உட்கார்ந்து உரையாடுவது போன்ற அனைத்தையும் வருணன் அறிகிறான்.

281

ஆசிகள் (5-30)
பிராணன் வருக; மனம் வருக. கண் பார்வை வருக! பிறகு பலமும் வருக. அவனது சரீரம் நன்கு சேர்க, அவன் தனது திடமான இரு கால்களால் நிற்பானாக.

தூய்மை (6-19)
தேவர்கள் என்னை தூய்மை ஆக்குக; மனிதர்கள் என்னை தூய்மை ஆக்கட்டும். தூய்மை செய்பவன் என்னைத் தூய்மைப் படுத்தட்டும். நல்லறிவும், பாதுகாப்பும் பெற, தேவ சவிதாவே, என்னைத் தூய்மை ஆக்குக.

ஐக்கியம் (6-64)
தேவர்கள் எப்படி தங்களுக்குள் பங்கைப் பெற ஒரு மனதாக இருக்கிறார்களோ, அப்படி நீங்களும் இணக்கமாகுங்கள். மந்திரம், சபை, விரதம், சித்தம், அவி இவற்றில் சமானமாக நடத்தப்படுகிறார்கள். உங்கள் எண்ணம், இருதயம், இவை ஐக்கியமாகி, நீங்கள் ஒன்று சேர்ந்து செயல்படுங்கள்.
(ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு- என்ற பாரதியின் மொழி நினைவிற்கு வரும்)

தாய் அன்பு ( 7-10)
சரஸ்வதியே! சாசுவதமான, சுகம் தரக்கூடியதாய், நல் சிந்தனையைத் தருவதாய், வீரியமும், போஷாக்கு ஊட்டுவதாய், உள்ள உனது புனித ஸ்தனத்தின் அமுதத்தை நாங்கள் பருகும்படி செய்து காப்பாயாக.

கொடை (7-26)
விஷ்ணுவே! சுவர்க்கத்தில் இருந்தும், பூமியில் இருந்தும், வானகத்தில் இருந்தும், குறையாத செல்வத்தை உனது இரு கரங்களில், அள்ளி எமது வலது இடது கரங்களில் அளித்து நிரப்புவாயாக!

ஒற்றுமை (7-54)
அஸ்வினிகளே! உறவினருடனும், தெரியாத மற்றவர்களுடனும் ஒற்றுமையுடனிருக்க மனத்தை தாருங்கள். நாங்கள் எண்ணத்திலும் செயலிலும் ஒற்றுமைப்படவேண்டும். முரண்படாத நல்ல மனம் அடைய வேண்டும். எவருடனும் சண்டை போடாமல் இருக்கவேண்டும்.

உயர்வழி (8-1)
புருஷனே! உயர்ந்து செல்வதே உன்வழி. தாழ்ந்து செல்லாதே. நான் உனக்கு நீண்ட வாழ்க்கையும் வலிமையும் தருகிறேன். நீ எளிதாக இந்த அமுத ரதத்தில் ஏறு. அப்பால், நீ முதுமையிலும் சபையில் பிரசங்கம் செய்வாய்.!

282

கெடுதல் (10-1-5)
கெடுதல் செய்தவரையே கெடுதல் சேரட்டும். பழிச் சொல் சொல்பவரையே பழிச்சொல் அடையட்டும்.
(மறந்தும் பிறன் கேடு சூழற்க—என்ற வள்ளுவன் சொல் நினைவுக்கு வரும்)

பூரணம் (10-8-29)
அவன் பூரணத்தில் இருந்து பூரணத்தை உண்டாக்குகிறான். அவன் பூரணத்துடன் பூரணத்தைப் பொழிகிறான். அது எங்கிருந்து பொழியப்ப்டுகிறது என்பதை நாங்கள் அறியலாமா?

