தகவல் கொள்கையின் தந்தை க்ளாட் ஷனான்! (Post No.3655)

Written by S NAGARAJAN

 

Date: 21 February 2017

 

Time uploaded in London:-  5-50 am

 

 

Post No.3655

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

பாக்யா 17-2-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

தகவல் கொள்கையின் தந்தை க்ளாட் ஷனான்!

 

ச.நாகராஜன்

 

“அறிவே சக்தி. தகவலானது நம்மை விடுவித்து சுதந்திரம் அளிப்பதாகும். கல்வியோ முன்னேற்றத்தைத் தருவது! இது ஒவ்வொரு சமூகத்திற்கும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொருந்தும்” – கோபி அன்னான்

 

இன்று ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மின்னல் வேகத்தில் தகவல்கள் பரிமாறப்படுவதற்கான காரணம் க்ளாட் ஷனான் (Claude Shannon  தோற்றம் 30-4-1916 மறைவு: 24-2-2001) என்ற அமெரிக்க கணித மேதையே. பூல்ஜியன் அல்ஜிப்ராவிற்கும் டெலிபோன் ஸ்விட்ச் சர்க்யூட்டிற்கும் இடையே உள்ள ஒற்றுமையைக் கண்ட அவர் தகவல் கொள்கை எனப்படும் இன்ஃபர்மேஷன் தியரியைக் கண்டு பிடித்தார்.

 

 

பெல் லாபரட்டரியில் 1946ஆம் ஆண்டு சேர்ந்த அவர் பல ஆண்டுகள் அதில் பணி புரிந்து தொலைத்தொடர்பு பற்றிய தொழில் நுணுக்கத்தை நன்கு அறிந்து கொண்டார். கணிதத்திலும் விஞ்ஞானத் தொழில்நுட்பத்திலும் அபார மேதையாக இருந்த காரணத்தினால் ஒரு செய்தியை அதன் வலிமையும் ஆழமும் குறையாமல் குறைந்த வார்த்தைகளிலேயே சிறப்பாக அனுப்ப முடியும் என்ற கொள்கையை வகுத்தார்.

 

க்ரிப்டோகிராஃபி எனப்படும் மறைமுக இயலில் அவருக்கு ஆர்வம் ஏற்பட அதிலும் தன் திறமையைக் காட்டினார்.

மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி இருக்கும் இடத்திலிருந்து சில  மைல் தூரத்தில் தான் அவரது பெரிய வீடு இருக்கிறது.

 

 

வீடு முழுவதும் பியானோக்கள் ஐந்து, இதர இசைக் கருவிகள் முப்பது என்ற அளவில் ஏராளமாக நிரம்பியிருந்தன. செஸ் விளையாட்டை விளையாட இயந்திரங்களை அவர் தயார் செய்தார். சதுரங்கக் காய்களை நகர்த்த மூன்று விரல்கள் கொண்ட மெஷின் ஒன்று காயை லபக்கென்று பிடித்து நினைத்த படி அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும். பீப் என்ற ஒலியோடு விமரிசனங்களை வேறு கூறும்! 600 அடி உயரத்திலிருந்து தன் குழந்தைகளை மாடியிலிருந்து தரையில் இறக்குவதற்காக ஒரு விசேஷ நாற்காலியை அவர் வடிவமைத்திருந்தார். அந்தக் குழந்தைகள் பெரியவ்ர்களாகும் வரை அந்த நாற்காலியில் தான் அவர்கள் கீழே இறங்குவர். மிகத் திறமையுடன் நேரத்தைக் கணக்கிட்டு கையால், பந்துகளை மேலே தூக்கிப் போட்டு விளையாடும் விளையாட்டான ஜக்லிங்கில் அவருக்கு ஆர்வம் அதிகம். இதை விளையாடிக் கொண்டே தானே வடிவமைத்த ஒரு சைக்கிளில் வேக்மாக அவர் செல்வார். இந்த விளையாட்டை விளையாடுவதற்கான வசதியுடன் கூட அந்த சைக்கிள் ஒரு சக்கரம் சற்று தள்ளி இருக்கும்படி அவரால் வடிவமைக்கப்பட்டிருந்தது.

 

 

அவர்து வீட்டில் பொம்மைகளுக்கான ஒரு தனி அறையில் ஜக்ளிங் செய்வதற்கான ஒரு விசேஷ இயந்திரம் இரும்புக் குண்டுகளை தூக்கித் தூக்கிப் போட்டு விளையாடும். அவர் வடிவமைப்பில் மூன்று கோமாளிகள் 11 ரிங்குகளையும் 7 பந்துகள் உள்ளிட்டவற்றை மறைவாக வைக்கப்பட்டிருக்கும் கடிகாரம் மற்றும் இரும்பு ராடுகள் கொண்ட ஒரு இயந்திர அமைப்பு மூலம் மேலே தூக்கிப் போட்டு விளையாடுவர். இது அவரது பிரம்மாண்டமான படைப்புகளில் சிறப்பான ஒன்று!

