1324 திருப்புகழ் பாடல்களில் 857 சந்தங்கள்! (Post No.5388)

WRITTEN BY S NAGARAJAN

Date: 3  SEPTEMBER 2018

 

Time uploaded in London – 7-29 AM (British Summer Time)

 

Post No. 5388

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

1324 திருப்புகழ் பாடல்களில் 857 சந்தங்கள்! 178 தாள அமைப்புகள்!

 

ச.நாகராஜன்

 

அருணகிரிநாதர் இயற்றி அருளியுள்ள திருப்புகழ் பாடல்களின் எண்ணிக்கை 16000 என வரகவி மார்க்க சகாய தேவர் தனது பாடலில்,

 

“எம் அருணகிரி நாதர் ஓது பதினாயிரத் திருப்புகழழ் அமுதுமே” என்ற வாக்கால் கூறியுள்ளார்.

திருப்புகழ்ச் சிறப்புப் பாயிரம் பாடல்களில் ஒன்று இதை வலியுறுத்துகிறது :

 

அருணகிரி நாதர்பதி னாறா யிரமென்

றுரைசெய் திருப்புகழை யோதீர் – பரகதிக்கஃ

தேணி யருட்கடலுக் கேற்றம் மனத்தளர்ச்சிக்

காணி பிறவிக் கரம்

பதினாயிரம் திருப்புகழை ஓதி உணர்ந்தால், அது

பரகதிக்கு ஏணி

அருள் கடலுக்கு ஏற்றம்

மனத்தளர்ச்சிக்கு ஆணி

பிறவிக்கு அரம்.

அருணகிரிநாதரே திருப்புகழின் மஹிமையை இப்படி கூறியுள்ளார்:

 

சந்தம்

தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்

தனத்தன தனத்தம் …… தனதான

பாடல்

 

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்

செகுத்தவர் ருயிர்க்குஞ் …… சினமாகச்

 

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

திருப்புகழ் நெருப்பென் …… றறிவோம்யாம்

 

நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்

நிசிக்கரு வறுக்கும் …… பிறவாமல்

 

நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்

நிறைப்புக ழுரைக்குஞ் …… செயல்தாராய்

 

தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்

தகுத்தகு தகுத்தந் …… தனபேரி

 

தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்

தளத்துட னடக்குங் …… கொடுசூரர்

 

சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்

சிரித்தெரி கொளுத்துங் …… கதிர்வேலா

 

தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்

திருத்தணி யிருக்கும் …… பெருமாளே.

 

ஆம்,   சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

திருப்புகழ் நெருப்பு.

 

திருப்புகழ் நினைத்ததும் அளிக்கும்; மனத்தையும் உருக்கும்;

நிசிக் கருவறுக்கும் – பிறவாமல்

 

நெருப்பையும் எரிக்கும்;  பொருப்பையும் இடிக்கும்

நிறைப்புகழே திருப்புகழ்!

 

இது அருணகிரிநாதர் திருத்தணிகையில் அருளிய திருப்புகழ் வாக்கு.

கண்ட கண்ட ஆராய்ச்சிகளையெல்லாம் செய்யும் தமிழுலகில் உருப்படியான ஆராய்ச்சியைச் செய்துள்ளவர் முனைவர் திருமதி இ.அங்கயற்கண்ணி. திருப்புகழ் பாடல்களில் சந்தக் கூறுகள் பற்றி ஆய்வு செய்து சென்னை பல்கலைக் கழகத்தில் பி.ஹெச்.டி பட்டத்தை  பெற்றுள்ளார்.

 

திருப்புகழிசை என்ற நூலில் முதல் முயற்சியாக 51 திருப்புகழ் பாடல்களுக்கு சந்த அமைப்பிக்கேற்றவாறு தாளங்கள் அமைத்து  அவற்றிற்குச் சுரதாளக் குறிப்புகளையும் தந்துள்ளார்.

போற்றப்பட வேண்டிய பெரிய முயற்சி. அரிய முயற்சி. வெற்றிகரமான முயற்சி.

திருப்புகழ் அமைப்பைப் பற்றித் தன் அரிய ஆராய்ச்சியின் வாயிலாக இவர் தரும் ஆய்வுத் தகவலில் ஒரு பகுதி இதோ:

 

 

“ திருப்புகழ்ப் பாடல்கள் கிருதி, கீர்த்தனை, பதம், ஜாவளி போன்ற இசை உருப்படிகளின் அமைப்பைப் போன்றல்லாது, பெரும்பான்மையான பாடல்கள் எட்டுப் பிரிவுகளைக் கொண்டதாக அமையக் காண்கிறோம். ஒரு குறிப்பிட்ட தலத்தில் உறையும் முருகப் பெருமானை எட்டுப் பிரிவுகளில் புகழ்ந்து பாடப்பெறும் “பதிக” மரபினை இதில் காண முடிகிறது. இதைக் கண்டிகை என்றும், சரணங்கள் என்றும் கூறலாம். சாதாரணமாக, ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு வரிகள், மூன்று வரிகள் அமைந்துள்ளன. சில பாடல்களில் ஒவ்வொரு பிரிவிலும் ஆறு, ஒன்பது மற்றும் 12 வரிகள் அமைந்துள்ளன.

