கீதையின் மஹிமை: சிருங்கேரி ஆசார்யர்!(Post No.3025)

34thjagadguru

Article Written S NAGARAJAN

Date: 1st August 2016

Post No. 3025

Time uploaded in London :– 5-27 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

ஞான ஆலயம், இந்த மாத இதழில் (ஆகஸ்ட் 2016) வெளியாகியுள்ள கட்டுரை

முன்னுக்குப் பின் முரணாக இருப்பது அல்ல கீதை; முக்காலத்திற்கும் எல்லோருக்கும் பொருந்துவது கீதை என்பதை உணர்த்திய சிருங்கேரி ஆசார்யாளின் மஹிமை பொருந்திய சம்பாஷணை காலத்தை வென்ற ஒன்று!

 

கீதையின் மஹிமையை உணர்த்திய சிருங்கேரி ஆசார்யர்!

 

ச.நாகராஜன்

 

அறிஞர்கள் போற்றும் கீதை

கீதையின் பெருமையைப் போற்றாத உலக அறிஞர்களே இல்லை. எமர்ஸன், தோரோ, எட்வின் ஆர்னால்ட் உள்ளிட்ட மேலை நாட்டு அறிஞர்கள் கீதைக்கு உயரிய புகழாரம் சூட்டியுள்ளனர்.

மஹாத்மா காந்திஜிக்கு கீதையே வாழ்க்கை வழிகாட்டி. குறிப்பாக கீதையின் இரண்டாவது அத்தியாயத்தில் உள்ள கடைசி 19 ஸ்லோகங்களில் (ஸ்தித் ப்ரஜ்ஞஸ்ய என்பது முதல் ப்ரஹ்ம நிர்வாணம்ருச்சதி என்பது முடிய உள்ள ஸ்லோகங்கள்) தான் கடைப்பிடிக்க வேண்டிய தர்மம் அனைத்தும் அடங்கி விட்டது என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

 

“கீதை பிரபஞ்ச தாய். அவள் யாரையும் வெறுங்கையுடன் திருப்பி அனுப்ப மாட்டாள். அவளது கதவைத் தட்டுக்கின்ற யாருக்கும் கதவு அகலத் திறந்தே இருக்கும்”  (The Gita is the universal mother. She turns away nobody. Her door is wide open to anyone who knocks.) என்று உளத்தின் ஆழத்திலிருந்து வந்த வார்த்தைகளால் அவர் கீதையின் பெருமையைச் சுட்டிக் காட்டுகிறார்.

ஸ்வாமி விவேகானந்தர் பாரதநாடெங்கும் சுற்றுப் ப்யணம் செய்யும் போதும் வெளி நாட்டிற்குச் சென்ற போதும் அவர் கையில் உடன் எடுத்துச் சென்றது கீதையே.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தன்னுடன் இறுதி வரை வைத்திருந்தது பகவத் கீதையே.

 

 

கீதையைத் தினமும் படித்து வர வேண்டும் என்பது ஸ்வாமி விவேகானந்தரின் கட்டளை.

 

ஆதி சங்கரரோ பகவத் கீதா கிஞ்சித் தீதா என்று பகவத் கீதையைக் கொஞ்சமாவது படித்தவனுக்கு யம பயம் இல்லை, ஆண்டவனின் அனுக்ரஹம் உண்டு என்று பஜகோவிதத்தில் உறுதி பட அருளியிருக்கிறார்.

 

தினமும் கீதையைப் படிக்கும் போது தோன்றும் சந்தேகங்கள் பல. அவற்றை உரிய ஆசார்யர்களிடம் தெளிவு படுத்திக் கொண்டால் உத்வேகம் பிறக்கும். கீதை காட்டும் பாதையை நன்கு உணரவும் முடியும்.

sringeri 14a

sringeri Sharda Peetham temple to the right and the vidyashankara temple in sringeri. credit T. NARAYAN

 

ஸ்ரீ சந்திரசேகர பாரதி மஹா ஆசார்யாள்

 

ஆதி சங்கரர் ஸ்தாபித்த சிருங்கேரி பீடம் சரஸ்வதி அன்றாடம் நர்த்தனம் ஆடும் ஞான பீடம் என்பதை அனைவரும் அறிவர். அந்த பீடத்தை அலங்கரிக்கும் ஆசார்யர்களோ வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் கரை கண்டவர்கள். கீதையை வாழ்ந்து காட்டுபவர்கள்.

 

 

34வது பீடாதிபதியாக சிருங்கேரி பீடத்தை அலங்கரித்த அவதார புருஷர் ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஆவார். (1892’1954).இவரது சரித்திரம் அற்புதமானது. அதிசயிக்க வைக்கும் ஒன்று!

சதாசிவ ப்ரம்மேந்திரர் போல இடைவிடாது ஒவ்வொரு கணமும் இறையுணர்வில் உன்மத்தம் பிடித்தது போல அவர் வாழ்ந்தது பலரையும் திகைப்படைய வைத்தது.

