பாம்புச் செடி உண்மையா? (Post No.7580)

பாம்புச் செடி உண்மையா ? (Post No.7580)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7580

Date uploaded in London – 16 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஞாயிறு தோறும் நான் நடத்தும் SKYPE ஸ்கைப் கிளாஸ்ஸில் கம்பராமாயணம் முடித்து அகநாநூற்றுக்கு  வந்துள்ளோம் . அகனானூற்றுப் பாடலில் பாம்புச் செடி பற்றி ஒரு குறிப்பு வருகிறது. அதுபற்றி எங்களிடையேயே விவாதம் எழுந்தது. உடனே நான் காளிதாசனும் தனது காவியத்தில் ஒளிவிடும் ஜோதிர்லதா மரம் பற்றி இரண்டு இடங்களில் கூறுகிறான். தமிழ் இலக்கியத்திலும் அது இருக்கிறது. பி.பி.சி. டீ.வி. யில் (David Attenborough) டேவிட் அட்டன்பரோவின் இயற்கை (Nature) பற்றிய டாகுமெண்டரிகளை பார்த்தபோது அதற்கு விளக்கம் கிடைத்தது. அவர் காட்டிய படம் இன்றுவரை மனதைவிட்டு அகலவில்லை tamilandvedas.com, swamiindology.blogspot.com

..

அதாவது நியூஜிலாந்தின் குகைகளில் பல லட்சம் மின்மினிப் பூச்சிகள் (Fire Flies)  வசிக்கின்றன. அவை ஒளிவிடும் போது அந்தக் குகைகள் முழுதும் ஜகஜ்ஜோதியாகக் காட்சி தரும். அடுத்த நிமிடம் இருள் சூழும் . அதாவது நாம் திருவிழாக்  காலங்களில் போடும் அலங்ககார விளக்குகள் போல எரிந்தும் (on and Off) அணைந்தும் மாறி மாறி வரும். இது போல அந்தக் காலத்தில் நம் இந்தியக் காடுகளிலும் சில இடங்களில் மரம் முழுதும் மின்மினிகள் வசித்து இருக்கலாம். அதைத்தான் காளிதாசன் ஜோதிர்லதா என்றும் தமிழ் இலக்கியம் ஒளிவிடும் மரங்கள் என்றும் சொல்லுகின்றன போலும் அந்தக் கோணத்தில் இந்த அகநானுற்றுப் பாடலையும் காண்போம் என்றேன். tamilandvedas.com, swamiindology.blogspot.com

உடனே ஸ்கைப் (Skype)  மாணவர்கள் புஸ்தகங்களில் இருந்து இரண்டு விளக்கங்களைப்  படித்தார்கள். ஆனால் நேற்று பிரிட்டிஷ் லைப்ரரியில் உட்கார்ந்து பழங்கால புஸ்தகங்களைப் படித்தபோது ஒரு அதிசயச்  செய்தி கிடைத்தது.

முதலில் அகநாநூற்றுப்  பாடல்

அன்னாய்  !  வாழி , வேண்டு அன்னை! நம் படப்பைத்

……………………

……………………

வெண்கோட்டு யானை விளிபடத்துழ வும்

அகல்வாய்ப் பாந்தட் படா அர் ப்

பகலும் அஞ்சும்  பனி க்கு கடுஞ் சுரனே

—அகநானூறு பாடல் 68

– என்று 21 வரிப் பாடல் முடிகிறது.

பாடியவர் ஊட்டியார் , திணை – குறிஞ்சி

இதில் ‘அகல்வாய் பாந்தள்’ என்பது யானையை விழுங்கும் மலைப் பாம்பா அல்லது பாம்புச்  செடியா ? (Python or Snake plant?) என்பதை யே ஆராய வேண்டியிருந்தது. tamilandvedas.com, swamiindology.blogspot.com

பாடலின் மொத்தக்க கருத்தும் மிகவும் சுவையானது. இரவு நேரத்தில் காதலியை ரகசியமாக சந்திப்பதற்கு காதலன் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறான். அப்போது தோழி போய், காதலியின் அம்மா அசந்து தூங்குகிறாளா அல்லது பாசாங்கு செய்கிறாளா என்பதற்கு மூன்று கேள்விகள் கேட்கிறாள். இறுதியில் அதற்கு அம்மா பதில் சொல்லாததால் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாள்; கஷ்டமான வழியைக் கடந்து வந்த காதலனை சந்திக்கலாம் என்று காதலிக்கு ‘க்ரீன் சிக்னல்’ Green Signal கொடுப்பது பாடலின் பொருள்.

காதலன் கடந்து வந்த கஷ்டமான பாதையை வருணிக்கும் போது ,

“யானைக் குட்டிகளை வெள்ளம் அடித்துச் செல்கிறது. அதைக் காப்பாற்ற வெண்மையான தந்தம் உடைய ஆண் யானையும் பெண் யானையும் ஆரவாரம் செய்கின்றன. . மேலும் அங்கே இடம் அகன்ற பாம்புச் செடிகள் வேறு  உள்ளன . இவைகளை எல்லாம் கடந்து வந்திருக்கிறான் உன் காதலன் என்கிறாள் தோழி.

