வெற்றி தரும் கோமேதகம்! (Post No.7395)

Written by S Nagarajan

Date – 29th December 2019

Post No.7395

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

மாலைமலர் 28-12-2019 நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை. நவரத்னங்கள் பற்றிய தொடரி இதுவே இறுதிக் கட்டுரை!

வெற்றி தரும் கோமேதகம்!

ச.நாகராஜன்

வெற்றிக்கு ஒரு கல் கோமேதகம்

நவரத்தினங்களுள் தனி இடத்தைப் பெறுவது கோமேதகம்! ஏனெனில் சுகபோக வாழ்வையும் வெற்றியையும் தருவது அது!

வெற்றிக்கான கல்லான கோமேதகத்தை பழங்கால நாகரிகத்தினர் அனைவரும் போற்றி அணிந்தனர். இது கண் திருஷ்டியிலிருந்து ஒருவரைக் காப்பாற்றும் என்றும், பயங்கரமான தீய கனவுகளைப் போக்கும் என்றும் அவர்கள் நம்பினர். இதை அணிந்தால் தோல் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் நீங்கி விடும் என்பதும் அவர்களது நம்பிக்கை. ஒருவருக்கு அபாயம் வரும் போது இதன் ஒளி மங்கி விடும்; ஆகவே உடனேயே தக்க தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும் அவர்கள் நம்பினர்.

இத்தாலியில் இதை விதவைகளின் கல் என்று அழைத்து வந்தனர். ஏனெனில் பெரும்பாலும் கணவனை இழந்த விதவைகளே தங்களின் பெரும் இழப்பால் ஏற்பட்ட சோகத்திலிருந்து மீள கோமேதக நெக்லஸை அணிந்து வந்தனர்; கொண்டை ஊசியிலும் கோமேதகக் கல்லைப் பதித்துப் பயன்படுத்தினர்.

கோமேதகம் அணிவோருக்குக் காதலில் வெற்றி, நம்பிக்கை, விசுவாசம், தம்பதியினரிடம் பரஸ்பர அன்பு, தீக்காயங்களிலிருந்து பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்படுகிறது.

ஜோதிட சாத்திரம் கூறும் பலன்கள்

ஜோதிட சாத்திரத்தின் படி சாயா கிரகமான ராகு கிரகத்திற்கு உரியது கோமேதகம். ராகுவைப் போற்றித் துதிக்கும் ராகு அஷ்டோத்தர சத நாமாவளியில் 19வது நாமமாக கோமேதாபரண ப்ரியாய நமஹ என்று கூறப்படுவதால் கோமேதக ஆபரணத்தை அணிந்தவர் ராகு என்பது பெறப்படுகிறது.

ராகு தசை நடக்கும் காலத்திலும் ஒரு ஜாதகத்தில் ராகு தீய பலன்களைக் கொடுக்கும் இடத்தில் இருந்தாலும் கோமேதகத்தை அணிந்தால் கெட்ட பலன்கள் நீங்கும்; நல்ல பலன்கள் ஓங்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு  ராகு கிரகத்திற்கு உரிய கோமேதகம் பரிந்துரைக்கப்படுகிறது. விருச்சிக ராசிக்காரர்கள்  கேதுவிற்கு உரியதாக உள்ள வைடூரியம் அணியலாம்.

எண் கணிதத்தின் படி ராகுவின் எண் 4 ஆகும். நான்கு எண்ணில் பிறந்தவர்களும் (பிறந்த தேதி 2,13, 22 ஆகிய தேதிகள்) கூட்டு எண் நான்கைக் கொண்டிருப்பவர்களும் கோமேதகத்தை அணியலாம்.இதனால் காரியசித்தியும் தெய்வ பலமும் கை கூடும்.

தெய்வீகக் கல் கோமேதகம்

தேவி பாகவதம் தேவியின் இருப்பிடத்தைச் சுற்றியுள்ள பிரகாரங்களை வர்ணிக்கிறது. இதில் கோமேதக பிரகாரம் பத்மராக பிரகாரத்திற்கு மேல் செம்பருத்தி மலர் போல பிரகாசித்து ஒளிர்வதாகக் கூறப்படுகிறது. இங்கு 32 சக்திகள் நானாவித சஸ்திரங்களைக் கொண்டு கோமேதக மணிகளால் அலங்கரிக்கப்பட்டு பூஜிக்கப்பட்டவாறு இருக்கின்றனர்.

