தமிழ் விந்தை: கோமூத்திரி-1

gomuthri

படத்தின் மீது ‘க்ளிக்’ செய்தால் படம் பெரிதாகும்

தமிழ் என்னும் விந்தை! -18

தமிழ் விந்தை: கோமூத்திரி-1

 

கட்டுரையை எழுதியவர் :– ச.நாகராஜன்

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1527; தேதி 29 டிசம்பர், 2014.

சித்திர கவிகளில் இன்னொரு விதம் கோமூத்திரி ஆகும். இதை பரிதிமால் கலைஞர் விளக்குகிறார் இப்படி:-

பசு மாடு நடந்து கொண்டே மூத்திரம் பெய்ய உண்டாகும் சுவட்டின் வடிவாக அமைக்கப்பட்ட ரேகையிலே எழுத்துக்கள் அமையப் பாடிய பாட்டு கோமூத்திரியாகும்.

கோ – பசு; மூத்திரி- மூத்திர வடிவுடையது

இதற்கு உதாரணச் செய்யுளாக பின் வரும் செய்யுளைத் தந்து அவர் பொருளையும் விளக்குகிறார் :-

பருவ மாகவி தோகன மாலையே                            

பொருவி லாவுழை மேவன கானமே                            

மருவு மாசைவி டாகன மாலையே                                 

 வெருவ லாயிழை பூவணி காலமே

 

 

இதன் பொருள்:-

இது ஓ பருவம் ஆக – இதுவோ தலைவர் குறித்த கார்ப்பருவமாதல் வேண்டும்

கனம் மாலை – மேக வரிசைகள்

ஆசை மருவும் – திக்குகளிலே பொருந்தும்; (அதுவேயன்றி)              

  விடா கன மாலையே – (கனம் மாலை விடா) அதிகமாக மாலைப் பொழுதிலே மழை பொழிதலை நீங்கா (எனவே, மிகவும் பொழியும்);

பொருவு இலா உழை – நிகரற்ற மான்கள்,    

 கானமே மேவன – காட்டின் கண்ணே விரும்பி விளையாடுவனவாயின்; (ஆதலால்)                                  ஆயிழை – குற்றமற்ற அணிகளையுடையாய்                       

வெருவல் – அஞ்சாதொழிவாயாக;                 

பூ அணி காலமே – தலைவர் விரைவில் இங்கு வந்து நம்மைப் பூக்களால் அலங்கரிக்கும் காலம் இதுவே

குறிப்பு :- மேவன – விரும்புவன; ஓப்பிடுக: “மேவன செய்யும் புதல்வன் றாய்க்கே (குறுந்தொகை – 8)

இது பருவம் கண்டு வருந்திய தலைவியைப் பாங்கி தேற்றியது. கோமூத்திரியைச் சித்திரமாக கீழே காணலாம்:-

இந்தச் சித்திரத்தில் முதல் இரு அடிகளும் மேலே உள்ளன. அடுத்த இரு அடிகளும் கீழே உள்ளன. அத்தோடு மேலே ஒரு எழுத்தும் கீழே ஒரு எழுத்து விட்டு ஒரு எழுத்துமாக, பின்னர் இப்படியே மேலும் கீழுமாகப் படித்தால் பாடலை முழுவதுமாகப் படிக்கலாம்.

இதை கோமூத்திரி என்று சொல்வது சரி தானே!

swami_48@yahoo.com

*****************