 

 

அவரது ஞான நிலையைச் சற்றும் அறியாத அரசாங்கம் உண்மை நிலையைக் கண்டறிந்து வருமாறு டாக்டர் எம்.வி.கோவிந்தசாமி என்ற மருத்துவரை அனுப்பியது.

 

 

சிறந்த உளவியல் நிபுணரான அவர்  ஒரு வாரம் தங்கியிருந்து தேவையான தகவல்களைச் சேகரித்தார். ஆனால் ஆசார்யரைப் பற்றி என்ன  முடிவெடுப்பது என்பது அவருக்கு புலப்படவில்லை. தான் கிளம்ப வேண்டியதற்கு  முந்தைய தினம் ஆசார்யர் ‘அந்தர்முக’ நிலையிலிருந்து வெளி வந்து விட்டார் என்று கேள்விப்பட்டு அவரது தரிசனத்திற்காக வந்து ஆசி பெற வரிசையில் நின்றார்.

 

அவரைப் பார்த்த ஆசார்யாள்,”அதற்குள் ஏன் கிளம்ப வேண்டும்? வ்ந்த வேலையை இன்னும் நீங்கள் முடிக்கவில்லையே!” என்றார்.

 

 

திகைத்துப் போன டாக்டர் குழப்பத்துடன் மௌனமாக நின்றார்.

“என்னை சோதிக்கும் படி கொடுத்த வேலையை முடித்து விட்டீர்களா? என்னுடைய வியாதி உங்களுக்குத் தெரிந்த மருந்துகளினால் குணப்படுத்தக்கூடியது தானா?” என்று ஆசார்யாள் வினவினார்.

 

 

டாக்டருக்குத் தூக்கிவாரிப் போட்டது. டாக்டர் சேகரித்த தகவல்களை நினைவுபடுத்தும் வண்ணம் அடுத்தாற்போல ஆசார்யாள், “என்ன செய்வது! இது என் பிராரப்தம். இப்படித் தான் இருக்க வேண்டும். இதற்கு உங்களால் என்ன செய்ய முடியும்?” என்றார்.

 

 

கண்களில் நீர் மல்க விடை பெற்றுக் கொண்ட டாக்டர் அரசாங்கத்திற்கு தன் அறிக்கையில், ‘ஆசார்யாளின் நிலை மருத்துவ சோதனைகளுக்கு அப்பாற்பட்ட உயரிய நிலை’,. என்று குறிப்பிட்டார். அதுவரை நாத்திகராக இருந்த அவர் ஆத்திகராகவும் மாறி விட்டார்.

 

sathyamurthy

சத்தியமூர்த்தியின் சந்தேகங்கள்

 

மைசூர் ராஜ்யத்தில் பருவமழை பொய்த்துப் போக அனைவரும் ஆசார்யரை வேண்ட அவர் அருளினால் பெய்யோ பெய்யென்று  மழை கொட்டித் தீர்த்தது. அண்டை ராஜ்யமாக அமைந்த மதராஸ் பிராந்தியமும் பயனடைந்தது.

 

 

இதையெல்லாம் உணர்ந்த தேசபக்தரான தீரர் சத்தியமூர்த்தி ஆசார்யரைச் சந்தித்து நன்றி தெரிவித்து தன் மரியாதையைச் செலுத்தினார்.

 

அவரை உட்கார்த்தி வைத்த ஆசார்யார் கீதையின் பெருமையையும் அதன் ஆழ்ந்த அர்த்தத்தையும் விளக்கலானார். சத்தியமூர்த்தி கட்டாயமாக திரும்பிச் செல்ல வேண்டிய

ஷிமோகா செல்லும் பஸ் நேரமும் தாண்டியது. “நாளை போகலாம்” என்று கட்டளையிட்டு விட்டார் ஆசார்யர்.

பின்னால் தான் தெரிந்தது அந்த பஸ் பெரும் விபத்துக்குள்ளானது என்று!

 

சத்தியமூர்த்தி ஆசார்யரின் சம்பாஷணையால் திகைத்துப் போனார். ஏனெனில் அவர் கீதையை தினமும் படிப்பவர். அதில் தனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை குறித்து வைத்துக் கொண்டு வந்திருந்தார். அவற்றை ஆசார்யரிட்ம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும் என்பது அவரது எண்ணம்,

 

 

ஆனால் அவர் அதைச் சொல்லாத போதே அதற்கான சந்தேக விளக்கங்களை ஒன்றன் பின் ஒன்றாக ஆசார்ய்ர் தன் உரையில் சொல்லி விட்டார்.

 

 

இதைச் சத்தியமூர்த்தி நாத் தழுதழுக்க சொல்ல ‘என்ன சந்தேகங்கள், நான் என்ன விளக்கம் சொன்னேன்’ என்றார் ஆசார்யர்.