‘ஸ்கைப்’ கிளாஸ் முடிந்தவுடன் பழைய உரைகளைத் தேடித் படித்தேன். அதில் ‘அகல் வாய்ப் பாந்தள்’ என்பதற்கு அகன்ற வாய் உடைய பாம்புச் செடிகள் என்று சொல்லிவிட்டு அகன்ற வாயுடன் யானையை விழுங்கும் மலைப் பாம்பு என்றும் சொல்லுவர் என்று கண்டேன் tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

முன்னரே யானையை விழுங்கும் மலைப் பாம்புகள் பற்றிய சங்க இலக்கியப்  பாடல்களை இதே ‘பிளாக்’கில் எழுதியுள்ளதாலும், நானே பி.எஸ்சி. பாட்டனி (தாவரவியல்) படித்ததாலும் பாம்புச் செடி தவறென நினைத்தேன்.

ஆனால்………………………………

ஆனால் வாரத்துக்கு மூன்று முறை லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரி போய் 100 ஆண்டுப் பழமையான புஸ்தகங்களை ஆராயும் ஒரு பகுதியாக நேற்று ஒரு புஸ் தகத்தை போட்டோ காப்பி எடுத்தேன் . புஸ்தகத்தின் தலைப்பு –

கொடைக்கானல் அருகில் பண்ணைக்காட்டில் கன்னியநாதசுவாமிகள் என்ற  மாம வுன தேசிகர் பற்றிய புஸ்தகம் 1924ல் வெளியிடப்பட்டது. இதை பெரியகுளம் கற்பூர திருவேங்கட சுவாமிகள் இயற்றியிருக்கிறார். இதில் பழனிக்கும் கொடைக்கானலுக்கும் இடையே உள்ள காட்டுப் பகுதி பற்றி வருணிக்கும் பகுதியில் ‘நாகதாளி’ என்னும் செடி பாம்புபோலச் சீறி தீப்பொறி கக்கும் என்கிறார். பின்னர் மலையில் எழும் வினோத ஒலிகளை வருணிக்கிறார். tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

எனது கருத்து

நாகதாளி என்பதற்கு ஒரு வகை மரம், சப்பாத்திக்கு கள்ளிச் செடி என்று ஆனந்த விகடனின் பழைய அகராதி கூறுகிறது . தாவரவியல் விலங்கியல் படித்த நான் (Phosphorescent)  ஒளி உமிழும் மீன் வகைகள், கடல் பிராணிகள், பிளாங்க்டன் (Planktons)  என்னும் நுண்ணுயிர்கள் , சில வகை  (Glow worms)புழுக்கள், மின்மினி பூச்சிகள்  முதலியவற்றை  அறிவேன். ஆ னால் பாம்பு போல சீறும் செடி வகைகளை அறியேன்; சில காலத்துக்கு முன்னர் மனிதர்களைக் கண்டால்  நிலத்துக்கு அடியில் ஒளிந்து கொள்ளும் ஒரு செடியின் வீ டியோவைக்  கண்டேன். ஆயினும் இதில் 99 சதவிகிதம் மோசடி வீடியோக்கள் தான் அதிகம். . யாரும் எதையும் எடிட் செய்து என்ன அற்புதத்தை வேண்டுமானாலும் யூ  டியூ ப்பில்  காட் டமுடியும் . ஆயினும் 1920களிலேயே இப்படி பழனி மலைக்காடுகளில் நாகதாளி என்னும் பாம்புச்  செடி இருந்ததாக மக்கள் நம்பியது தெரிகிறது. ஆகையால் அகநாநூறு பாடல்  விளக்கத்தில் நாகதாளி செடி என்றும் கொள்ளலாம் .

ஒரு வேளை உண்மையில் இப்படி பாம்புச் செடிகள் இருந்து அழிந்தும் போயிருக்கலாம். சங்க இலக்கியத்தில் சர்வ சாதாரணமாக வருணிக்கப்படும் நீர் நாய்களை (Otter) நாம் இப்போது எல்லா நதிகளிலும் காண முடியவில்லை. திருவள்ளுவர், கபிலர் வருணிக்கும் முகர்ந்தால் வாட்டும் அனிச்சம் பூவையும் காணமுடியவில்லை. அதுபோல நாகதாளி என்னும் பாம்புச் செடியும் அழிந்து இருக்கலாம். tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxxx

Snake Flowers of Himalayas and North America

ஆனால் பாம்பு போலத் தோன்றும் பலவகை பூக்கள்  உடைய செடி கொடிகள் உண்டு. கூகுள் (Google) செய்தால் நிறைய செடிகளைப்  பார்க்கலாம். நாம் சர்வ சாதாரணமாகப் பார்க்கும் நாகலிங்கப் பூக்கள் முதல் இமயமலை பாம்புப் பூ  வரை பல செடி கொ டிகள் இருக்கின்றன.

xxxx

From Wikipedia

டார்லிங்டோனியா என்பது ஓர் ஊனுண்ணித் தாவரம் ஆகும். இது சாரசீனியேசியீ என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இவற்றில் ஒரே ஒரு இனம் மட்டுமே உள்ளது; இதனை அமெரிக்க சாடிச் செடி அல்லது கலிபோர்னிய சாடிச் செடி எனவும் அழைப்பார்கள். இது ஈரமான மண் சேறு நிறைந்த சதுப்பு நிலப்பகுதியில் வளரும் ஒரு செடி ஆகும். ஆண்டுக்கு ஒரு முறை இதில் புதிய இலைகள் வளர்கின்றன. இது தரையில் வளரும் மிகச்சிறிய மட்டத்தண்டு கிழங்கைக் கொண்ட செடியாகும். மண்ணின் மேல் இலைகள் ரோஜாப்பூ இதழடுக்கு போல அமைந்திருக்கும். இந்த இலை போன்ற அமைப்பு குழாய்வடிவ ஜாடிகளாக நேராக நிமிர்ந்து செங்குத்தாக நிமிர்ந்து இருக்கும். சில நேரங்களில் இந்த இலை போன்ற அமைப்பு நுனியில் முறுக்கிக் கொண்டு, இரண்டாகப் பிளவுபட்டுக் காணப்படும். இது பாம்பு படமெடுத்து ஆடுவது போல தோற்றமளிக்கும் எனவே இதனை பாம்புச் செடி எனவும் கூறுவர்.(Wikipdia)

common name of this plant is Snake Plant.

