சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!

conch_4

கட்டுரையை எழுதியவர் :– London swaminathan

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1538; தேதி 2 January, 2015.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

இருந்ததும் இந்நாடே – அதன்

முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

முடிந்ததும் இந்நாடே! – — பாரதியார்

பாரத மண்ணில் தோன்றி பாரத மண்ணிலேயே வாழ்ந்து மறைந்தவர்களின் சிந்தனை ஒரே மாதிரியாக இருக்கும். தமிழர்களின் சிந்தனையும் வடக்கத்திய அறிஞர்களின் சிந்தனையும் ஒரே மாதிரியாக இருப்பதை அவர்களது பழைய பாடல்களே காட்டுகின்றன. ஆனால் ஒவ்வொருவரும் அதைச் சொல்லும் முறை தனி அழகு படைத்தவை.

1.சான்றோர் இல்லாத இடத்தில் வசிக்காதே என்று வெற்றி வேற்கை பாடிய அதிவீரராம பாண்டியன் கூறுகிறார்:

சான்றோர் இல்லாத் தொல்பதி இருத்தலின்

தேன்றேர் குறவர் தேயம் நன்றே — வெற்றி வேற்கை

 

பொருள்:– பெரியோர் இல்லாத பழைய நகரில் வசிப்பதை விட தேன் சேகரித்து வாழும் குறவர் வாழும் மலை நாடு நல்லதே!

அவரே இன்னும் ஒரு பாடலில் பாலை எவ்வளவு காய்ச்சினாலும் அதன் சுவை குறையாது; தங்கத்தை எவ்வளவு புடம் போட்டு தீயில் சுட்டாலும் அதன் ஒளி குன்றாது. சந்தனத்தை எவ்வளவு அரைத்தாலும் அதன் வாசனை குறையாது. கரிய அகில் கட்டைகளை எவ்வளவு புகைபோட்டாலும் அது மணம் குன்றாது; கடலைக் கலக்கினாலும் அது சகதியாகாது; சேறாகாது. அதே போல பெரியோர்களுக்கு எவ்வளவு கெடுதல் செய்தாலும் அவர்கள் நன்மையே செய்வர்.

milk

Boiling milk

அடினும் ஆவின்பால் தன் சுவை குன்றாது

சுடினும் செம்பொன் தன் ஒளி கெடாது

அரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது

புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது

கலக்கினும் தன் கடல் சேறு ஆகாது – வெற்றி வேற்கை

அதிவீர ராம பாண்டியனுக்கு முன்னரே இதே கருத்தை அவ்வையாரும்

வாக்குண்டாம் என்னும் பாடலில் கூறுகிறார்:

 

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவாய்

நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் நன்னுதால்

கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்  – வாக்குண்டாம்

sandal paste

அவரே இன்னொரு பாடலில் சொல்லுவார்:

நல்லவர் ஒருவர் இருந்தால் போதும். அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை என்று.

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல் உலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை – வாக்குண்டாம்

காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் அன்னதானப் பெருமை பற்றிச் சொற்பொழிவு ஆற்றுகையில் இதே கருத்தைச் சொல்கிறார். பல்லாயிரக் கணக்கான பேர்களுக்கு இலவசமாக சாப்பாடு போடுவது – அன்னதானம் செய்வது — சோம்பேறிகளை வளர்க்காதா என்று நினைக்கலாம். அந்த ஆயிரக் கணக்கான மக்களில் ஒரு பெரிய மகான் இருந்து வாழ்த்தினாலும் ஊரே பயன் அடையும் என்பார்.

தசரதன் நாட்டில் வறட்சி நிலவவே எல்லோரும் மான்கொம்பு முளைத்த – ரிஷ்ய ஸ்ருங்க முனிவரை ( கலைக் கோட்டு முனிவர்) அழைத்து வாருங்கள்; அவர் நாட்டிற்குள் நுழைந்தவுடன் மழை பெய்யும் என்று சொல்கின்றனர். அவர் வந்தவுடன் நாடு செழித்தது என்று வால்மீகி ராமாயணம் சொல்லும்.

இவ்வாறு மேன் மக்களின் பெருமைதனை விளக்கும் பாடல்கள் தம்ழில் நூற்றுக் கணக்கில் உள.

சான்றாண்மை என்னும் அதிகாரத்தின் கீழ் வள்ளுவர் முத்து முத்தாகக் கருத்துகளைத் தொகுத்து அளிக்கிறார்:

ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி எனப்படுவார் – குறள் 989

உலகம் அழியும் காலத்தில் பெரும் சுனாமி தாக்குதலில் கடல் கரை கடந்து நாட்டிற்குள் புகுந்தாலும், மேன்மக்கள், பாதை மாற மாட்டார்கள்.

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு – குறள் 987

தீங்கு செய்தவர்களுக்கும் நன்மையே செய்யாவிட்டால் சான்றோர் என்ற பெயருக்கு என்ன பொருள்?

பெரியோர் என்று பெயர் உடையவர் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய்க் கூடாது என்றும் வள்ளுவர் கட்டளி இடுகிறார்:

1.கொல்லா நலத்தது நோன்மை – பிற உயிர்களைக் கொல்லாமல் இருப்பதே நோன்பு.

2.பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு –பிறருடைய குற்றத்தை எடுத்துச் சொல்லாமல் இருப்பதே பெருந்தன்மை

3.குண நலம் சான்றோர் நலனே – பெரியோரின் சிறப்பு எல்லாம் அவருடைய குணங்களே

4.தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல் – சமமாக இல்லாரிடத்தும் தோல்வியை ஒப்புக் கொள்ளும் பண்பு வேண்டும்.

Chandala_and_Sankara_

Chandala and Adi Shankara

ஆதி சங்கரரிடம் தோற்ற மண்டணமிஸ்ரரும், சரச வாணியும் தோல்வியை ஒப்புக் கொண்டனர். நாய்களுடன் வந்த புலையனை, “தள்ளிப் போ” என்று கோபத்தில் கத்திய ஆதிசங்கரரை ஆத்மாவை நகரச் சொல்கிறாயா?, உடலையா? என்று புலையன் திருப்பிக் கேட்டவுடன் அடிபணிகிறார் உலக மகா தத்துவ வித்தகர் சங்கரர்.

பல தமிழ்ப் புலவர்களும் வாக்குவாதத்தில் தோற்றவுடன் தோல்வியை ஒப்புக் கொண்டு தண்டனைகளை ஏற்றனர். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞான சம்பந்தர் என்ற சிறுவனுடன் வாதிட்டுத் தோற்ற 8000 சமணர்களும் தானே சென்று கழுவில் ஏறினர்.

மிதிலை நகர கசாப்புக் கடைக்காரன் தர்மவியாதனிடம் கௌசிகன் என்ற பிராமணன் பாடம்கற்றுக் கொண்டான். பெற்றோர்களைக் கவனித்துப் போற்றுவதே ஒருவரின் தலையாய கடமை என்பதை மாமிசம் விற்பவன் போதிக்கிறான் என்று மஹாபாரதம் சொல்லும்.

Contact swami_48@yahoo.com