பார்ப்பானுக்கு அழகு எது? (Post No.3398)

Written by S NAGARAJAN

 

Date: 29 November 2016

 

Time uploaded in London: 5-45 AM

 

Post No.3398

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 14

 

இந்தக் கட்டூரையில் அகநானூற்றில்ல் வரும் 24 ஆம் பாடலில் ஒரு அந்தணன் செய்ய வேண்டியது யாகமே என்று குறிப்பிடப்படும் செய்தி இடம் பெற்றுள்ளது.

 

 

 பார்ப்பானுக்கு அழகு எது? அகநானூறு தரும் பதில்!

 

                       ச.நாகராஜன்

 

அகநானூறு

அந்தணருக்குத் தொழில் எது என அகநானூறில் ஒரு புலவர் தரும் விளக்கம் 24ஆம் பாடலில் வருகிறது.

பாடலைப் பாடியவர் ஆவூர் மூலங்கிழார்.

இவர் வேளாள குலத்தைச் சேர்ந்த பெரும் புலவர். இவரது மகன் தான் பெரும் புகழ் வாய்ந்த சீத்தலைச் சாத்தனார்.

யாகம் பண்ணிய கௌணியன் விண்ணந்தாயனைப் புகழ்ந்து இவர் பாடிய பாடலை புறநானூறு (166ஆம் பாடல்) கட்டுரையில் (கட்டுரை எண் 5) பார்த்தோம்.

கீழே உள்ள பாடலில் புலவர் பிரான், யாகம் பண்ணாத பார்ப்பானுக்கு சங்கறுக்கையே தொழிலாகும் என்று இழித்துக் கூறுகிறார்.

வேளாண்  மரபினரான இவர் அந்தணர் மீதும் வேதம் வகுக்கும் யாகங்களின் மீதும் எவ்வளவு மதிப்பும் மரியாதையும் கொண்டவர் என்பதை இந்தப் பாடல் மூலம் அறிய  முடிகிறது. தலைவன் சொன்னதாகவோ அல்லது படைக்களத்தில் பாசறையில் தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னதாகவோ இந்தப் பாடல் அமைகிறது.

பாடல் இதோ:

வேளாப் பார்ப்பான் வாள் அரம் துமித்த                            

வளை களைந்து ஒழிந்த கொழுத்தின் அன்ன                 

தலை பிணி அவிழா கரி முகப் பகன்றை                      

சிதரல் அம் துவலை தூவலின்  மலரும்                     

தைஇ நின்ற தண் பெயல் கடை நாள்                    

வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை                   

விசும்பு உரிவது போல வியல் இடத்து ஒழுகி                      

மங்குல் மா மழை தன் புலம் படரும்                            

பனி இருங்கங்குலும் தமியன் நீந்தி                                  

தம் ஊரோளே நன்னுதல் யாமே                               

கடி மதில் கதவம் பாய்தலின் தொடி பிளந்து                           

  நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டுச்                            

சிறு கண் யானை நெடு நா ஒண் மணி                             

கழிப் பிணிக் கறைத் தோல் பொழி கணை உதைப்பு

தழங்கு குரல்  முரசமொடு முழங்கும் யாமத்து

கழித்து உறை செறியா வாளுடை எறுழத் தோள்                    

இரவு துயில் மடிந்த தானை                                          

உரவுச் சின வேந்தன் பாசறையேமே

 

வேளாப் பார்ப்பான் என்றால் தனக்கு விதிக்கப்பட்ட நியமங்களைச் சரிவரச் செய்யாத அந்தணன் என்று பொருள் வளை அரம் துமித்த என்றால் நன்கு  கூர்மையாக்கப்பட்ட அரம் என்று பொருள் வளை களைந்து என்றால் அந்த அரத்தினால் வளைகளைக் களைந்து சங்கை அறுத்தல் என்று பொருள்.

         “இது தை மாதத்தின் கடை நாள் அன்று குளிர்ந்த மழைத் துளிகள் விழும் போது துளிர்க்கும் பகன்றை அரு,ம்புகளானவை, யாகம் செய்யாத பார்ப்பான் சங்கு அறுத்து அதில் மிகுதியாக இருக்கும் சங்கின் மேல் பகுதிகளைப் போல  (ஒழிந்த கொழுந்தின் அன்ன தலை) இருக்கிறது” என்கிறார் புலவர்.

வேளாப் பார்ப்பான் எனப்படும் யாகம் செய்யாத அந்தணன் சங்கை அறுக்கும் தொழிலைச் செய்வது இங்கு இழுக்காகக் குறிப்பிடப்படுகிறது.

பெரிய கருத்த  மழை மேகங்கள் வானமே உதிர்ந்தாற் போல மழை பெய்விக்க தெற்கே பனி இருளில் நன்னுதல் கொண்ட  அவள் மட்டும் நகரில் தனியே இருப்பாளே நான் இங்கு போர்க்களத்திலுள்ளேன். சினம் கொண்ட  மன்னன் உறையிலிருந்து எடுத்த வாள் உள்ளே போடப்படாமல் உள்ளது என்று அடுத்துக் கூறும் கவிஞர்  பாடலில் போர் நடைபெறும் களத்தின் கடுமையை விரிவாக விளக்குகிறார்.

இந்தப் பாடலைப் பாடியவர் வேதம் ஓதுதலும் அது வகுத்த விதிமுறைப்படி யாகம் செய்தலுமே அந்தணரின் கடமை என்பதைத் தெளிவாக்குகிறார்!

அகநானூறு பாடல்களை இயற்றியுள்ள புலவர்கள் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்களுள் ஏற்றத் தாழ்வு இல்லை. தமிழால் இணைந்த ஓர் குல மக்கள் இவர்கள்.

அந்தணர், அரசர், எயினர், இடையர்,கூத்தர், தட்டார்,வணிகர், வேளாளர் ஆகியோர் தமிழின் மீதுள்ள காதலால் பல பொருள் பற்றிச் சிறக்கப் பாடியுள்ளனர். ஒரே சமுதாயமாக தமிழ்ச் சமுதாயம் இலங்கி இருந்தமையை இது காட்டுகிறது.

 

சங்க காலத்தில் அந்தணர்கள் மதிப்புடனும் மரியாதையுடனும் வாழ்ந்ததும், வாழ்த்தப்பட்டதும் தெரிய வருகிறது.

அந்தணர்கள் என்று எடுத்துக் கொண்டால்,

ஆமூர்க் கௌதமன் சாதேவனார்,

கடியலூர் உருத்திரங்கண்ணனார்,

கபிலர்,

கோடிமங்கலம் வாதுளிநற் சேந்தனார்,

செல்லூர்க் கோசிகன் கண்ணனார்,

நக்கீரனார்,

மதுரை ஆசிரியர் நல்லந்துவனார்,

மதுரை இளங்கௌசிகனார்,

மதுரைக் கணக்காயனார்,

மதுரைக் கௌணியன் தத்தனார்,

மாமூலனார் ஆகிய புலவர்களை அகநானூற்றுப் புலவர்களாகக் குறிப்பிடலாம். இவர்களின் பாடல்கள் அகநானூறில் இடம் பெற்றுள்ளன. படித்து மகிழலாம்.

இவர்கள் ஒவ்வொருவரின் சிறப்பைப் பற்றியும் தனியே தான் எழுத வேண்டும்!

******