TAGS — பாம்புச் செடி, நாகதாளி, சப்பாத்திக்கு கள்ளி, சங்க இலக்கியம்

–subham–

தமிழர்களின் பழக்க வழக்கங்கள்! (Post No.5315)

Written by S Nagarajan

Date: 13 August 2018

 

Time uploaded in London – 7-55 AM  (British Summer Time)

 

Post No. 5315

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சங்க இலக்கியத்தில் காணப்படும் தமிழர்களின் பழக்க வழக்கங்கள்!

 

ச.நாகராஜன்

 

பழம் பெரும் இலக்கியமாக இலங்கும் சங்க இலக்கியம் தமிழர்களின் பழக்க வழக்கங்களைப் பற்றிய பல சுவையான செய்திகளைத் தருகிறது.

 

இவற்றை பகுத்தறிவு நோக்கோடு பார்க்கக்கூடாது; அறிவியல் உரைகல்லில் உரைக்கக் கூடாது.

இவை தமிழர்களின் வாழ்வியல் நம்பிக்கைகள்; அந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் அவர்கள் வாழ்வு சிறந்து விளங்கியது.

சில அரிய வழக்குகளின் பட்டியல் கீழே தரப்படுகிறது.

 

குடவோலை எடுத்துப் பிரமாணம் செய்தல்

 

நுளைச்சியர் சுறவுக்கோடு நட்டு வருணனுக்குப் பரவுக்கடன் கொடுத்தல்

 

பார்ப்பார் தூது செல்லுதல்

 

மகளிர் சுவரில் கோடிட்டு நாள் எண்ணுதல்

 

மகளிர் பல்லி சகுனம் கேட்டல்

 

பிறை தொழுதல்

 

வேங்கை மலர் கொய்ய புலி புலி என்று கூவல்

 

சிறுமியர் அலவனாட்டுதல்

 

கிளி கடிதல்

 

 

வண்டலயர்தல்

 

சிற்றில் இழைத்துச் சிறு சோறடுதல்

 

ஓரையாடுதல்

 

மன்னர் கடகுக்காரரை அழைத்துப் படை காணுதல்

 

வீரர் போருக்குப் புறப்படுமுன் நடுகல்லைப் பூசித்தல்

 

நல்ல நிமித்தம் பார்த்தல்

 

வேளாப்பார்ப்பான் சங்கறுத்தல்

 

கொங்கர் மணியரை ஆர்த்து மறுகின் ஆடுதல்

 

மணமகளைப் புதல்வர் பெற்ற மகளிர் நால்வர் குளிப்பாட்டல்

 

இடையர் இடபத்தின் கழுத்தில் மூங்கில் குழாயில் உணவடைத்துக் கட்டி நிரை மேய்த்துச் செல்லல்

 

இறந்த வீரனுக்குரிய நடுகல் இடத்து அவன் பிடித்த வேல் முதலிய கருவிகளை ஊன்றியும் சார்த்தியும் வைத்தல்

உமணர் கழுதை மேல் உப்புப் பொதியை ஏற்றிச் செல்லல்

 

மேற்கண்டவை பாடல்களில் காணப்படும் செய்திகள்.

தமிழர் தம் பழம் இலக்கியங்களில் இப்படி அரிய செய்திகள் ஏராளம்  காணப்படுகின்றன.

 

மங்கையர் நெற்றியில் திலகம் இடும் பழக்கம் தொன்று தொட்டு பாரத நாடெங்கும் நிலவி வரும் பழக்கம்.

 

தமிழ் மங்கையரும் இதற்கு விலக்கல்ல. ஹிந்து மதத்தின் சிறப்புக்களில் இது ஒன்று. அடையாளங்களிலும் இது முக்கியமான ஒன்று.

 

பத்துப்பாட்டு நூல்களில் முதலாவதாக அமையும் திருமுருகாற்றுப்படையில் வரும் வரி இது:

 

திலகம் தைஇய தேங்கமழ்  திருநுதல் (திருமுருகாற்றுப்படை வரி 24)

 

நுதல் என்றால் நெற்றி. அது தேங்கமழ் திரு நுதல் ஆவது எப்போது? திலகம் இடும் போது!

 

நற்றிணையில் வரும் பாடல் வரி இது:

 

திலகம் தைஇய தேங்கமழ் திரு நுதல் (நற்றிணை 62 -6)

திருமுருகாற்றுப்படையில் காணப்படும் அதே வரி தான் இது.

 

கம்பன் சீதையை வர்ணிக்கும் போது வனிதையர் திலகம் என்கிறான். ஆக திலகம் என்பதை சிறப்புப் பட்டமாகப் பயன்படுத்த வழி கண்டவன் கம்பன்.

 

பின்னால் நமது நாளில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்; நடிகையர் திலகம் சாவித்திரி என்று பல திலகங்களைக் காண முடிகிறது.

 

திலகம் திருநுதலின் அலங்காரம்; மங்கலப் பொருள்; அழகையும் சிறப்பையும், மங்கலத்தையும் கூட்டுவது.

