மஹரிஷிகள் தமனர்! சதானந்தர்! க்ரது! (Post No.9215)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9215

Date uploaded in London – –2 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹரிஷி தமனர்!

ச.நாகராஜன்

மஹரிஷி தமனர் ஒரு பிரம்ம ரிஷி! விதர்ப்ப தேசத்திற்கு அரசனான பீமராஜன் புஜபல பராக்கிரம் உள்ளவனாகவும், குடி மக்களிடத்து அன்புள்ளவனாகவும், நற்குணங்கள் உடையவனாகவும் இருந்தான். ஆனால், அவனுக்கு சந்ததி இல்லை. ஆகவே வருத்தப்பட்ட அவன், தனக்கு சந்ததி உண்டாகும் பொருட்டு, திடமான மனத்தை உடையவனாக, பல விரதங்களை அனுஷ்டித்து வந்தான்.

அந்தச் சமயத்தில் தமன மஹரிஷி பீமராஜனிடம் வந்தார். அவரை பீமராஜன் மிகுந்த மரியாதையுடன் உரிய முறைப்படி  எதிர்கொண்டழைத்து  அவருக்கு வந்தனை வழிபாடுகளை உரிய முறையில் செய்தான்.

இதனால் மனம் மகிழ்ந்த தமனர் அவனுக்கு ஒரு அழகிய புத்திரியையும் மூன்று புத்திரர்களையும் உண்டாகும்படி அனுக்ரஹம் செய்தார்.

பீமராஜனுக்குப் பிறந்த அந்தப் பேரழகியின் பெயர் தான் தமயந்தி.

அவளே வீரமும் தர்மமும் நிறைந்த நள மஹாராஜனை நாயகனாக அடைந்தாள்.

ஏராளமான கஷ்டங்களை அனுபவித்தாலும் பதிவிரதா தர்மத்தை அனுஷ்டித்து நள மஹாராஜனுடன் கஷ்டங்களிலிருந்து மீண்டு சிறப்புற வாழ்ந்தாள்.

தமனரின் அருளால் பீமராஜனுக்கு மகளான தமயந்தி பற்றியும் நளன் பற்றியும் வேதங்களிலே குறிப்புகள் காணப்படுவதால் இந்த சரித்திரம் மிக மிகப் பழைய சரித்திரம் என்பது பெறப்படுகிறது.

xxxxxxxxxxxxxxxxxxxxxxx

மஹரிஷி சதானந்தர்

ச.நாகராஜன்

மஹரிஷி சதானந்தர் கௌதம ரிஷியின் மூத்த குமாரர். கௌதமருக்கு அகல்யையிடம் பிறந்தவர் இவர். மிகுந்த தவ வலிமை உடையவர். இவர் ஜனக மஹாராஜனது புரோகிதராக இருந்தார். ராம லக்ஷ்மணர்களுடன் விஸ்வாமித்திர மஹரிஷி ஜனக மஹாராஜனது யாகத்திற்காக மிதிலை நகர் வந்தார்.

அப்போது இந்திரனுடைய செய்கையால் தன் தாய் அகல்யைக்கு நேர்ந்த சாபம் ராமரது கடாக்ஷத்தால் விமோசனமானதை அறிந்த சதானந்தர் அளவில்லா ஆனந்தம் அடைந்தார். அவருக்கு விஸ்வாமித்திரரின் சரித்திரத்தை எடுத்துரைத்தார்.

இவரைப் பற்றி வால்மீகி ராமாயணம் பால காண்டத்தில் காணலாம்.

xxxxxxxxxxxxxxxxx

மஹரிஷி க்ரது

ச.நாகராஜன்

மஹரிஷி க்ரது பிரம்மாவின் மரீசி முதலான ஆறு புத்திரர்களில் ஒருவர். இவர் பிரம்மாவின் கையிலிருந்து ஜனித்தார்.  க்ரது முனிவரது புத்திரர்களே வாலகில்யர்கள். இவர்கள் சூரியனுடைய நண்பர்கள் ஆவர். சத்தியமும் விரத சீலமும் நிறைந்தவர்கள். மூன்று உலகங்களிலும் கீர்த்தி பெற்றவர்கள். க்ரது மஹரிஷி பிரஜாபதிகளில் ஒருவராக இருந்து உலகத்தில் ஜீவ விருத்தியைச் செய்து விட்டு அவருடைய தவத்தின் மஹிமையால் பிரம்ம லோகத்தில் பிரம்மாவின் சபையிலிருந்து வருகிறார்.

இவர் உபஸ்மிருதி கர்த்தாக்களில் ஒருவர்.

இவரைப் பற்றி மஹாபாரதம் ஆதி பர்வத்தில் காணலாம்.

Tags – மஹரிஷிகள்,  தமனர், சதானந்தர், க்ரது,