வள்ளுவனும் கண்ணனும் அப்பரும் சொன்ன எட்டாம் நம்பர்! (Post No.4672)

WRITTEN by London Swaminathan 

 

Date: 28 JANUARY 2018

 

Time uploaded in London – 7-17 am

 

Post No. 4672

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
(என் வாசகர்கள் தமிழர்கள்; அதாவது நல்லவர்கள்; எல்லோரும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவர். ஆகையால் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

 

எட்டு என்ற எண், ஆன்மீக உலகில் சிறப்படைந்து காணப்படுகிறது. வள்ளுவன் முதல் பல தத்துவ ஞானிகள் இதைப் பயன்படுத்துகின்றனர். ஏன்?

 

பிறந்த தேதி எட்டாம் எண் உடையவர்கள் மிகவும் கஷ்டப் படுவார்கள் அல்லது ஆன்மீகத்தில் சிறந்து நிற்பார்கள். ஏனெனில் இது தன்னம்பிக்கை (Self Confidence), நிலைத்த (Stability) தன்மையின் சின்னம். மேலும் சனைச்சரனுக்கு (சனிக் கிரஹம்) உரிய எண்.

கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்தில் வள்ளுவன் செப்புவான்,

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை   (9)

 

பொருள் என்ன?

 

ஒருவனுக்கு ஐந்து புலன்கள் இருந்தாலும் அவை அதனதன் வேலையைச் செய்யாவிடில் பயன் இல்லை. அது போல தலை என்னும் உறுப்பு எவ்வளவு சிறந்து இருந்தும், எட்டு வகையான குணங்களை உடைய இறைவனின் திருப்பாதங்களில் பணிந்து வணங்கவில்லை என்றால் பயன் இல்லை.

 

இதில் வள்ளுவன், இறைவனுக்கு எட்டு குணங்கள் இருப்பதாக இயம்புவான். இது சைவ திருமுறைகளில் சிவ பெருமானுக்குச் சூட்டப்படும் அடைமொழி. அப்பர், சுந்தரர்  தேவாரத்திலும் காணலாம்.

 

 

இதற்குத் திருக்குறள் உரைகளில் காணப்படும் விளக்கம் பின்வருமாறு:

 

எட்டு குணங்கள் யாவை?

தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பில்லாத இன்பம் உடைமை என்று சைவாகமத்துக் கூறப்பட்டது. ஸம்ஸ்க்ருதத்தில் இவைகளை சுதந்தரத்துவம், விசுத்த தேகம், நிராமயான்மா, சர்வக்ஞத்துவம், அநாதிபேதம், அநுபதசக்தி, அநந்தசக்தி, திருப்தி என்று கூறுவர்.

 

இன்னொரு விளக்கம் அஷ்டமா சித்திகள் என்றும் கூறும்; அவை அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசிதை, வசிதை என்னும் எட்டுவகைச் சித்திகள். இதை கி.வா.ஜகந்நாதன் எழுதிய திருக்குறள் ஆய்வுரையில் காணலாம்.

 

பரிதியார் உரையில் கூறுவதாவது: எட்டு குணங்கள் உடைய சிவனின்

சிவந்த தாளை வணங்காத் தலை, சித்திரத்தில் எழுதிய மரப்பாவைக்கு நிகராம். எட்டுக் குணமாவன: அநந்த ஞானம்,  அநந்த வீரியம், அநந்த குணம், அநந்த தரிசனம், நாமம் இன்மை, கோத்திரம் இன்மை, அவா இன்மை, அழியா இயல்பு என்பன. சிலப்பதிகாரத்தில் (நாடு காண் காதை) சமண நாமாவளியில் எண்குணங்கள் யாவை என்று அரும்பதவுரை ஆசிரியர் கூறியது இது.

 

 

சிலப்பதிகாரத்தில், பண்ணவன் எண்குணன் (நாடு காண் காதை)

என்று இளங்கோ அடிகளும் பகர்வதை சமணர் சொல்லும் எட்டு குணங்கள் என்பர் சிலர்.

 

அப்பர் தேவாரத்தில் பல இடங்களில் சிவ பெருமானை எட்டு குணம் உடையவர் என்பார்:

எட்டு கொலாமவர் ஈறில் பெருங்குணம்

குணங்கள்தோள் எட்டு மூர்த்தி

கலை ஞானிகள் காதல் எண் குணவன்காண்

எட்டு வான்குணத் தீசனெம்மான்

 

(அப்பர் விடந்தீர்த்த.8, வன்னியூர் 7, தென்குரங்கு 4, இடைமருது 4) பாடல்களில் இவற்றைக் காணலாம்.

 

திருவள்ளுவருக்கு உருவ வழிபாடு உடம்பாடு என்பது இதனால் புலப்படும் என்றும் உரைகாரர்கள் புகல்வர்.

புத்தர் பெருமான்:–

 

புத்தர் பெருமான், இறை வழிபாடு பற்றி யாதும் செப்பாமல் எட்டு வகைக் குணங்கள் இருந்தால் போதும் என்று செப்பிச் சென்றார்.