ஆகவே அதை சிறந்தவர்களின் பட்டப் பெயரில் இடம் பெறச் செய்து விட்டோம்!

 

கணவன் உடனுறைந்து இருக்கும் காலத்தில் மட்டுமே மகளிர் பூச்சூட்டுவர் சங்க காலத்தில். அவன் வெளியிடம் சென்றாலோ பூவைச் சூட்ட மாட்டார்.

 

ஐங்குறுநூறு தரும் வரி இது:

போதவிழ் கூந்தலும் பூ விரும்புகவே (ஐங்குறுநூறு  496-5)

நற்றிணையில் வரும் வரிகள் இவை:

மண்ணாக் கூந்தல் மாசறக் கழீஇச்

சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய (நற்றிணை 42:8,9)

 

 

இதுமட்டுமன்றி மகளிர் காதில் பூவும் தளிரும் செருகிக் கொள்வர்.

இதை விளக்கும் பாடல் வரிகள் வருமாறு:-

 

வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர்  (திருமுருகாற்றுப்படை வரி 31)

செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினள் (திருமுருகாற்றுப்படை வரி 207)

 

திருமணத்தின்போது மணமகன் மணமகள் கூந்தலில் மலர் சூட்டுவது வழக்கம். இதை ஐங்குறுநூறு கூறுகிறது.

நன்மனை வதுவை அயர இவள்

பின்னிருள் கூந்தல் மலர் அளிந்தோயே (ஐங்குறுநூறு 294 – 4,5)

 

கணவன் இறந்து விட்டால் கைம்மை அடைந்த மகளிர் பூச்சூட்ட மாட்டார்கள்.

 

இது பற்றிக் கூறும் புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றைப் பார்ப்போம்:

 

ஒண்ணுதல் மகளிர் கைம்மை கூர

அவிர் அறல் கடுக்கும் எம்மென்

குவையிரும் கூந்தல் கொய்தல் கண்டே (புறம் 25; 12-14)

 

கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய (புறம் 261: 17-18)

 

மண்ணுறு மழித்தலைத் தெண்ணீர் வரை (புறம் 280:1)

 

புலி புலி என்று கூவி அச்சுறுத்தினால் வேங்கை மரம் தாழும் என தமிழ் மகளிர் நம்பினர். அப்படிக் கூவி அது தாழும் போது மலர்களைக் கொய்வது அவர்கள் வழக்கம்.

 

இதை விளக்கும் பல பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன:

ஏறாது இட்ட ஏமம் பூசல் (குறுந்தொகை 241:5)

 

ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழிப்

புலிபுலி என்னும் பூசல் தோன்ற (அகநானூறு 48:6-7)

 

பொன்னேர் புதுமலர்  வேண்டிய குறமகள்

இன்னா இசைய பூசல் பயிற்றலின் ….

… ஆகொள் வயப்புலி ஆகும் அஃதென  (அகநானூறு 52:3-6)

கருங்கால் ஏங்கை இருஞ்சினைப் பொங்கர்

நறும்பூக் கொய்யும் பூசல்  (மதுரைக்காஞ்சி 296-297)

 

தலைநாட் பூத்த பொன்னிணர் வேங்கை

மலைமார் இடூஉம் ஏமப் பூசல் ( மலைபடுகடாம் 305-306)

 

இப்படி நூற்றுக்கணக்கான பழக்க வழக்கங்களை விளக்கும் ஏராளமான பாடல்களை சங்க இலக்கியம் தருகிறது.

படித்தால் சங்க கால  வாழ்க்கை பற்றி நன்கு அறிந்து கொள்ள முடியும்!

***

 

 

 

 

தங்கத் தமிழாம் சங்கத் தமிழ் தெய்வத் தமிழே! (Post No.3278)

adi-perukku-sri-rangam

Written by S. NAGARAJAN

Date: 23 October 2016

Time uploaded in London: 5-50 AM

Post No.3278

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

 

By ச.நாகராஜன்

 

தமிழ் இன்றேல் தெய்வம் இல்லை; தெய்வம் இன்றேல் தமிழ் இல்லை. இரண்டும் இரண்டறப் பின்னிப் பிணைந்தவை என்பதை தமிழ் இலக்கியம் காட்டும்; தமிழ்ப் பண்பாடு காட்டும். தமிழ்ச் சமூகம் காட்டும்.

 

இதை உடைக்க நினைப்பவர் உடைபட்டுப் போவர்.

பிரம்மாண்டமான வரலாறைக் கொண்ட தமிழ் இலக்கியத்தில் தெய்வத்தைப் பிரித்தால் மிஞ்சுவது சவமே.

அதாவது சிவ இலக்கியம் சவ இலக்கியம் ஆகி விடும்!

சங்க இலக்கியம் மிகவும் பழமையானது.

1000-krishnas

அதில் தெய்வம் பற்றிய பாட்லகள் ஏராளம் உள்ளன. அனைத்தையும் தொகுத்து விளக்கினால் அது ஒரு கலைக் களஞ்சியமாக ஆகி விடும்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் சங்க இலக்கியத்திலிருந்து எடுத்துக் கொடுக்கப்பட்ட குறிப்புகள் கீழே உள்ளன.

