கோசர்கள் ஆண்ட கொங்கு மண்டலம்!(Post.8954)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8954

Date uploaded in London – – 21 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

கொங்குமண்டல சதகம்

கோசர்கள் ஆண்ட கொங்கு மண்டலம்!

ச.நாகராஜன்

தமிழை ஆதரித்தவர்களும், நல்ல மனமுடையவர்களுமான கோசர்கள் ஆண்டது கொங்கு மண்டலம் என கொங்கு மண்டல சதகம் நாற்பதாம் பாடல் பெருமையுறக் கூறுகிறது.

கோசர்கள் என்பவர்கள் படைப் பயிற்சியில் சிறந்த ஒரு வகுப்பினர். இவர்களை “இளம்பல் கோசர் விளங்கு படைகன்மாரிகலின ரெறிந்த வகவிலை முருக்கின், பெருமலைக் கம்பம் போலப் பொருநற் குலையா நின்வலன்” என புறநானூறு கூறுகிறது.

மனத்தொடு பொருந்திய மாறுபடாத சொல்லை உடையவர்கள் என்பது ‘பொதியிற்றோன்றிய நல்லூர்க் கோசர் நன்மொழி போல வாயாகின்றது’ என குறுந்தொகை கூறுகிறது.

இந்தக் கோசர்கள் ஒரு காலத்தில் கொங்கு நாட்டை ஆண்டிருக்கின்றனர். இதனை சிலப்பதிகாரம் ‘உரை பெறு கட்டுரையில்’ காண முடிகிறது.

‘அது கேட்டுக் கொங்கிளங்கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய மழை தொழிலென்றும் மாறாதாயிற்று’ என்பதற்கான உரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப் படுகிறது:

“அங்ஙனம் செழியன் நன்மை செய்து அவை நீங்குதலின், அதனைக் கேட்டு கொங்கு மண்டலத்து இளங்கோவாகிய கோசரும், நங்கைக்கு அங்ஙனம் சாந்தியும், விழவும் செய்தலால் அவை நீங்குதலோடே, மழைபெய்தற்றொழில் பெய்யும் நாளென்றும் வழுவாதாயிற்று”

இப்படிப்பட பெருமை வாய்ந்த கோசரைக் கொண்ட கொங்குமண்டலத்தை நாற்பதாம் பாடலில் கொங்கு மண்டல சதகம் இப்படிக் குறிப்பிடுகிறது:

பனிமிகு நீள்கடல் சூழ்மே தினியிற் பலருமெச்ச

இனிமை தருந்தமிழ் மாது களிப்புற் றெலாவணியுங்

கனிவுறப் பூண்டு வளர்ந் தோங்கச் செய்யுங் கருத்தொடுநன்

மனமிகு கோசரும் வாழ்ந்தாண் டதுங் கொங்கு மண்டலமே

இப்பாடலிலிருந்து பனி மிகு நீள் கடல் சூழ்ந்த பூமியைப் பலரும் போற்ற, இனிமை தரும் தமிழ் அன்னை தன்னைப் போற்றி ஆதரித்து நல்ல மனமுடைய கோசர்கள் ஆண்டதும் கொங்கு மண்டலம் என்பது தெரிய வருகிறது.

இப்படிப்பட்ட பாடல்களினால் தான் நமக்கு நம்முடைய பழைய சரித்திரம் தெரிய வருகிறது.

tags –கோசர், கொங்கு மண்டலம்

***