சம்ஸ்கிருதம் என்னும் சமுத்திரம் !

சம்ஸ்கிருதத்தை மட்டம் தட்டி, மற்ற மொழிகளை உயர்த்திப் பேசுவது சிலருக்கு வாடிக்கையாகிவிட்டது. அவர்களுடைய அறியாமையை எண்ணி சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. சம்ஸ்கிருதம் என்பது பெரிய சமுத்திரம். அதன் கரையைக் கண்டவர்கள் யாரும் இல்லை. ஏனைய பழைய மொழிகளில் உள்ள நூல்கள் எல்லாவற்றையும் பட்டியல் இட்டு விட்டார்கள். ஆனால் வட மொழி நூல்களைப் பட்டியல் இடுவதுகூட முடிந்தபாடில்லை. உலகம் முழுதுமுள்ள நூலகங்களில் அவ்வளவு சுவடிகள் உள்ளன.

பல நூல்களுக்கு மூல நூல் மறைந்து போயின. ஆனால் அவைகளின் மொழி பெயர்ப்புகள் சீன மொழி உள்பட பல மொழிகளில் இருக்கின்றன. மொழிபெயர்க்க ஆள் இல்லை. உலகம் முழுதும் சம்ஸ்கிருத கல்வெட்டுகள் பல்வேறு லிபிகளில் எழுதப்பட்டுள்ளன.

அசோகர் காலம் வரை பனை ஓலைகளிலும் மரப் பட்டைகளிலும் எழுதி வந்ததால் அவைகள் அழிந்துவிட்டன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து உலகம் முழுதும் சம்ஸ்கிருத கல்வெட்டுகள் தோன்றிவிட்டன. நேபாளம் முதல் இந்தோநேஷியா வரை ஆயிரக் கணக்கான பாடல் வடிவக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இதே காலத்தில் மற்ற மொழிகளில் உரைநடைக் கல்வெட்டுகள்தான் கிடைக்கின்றன.

 

வேதங்களின் பெரும் பகுதி (சாகைகள்) அழிந்துவிட்டன. பிராமணர்கள் வாய் மொழியாக ஆசார அனுஷ்டானங்களுடன் அத்தியயனம் செய்துவந்ததால் எழுதிவைக்கவும் இல்லை. இப்போது இருக்கும் வேதங்களை டேப்புகளில் பதிவு செய்ததே 600 மணி நேரத்துக்கு வருகிறது. உலகில் வேறு எங்கும் இல்லாத புதுமை வேதப் படிப்பில் உண்டு. இடைச் செருகல் வந்து விடக் கூடாது என்பதற்காக வேதத்தில் இருக்கும் சொற்களை ஒன்றாகவும் இரண்டாகவும் மூன்றாகவும் கூட்டிக் கூட்டி சொல்லிக் கொண்டே பாராயணம் (கண பாடம், ஜடா பாராயணம்) செய்வார்கள். இதை எல்லாம் பதிவு செய்துவிட்டார்கள் ராஜஸ்தான் பலகலைக் கழகத்தினர்.

சம்ஸ்கிருதம் மாபெரும் சமுத்திரம். கரை காணாத அளவுக்கு பெருகியது. உலகில் இதுவரை அதிலுள்ள புத்தகப் பெயர் பட்டியல் அனைத்தையும் ஒரே வால்யூமாகக் கூட கொண்டுவர முடியாத அளவுக்குப் பெரியது. கிரேக்க நாடு, முதல் காவியத்தை எழுதுவதற்குள் சம்ஸ்கிருதத்தில் 4 வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள், உபநிஷத்துக்கள் எல்லாம் தோன்றிப் பெருகிவிட்டன.

 

3500 ஆண்டுக்கு முன் வந்த ரிக் வேதத்தில் மட்டும் சுமார் 450 கவிஞர்கள் பாடிய 1028 துதிகள். அவைகளில் 10,552 பாடல்கள். 39, 831 பதங்கள். இதில் 4,32,000 அசைகள் (சில்லபிள்) இருப்பதாக சதபத பிராமணம் கூறும். ஆயினும் இப்போதைய கணக்கில் 3,95,563 அசைகளே காணப்படுகிறது. யஜூர், சாம, அதர்வண வேதங்கள் இதற்குப் பின் வந்தன.

 

உலகிலேயே நீண்ட நூல் என்று இந்தியாவுக்கு வந்த கிரேக்க எழுத்தாளர் குறிப்பிட்ட மஹா பாரதத்தில் நூறாயிரம் ஸ்லோகங்கள்— 2 லட்சம் வரிகள்— சுமார் 10 லட்சம் சொற்கள் உள்ளன.