விநாயகரிலிருந்து ஆரம்பிப்போம்

 

 • விநாயகர் :                                               ஒருகைமுகன் தம்பியே (திருமுருகாற்றுப்படையில் காணப்படும் வெண்பா 7)
 • சிவன் முதுமுதல்வன்  (புறம் 166)                           தொல்முது கடவுள் (மதுரைக் காஞ்சி 42)

பணிவில் சீர்ச் செல்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக்

கல்லுயர் சென்னி இமயவில் நாணாகித்

தொல்புகழ் த்ந்தாரும் தாஅம்

(பரிபாடல் திரட்டு  1: 72-78)

 • உமை கொடிபுரை நுசுப்பினாள் கொண்டசீர் தருவாளோ (கலைத்தொகை கடவுள் வாழ்த்து 7)
 • திருமால் மறு பிறப்பறுக்கும் மாசில் சேவடி மாயோனே    (பரிபாடல் 3)

 

 • இலக்குமி அகனமர்ந்து செய்யாள் (குறள் 84)

அவ்வித்து செய்யவள்   (குறள் 167)

 • பிரம்மா- நான்முகன் தாமரை பயந்த தாவில் ஊழி நான்முக ஒருவற் சுட்டி   (திருமுருகாற்றுப்படை 164-165)

 

 • முருகன் முருகமர் மாமலைப் பிர்ந்தெனப் பிரிமே (ஐங்குறுநூறு 308;4)                                               ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து (அக்நானூறு 149-16)
 • தெய்வயானை மறுவில் கற்பின் வாணுதல் கணவன் (திருமுருகாற்றுப்படை -6)
 • வள்ளி என்னுள் வருதியோ நல்நடை கொடிச்சி                     முருகு புணர்ந்து இயன்ற வள்ளிபோல நின் (நற்றிணை 82 3,4)
 • இராமன் கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை     வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை    (புறநானூறு 358 :18,19)

 

 • பலராமன், கண்ணன்

 

பால்நிற உருவின் பனைக்கொடியோனும்

நீல்நிற  உருவின் நேமியோனும் என்று

இரு பெரும் தெய்வமும் உடன் நின்று ஆஅங்கு

(புறநானூறு 58)   இப்படி ஏராளமான குறிப்புகளைச் சங்க இலக்கியத்த்தில் பரக்கக் காணலாம்.

adi-velli-muslims

இதை யார் படித்து விடப் போகிறார்கள் என்ற நோக்கில் தமிழர் பண்பாடு என்பது தெய்வத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பண்பாடு என்பது போலவும் தெய்வங்களைப் பற்றிப் பழைய தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடவில்லை என்றும் தன் சொந்த உள் நோக்கிற்காக வெள்ளையரின் வழியில் கடந்த அறுபது ஆண்டுகளாக நாத்திக பிரச்சாரம் நடைபெறுகிறது.

 

இவர்கள் தெய்வத்தை நம்பவில்லை என்றால் தமிழையும் நம்பக் கூடாது. தமிழை நம்பினால் அது சுட்டிக்காட்டும் தெய்வீகப் பண்பாட்டையும் மதித்துத் தழுவ வேண்டும்.

இல்லையேல் இவர்கள் அனைவரும் ‘ஜோம்பிகளாகத்’ தான் வாழ வேண்டும். ஜோம்பி என்பது கல்லறையில் புதைக்கப்பட்டு திடீரென்று இருளில் எழுந்து நடமாடும் சவம் என்ப்தை அனைவரும் அறிவர்.

 

தாங்கள் ஜோம்பிகளாக மாறியதோடு மொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் ஜோம்பிகளாக மாற்ற முயலும் இவர்களை என்ன்வென்று சொல்வது?

 

தமிழர்கள் விழிப்புணர்வுடன் சங்க இலக்கியத்தைத் தாமே ஊன்றிப் படிக்க வேண்டும். அது காட்டும் பண்பாட்டை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

 

குமரி முனையில் ஆரம்பித்து இமயமலை வரை  முடிந்த் இடம் எல்லாம் சென்று நமது பண்பாட்டை ஊன்றிக் கவனிப்பதுடன் தனது ஆன்மீக அனுபவங்களைச் சிலரிடமாவது சொல்லி நல்லனவற்றைப் பரப்ப வேண்டும்.

ahmedabad-visarjan

சங்க இலக்கியம் தங்க இலக்கியம் அது தெய்வ இலக்கியமே!

**********

 

பிள்ளையாரைத் தமிழர்கள் கும்பிடவில்லையா??!! (Post No.3123)

ganesh laddu

Written by S NAGARAJAN

 

Date: 5 September 2016

 

Time uploaded in London: 5-05 AM

 

Post No.3123

 

Pictures are taken from various sources; thanks.

 

ச.நாகராஜன்

 

ganapathy, mysore

இணைய தளம் வந்து விட்ட காலத்திலிருந்து எல்லோரும் அறிஞர்களே!

மனதில் தோன்றுவதையெல்லாம் எழுதி இணையத்தில் “போடுவதைக்” கருத்துச் சுதந்திரம் என்று எடுத்துக் கொண்டு விட்டு விடலாம்.

ஆனால் நச்சுக் கருத்துக்களைப் பரப்புவர்களை மன்னிக்க முடியாது!

 

 

தீய சக்திகளின் கொள்கை பரப்பாளர்களுக்கு இணைய தளம் ஒரு வேடிக்கையான விளையாட்டுக் களம்

ஆரியர், ஐயர் என்று திட்டுவது, பிள்ளையாரில் ஆரம்பித்து கிராமத்து ஐயனார் வரை எல்லாக் கடவுளரையும் (இயேசு அல்லா நீங்கலாக – இவர்களைத் திட்டினால் தீட்டி விடுவார்களே) திட்டுவது – இதுவே இவர்களுக்குப் பொழுது போக்கு.