சிலப்பதிகாரம் ஊர் காண் காதையில் (190ஆம் வரியில்) ‘இரு வேறு உருவவும்’ என்று கூறப்படுகிறது. ஆகவே இரு வண்ணமுடைய கோமேதகமே சிறந்தது என்பது வலியுறுத்தப்படுகிறது.

ரஸ ஜல நிதி தரும் சுவையான தகவல்கள்

பழம் பெரும் நூலான ரஸ ஜல நிதி தரும் சுவையான தகவல்கள் இவை:-

மஞ்சளுடனான சிவப்பு வண்ணம் கலந்த கல் இது.

இது கோமேதகம் என ஏன் அழைக்கப்படுகிறதெனில் இது கோமயம் போல இருப்பதால் தான்.

நல்ல ஒரு கோமேதகம் என்பது : 1) பசுவின் தெளிந்த சிறுநீரின் வண்ணத்தை ஒத்திருக்கும் 2) ஒளி ஊடுருவதாய் இருக்கும் 3) எண்ணெய் பூச்சு பூசப்பட்டது போல இருக்கும் 4) சமனான பரப்புடன் இருக்கும் 5) கனமாக இருக்கும் 6) அடுக்கு அடுக்காய் (layers) இருக்காது 7) வழவழப்பாய் இருக்கும் 8) ஒளி பிரகாசிப்பதாய் இருக்கும்.

விலக்கத்தக்க கோமேதகம் என்பது 1) இரண்டாவது வண்ணம் இல்லாமல் ஒரு வண்ணத்துடன் மட்டுமே இருக்கும் 2) இலேசானதாய் இருக்கும் 3) கரடுமுரடாய் இருக்கும் 4) தட்டையாய் இருக்கும் 5) ஒரு அடுக்கு இருப்பது போல இருக்கும் 6) ஒளி இருக்காது 7) மஞ்சள் நிறக் கண்ணாடியைப் பார்ப்பது போல இருக்கும்.

ஒவ்வொரு ரத்தினமும் தனக்கென உள்ள பிரதானமான வண்ணத்தைத் தவிர ஒரு உப வண்ணத்தையும் கொண்டிருக்கும். இந்த வண்ணம் 1) வெள்ளை 2) சிவப்பு 3) மஞ்சள் 4)கறுப்பு ஆகிய வண்ணமாக இருக்கலாம். இப்படிப்பட்ட கல்லும் கோமேதகமே.

பிரதானமாக உள்ள மஞ்சள் வண்ணத்துடன் மேலே கூறப்பட்ட எந்த வண்ணத்தையும் நல்ல கோமேதகம் கொண்டிருக்கலாம்.

மிக மிகச் சிறந்த கோமேதகம் என்பது கனமாயும், அதிக பிரகாசத்துடனும், எண்ணெய் பூசப்பட்டது போன்ற தோற்றத்துடனும், மிருதுவாகவும், ஒளி ஊடுருவதாகவும் இருக்கும். இப்படிப்பட்ட சிறந்த கோமேதகம், அதை அணிபவருக்கு செல்வத்தைத் தரும்; அதிர்ஷ்டத்தையும் தரும்.

அதிக பித்தம் இருந்தால் பித்த சம்பந்தமான வியாதிகளைப் போக்கும்.

ரத்த சோகையை நீக்கும்.

ஜீரண சக்தியை அதிகரிக்கும். அதிக பசி எடுக்க வைக்கும். தோலுக்கு நலம் பயக்கும். ஆயுளை அதிகரிக்கும்.

நல்ல கோமேதகம் இமயமலையில் சிந்து நதி உள்ள சிந்து மாநிலத்திலும் சிந்து சாகரத்திலும் கிடைக்கும். நல்ல கோமேதகம் தானா என்பதை நெருப்பை மூட்டித் தெரிந்து கொள்ளலாம்.

அதாவது கோமேதகத்தை நெருப்பில் வாட்டினால் அதன் நிறம் மாறிக் கொண்டே இருக்கும். இதை வைத்து அறிந்து கொள்ளலாம்.

இப்படி ரஸ ஜல நிதி கூறுவதைத் தவிர ஏனைய பல நூல்களும் கோமேதகத்தின் அருமை பெருமைகளை விளக்குகின்றன.