 

 

சான்றுகள் :

விட மடைசு வேலை (4) ஒரு பிரிவில் இரண்டு வரிகள்

உனைத்தினந் தொழுதிலன் (7) ஒரு பிரிவில் மூன்று வரிகள்

சகடத்திற் குழையிட்டெற்றி (146) ஒரு பிரிவில் ஆறு வரிகள்

இதமுறு விரைபுனல் (353) ஒரு பிரிவில் ஒன்பது வரிகள்

விந்துப் புளகித (559) ஒரு பிரிவில் பன்னிரெண்டு வரிகள்

 

எட்டு வரி மற்றும் நான்கு வரிகளைக் கொண்ட சிறிய பாடல்களும் காண முடிகின்றது.

 

 

சான்றுகள் :

சந்ததம் பந்தத் (15)   – எட்டு வரிப்பாடல்

காலனிடத் தணுகாதே (388)  – நான்கு வரிப்பாடல்

 

திருப்புகழ்ப் பாடல்களில் ஒவ்வொரு பிரிவும் ஒரு குறிப்பிட்ட சந்தம் மூன்று முறை ஒரே சீராக மடங்கி வந்து இறுதியில், “தன தானா” என்னும் சந்த அமைப்புடைய தனிச் சொல்லுடன் முடிவுறுவதாக விளங்குகின்றது. இஃது தங்கப்பதக்கத்தில் அமைந்த ஒரு மதாணியைப் போல் விளங்குகின்றது. இசைமரபில் “தொங்கல்” என வழங்கப்படும்.

 

 

திருப்புகழ்ப் பாடல்களின் தனிப்பட்ட சிறப்பிற்கு ‘தொங்கல்’ என்னும் இவ்வமைப்பே காரணமாகும். இவ்வாறான தொங்கலே திருப்புகழை மற்ற இசை இலக்கியப் பாடல்களினின்றும் வேறுபடுத்திக் காட்டுகின்றது. இந்தத் தொங்கல் காணப்படும் இடத்தை வைத்தே பாடல்களில் பிரிவுகள் கணக்கிடப்படுகின்றன. அவ்வாறு கணக்கிடும்போது திருப்புகழில் எட்டுப் பிரிவுகளே வருகின்றன. பெரும்பான்மையான பாடல்கள், “பெருமாளே” என்ற தொங்கலுடன் முடிவுறுகின்றன.”

 

அடுத்து திருப்புகழில் உள்ள சந்த அமைப்புகளையும் தாள வகைகளையும் நுணுகி ஆராயும் அம்மையார் அங்கயற்கண்ணி தன் முடிவாகக் கூறுவது இது தான்:

“ இவ்வாறு திருப்புகழ்ப் பாடல்களை தாள இலக்கணத்தோடு தொடர்புபடுத்தி, ஆராய்ந்ததன் மூலம் மொத்தமாக 857 சந்தங்களும் அவற்றிலிருந்து 178 தாள அமைப்புகளும் கிடைத்துள்ளன.”

 

அருமையான இந்தத் தகவலை இவரது ஆய்வு தந்து விட்டது.

நமக்குக் கிடைத்துள்ள 1324 பாடல்களில் 857 சந்த பேதம்; 16000 பாடல்களும் கிடைத்திருந்தால்….!!

 

தமிழுக்குத் தனியொரு பெருமையைத் தருவது திருப்புகழ்; பொருளாலும் சந்த அமைப்பினாலும், தாள வகைகளாலும், எல்லாவற்றிற்கும் மேலாக வெற்றிக் குமரனைத் தொழும் பக்தி அநுபூதியைத் தருவதாலும் திருப்புகழுக்கு ஈடு இணை இல்லை!

 

வேதம் வேண்டாம் சகல வித்தை வேண்டாம் கீத

நாதம் வேண்டாம் ஞான நூல் வேண்டாம் – ஆதி

குருப்புகழை மேவுகின்ற கொற்றவன் தாள் போற்றுந்

திருப்புகழைக் கேளீ ர் தினம்!

 

****

 

குறிப்பு: திருப்புகழிசை என்ற நூல் 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கிறது. 160 பக்கங்கள் கொண்ட இந்த நூலைப் பற்றி தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு எழுதித் தெரிந்து கொள்ளலாம்.

பாடல்களில் பிராக்கட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள எண்கள் பாடலின் எண்ணாகும்.

 

–subahm–