 

 

இவர்களின் எழுத்துக்களில் கருத்துக்களை விட ஆபாசமான வார்த்தைகளுக்கே முதலிடம் தருவது வழக்கம்.

இப்போது விநாயக சதுர்த்தி வருவதை  முன்னிட்டு பிள்ளையார் தமிழர் தெய்வமே இல்லை, பிள்ளையார் வழிபாடு பிற்காலத்தில் புகுத்தப்பட்ட வழிபாடு என்று ஒரு புரளியை தீய சகதியின் ‘அறிஞர்’ ஒருவர் இணையதளத்தில் பதிய விட்டிருக்கிறார்.

 

 

ஆனால் அது பதிய விட்ட போதே வாடி வதங்கி விட்டது.அந்தக் கருத்து பதிய விட்ட போதே அதைத் தமிழர்கள் அபார்ஷன் செய்து விட்டார்கள்!

 

ஏனெனில் பிள்ளையார் தமிழரின் தெய்வம் இல்லை என்றால் வேறு யார் தான் தமிழர் தெய்வம்!

 

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பது தமிழர்களின் முழக்கம்.

 

சிவன் அமைத்த தமிழ்ச்சங்கத்தை இன்றும் மீனாட்சி அம்மன் கோவிலில் கண்டு மகிழலாம்.

 

புலவர்கள் புடை சூழ இறையனார் அமர்ந்திருக்கும் கம்பீரமே கம்பீரம். அங்கு முழக்கமிட்ட தமிழ் மொழியே உண்மையில் தெய்வ மொழி.

 

 ganapathy swastik

சிவனின் அருமை மகனான பிள்ளையார் அல்லவா சங்கத் தமிழ் மூன்றையும் தருபவர். அவரது தம்பியான முருகன் அல்லவா தமிழ் முருகன்! அப்பனுக்கு மந்திரத்தின் பொருள் விளக்கம் சொன்ன தகப்ப்ன் சாமி தமிழுக்கும் அல்லவா பொருளுக்கும் பொருளானவர்!

 

ஆக இந்தப் பிள்ளையாரை தமிழர்களாகிய நாம் கும்பிடவே இல்லை என்பது தீய சக்திகளின் இமாலயப் பொய்!

 

திருமுருகாற்றுப்படை என்பது சங்க இலக்கியத்தில் பழமையான நூல். இதன் காலம் குறைந்த பட்சம் 2000 ஆண்டுகளுக்கு  முந்தையது.இதில் கடைசியில் உள்ள பத்து வெண்பாக்களில் ஏழாம் வெண்பாவில் “ஒரு கை முகன் தம்பியே” என்று விநாயகர் குறிப்பிடப்படுகிறார்.

 

 

தமிழ் மூதாட்டியும் உலக அறிஞர்களில் ஒருவருமான ஔவையார் யாரிடம் சங்கத் தமிழைத் தனக்குத் தந்து அருளுமாறு வேண்டினார்?

 

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை                            

நாலும் கலந்துனக்கு நான் தருவேன்  – கோலஞ்செய்                                 

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு                            

சங்கத் தமிழ் மூன்றும் தா!”

 

 

அடடா, என்ன ஒரு வணிக நேர்த்தி!

 

நான்கு தருகிறாராம், ஆனால் மூன்று கொடுத்தால் போதுமாம்!

பாகும் தேனும் பாகும் பருப்பும் ஆகிய நான்கையும் பெற்ற பிள்ளையார் முத்தமிழையும் அள்ளித் தராமலா இருப்பார்!

அருளினார்! ஔவையைப் பாட வைத்தார்! இறவாப் புகழை அளித்தார்.

 

 

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்               

நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு                       

துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்                

தப்பாமல் சார்வார் தமக்கு!

 

 ganesa shrine,thailand

ஔவையின் வாக்கைக் கடைப்பிடித்து பூக்கொண்டு விநாயக சதுர்த்தி அன்று தப்பாமல் பிள்ளையாரை வணங்குவோம்!

தீய சக்திகள் அழிந்து தமிழ் நாடு நல்ல சக்திகளின் இருப்பிடமாக ஆக வேண்டுவோம்!

*********

தமிழில் யமன்!!

??????????????????????????

எழுதியவர் சந்தானம்/லண்டன் சுவாமிநாதன்

English version of this article is posted already.

இந்துக்கள், குறிப்பாக பிராமணர்கள், தினமும் யமனை வழிபடுகின்றனர். மரண தேவனை பயமில்லாமல் கும்பிடும் ஒரே இனம் இந்துக்களாகத் தான் இருப்பார்கள். பிராமணர்கள் தினமும் காலை, மதியம், மாலையில் சூரியனை நோக்கி சந்தியாவந்தனம் செய்வர். இதில் தெற்கு திசையை நோக்கி யமனைப் பார்த்து சொல்லும் மந்திரமும் வருகிறது. இதில் யமனைக் கருப்பன் என்று கூறுகிறது. காளி, கலி, சனிக் கிரஹம், கிருஷ்ணன், விஷ்ணு, ராமன் போல யமனும் ஒரு கருப்பன். வெள்ளைத் தோல் தெய்வங்கள் ஆரிய தெய்வங்கள் என்றும் கருப்புத்தோல் தெய்வங்கள் திராவிட தெய்வங்கள் என்றும் எழுதி இந்துக்களை பிளவுபடுத்தி இந்தியாவை சீர்குலைக்க எழுதிய வெள்ளைத்தோல் அறிஞர்களுக்கு யமன் சரியான அடி கொடுக்கிறான்.