 

 

சத்தியமூர்த்தியின் மனதில் எழுந்த சந்தேகங்களும் அதற்கு ஆசார்யரின் விளக்கமும் எந்த ஒரு கீதை பக்தரையும் மகிழச் செய்யும். அவற்றில் சில:

 

  • அர்ஜுனன் கர்மயோகத்தைச் செய்ய வேண்டியவன். போர் புரியும் தருணத்தில் கர்ம யோகத்தை மேற்கொள்ள வேண்டிய அவனிடம் கண்ணபிரான் ஏன் சாங்கிய யோகத்தையும் சந்நியாச தர்மத்தையும் கூறினார். அவசியமே இல்லையே

 

பதில்: கீதை அர்ஜுனனுக்காக மட்டும் சொல்லப்படவில்லை.அவனை முன் வைத்து உலக மக்கள் அனைவருக்கும் சொல்ல வேண்டியதை கண்ணன் எடுத்துரைத்தார்.

  • கர்மண்யேவாதிகாரஸ்தே (கர்மம் செய்வதில் தான் உனக்கு அதிகாரம் இருக்கிறது கீதை 2-47) என்றும் ஸ்வகர்மணா த்வமர்ப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மானவ (பரம்பொருளைத் தம் கட்மையைச் செய்தலென்ற பூஜையினால் மகிழ்ச்சிபெறச் செய்து சித்தி பெறுகிறான் கீதை 18-46) என்றும் கூறி கர்மாக்களால் தான் மோக்ஷ பலன்கள் கிடைக்கும் என்று கூறிய பகவானே ‘ஸர்வ தர்மான பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ’ (எல்லா தர்மங்களையும் துறந்து விட்டு என் ஒருவனையே சரண் அடை கீதை 18-66) என்று சொல்வது முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறதே

 

பதில் : முன்பு சொன்ன அதிகாரி பேதம் என்ற காரணமே இங்கும் பொருந்தும். ஸித்தி என்பதை சித்த சுத்தி என்று வைத்துக் கொண்டால் அது கர்மங்களைச் செய்பவருக்கு என்று ஆகும். சர்வதர்மான் பரித்யஜ்ய (எல்லா தர்மங்களையும் துறத்தல்) என்றால் அது ஞானாதிகாரிக்கான விஷயமாக ஆகி விடும்.

  • முதல் அத்தியாயத்தில் அர்ஜுனனின் விஷாதம் (துக்கம்) சொல்லப்பட்டிருக்கும் போது இறுதியில் தத்ர ஸ்ரீர் விஜயோ பூதி (அங்கு ஸ்ரீ என்னும் லக்ஷ்மி,ஜயம்,நீதியும் நிலைத்திருக்கும் கீதை 18-78), என்று சொல்லப்படுகிறது.. ஆரம்பம் முடிவுடன் பொருந்தவில்லையே!

 

பதில் : கீதையின் முதல் அத்தியாயம் ஒரு அறிமுக முகவுரை தான். இரண்டாவது அத்தியாயத்தில் அஸோஸ்யானஸ்ய சோகஸ்த்வம் (வருந்தத் தகாதவர்களைப் பற்றி நீ வருந்துகிறாய் கீதை 2-11) என்பதில் தான் கீதா சாஸ்திரம் துவங்குகிறது. அஹம் த்வாம் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸுச:” (உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்; வருந்தாதே கீதை 18-66) என்பதுடன் கீதை  முடிகிறது. அஸோஸ்யானய (வருந்தத் தகாதவர்கள்) என்று ஆரம்பித்து மாஸுச (வருந்தாதே) என்று முடிவதால் ஆரம்பமும் முடிவும் அற்புதமாகப் பொருந்தி வருவது தெளிவாக விளங்குகிறது.

 

 

கேள்வி: இப்படி எடுத்துக் கொண்டால் அர்ஜுனனைப் பார்த்து நீ என்றும் உன்னை என்றும் கூறுவதால் அது அர்ஜுனனுக்கு மட்டும் தானே பொருந்தும். மற்றவர்களுக்கு கீதோபதேசம் இல்லையா? அது அர்ஜுனனுக்கு மட்டும் தானா?

பதில் : அர்ஜுனன் என்ற பதத்திற்கு அமரகோசத்தில் வெளுப்பானவன்,பரிசுத்தன், சித்த சுத்தி உடையவன் என்று அர்த்தங்கள் கூறப்படுகிறது. முக்கிய்மானவ்னை முன்னிலைப்படுத்திச் செய்வதே உபதேசம். ஆகவே அர்ஜுன பதத்தின் அர்த்தத்துட்ன் பொருந்தும் அனைவருக்கும் இது பொருந்தும்.

 

 

இப்படி ஒவ்வொரு கேள்வியாக சத்தியமூர்த்தி கூறி அதற்கான பதிலைப் பெற்றதையும் மகிழ்ச்சியுடன் கூறினார்.

அங்கு குழுமியிருந்த அனைவரும் இந்த உரையினால் கிருஷண – அர்ஜுன சம்வாதத்தை நேரில் கேட்டது போல மகிழ்ந்தனர்.

 

 

காலத்தை வென்ற கீதையை அனுதினமும் ஒதி வந்தால் அர்த்தமும் புரியும்; அனுக்ரஹமும் கிடைக்கும்!

*************