பசு மாட்டுக்கு பள பள தோல் வந்தது எப்படி? (Post No.4069)

Translated by London Swaminathan
Date: 10 July 2017
Time uploaded in London- 14-46
Post No. 4069

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பசு மாட்டுக்கு கொம்பும் குளம்பும் வந்தது எப்படி என்பதை போன வாரம் சொன்னேன். இன்று அதற்கு பளபளப்பான தோல் எப்படி வந்தது என்று பார்ப்போம். இது சதபத பிராமண (3-1-2-16) த்தில் உள்ள கதை.

 

“பசு மாட்டின் மீதுள்ள அதே தோல்தான் முன்னர் மனிதன் மீது இருந்தது. தேவர்கள் சொன்னார்கள்: ‘இந்த பூமியில் உள்ள எல்லோருக்கும் உணவு மற்றும்  வேறு பொருள்களை தருவது பசுதான்; ஆகையால் நாம் இப்போது மனிதன் மீதுள்ள தோலை எடுத்து பசுமாட்டுக்குப் போர்த்துவோம். அப்படிச் செய்தால் அந்த மாடு வெய்யிலையும், மழையையும் குளிரையும் தாங்கும்’

 

இதன் பிரகாரம் மனிதனின் தோலை உரித்து பசு மாட்டின் மீது போர்த்தினார்கள்; அதற்குப் பின்னர்,  அந்த மாடு வெய்யிலையும், மழையையும் குளிரையும் தாங்கியது

 

மனிதன் தோல் உரிக்கப்பட்டதால், அவனை ஒரு புல்லோ, முள்ளோ அல்லது வேறு ஏதாவதோ  அறுத்தால் அவன் மீது ரத்தம் வருகிறது. பின்னர் தேவர்கள் அவனுக்கு தோல் என்னும் ( தோலுக்குப் பதிலாக) உடையை அணிவித்தார்கள். இதனால்தான் மனிதன் மட்டும் உடை அணிகிறான். ஆகையால் ஒருவன் சரியாக ஆடை அணிய வேண்டும். அப்போதுதான் அவன் முழுமை அடைகிறான். இதனால்தான் அவலட்சணமான மனிதனாக இருந்தாலும் எல்லோரும் உடை அணிவதை  எதிர் பார்க்கிறார்கள்; அதுதான் அவனுடைய தோல்.

 

ஒரு பசு மாட்டிற்கு முன்னால் கூட அவன் நிர்வாணமாக நிற்கக்கூடாது ஏனெனில் பசுமாடு பயந்து ஓடிவிடும்; மனிதன் தன் மீதுள்ள ‘அவனுடைய தோலை’ எடுத்துக் கொண்டு விடுவானோ என்று அதற்கு அச்சம்.

 

 

ஆகையால்தான் நல்ல உடை அணிந்தவன் மீது பசுக்கள் அன்புடன் இருக்கின்றன.

 

இந்தக் கதையில் பல நீதிகள் உள்ளன. மேம்போக்காகப் பார்த்தால் “குட்டி யானைக்கு கொம்பு முளைத்ததாம், பட்டனம் எல்லாம் பறந்தோடிப் போச்சாம்” என்ற சின்னக் குழந்தை கதை போல இருக்கும். ஆனால் அஸ்வமேதம், ராஜசூயம் வாஜபேயம் போன்ற மாபெரும் யக்ஞங்களை விவாதிக்கும் – விவரிக்கும் — சதபத பிராமண நூலில் இது இருப்பதால் இது ரகசிய மொழியில் – மறை மொழியில் சொல்லப்பட்ட கதை என்பது விளங்கும்

 

யாராவது நிர்வாணமாக நின்றால் பசுக்கள் பயப்படுமாம். இந்த ஆள் உடை இல்லாமல் வ ந்தி      ருக்கிறான்; நம்முடைய உடைகளை (தோல்) எடுத்துக்கொள்வான் என்று நினைத்து ஓடிவிடுமாம்.

 

நல்ல உடை அணிந்தவர்கள் இடம் பசுக்கள் அன்பு பாராட்டுவது இதனால்தான்.

 

இந்தக் கதையிலிருந்து பெறப்படும் நீதிகள் என்ன?

  1. மனிதன் தோலைப் போர்த்துமளவுக்கு பசு உயர்ந்த பிராணி; அது மனிதனுக்கு நிகரானது. இதை ருசுபிக்கும் வகையில் நெட்டிமையாரின் புறநானூற்றுப் பாடல் (எண்.9) முதல் சிலப்பதிகாரம், தேவாரம் வரை பசுவையும் பார்ப்பனனையும் இணைத்துப் பேசியே புகழ்கின்றன.

 

2.இரண்டாவதாக பசுவுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும்; ஒர் பெண்ணுக்குக் கொடுக்கும் மரியாதையைத் தர வேண்டும்; யாரும் நிர்வாணமாக நிற்கக் கூடாது அதற்காகத்தான் தேவர்கள் உடைகள் கொடுத்து இருக்கிறார்கள்.

 

(மனு ஸ்ம்ருதியும் பெண்களுக்கு ஆடை அணிகலன்கள் வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும்; பெண்களை அழ வைக்கும் எந்தக் குடும்பமும் வேருடன் அழியும் என்று எச்சரிக்கிறார்.)

 

பசு ஒரு புனிதமான பிராணி மட்டும் அல்ல; மிகவும் உபயோகப்படும் மிருகம். அதன் பால், வெண்ணெய், மூத்திரம், சாணி, தயிர் ஆகிய எல்லா வற்றையும் இந்துக்கள் அன்றாடம் பயன்படுத்துவர்.

 

எல்லாப் பிராணிகளுக்கும் இந்துக்கள் மதிப்பும் மரியாதையும் கொடுத்தாலும் பசுவுக்கு தனி இடம்; எறும்பு முதல் யானை வரை – என்ற மரபு வாக்கியம் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உள்ளது. இத்தனைக்கும் உதவ இந்துக்கள் தினமும் ஐவேள்வி (பஞ்ச மஹா யக்ஞம்) செய்கிறார்கள். பசுவுக்கும் யானைக்கும் மட்டும் பூஜையும் செய்வார்கள்.

-சுபம்–