யமனைப் பற்றி சங்கத் தமிழ் இலக்கியங்களிலும் பல குறிப்புகள் வருகின்றன. ஏற்கனவே இந்திரனையும் வருணனையும் தமிழர் தெய்வங்கள் என்று தொல்காப்பியம் கூறியதைக் கொடுத்தேன். இப்போது சங்கத் தமிழ் இலக்கியம் யமதர்மன் பற்றிக் கூறுவதையும் காண்போம். அதில் ஞமன் என்றும் கூறுவர்.

சங்கத் தமிழில் புறநானூறு மிகவும் பழமையான பகுதி. அதில் பாடல் 4,13,19,22,56,195, 226,294 ஆகியவற்றிலும் பதிற்றுப்பத்தில் பாடல் 13, 14 கலித்தொகையில் பாடல் 105, 120 ஆகியவற்றிலும் காலன் என்ற பெயரில் புறநானூறு பாடல் 23, 41, 240, பதிற்றுப்பத்தில் பாடல் 39 ,கலித்தொகையில் பாடல் 105, 143 ஆகியவற்றிலும் யமதர்மராஜா பவனி வருகிறார்.

ஞமன் என்ற பெயரும் எருமை வாஹனமும் பரிபாடலில் வருகிறது (3, 5, 8 ஆம் பாடல்கள்) மீளி, மறலி, கணிச்சிப்படையோன், மடங்கல், கூற்றம் என்ற பெயரிலும் யமன் பற்றி நிறைய குறிப்புகள் இருக்கின்றன.

ஆரிய திராவிட வாதத்தை நகைப்புள்ளாக்கும் யமனைப் பற்றிய குறிப்புகளை மட்டும் பார்ப்போம்:

கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்

பிணிக்கும் காலை, இரங்குவீர் மாதோ (புறம் 195)

பொருள்: கடுந்திறலோடு மழுப்படையுடன் கூற்றுவன் பாசத்தால் கட்டி இழுத்துச் செல்லும்போது வருத்தப்படுவீர்கள்.

இந்துமதத்தில் இன்றுள்ள நம்பிக்கையை 2000 ஆண்டுகளுக்கு முன் நரிவெரூவுத்தலையாரும் பாடிவிட்டார். எருமை வாஹனம் உடையவன் என்பதும் புராணக் கருத்தாகும்.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை இடைக்காடனார் பாடிய பாடலிலும் (புறம் 42) ‘’கணிச்சி என்னும் படைக் கலத்தை உயிரை வருந்தச் சுழற்றி வரும் கூற்றம்’’ என்று யமன் வருணிக்கப்படுகிறான்.

TIBET15_Yama, 16c

ஒரு மன்னரின் சீற்றத்தை விவரிக்கும் போது, தமிழ், வடமொழி இலக்கியங்கள் மன்னனை யமனுக்கு ஒப்பிடுவது வழக்கம்.

திருக்குறளில் கூற்று/யமன் என்ற சொல் 326, 765, 1050, 1083ல் வரும். கலித்தொகை, பரிபாடல் ஆகிய இரண்டும் யமன் பற்றி மட்டுமின்றி ஏராளமான புராணக் கதைகளையும் உவமைகளையும் கையாளுகின்றன.

பிராமணர்கள் தினமும் மும்முறை சொல்லும் யம வந்தனத்தில் யமன் பற்றி 13 பெயர்கள் வரும். இதை தெற்கு திசை நோக்கி நின்றுகொண்டு சொல்லுவர். இறந்த மனிதர்கள் தென் திசைக்குச் செல்லுவர் என்னும் இந்து மதக் கருத்தை ஆணித் தரமாக, அழுத்தம் திருத்தமாகச் சொல்லி, ஆரிய திராவிட வாதத்துக்கு ஆப்பு வைக்கிறான் வள்ளுவன்:

‘’தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை’’ ( குறள் 43)

இந்துக்கள் தினமும் பஞ்ச யக்ஞம் செய்யவேண்டும் என்பதை வள்ளுவன் இரண்டே வரிகளில் சொல்லும் குறள் இது. ஆறாவது பகுதி தானியத்தை மன்னனுக்கு வரியாகச் செலுத்தவேண்டும்.

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போல் புதல்வர் பெறா அதீரும் (புறம்-9)

என்று சொல்லி நெட்டிமையார் என்னும் புலவரும் ஆரிய திராவிட வாதத்துக்கு செமை அடி கொடுப்பார். இறந்தோருக்கு திதி, தர்ப்பணம் செய்வதை அழகாக எடுத்துரைக்கிறார் புறநானூற்றுப் புலவர்.

சித்திரகுப்தன் யார்: யமனுடைய காரியதரிசி ஒரு தனி ஆள் அல்ல. சித்திரகுப்தன் என்றால் ‘’ரகசிய வரைபடம்’’ என்று தமிழில் பொருள். நாம் எண்ணும் ஒவ்வொரு எண்ணமும் செயல் வடிவம் பெரும் முன் சித்திரமாகப் படியும். அப்பொழுதே யமன் நமக்கு மதிப்பெண் போட்டு விடுகிறான். அதன் படியே, புண்ணிய பாபங்கள் ஏற்படும். அதன் அடிப்படையில் நாம் நரகத்துக்கோ, சுவர்க்கத்துக்கோ செல்கிறோம். இதையே சித்திர குப்தன் (ரகசிய=குப்த, வரைபடம்=சித்திர) என்போம். ஒரு கம்ப்யூட்டரும் மூளையும் கோடிக் கோடி கணக்குகளைப் போடும். சித்திரகுப்தன் கணக்கு சூப்பர், சூப்பர் கம்ப்யூட்டருக்கும் மேல்!

yama

இந்துக்கள் ஏன் மரணதேவதையை வழிபடுகிறார்கள்?