வால்மீகி ராமாயணத்தில் 24000 பாடல்கள் உள்ளன.

18 புராணங்களில் பல லட்சம் வரிகள் உள்ளன. உலகில் எந்த நாட்டு சமய இலக்கியமும் இதன் அருகில் கூட வரமுடியாது.

 

 

கி.மு 800 என்று ஒரு கோடு கிழித்தால், பக்கத்தில் பைபிளின் பழைய ஏற்பாடும் கொஞ்சம் சீன மொழிப் பாடல்களும் மட்டும் குட்டையாக நிற்கும். கிரேக்கம், லத்தீன், தமிழ் எல்லாம் அப்பொழுது பிறக்கக் கூட இல்லை (நூல்கள் வடிவில்).

 

கி.மு.800க்கு முன்னர் தோன்றிய சுருதி என்னும் வேதம் என்பதே பெரிய அளவு. அதற்குப் பின்வந்த ஸ்மிருதி எனப்படும் நீதி சாஸ்திரங்கள் வேறு.

 

பிரபல வரலாற்று ஆசிரியர் கே ஏ நீலகண்ட சாஸ்திரி கூறுவது: சீன மொழியில் 1700 சம்ஸ்கிருத நூல்கள் மொழி பெயர்க்கப் பட்டன. இவைகளில் 40 மில்லியன் சொற்கள் உள்ளன. இவை 2 முதல் 11 நூற்றாண்டு வரை எழுதப்பட்டவை.

 

 

சம்ஸ்கிருதத் தனிப்பாடல்கள் 

சுபாஷித ரத்ன கோஷ –1739 பாடல்கள்–223 கவிஞர்கள்

பிரசன்ன சாகித்ய ரத்னாகர–1428 பாடல்கள்,

சதுக்தி கர்ணாம்ருத 2370பாடல்கள்–485கவிஞர்கள்,

சூக்தி முக்தாவளி 2790பாடல்கள்,  240கவிஞர்கள்,

சரங்கதார பத்ததி 4689பாடல்கள்–282கவிஞர்கள்

ப்ருஹத் பத்ததி 7586பாடல்கள்,

வல்லப தேவ சுபாஷிதாவளி 3527பாடல்கள் 360கவிஞர்கள்

 

 

(இது தவிர சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்னும் நூலில் 16,000 தனிப் பாடல்கள் இருப்பதாக அறிவேன். ஒருவேளை மேற்கண்ட நூல்களில் உள்ளவற்றைத் தொகுத்துக் கொடுத்தார்களா என்று எனக்குத் தெரியாது. தனிப் பாடல்கள் மட்டுமே இவ்வளவு என்றால்!!! )

இரண்டாம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரை சம்ஸ்கிருதத்தில் எழுதிய 872 ஆசிரியர்களின் பெயர்களை பி.வி.கானே தொகுத்துக் கொடுத்தார். சங்கரர் பெயரில் மட்டும் 272 துதிகள் இருக்கின்றன! ஸ்தல புராணங்கள், சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் எல்லாவற்றையும் யாரும் பட்டியல் இடவில்லை.

 

சம்ஸ்கிருதத்திலுள்ள அதிசயங்களை The Wonder That is Sanskrit (published by Sampad and Vijay, Sri Aurobindo Society,Pondichery) என்ற நூலில் படிக்கலாம். இந்த மொழியை பிராமணர்கள் கூட படிக்காமல் ஐரோப்பியர்களிடம் மட்டும் விட்டால், அவர்கள் சொன்னதே “வேதம்” என்றாகிவிடும்!!

 

கம்போடியா, வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து முதலிய தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் 800 சம்ஸ்கிருத கல்வெட்டுகள் இருக்கின்றன. கி.மு. 1400 முதல் சம்ஸ்கிருத சொற்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. குதிரைப் பயிற்சி தொடர்பான களிமண் பலகை– கியூனிபார்ம் எழுத்துக்– கல்வெட்டுகளில் சம்ஸ்கிருத எண்கள் உள்ளன. கி.மு. 1400ல் மிட்டன்னி ராஜாக்களின்  உடன்பாட்டில் வேதகால தெய்வங்களின் பெயர்கள் இருக்கின்றன.

 

Please read Sanskrit Inscriptions in strange places and Sanskrit Inscriptions in Mosques and on coins in my blogs. ( Swami_48@yahoo.com )