நல்ல பிராஹ்மணன் யார்? சாணக்கியன் இலக்கணம் (Post No.4777)

Date: 23 FEBRUARY 2018

Time uploaded in London- 7-59 am

Written by London swaminathan

Post No. 4777

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

பிராஹ்மணர்களில் நல்லவர் யார், கெட்டவர் யார் என்று 2300 ஆண்டுகளுக்கு முன்னரே சாணக்கியன் என்னும் மாமேதை செப்பிவிட்டான். அவன் பிராஹ்மணர்களுக்கு வகுக்கும் இலக்கணத்தைப் பார்க்கையில் இன்று வெகு சிலரே அந்த இலக்கண வரையறைக்குள் வருவார்கள். அவன் மௌரியப் பேர் அரசை ஸ்தாபித்த பின்னரும் குடிசையில் வாழ்ந்ததால் அவன் இவ்வளவு துணிச்சலாகப் பேச முடிந்தது; குணம் என்னும் குன்றேறி நின்றவன் அவன். அந்தணர் என்போர் அறவோர் என்ற சொற்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்ந்தவன். அவனுடைய ஸ்லோகங்களின் வாயிலாக நாம் மிலேச்சன், சண்டாளன் போன்ற சொற்களின் சரியான கணபரிமாணத்தை அறிய முடிகிறது. வெளி நாட்டினர் இந்தச் சொற்களுக்கு எல்லாம் விஷ(ம) அர்த்தம் கற்பித்து இருந்தனர்.

xxxx

ஒரே வேளை  மட்டுமே உணவு!

ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் சாப்பிட்டுத் திருப்தி அடைபவனும், ஆறு தொழில்களை மட்டும் செய்பவனும், மனைவியைக் குழந்தை பெறுவதற்காக மட்டும் அனுபவிப்பனும் ஆகிய பிராஹ்மணன் ‘த்விஜன்’ எனப்படுவான்.

 

த்விஜன்= இரு பிறப்பாளன்

அறுதொழிலோர்= வேட்டல், வேட்பித்தல், கற்றல் , கற்பித்தல், அறக்கொடை வழங்கல், அறக்கொடை பெறுதல் (திருக்குறள் 560)

 

காளிதாசன் ரகு வம்சத்தில் சொல்கிறான்: சூரிய குலத்து அரசர்கள், வம்சம் தழைக்க மட்டுமே மனைவியுடன் இருப்பார்களாம். அதாவது அவர்களை ‘செக்ஸ்’ sex பொருட்களாகப் பயன்படுத்த மாட்டார்களாம்; அதையே இங்கே சாணக்கியனும் மொழிவது குறிப்பிடத் தக்கது.

 

ஏக ஆஹாரேண ஸந்துஷ்டஹ ஷட் கர்ம நிரதஹ ஸதா

ருது காலாபிகாமி ச ஸ விப்ரோ த்விஜ உச்யதே

சாணக்கிய நீதி 11-12

xxxx

 

ரிஷி, முனிவர் யார்?

 

எந்த பிராஹ்மணன் காட்டில் வசித்துக்கொண்டு, தினமும், நிலத்தை உழாமல்- சாகுபடி செய்யாமல் —  வளரும் பழங்களையும், கிழங்குகளையும் உபயோகித்து சிரார்தம் செய்கிறானோ அவன் ரிஷி என அழைக்கப்படுவான்.

அக்ருஷ்ட பல மூலேன  வனவாசரதஹ ஸதா

குருதே அஹரஹஹ ஸ்ராத்தம்ருஷிர் விப்ரஹ ஸ உச்யதே

சாணக்கிய நீதி 11-11

 

இங்கே சிராத்த என்பது ஐந்து வேள்விகளைக் குறிக்கும் என்றே நான் நினைக்கிறேன்.

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு

ஐம்புலத்தார் ஓம்பல் தலை (குறள் 43)

 

என்று வள்ளுவன் சொல்லுவதும் இதையேதான்.

 

xxx

நாய், பூனை வளர்ப்போன், விற்போன்

 

உலக விஷயங்களில் ஈடுபடுவோனும், நாய்,பூனை முதலிய மிருகங்களை வளர்ப்போனும், வியாபாரத்திலும், வேளாண்மையிலும் ஈடுபடுவோனும் ஆகிய பிராஹ்மணன், வைஸ்யன் எனப்படுவான். அதாவது பிராஹ்மண ரூபத்தில் உலவும் வைஸ்யன்.