மஹாபாரதத்தில் மிகவும் சுவையான கதை ‘’ஒரு பேயின் கேள்விகள்’’ ( யக்ஷப் ப்ரஸ்னம்) என்ற பகுதியாகும். இதில், ‘’உலகிலேயே அதிசயமான விஷயம் என்ன?’’ என்ற கடைசி கேள்விக்குப் பதில் கொடுத்த தருமன் ‘’ உலகில் தினமும் எவ்வளவோ பேர் இறந்து போகிறார்கள். அதைப் பார்த்த பின்னரும் எல்லோரும் தினமும் வாழப் போகிறோம் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறார்களே’’ என்பதாகும். ஆக நாம் எல்லோரும் எந்தக் கணத்திலும் இறக்கலாம் என்பதை நினைவு படுத்தவே இப்படி தினசரி ய்ம தர்மன் வழிபாடு போலும்.

திருவள்ளுவரும் மஹாபாரத ஸ்லோகத்தை ‘’நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு’’ (குறள் 336) என்ற குறளில் தந்துள்ளார்.

மற்றொரு காரணமும் உண்டு. இது கார்களில், வண்டிகளில் உள்ள ‘’ஷாக் அப்சார்பர்’’ போன்றது. குழந்தைகள் பிறக்கும் போது மகிழும் மனிதன், ஒரு உறவினர் இறக்கும்போது,உலகமே பறிபோய்விட்டது போல மயங்கி பறிதவிக்கிறான். இறப்பும் ஒரு இயற்கை நிகழ்வே என்பதை மறந்து விடுகிறான்.  தினமும் மரண தேவனை நினைத்து வழிபட்டால் அதுவே  ‘’குஷன் மெத்தை’’ போல செயல்படும். மரண பயம் நீங்கும். நமது ஆயுளும் நூறு ஆண்டு நீடிக்கும். ஏனெனில் பிராமணர்களின் மதிய வேளை சந்தியாவந்தனத்தில் ‘’நூறாண்டுக்காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க’’ (பஸ்யேமஸ் சரதஸ் சதம், ஜீவேம சரதஸ் சதம், நந்தாம சரதஸ் சதம்  என்ற மந்திரமும் வருகிறது. இதையே கண்ணதாசன் திரைப்படத்தில் பாடி இருக்கிறார்.

 

யமனைப் பற்றிய சில சுவையான குறிப்புகளையும் காண்போம்:

1.யமன் தென் திசைக்கு அதிபன். யமன் பற்றி உலகிலேயே பழமையான மத நூலான ரிக் வேதத்திலும் வருகிறது. யம என்ற வார்த்தைக்கு இரட்டையர் என்ற பொருளும் உண்டு. அவனுடன் பிறந்தவள் யமி.

2.யமன் தான் உலகில் இறந்த முதல் மனிதன் என இந்துமத நூல்கள் பேசும். யமனுக்கு உதவி செய்ய ஒரு கணக்குப் பிள்ளை உண்டு. அவன் பெயர் சித்திர குப்தன்.

3.யமனிடம் இரண்டு நாய்கள் உண்டு அதன் பெயர் சரமா. அதற்கு ஒவ்வொன்றுக்கும் நான்கு கண்கள்.

4.யமனுடைய மனைவியர்  பெயர்கள் ஹேமமாலா, சுசீலா, விஜயா.

5. யமனுக்குப் பல கோவில்களும் தனி சந்நிதிகளும் இருக்கின்றன.

6.யமன் மிகவும் நியாயமானவன். அவரவர் புண்ணிய பாபத்தால் கிடைப்பதைப் பாரபட்சமின்றி கொடுப்பதால் அவனுக்கு தர்மராஜன் என்று பெயர்.

7.யமனுடைய அப்பா பெயர் விஸ்வவத். இதனால் யமனை வைவஸ்வதன் என்றும் அழைப்பர். அம்மா பெயர் சரண்யு.

8. இவன் கருப்பன் என்பதால் ‘’நீலாய’’ என்றும் அழைப்பர்.

யமனுடைய வாஹனமும் கருப்பு— எருமை!

9.யமன் கையில் உள்ள ஆயுதத்தை கணிச்சி என்று சங்கத் தமிழ் இலக்கியங்கள் பகரும். அவனுடைய கையில் பாசக் கயிறும் இருக்கும்.

10. யமனுடைய ‘பெர்சொனல் அஸ்ஸிஸ்டன்ட்’ சித்திர குப்தனின் கையில் இருக்கும் ரெஜிஸ்டருக்குப் பெயர் ‘’அக்ர சந்தனி’’.

ஆக, ஆரிய யமனும் இல்லை, திராவிட யமனும் இல்லை; ஒரே ஒரு யமன் தான்! அவன் இந்தியாவையும் இந்துமதத்தையும் சீர்குலைக்க எண்ணுவோரின் உயிர்குடிக்கும் இந்திய யமன்!!

(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்தக் கட்டுரையை வேறு எங்காவது வெளியிடுகையில் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ அல்லது பிளாக் பெயரையோ வெளியிட்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன். தமிழுக்குத் துரோகம் செய்யாதீர்கள். தமிழ்த் தாய் பொறுக்கமாட்டாள்.)

Pictures are taken from various websites;thanks. contact swami_48@yahoo.com