Written by London Swaminathan
Date: 5 July 2017
Time uploaded in London- 17-44
Post No. 4054
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
இமயம் முதல் குமரி வரை பண்பாடு ஒன்றே. பசுவுக்கும் பிராமணனுக்கும் மதிப்பும் மரியாதையும் கொடுப்பது இலக்கிய வழக்கு. வாழ்க அந்தணர், வானவர் ஆனினம் (திருஞான சம்பந்தர் தேவாரம்) என்பர். இதையே சம்ஸ்கிருதத்தில் “கோப்ரஹ்மணேப்ய சுபமஸ்து நித்யம், லோகாஸ் சமஸ்தோ சுகினோ ப வந்து” என்பர். அதாவது பிராமணன் முதலான எல்லாரும் பசு முதலான எல்லா ஜீவன்களும் சுபமாக இருக்கட்டும் உலகம் முழுதும் சுபமாக இருக்கட்டும் என்பது இதன் பொருள்.
ஏன் பசுவையும் பிராமணனையும் மட்டும் சொல்ல வேண்டும்? சுயநலம் இல்லாமல் எல்லாவற்றையும் மற்றவர்களுக்கு அளிப்பதாலும் பாலும் வேதமும் எல்லோருக்கும் பயன்படுவதாலும் அவர்களை முதலில் வைத்து மற்றவர்களையும் வாழ்த்தினர்.
ஒரு வட்டத்தில் முதல் புள்ளி முடிவான புள்ளி, துவங்கும் இடம், முடியும் இடம் என்று எதுவும் கிடையாது. ஆனால் நாமாக ஒரு கோடு போட்டு இது துவங்கும் இடம், இது முடியும் இடம் என்போம்; ஓட்டப் பந்தயம் நடக்கும் வட்டமான மைதானங்களில் இதைக் கண்கூடாகக் காணலாம். அது போலவே சமுதாயத்தில் எல்லோரும் ஒரு உடலின் அங்கம் என்று ரிக்வேதம் (புருஷ சூக்தம்) சொல்கிறது. எல்லோரும் சமம் ஆயினும் ஒரு துவக்கம் இருக்க வேண்டும்.
தமிழ் வேதம் என்று திருவள்ளுவ மலை போற்றும் திருக்குறளில் பசுவையும் பிராமணனையும் வள்ளுவரும் முதலிடத்தில் வைக்கிறார்.
ஆபயன் குன்றும் அறு தொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின் (குறள் 560)
ஒரு நாட்டில் ஆட்சியாளர்கள் நியாயமான ஆட்சி நடத்தாவிடில் ஆறு தொழில்களைக் கொண்ட அந்தணர்கள் வேதங்களை மறந்து விடுவர்; பசுக்களும் பால் தராது. இந்தக் கருத்தும் “பசு-பிராமணன்” என்ற ஜோடியும் இமயம் முதல் குமரி வரை எல்லா மொழி நூல்களிலும்,
குறைந்தது மூவாயிரம் ஆண்டுகளாக, உள்ளது.
புற நானூற்றில் நெட்டிமையார் (புறநானூறு பாடல் 9)
பாடிய பாடலில்— பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாராட்டும் பாடலில்—- ஆவும் ஆன் இயற் பர்ப்பன மாக்களும் என்ற வரிகள் வருகிறது.
கண்ணகிக் பிராமணர்களையும் பெண்களையும் எரிக்காமல் தீயோரை மட்டும் எரி என்று மதுரையில் அக்கினி தேவனுக்கு உத்தரவிட்டது போல பாண்டிய அரசனும் பிராமணர்களும் பசுக்களும் பெண்களும்,நோயாளிகளும் என்று சொல்லிவிட்டுப் போர் தொடுப்பானாம் என்கிறார். அது தர்ம யுத்தம் நடந்த காலம்.
இவ்வாறு சங்க இலக்கியத்தில் பல இடங்களில் பிராம- பசு ஜோடி வருகி றது
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளி வந்தது இல் (குறள் 1066)
பசுவைக் காப்பது புனிதமானது. ஆயினும் ஒருவன் பசுவுக்காக தண்ணீர் கொடுங்கள் என்று தர்ம நியாயப்படி தண்ணீர் கேட்டாலும் பிச்சை, பிச்சைதான்; அது போல பிச்சை எடுப்பதைப் போல நாவுக்கு இழிவான செயல் வேறு ஒன்றும் இல்லை.
பசு மாட்டை ஏன் வள்ளுவர் உதாரணமாக வைத்தார். பசுக்களைப் பூஜித்து காப்பாற்றுவது இந்துக்களின் கடமை. அதற்காக தண்ணீர் வேண்டும் என்று கேட்பது தர்மமே. ஆனாலும் அதை பிச்சை கேட்கும் நிலை வந்துவிட்டால், அதுவும் ஒருவனுக்கு இழிவான செயலே.
தமிழ் நாட்டில் கோவில் வாசல்களில் பசுமாடுகளைக் கட்டி வைத்திருப்பர். அதன் அருகிலேயே அகத்திக் கீரையை விலைக்கு விற்கும் பெண்களும் நிற்பர். பக்தர்களில் பலர் காசு கொடுத்து அகத்திக் கீரையை வாங்கி பசுமாட்டுக்குப் போடுவர். இது ஒரு பெரிய தருமம்; எளிதில் புண்ணியம் சேர்க்கும் வழி.
இதைத் திருமூலரும் செப்புவார்:
யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே
பொருள்:-
எல்லோரும் எளிதில் செய்யக் கூடிய வைகளைத் திருமூலர் சொல்லிக் கொடுக்கிறரர். இதை யாரும் செய்யலாம்; எப்போதும் செய்யலாம்; செலவின்றிச் செய்யலாம். பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் சொல்வதைப் புறநானூற்றில் புலவர் கபிலர் அப்படியே சொன்னார்; “பத்ரம் புஷ்பம் பலம் தோயம்” (பச்சிலை, பூ, பழம், தண்ணீர்) ஆகிய எதனாலும் என்னைப் பூஜிக்கலாம். இதைப் புறநானூற்றில் (106) புல், இலை, எருக்கம் ஆயினும் — கடவுள் ஏற்பார் என்று கபிலர் சொன்னார்.
திருமூலரும் கடவுளுக்கு ஒரு வில்வ இலையையோ, அருகம் புல்லையோ, துளசி இலையையோ கொடுத்தால் போதும் என்பார். அது போல பசு மாட்டுக்கு ஒரு கைப்பிடி புல் அல்லது அகத்திக் கீரை கொடுத்தால் போதும். நாம் சாப்பிடும் முன்னால் ஒரு கைப் பிடி அரிசியை ஏழைகளுக்கு, அனாதை ஆச்ரமங்களுக்கு என்று ஒரு பானையில் எடுத்து வைக்க வேண்டும். இதை
காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) பிடி அரிசித் திட்டம் என்று துவக்கி வைத்தார். இதை எல்லாம் செய்ய முடியாதவர்கள் கூட தன் இன்மொழியால் மற்றவர்களுக்கு நல்லதை உரைத்து அவர்களைக் கடைத்தேற்றும் புண்ணியத்தைச் செய்யலாம்.
ஆக, யார் பசுவைப் பற்றிப் பேச வந்தாலும் அத்தோடு பத்து நல்ல செயல்களும் கூடவே வரும்!
–Subahm–
You must be logged in to post a comment.