 

லௌகிகே கர்மணி ரதஹ பசூனாம் பரிபாலகஹ

வாணிஜ்ய க்ருஷி கர்தா யஹ ஸ விப்ரோ வைஸ்ய உச்யதே

சாணக்கிய நீதி 11-13

 

xxxx

கள், மாமிஸம் விற்போர்

 

அரக்கு, எண்ணை, சாயப் பொருட்கள் (அவுரி), குங்குமப் பூ, தேன், கள், மாமிஸம் விற்போர் சூத்திரர்கள் என்று கருதப்படுவர்

லாக்ஷாதி தைல நீலானாம் குசும்ப மது ஸர்பிஷாம்

விக்ரேதா மத்ய மாம்ஸானாம் ஸ விப்ர சூத்ர உச்யதே

சாணக்கிய நீதி 11-14

xxx

 

  

ருத்ராக்ஷப் பூனை

மற்றவர்களின் வேலைகளில் இடையூறு உண்டாக்கும் , சுய நலமும், அகந்தையும் பொறாமையும், கொடூரமும் உள்ள பிராஹ்மணன் — பூனை எனப்படுவான்

(இது பஞ்ச தந்திரக் கதையிலும் மாமல்லபுர சிற்பத்திலும் வரும் ருத்ராக்ஷப் பூனை கதையாகும்; ருத்ராக்ஷப் பூனை பற்றிய எனது பழைய ஆராய்ச்சிக் கட்டுரையில் மேல் விவரம் காண்க)

பரகார்ய விஹந்தா ச தாம்பிகஹ ஸ்வார்தசாதகஹ

ச்சலீ த்வேஷீ ம்ருதுஹு க்ரூரோ விப்ரோ மார்ஜார உச்யதே

 

சாணக்கிய நீதி 11-15

xxx

 

மிலேச்சன்

நீர்த்தேக்கத்தையும், குளத்தையும், கண்மாய்களையும், தோட்டங்களையும், கோவில்களையும் அழிக்கும் பிராஹ்மணன் மிலேச்சன் (காட்டுமிராண்டி, பர தேஸி, வெளி நாட்டுக்காரன்) எனக் கருதப்படுவான்.

 

மிலேச்சர்கள் என்ற சொல் சங்கத் தமிழ் இலக்கியத்திலும் பயிலப்படுகிறது (முல்லைப் பாட்டு, வரி 66); பாரதியாரும், இந்து மத விரோத முஸ்லீம்களை மிலேச்சர் என்று அழைக்கிறார்; சிலப்பதிகாரத்திலும் இத்தாலி நாட்டவர்கள் (ரோம் நகர ஆட்சி) யவனர்கள்– மிலேச்சர் என்று அழைக்கப்படுகின்றனர். ஆனால் இந்தியாவைப் பிரித்தாள வந்த வெளிநாட்டினர், இது திராவிடர்களைக் குறிக்கும் என்று எழுதி வைத்தனர்; அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதாவது இந்து தர்ம விரோதிகளும், கொள்ளையர்களும் மிலேச்சர்கள் என்று அழைக்கப்பட்டனர். சாணக்கியனும் அணைகளை உடைப்பவர்களையும் புறச்சூழலெதிரிகளையும் கோவில்களை உடைப்போரையும் மிலேச்சர்கள் என்று சொல்வது குறிப்பிடத்தக்கது. 2300 ஆண்டுகளுக்கு முன்னர் கோவில் நிலங்களை, கோவில் நந்த வனங்களை அபகரித்தோரையும், சுயநலத்துக்காக அழித்தோரையும் சாணக்கியன் இந்தக் கடுமையான சொல்லைப் பிரயோகித்து சாடுகிறான்.

 

வாபீ கூப தடாகானாம் ஆராமஸுரவேஷ்மனாம்

உச்சேதனே நிராசங்கஹ ஸ விப்ரோ ம்லேச்ச உச்யதே

சாணக்கிய நீதி 11-16

 

xxxx

சண்டாளன்

கோவிலுக்கும் குருவுக்கும் கொடுக்கப்பட்ட பணத்தைத் திருடும், மற்றவர்களின் மனைவியரை அனுபவிக்கும், இது போன்ற அடிமட்ட மக்களுடன் கொஞ்சிக் குலாவும் பிராஹ்மணர்கள் சண்டாளர்கள் என்று அழைக்கப்படுவர்.

 

ராவணன் 50 சதவிகித பிராஹ்மணன்; அவன் மாற்றான் மனைவியைத் தொட்டதால் அழிந்தான். வெளி நாட்டினர் நான்கு ஜாதிகளுக்கு வெளியே இருந்தாரும் திராவிடர்களும் சண்டாளர்கள் என்று சொல்லி மதப் பிரசாரம் செய்தனர். ஆனால் நான்கு ஜாதிகளுக்குப் புறம்பானவர்கள் சண்டாளர்கள் அல்ல; திருடர்களும், பெண் பித்தர்களும், கீழ் மட்டத்தில் பன்றிகள் போல உழலுவோரும் மட்டுமே– பிராஹ்மணர்களாக இருந்தாலும்– அவர்கள் சண்டாளர்கள் என்று 2300 ஆண்டுகளுக்கு முன்னரே பகர்ந்தான் சாணக்கியன்.

 

இது வெளிநாட்டுக்கரகளின் சதியை அம்பலப்படுத்துகிறது

 

தேவ த்ரவ்யம் குரு த்ரவ்யம் பர தாராபிமர்ஷணம்

நிர்வாஹக ஸர்வபூதேஷு விப்ர சாண்டால/ள உச்யதே

 

சாணக்கிய நீதி 11-17


(
நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

xxx SUBHAMxxxx