பதார்த்த குண சிந்தாமணி என்னும் நூல் கோமேதகம் அணிந்தால் பித்த சம்பந்தமான நோய்கள் நீங்கும், மலக் கட்டறுக்கும், குஷ்ட நோய்கள் நீங்கும், வாத நோய் நீங்கும், உடல் ஒளி ஓங்கும் என்று கூறுகிறது.

அறிவியல் தகவல்கள்

இது சிலிகேட் கனிம வகையைச் சார்ந்ததாகும்.

மோவின் அளவுகோல் படி இதன் கடினத்தன்மை : 6.5 – 7.5

இதன் ஒப்படர்த்தி (Specific Gravity) : 3.1 – 4.3

இதன் இரசாயன  பொது வாய்பாடு : X3Y2(SiO4)3

செயற்கைக் கற்களும் கிடைக்கும் இடங்களும்

கோமேதகத்தில் அரிய பல வகைகள் உண்டு. இவற்றை தொழிலகப் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.

கோமேதகத்தின் அரிய பல வகைகள் தாய்லாந்து, சீனா, அமெரிக்கா, பிரேஜில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கிடைக்கிறது.

நியூயார்க் மாகாணத்தின் அதிகாரபூர்வமான மாநில ரத்தினம் கார்னெட் (New York State Gemstone : Garnet) ஆகும்!

செயற்கை முறையில் தயாரிக்கப்படும் கார்னெட் உள்ளிட்ட வகைகள் ஏராளமாகத் தயாரிக்கப்படுவதால் இயற்கையாகக் கிடைக்கும் கோமேதகத்தைத் தேர்வு செய்ய விரும்புவோர் கவனத்துடன் தக்க நிபுணர்களை நாடுவது நலம்.

இந்தியாவில் மேற்குப் பகுதியிலும் தூத்துக்குடி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும் கோமேதக தாது ஏராளமாகக் கிடைக்கிறது. ஆனால் பாதுகாப்பற்று இருப்பதாலும் இப்படி ஒரு அரிய வகை ரத்தின தாது இருப்பது அதன் உரிமையாளர்களுக்குத் தெரியாமல் இருப்பதாலும் இந்த தாது திருடப்படுவது வருந்தத்தக்க விஷயம்.

பொதுவாகவே ஒரு அரிய வகைக் கல்லையோ அரிய தாதுக்கள் கொண்ட மண்வளத்தையோ உரிமையாகக் கொண்டிருப்பவர் அதன் மாதிரியை (Sample) இதற்கெனவே அமைந்துள்ள ஜெம்மாலஜி சோதனைச்சாலைகளில் சோதனை செய்து என்ன வகை, என்ன விலை பெறும் என்பதைச் சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம்.

பொதுவாகவே ஒரு நவரத்னக் கல்லை அணியும் போது அதை பசும்பாலில் நனைத்து, பின்னர் தண்ணீரில் அலசி அணிவது மரபு. கல்லுக்குரிய கிழமையன்று அணிவது சிறப்பாகும். மாணிக்கம் – ஞாயிறு; முத்து – திங்கள்; பவளம் – செவ்வாய்; மரகதம் – புதன்; கனக புஷ்பராகம் – வியாழன்; வைரம் – சுக்ரன்; இந்திரநீலம் – சனி என்று இப்படி அணிவது சிறப்பாகும்.

பரம்பரை பரம்பரைச் சொத்தாக வருகின்ற நவரத்னக் கற்கள், மற்றும் மாலைகளை வீட்டின் உள்ளே பெட்டியில் வைத்துப் பூட்டாமல் அதைச் சுத்தம் செய்து துலக்கி, தேவையெனில் சோதனைச்சாலையில் அதன் மதிப்பையும் அரிய தன்மைகளைப் பற்றியும் அறிந்து கொண்டு அவற்றை அணிந்து நல்ல பலன்களைப் பெற்று மகிழலாம்.