 

 

அவரைத் தேடி ஏராள்மான விருதுகள் தாமே வந்தன.

லாஜிக் மெஷின் என்ற ஒரு அமைப்பை வடிவமைத்து எப்படி தகவல்களை சிறப்பாக அனுப்ப முடியும் என்பதை அவர் நேரில் காட்டிய போது அனைவரும் அசந்து போயினர்.

 

ஒரு தகவலைக் கூட மற்ற பொருள்களை அளப்பது போல அடர்த்தி அல்லது பொருள் திணிவு போன்ற அடிப்படையில் அளக்க முடியும் என்று அவர் கூறினார். இதை வரவேற்ற உளவியல் வல்லுநர்களும், மொழி இயல் வல்லுநர்களும் இந்தக் கொள்கையை மேம்படுத்தி தகவல் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினர்.

அட்லாண்டிக் பெருங்கடல் வழியே ஒரு தகவல் அனுப்பப்பட வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். நெடுந் தொலைவு பயணம் செய்யும் போது தகவல் போகப் போகத் தேய்ந்து விடும். மறு முனையில் பெறும் இடத்தில் இருப்பவருக்கு ஒன்றும் புரியாது, ஒலியைக் கூட்டி செய்தியை எளிதில் அனுப்பி விடலாமே என்ற தீர்வு மனதில் தோன்றும். ஆனால் ஒலியை அதிகப்படுத்தினால் இரைச்சல் தான் அதிகமாகும். ஆகவே ஷனான் மாற்று வழியாக தகவலை பைனரியாக அதாவது 0, 1 என்று மாற்றி அனுப்ப வழி வகை செய்தார்.  இதனால் தகவல் சிந்தாமல் சிதையாமல் எவ்வளவு தூரம் ஆனாலும் அப்படியே போய்ச் சேர்ந்தது.

 

 

 

இது உலகில் ஒரு ம்கத்தான மாற்றத்தை ஏற்படுத்தியது,

 

ஆங்கில மொழியில் ஒரு தக்வலை அனுப்பும் போது அனாவசியமான வார்த்தைகள் நிறைய இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டிய அவர் அதையும் குறைக்கலாம் என்று ஆலோசனை தந்தார்.

இன்று இண்டர்நெட் இணைப்பு உள்ளவர்கள் இருந்த இடத்திலிருந்தே கம்ப்யூட்ட்ரில் ஒரு தட்டு தட்டியவுடன், படமும் செய்திகளும் மள மளவென்று கொட்டுகிறது என்றால் அதற்கான காரணம் ஷனான் தான்! உலகில் இன்று தக்வல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட மாபெரும் புரட்சி செய்தவர் பிறந்து நூறு ஆண்டுகள் முடிந்து விட்டன. அவர் நினைவைப் போற்றுவோம்!

 

  

  அறிவியல் அறிஞர் வாழ்வில் .. .

.

பிரபல விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் தலையை சரியாக வாரி விட்டுக் கொள்ள மாட்டார். சாக்ஸும் அணிய மாட்டார். அமெரிக்க ஜனாதிபதி அழைத்த போது ஒய்ட் ஹவுஸ் சென்ற போதும் கூட அவர் சாக்ஸைப் போட்டுக் கொள்ளவில்லை. ஷு இருக்கும் போது அதிகப்படியாக சாக்ஸ் எதற்கு என்பது அவரது கேள்வி.

 

 

ஒரு முறை பரட்டைத் தலை போன்று படியாமல் இருந்த அவர் தலைமுடியைக் கண்ட ஒரு பெண் குழந்தை ஓடிப் போய் தன் தாயைக் கட்டிக் கொண்டது.

 

 

இதைப் பார்த்த ஐன்ஸ்டீன், “மற்றவர் எல்லாம் மரியாதை நிமித்தம் ஒரு விதமாக என்னைப் பார்க்கும் போது இந்தக் குழந்தை தான் நான் உண்மையில் எப்படி இருக்கிறேன் என்று எனக்குக் காட்டியுள்ளது” என்று வேடிக்கையாக்க் கூறினார்.

உடையைப் பற்றி அவர் அவ்வளவாகக் கவலைப்பட்டதே கிடையாது.

 

“மோசமான உடைகளையும் அசிங்கமான நாற்காலி மேஜைகளையும் கண்டு வெட்கப்படும் நாம் நம்முடைய அசிங்கமான கருத்துக்களையும் மோசமான தத்துவங்களையும் கண்டு அல்லவா வெட்கப்பட வேண்டும்” என்றார்.  இந்த அவரது கூற்றை மேற்கோள் காட்டாதவரே இல்லை எனலாம்!

***