சருப்பதோபத்திரம் – 2
கட்டுரையை எழுதியவர் :– S Nagarajan
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1496; தேதி 18 டிசம்பர், 2014.
சருப்பதோபத்திரம் இலக்கணத்தை விளக்கி மாறனலங்காரம் தந்த சூத்திரத்தைப் பார்த்தோம். இதற்கு உதாரணமாக அந்த நூல் தரும் செய்யுள் இது:
தேமாபூமாமாபூமாதே
மாதாகாவாவாகாதாமா
பூகாவாலாலாவாகாபூ
மாவாலாநீநீவாவாமா
இதை 64 அறைகளில் அடைத்துப் பார்த்தால் வரும் சித்திரம் இது:-
தே மா பூ மா மா பூ மா தே
மா தா கா வா வா கா தா மா
பூ கா வா லா லா வா கா பூ
மா வா லா நீ நீ வா வா மா
மா வா லா நீ நீ வா வா மா
பூ கா வா லா லா வா கா பூ
மா தா கா வா வா கா தா மா
தே மா பூ மா மா பூ மா தே
செய்யுளின் பொருளைப் பார்ப்போம்:
தேமாபூ – தேனும் வண்டும் பொருந்திய பூவினிடத்து
மாமா – பெரிய திருமகளும்
பூமாதேமாது – பூமிதேவியுமாகிய அழகு பொருந்தின மாதர்கள்
ஆகாகாவாகா – (வா ஆகா வாகா எனப் பாட மாற்ற) வந்து தங்கு மார்பினையும்
புயத்தினையுமுடையவனே!
தாமா – துளவ மாலிகையை உடையவனே!
பூகாவாலாலா – பூமியை எடுக்கப்பட்ட பிரளயத்தின் மேல்
ஆல் இலையில் துயிலப்பட்டவனே!
பூமாவாலா – பொலிவினோடும் கூடிய மிகுந்த
பாலத் தன்மையோனே!
நீலாவாமா – நீல நிறத்தினனே! வாமனரூபமானவனே!
மூன்றாம் அடியின் இறுதி வாகா நாலாம் அடியின் முந்த வந்த நீ என்னும் அவற்றோடு கூட்டி நீவா கா எனச் சேர்த்து நீ வந்து என்னைக் காப்பாயாக என்றவாறு.
திருமகளை மார்பிலே ஏந்திய விஷ்ணுவை நீ வந்து என்னைக் காப்பாயாக என்று துதிக்கும் துதிப் பாடல் இது.
இதனுள் ஏமம் ஏம் என நின்றது
உம்மை வேற்றுமை பண்பு என்பன முதலிய தொகைகளும் ஒருமைபன்மை மயக்க வழுவமைதியும் வந்து மாட்டுறுப்பாகப் பொருள் உரைத்தவாறு காண்க.
ஆல் – பிரளயம்; வா – வந்து; மாது – மாதர்கள்; பூ-தாமரை; பூ – பொலிவு
தமிழின் சிறப்பு அதன் ஒவ்வொரு எழுத்துக்கும் பல அர்த்தங்கள் உண்டு என்பது தான்! இதனாலேயே இது போன்ற சித்திர் கவிகள் அழகுடனும் பொருளுடனும் மிளிர்கின்றன.
இந்தப் பாடலில் உள்ள எழுத்துக்கள் 64. இதில் ‘மா’ எட்டு முறையும் ‘வா’ ஏழு முறையும் தக்க பொருளுடன் வந்து அமைவதைப் பார்க்கலாம்!
எந்த வாயில் வழியே சென்றாலும் செய்யுளைக் காண முடிகிறது. அது தான் சருப்பதோபத்திரம்.
இனி, இன்னும் ஒரு செய்யுளைக் காண்போம்!
-தொடரும்