Written by S Nagarajan
Date: 28 February 2016
Post No. 2581
Time uploaded in London :– 6-30 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
நாட்டு நடப்பு
கோமாளி மன்றம்
ச.நாகராஜன்
நமது பாராளுமன்றம் மாட்சிமை பொருந்திய மன்றம் என்ற பெயரை மாற்றி ‘கோமாளி மன்றம்’ என்று சொல்ல வைக்கும் அளவு ஒரு பாரம்பரியமிக்க கட்சி காட்சிகளை அரங்கேற்றுகிறது என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.
ரஷியாவுக்கும் சீனாவுக்கும் பாரம்பரியமாக வால் பிடிக்கும் காம்ரேட்கள் மாஸ்கோவில் மழை பெய்தால் மதுரையில் குடை பிடிப்பார்கள். பீகிங்கில் வெயில் அடித்தால் பேராவூரணியில் ஜீஸ் குடிப்பார்கள். இது அறிந்த விஷயம் தான்.
ஆனால் காங்கிரஸ்? ஆச்சரியம் ஆச்சரியமே.
பாராளுமன்றத்தில் ஸ்மிருதி இரானி ஹைதராபாத்தில் மாணவர்கள் என்ற போர்வையில் மறைந்திருக்கும் பிரிவினை சக்திகள் மஹிஷாசுரனுக்கு விழா எடுத்து துர்க்கையைப் பற்றி இழிவுறப் பேசியதை ஆதாரத்திற்காக அப்படியே வாசித்ததை ஆனந்த சர்மா வாசிக்கக் கூடாது என்று சொன்னது ஒரு பெரிய மாற்றத்தையே காங்கிரஸில் காண்பிக்கிறது.
அதாவது துர்க்கையம்மனை இழிவுபடுத்திப் பேசியவர்களைக் கண்டிக்காமல் அப்படிப் பேசினார்கள் என்று ஆதாரத்துடன் சொல்லி அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று சொன்ன பக்தையைக் கண்டிக்கிறார்கள்.
இது என்ன ஒரு கோமாளித்தனம்!
இதையே விரிவாகக் கற்பனை செய்து பார்த்தால் வாழ்க்கை முறையே மாறி விடும்.
காரை ஒருவன் மீது மோதுகிறான் என்று புகார் கொடுத்தால் அதை நீ ஏன் சொன்னாய்! தடுக்க வேண்டியது தானே என்று கூறலாம்.
அவனைக் கத்தியால் வெட்டியதை நான் பார்த்தேன் என்று சாட்சியம் கூற வந்தால், “உன்னை சிறையில் போடுவேன்; நீ அப்போது என்ன செய்து கொண்டிருந்தாய்! தடுக்காதது உன் குற்றம்” என்று நடவடிக்கை எடுக்கலாம்.
தீவிரவாதி ஒரு குற்றம் இழைக்கப்போகிறான் என்பதைத் தெரிந்து சொன்னால் அது எப்படி உனக்குத் தெரியும், நீ அவன் கூட்டாளி என்று சொல்லி நல்ல ஒரு தேசீயவாதிக்கே உலை வைக்கலாம்.
மொத்தத்தில் காங்கிரஸ் மாறுகிறது!
மஹாத்மாவின் பல அறிவுரைகளைப் புறக்கணித்தோம். அவர் சொன்ன, “ காங்கிரஸைக் கலைத்து விடுங்கள்” என்ற அறிவுரை ஒன்றையாவது கடைப்பிடித்திருக்கலாம்.
இதே கட்சியின் தலைவரை – மாபெரும் ராஜீவ் காந்தியை – மகாபாவிகள் திட்டமிட்டுக் கொலை செய்ததை நீதிமன்றம் பலகாலம் விசாரித்து தண்டனை கொடுக்கப்பட்ட குற்றவாளிகளை விடுதலைச் செய்யச் சொல்லி முழக்கமிடுகிறார்களே, அப்போது காங்கிரஸ்காரர்களுக்கு எவ்வளவு மன உளைச்சல் ஏற்படுகிறது?
நீதியில் பற்றுள்ள நாமும் அவர்களுடன் சேர்ந்து அதை எதிர்க்கிறோம்.
கருத்துரிமை, ஜனநாயகம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் சொல்லி விடலாமா?
ஒரு கொலை நடக்கும் போது அதைத் தடுக்க முடியாத, மனித உரிமை என்ற பேரில் இயங்கும், மகா உத்தமர்கள் கொலை செய்தவரைத் தூக்கில் போடு என்கின்ற போது ஓடி வந்து தடுப்பது எந்த வகையில் நியாயம்?
பாராளுமன்றத்தில் துர்க்கையை இழிவு படுத்தும் வகையில் பேசியிருந்தால் அவர்கள் மீது நாங்களும் நடவடிக்கை எடுக்க சம்மதிக்கிறோம் என்று சொன்னால் அது காங்கிரஸுக்கு அல்லவோ பெருமை?
மதவாத சக்தி பிஜேபி என்று குற்றம் சாட்டுபவர்கள் மிக வெளிப்படையாக முஸ்லீம்களுக்கு மட்டுமென்றே இயங்கும் முஸ்லீம் லீகை மதவாதக் கட்சி என்று சொல்லாமல் அதனுடன் கூட்டு சேர்கிறார்களா? இது என்ன கொடுமை?
பிஜேபியில் ஒரு முஸ்லீமைப் பார்க்கலாம். ஒரு கிறிஸ்துவரைப் பார்க்கலாம் – பொறுப்பில்!
முஸ்லீம் லீகில் ஒரு உறுப்பினராகக் கூட இன்னொரு மதத்தவரை – இந்துவை- கிறிஸ்தவரை- ஜைனரை- புத்தமதத்தவரைப் பார்க்க முடியுமா?
யார் உண்மையில் மதவாதக் கட்சி!
ஆச்சரியமாக இருக்கிறது – மக்கள் எல்லோருமே சிந்திக்கத் தெரியாத ஜடங்கள் என காங்கிரஸும் காம்ரேட் கட்சியும் எடை போடுகிறதா?
சோவியத் சிதறுண்டது போல கம்யூனிஸ்டுகளும் சிதறி வலிமையை இழப்பது கண்கூடு.
மதிப்பிற்குரிய சீதாராம் எச்சூரி, துர்க்கைக்கு ஆதரவாக ஆனால் இரானிக்கு எதிராகப் பேசியது எவ்வளவு பெரிய கோமாளித்தனம்!
மதம் ஒரு அபின் என்ற மார்க்ஸியவாதி துர்க்கைக்கு வக்காலத்து வாங்குவது எவ்வளவு பெரிய போலித்தனம்!
காங்கிரஸ் மகாத்மாவின் கனவை மெய்ப்பிப்பது போல அதை அழித்து விடுவார்களோ, என்னவோ! காந்திஜியின் கொள்கைகளை ஆட்சியில் இருந்த போது அமுல் படுத்த முடியாமல் போனதற்கு பிராயச்சித்தமாக அவரது கடைசி ஆசையை நிறைவேற்றத் துடிக்கிறார்களோ!
அதற்கு துர்க்கா தேவியின் அருள் வேண்டித் துதிக்கிறார்களோ!
காங்கிரஸின் புதிய பக்தரா, துர்க்கா தேவியின் நிரந்தர பக்தை ஸ்மிருதி இரானியா – யார் உண்மையாக துர்க்கா தேவி அருளுக்குப் பாத்திரமானவர் என்பதை மக்கள் சின்ன துண்டுச் சீட்டின் வழியாக முடிவு செய்து விடுவர்!
****
You must be logged in to post a comment.