முடிவுரை

நவரத்தினங்களைப் பற்றிய இந்தக் கட்டுரைத் தொடருக்கு வாசகர்கள் பெருமளவில் உற்சாக ஆதரவு தந்தனர். குறிப்பாகத் தாய்மார்களும் ஆர்வத்துடன் இவற்றைப் படித்து வந்தனர். வாசக அன்பர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கட்டுரைத் தொடரை எழுத ஊக்குவித்த மாலைமலர் சி.இ.ஓ. (C.E.O) திரு ரவீந்திரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. அனைவருக்கும் பயன்படக் கூடிய ஒரு தொடர் பற்றிச் சிந்தித்து அதை உங்கள் முன் வழங்கி இருப்பதிலிருந்தே சமுதாயம் மேம்படுவதற்கான கலைகளையும் துறைகளையும் ஊக்குவிக்கும் அவரது பாராட்டப்பட வேண்டிய சமுதாய நோக்கு தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

திரு வசந்த்ராஜ் உள்ளிட்ட ஆசிரிய குழுவினர் கட்டுரைகளை நல்ல முறையில் வெளியிட ஆர்வத்துடன் உதவியுள்ளனர். மாலைமலர் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.

தொலைபேசியில் ஆயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்டோர் என்னிடம் பேசி விளக்கங்கள் கேட்டுப் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் உரிய கற்களைப் பெற்று நலமாக வளமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.

கற்களை அணிந்தவுடன் ஏற்பட்ட நல்ல பலன்களை மகிழ்ச்சியுடன் தொலைபேசி மூலம் பங்கு கொண்டவர்கள் அனைவருக்கும் எனது நன்றி கலந்த வாழ்த்துக்கள்!

நமது பூர்வ ஜென்ம கர்மங்களுக்கு ஏற்ப நல்லவையும் தீயவையும் இப்பிறவியில் அவ்வப்பொழுது நமக்கு அமைகின்றன. ஆனால் தீயவற்றைப் போக்கவும் கஷ்டங்களிலிருந்து விடுபடவும் இறைவன் அருளியுள்ள வழிகள் மணி, மந்திரம், ஔஷதம்.

இந்த மூன்றுமே உடனுக்குடன் பலன் அளிக்கும் என்பதால் முன்னோர்கள் அரிய பல சாத்திரங்களை வகுத்து நமக்கு வழி காட்டி அருளியுள்ளனர்.

ஏழாம் நூற்றாண்டு நூலான ரஸ ஜல நிதி, தமிழின் பழம் பெரும் காப்பியமான சிலப்பதிகாரம் (அடியார்க்கு நல்லார் உரை), ரத்தின சாஸ்திரம், தேவி பாகவதம், கருட புராணம், சிவ புராணம், சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் பதார்த்த குண சிந்தாமணி உள்ளிட்ட நூல்கள் பல அரிய செய்திகளை வழங்குகின்றன.

1930இல் இங்கிலாந்தில் வெளியான Amulets and Superstitions என்ற சிறந்த ஆய்வுப் புத்தகம் சர்.இ.ஏ. வாலிஸ் பட்ஜ் (Sir E.A. Wallis Budge) அவர்களால் எழுதப்பட்டது. இந்த நூல் பழம் பெரும் நாகரிகத்தினர் மணிகளை எப்படிப் பயன்படுத்தினர் என்பதை ஆதாரத்துடன் விளக்குகிறது.

1905ஆம் ஆண்டு வெளியான Precious Stones என்ற புத்தகம் நவரத்தினங்களைப் பற்றிய அரிய செய்திகளைத் தருகிறது. இதை எழுதியவர் ஏ.ஹெச்.சர்ச் (A.H.Church F.R.S) என்பவர். அறிவியல் பூர்வமாகவும் கலை நோக்குடனும் விலை மதிப்பற்ற அபூர்வ மணிகளைப் பற்றி இவர் விளக்கி எழுதியுள்ளார்.

இப்படிப்பட்ட இன்னும் பல நூல்களையும் ஆராய்ந்து ஒப்பு நோக்கி நவரத்தினங்களைப் பற்றிய செய்திகளை வழங்க முடிந்தது. இவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

காலம் கடந்து நின்று எப்போதும் ஜொலிக்கும் மணிகள் மனித குலத்தின் பொக்கிஷம்!

அனைவரது உள்ளத்திலும் இல்லத்திம் மகிழ்ச்சி தர வல்ல மணிகளை வணங்கிப் போற்றி விடை பெறுகிறேன்.

நன்றி! வணக்கம் !!

அன்பன்

ச.நாகராஜன், பெங்களூரு 19-12-2019