ஞயம்பட உரை; வெட்டெனப் பேசேல்; பழிப்பன பகரேல் (Post No.3114)

talking 3

Written by London Swaminathan

 

Date: 2 September 2016

 

Time uploaded in London: 13-33

 

Post No.3114

 

Pictures are taken from various sources; thanks.

 

 

நாவடக்கம் பற்றி இந்தியப் புலவர்கள், அதிலும் குறிப்பாகத் தமிழ்ப் புலவர்கள், சொன்ன அளவுக்கு வேறு யாரும் சொல்லி இருப்பார்களா என்பது சந்தேகமே. தமிழர்கள் அதிகம் பேசக்கூடியர்கள், அளவில்லாமல் — அளவு தெரியாமல் —பேசக்கூடியவர்கள் என்பது வள்ளுவனுக்கும் அவ் வையாருக்கும் தெரிந்திருக்கிறது. ஆகையால் அவர்களும் எப்படிப் பேச வேண்டும்? எப்படிப் பேசக்கூடாது? என்பதை பல வகைகளில் சொல்லிவிட்டனர்.

 

 

 

முதலில் ஒரு சம்ஸ்கிருதப் புலவர் சொன்னதைப் பார்ப்போம். அதை அவ்வை, வள்ளுவன் சொன்னதோடு ஒப்பிட்டு மகிழ்வோம்:

 

ஜிஹ்வாக்ரே வர்ததே லக்ஷ்மீர் ஜிஹ்வாக்ரே மித்ர பாந்தவா:

ஜிஹ்வாக்ரே பந்தனப் ப்ராப்தி: ஜிஹ்வாக்ரே மரணம் த்ருவம்

 

 

பொருள்:

நாக்கின் நுனியில்தான் லட்சுமி வசிக்கிறாள்;  (செல்வம் என்பது நீங்கள் பேசும் விதத்தில்தான் இருக்கிறது.)

நாக்கின் நுனியில்தான் நண்பர்களும் உறவினர்களும் இருக்கிறார்கள்; (அதாவது நீங்கள் இனிய சொல் சொல்லாமல், கடுஞ்சொற்களைப் பேசினால், அதோடு நண்பர்கள், சொந்தக்காரர்களின் கூடாரம் காலியாகிவிடும்).

 

நாக்கின் நுனியில்தான் சிறைச் சாலையும் இருக்கிறது. (எத்தனை பேர் அவதூறு வழக்குகளினாலும், பொய் சொன்னதாலும், சிறைச் சாலைக்குப் போனார்கள் என்பதை பத்திரிக்கைகளில் படிக்கிறாம்; நுணலும் தன் வாயால் கெடும் என்பது தமிழ்ப் பழமொழி; அதாவது தவளைகள் சப்தம் போட்டு, தான் இருக்கும் இடத்தைக் காட்டுவதால் பாம்புக்கு இரையாகின்றன).

நாவின் நுனியில்தான் மரணம் நிற்கிறது என்பது ஸ்லோகத்தின் கடைசி வரி. மேற்கூறிய மூன்றில் எதுவும் மரணத்தையும் சம்பவிக்கலாம்.

talking 4

இதனால்தான்

ஞயம்பட உரை,

வெட்டெனப் பேசேல்,

 பழிப்பன பகரேல்,

பிழைபடச் சொல்லேல்,

மிகைபடச் சொல்லேல்

வஞ்சகம் பேசேல்

கடிவதுமற

சுளிக்கச் சொல்லேல்

நொய்யவுரையேல்

மொழிவதறமொழி

 

என்றெலாம் அவ்வையார் கதறுகிறார்.

 

வள்ளுவனோ “யாகாவாராயினும் நா காக்க” (127) என்கிறான். இனிய சொல் இருக்கும்போது சுடு சொற்களைப் பயிலுவது, பழம் இருக்கையில் காயை  சாப்பிட்டதற்கு சமம் என்கிறான்

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று (100)

 

வள்ளுவன்,

இனியவை கூறல்

புறங்கூறாமை

பயனில சொல்லாமை

சொல்வன்மை

என்று 4 அதிகாரங்களில் 40 திருக்குறள்களில் இதை வலியுறுத்திவிட்டான்.

 

 

Yelling

இறுதியாக மனு சொன்னதையும் பார்ப்போம்:-

 

சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயான்ன ப்ரூயாத்சத்யமப்ரியம்

 

ப்ரியம் ச நான்ருதம் ப்ரூயாதேஷ தர்ம சநாதன: — மனுஸ்ம்ருதி 4-138

 

 

 

உண்மையே பேசு,

இனிமையே பேசு,

இனிமையற்றதை, உண்மையே ஆனாலும், சொல்லாதே.

அதற்காக இனியது என்று கருதி பொய் பேசாதே.

 

இதுவே எக்காலத்துக்கும் பொருந்தும் சநாதன தர்மம் (இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடு) – மனுஸ்மிருதி 4-138

 

–subham–