பிரம்மசர்யம் (11.5-17-19)
பிரம்மசரியத்தால், அரசன் தனது ராஜ்யத்தைப் பரிபாலிக்கிறான். குருநாதன் பிரம்மசரியத்தால் பிரம்மசாரியை விரும்புகிறான். கன்னிகை பிரம்ம சரியத்தால் இனிமையான கணவனை அடைகிறாள். குதிரையும் காளையும் பிரம்மசரியத்தால் உணவை அடைகின்றன. தேவர்கள் பிரம்மசரியத்தாலும் தவத்தாலும் மரணத்தை அழித்தார்கள். பிரம்மசரியத்தால் இந்திரன், தேவர்களுக்குச் சொர்க்கத்த்தைக் கொண்டுவந்தான்.

bluemarble2k_big-01

பூமி (12-1, 18, 28, 62, 63)
நீ பெரியவள், நீ பெரிய வசதியுள்ளவள். உனது குலுக்கலும் கலக்கலும் நடுக்கமும் மகத்தானவை. நாங்கள் எழும்போதும் உட்காரும் போதும், நிற்கும்போதும், தாங்கும்போதும், தரையில் கால்கள் தடுமாறாமல் இருக்க வேண்டும். நிலமே உன்னிடத்தில் இருப்போர், நோய்கள் விலகி, துன்பங்கள் விலகி , தீர்க்க ஆயுளுடன் இருக்க நாங்கள் பணிசெய்வோம்! தாயே! தரணி மாதாவே! நீ என்னை க்ஷேமமாக வைத்திரு. செல்வத்திலும் புகழிலும் நிலைக்க வை.
(வந்தேமாதரம் என்னும் பாடலில் நிலமகள் பற்றிப் பாரதி பாடியதை ஒப்பிடுவது இன்பம் தரும்)

வசந்த காலம் (12-2-27/28)
நண்பர்களே எழுமின்! கடந்து செல்மின். இங்கு கல்லாறு ஓடுகிறது. இதைக் கடந்து மங்கலமான இனிமை தரும் மேன்மயை நோக்கிச் செல்லுங்கள்! மனம் தெளிந்து தூயர்களாக , தூய்மை செய்வோராக, விஸ்வே தேவர்களின் அருளோடு, கடினமான பாதைகளைக் கடந்து, சுபிட்சமான இந்த இடத்தில், என் வீரர்களுடன் நூறு வசந்த காலம் அனுபவிக்க வேண்டும்!

சத்யம் (14-1-1)
சத்தியத்தால் பூமி ஸ்தாபிதமாயுள்ளது. சூரியனால் சுவர்க்கம் நிலைபெற்றுள்ளது. நேர்மையினால் ஆதித்தர்கள் நிற்கிறார்கள். சோமனும் சுவர்க்கதிலே ஒளிர்கிறான்.

மணப்பெண் (14-2-26)
சுமங்கலிகளாகவும் வீடுகளை விருத்தி செய்பவளாகவும், கணவனுக்கு மங்களம் சேர்ப்பவளாகவும், மாமனார்க்கு மேன்மையும் மாமியார்க்கு இனிமை வழங்குபவளாகவும் இந்த வீட்டில் நுழைக! மாமனார்க்கு சேவை செய்வாயாக; அதே போல புருஷனுக்கு சுகம் கொடுப்பாயாக; வீட்டிற்கு இன்பம் சேர்ர்ப்பாயாக. குடும்பத்துக்கு இன்பமும் சுகமும் வழங்குவாயாக.
(வேத காலப் பெண்களைப் போற்றி “புதுமைப் பெண்” என்ற பாடலைப் பாரதியார் பாடியுள்ளார். ஒப்பிட்டுப் பார்ப்பது நலம்)

செல்வம் (16-9)
நலமுடன் வேள்வி செய்ய செல்வம் உள்ளது. நான் செல்வத்தை வெற்றிகொள்ள வேண்டும். செல்வந்தனாக வேண்டும். நீ எனக்கு செல்வம் அளிப்பாயாக.
தீர்க்காயுள் (17-1-27)
நான் பிரஜாபதியின் கேடயமுடன், காஸ்யபரின் மேன்மையான ஒளியுடன், மகிழ்ச்சிகரமான ஆயுளுடன் அதிர்ஷ்டத்துடன் ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும்.

சரஸ்வதி (18-4-45, 47)
தூயவர்கள் சரஸ்வதியை அழைக்கிறார்கள்; வேள்வி வளரும்போது சரஸ்வதியை அழைக்கிறார்கள்; சரஸ்வதியை புலவர்கள் போற்றி இசைக் கிறார்கள். வேண்டுவோருக்கு வேண்டியதை சரஸ்வதி கொடுப்பாளாக.
sarasvati metal

சாந்தம் (19-9-1, 11, 2)
சுவர்க்கம் எங்களுக்கு சாந்தி அளிக்கட்டும்’ பூமியும் ஆகாசமும், தண்ணீரும், தாவர மூலிகைகளும் சாந்தி தருக. ருத்திரர்கள், வசுக்கள், ஆதித்தியர்கள், அக்னிகள், மகரிஷிகள், தேவர்கள், பிரகஸ்பதி சாந்தமானவர்களாக இருப்பதும் இருக்கப்போவதும் சாந்தம்; எங்களுக்கு எல்லாம் சாந்தி தருவதாக.
(எனது கட்டுரை “ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி” என்பதில் முழு விளக்கம் கொடுத்திருக்கிறேன்)

அச்சமின்மை (19-5)
வானமும், பூமியும், சோதி மண்டலமும் எனக்கு அச்சமின்மை தருக; பின்புறத்திலிருந்தும் முன்புறத்திலிருந்தும், மேலிருந்தும் கீழிலிருந்தும் அச்சமின்மை எங்களுக்கு ஆவதாக. நண்பர்கள், அறிமுகம் இல்லாதவர்கள், மற்றும் அறிந்த விஷயம் அறியாத விஷயம் எதிலும் அச்சமின்மை தருக. இரவிலும் பகலிலும் எமக்கு அச்சமின்மையை நல்கி, எல்லா திசைகளும் நண்பர்களாகுக.
(பாரதியார் “அச்சமில்லை” என்ற பாடலிலும், “ஜயபேரிகை” என்ற பாடலிலும் “தெளிவு” என்ற பாடலிலும் இந்தக் கருத்துகளை எதிரொலிக்கிறார்.வள்ளுவனும் “அச்சமே கீழ்களது ஆச்சாரம்” என்று ஏசுகிறார்.)

அக்னி (19-55)
ஒவ்வொரு மாலையிலும், அக்னியே, எங்கள் இல்லத் தலைவன்; ஒவ்வொரு காலையிலும் அவன் எனக்கு நல்ல மனம் தருபவன்; மிகு செல்வத்தையும் பொருளையும் அளிக்கும் உன்னை வளர்த்து , நாங்கள் வாழ்வில் வளம் பெறுவோமாக.

தேகவலிமை (19-60)
வாயிலே (நல்) வாக்கும், மூக்கிலே பிராண மூச்சும், கண்களிலே தெளிவான பார்வையும், கேட்கும் காதும், நரைக்காத கேசமும், உடையாத பற்களும், கைகளில் பலமும் வேண்டும்! தொடைகளிலே திடம், கால்களில் துரித இயக்கம், பாதங்களில் சுவாதீனம் எங்களுக்கு வேண்டும். நான் துன்பமின்றி, என் ஆன்மா சேதமுறாமல் இருக்க வேண்டும்.
(தேசிய கவி சுப்பிரமணிய பாரதி “சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்” என்னும் பாடலில் இந்தக் கருத்தை ஒவ்வொரு உடல் உறுப்பாகச் சொல்லிப் பாடுகிறார்).

நூறு வயது (19-67-1/8)
நாங்கள் நூறு சரத் காலங்களைப் பார்க்கவேண்டும்; நூறு சரத் காலங்கள் ஜீவிக்கவேண்டும்; நூறு சரத் காலங்கள் விழித்தெழ வேண்டும்; நூறு சரத் காலங்கள் ஏறவேண்டும்; நூறு சரத் காலங்கள் சிறப்புற வேண்டும்; நூறு சரத் காலங்கள் வாழ வேண்டும்; நூறு சரத் காலங்கள் நலமுற வேண்டும்; நூறு சரத் காலங்கள் மேலும் மேலும் சிறப்புற வேண்டும்;
(பிராமணர்கள் தினமும் சந்தியாவந்தனத்தில் இந்த மந்திரத்தைச் சொல்லுவார்கள்)

அக்னி பகவான் (20-10)
“அனைத்தும் அறிந்த அறிவுக் கடவுளாக, தேவதூதனாகச் செயல்பட்டு, தேவர்களுக்குத் தரப்படும் ஆஹுதி உணவை மிகச் சிறப்பான முறையில் அவர்களுக்குச் சேர்ப்பிக்கும் உன்னதப் பணியை ஆற்றும் அக்னியே! ஆற்றல் மிக்க உன்னை எங்கள் ப்ரியமுள்ள தேவதையாக வரிக்கிறோம்.
( பாரதியாரின் “தீ வளர்த்திடுவோம்” என்ற பாடலிலும் “வேள்வித் தீ” என்ற பாடலிலும் அக்னி பகவானைப் போற்றும் துதிகள் உள்ளன.).

Contact Santanam Swaminathan :- swami_48@yahoo.com