 

அவையாவன:

நல்ல எண்ணம், நல்ல நம்பிக்கை, நல்ல பேச்சு, நல்ல செயல்,

நல்ல வாழ்க்கை, நல்ல முயற்சிநல்ல சிந்தனைநல்ல நோக்கம்

 

 

சீன தத்துவ ஞானி கன்பூசியஸ், ஜப்பானிய சாமுராய் வீரகள் ஆகியோரும் எட்டு குணங்கள் பற்றி விதந்தோதுகின்றனர்.

 

சீன தத்துவ ஞானி கன்பூசியஸ்:–

 

அன்புடைமை, அறம், மரியாதை, ஞானம், உறவினரிடத்தில் நம்பிக்கையைக் காப்பாற்றுதல், விசுவாசம், பெற்றோரிடத்தில் அன்பு பாராட்டல், பெரியோர்களை மதித்தல்

 

ஏற்த் தாழ இதே கொள்கைகளை சில மாறுதல்ளுடன் ஜப்பானிய சாமுராய் வீரர்களும் ஏற்றனர்.

 

கண்ணன் செப்பிய எட்டு:–

இவர்கள் எல்லோருக்கும் முன்னதாக கிருஷ்ண பரமாத்மா, பகவத் கீதையில் பகன்ற எட்டு குணம் பின்வருமாறு:–

பூமிராபோ அனலோ வாயுஹு கம் மனோ புத்திரேவ ச

அஹங்கார இதீயம் மே பின்னா ப்ரக்ருதிரஷ்டதா

 

நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம், மனம், புத்தி, அஹங்காரம் இப்படி எட்டு விதமாக என் பிரக்ருதி பிரிவு பட்டிருக்கிறது (கீதை 7-4)

 

இது பற்றி ராமகிருஷ்ண மடம் அண்ணா எழுதிய பகவத் கீதை பேருரையில் விளக்குவார்:

அஹங்காரமே பின்னர் புத்தியாகவும் மனதாவும் பரிணமிகும். அதன் பின் ஒன்றன் பின் ஒன்றாக ஆகாயம், வாயு, தேயு (அக்னி), அப்பு (ஜலம்), ப்ருத்வீ (மண்) இவற்றின் சிருஷ்டி (தைத்ரீய உபநிஷத் 2-1) எல்லாப் பிரவ்ருத்திக்கும் அஹங்காரமே மூல காரணம். இங்கு குறிப்பிட்ட மண் முதலிய பஞ்ச பூதங்கள் ஸூக்ஷ்மத் தன்மாத்திரைகளைக் குறிப்பன., ஸ்தூலமான பொருள்களையன்று.

மேலும் அண்ணா சங்கரரின் ஒரு மேற்கோளையும் எடுத்தாளுகிறார்:-

அந்தக் கரணம் என்பது என்ன?

மனது புத்தி சித்தம் அஹங்காரம் – இந்நான்கினையும் அந்தக் கரணம் என்பர். மனதின் ஸ்தானம் கழுத்து, அதன் வேலை சந்தேகித்தல்; புத்தியின் ஸ்தானம் முகம், வேலை- நிச்சயம்; அஹங்காரத்தின் ஸ்தானம் இருதயம், வேலை- அபிமானம்; சித்தம் புத்தியுடனும், அஹங்காரத்துடனும்,மனத்துடனும் சேரும் (சங்கர- ஆத்மனாத்ம விவேகம்)

 

ஆக, எட்டு என்ற எண் மஹாபாரத காலத்தில் இருந்து, அப்பர் காலம் வரை ஆன்மீகத்தில் பயன்பட்டு வந்து இருக்கிறது.

 

எண்குணத்தான் அருள் பெறுவோமாக!

TAGS:– எட்டு எண், ஆன்மீகத்தில், புத்தர், கன்பூசியஸ், சமணர், சாமுராய், கீதை, குறள்

–subham–

இளங்கோ அடிகள் சமணரா? பிராமணரா?

ilango adigal

ஆராய்ச்சிக் கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:— 1199; தேதி 28 ஜூலை 2014.

எல்லோரும் ஏற்றுக் கொண்ட ஒரு விஷயத்தை மறுதலித்து காரசாரமான விவாதத்தைத் தோற்றுவிப்பதோ, இதன் மூலம் பிஎச்.டி பட்டம் பெறுவதோ என் நோக்கம் அல்ல. சிலப்பதிகாரம் என்னும் இளங்கோ அடிகளின் அற்புதமான காவியத்தை சிறு வயது முதலே படித்து ரசிப்பவன் நான். இப்போது திடீரென ஒரு உண்மை புலப்பட்டது. ஏராளமான இடங்களில் பிராமண கதா பாத்திரங்களை நுழைத்தும், அவர்களை வானளாவப் புகழ்வதும் எனக்கு பெரு வியப்பை ஏற்படுத்தியது. அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசை பற்றி அறையலுற்றேன்

எல்லோரும் நம்பும் கொள்கைகள்

1.சிலப்பதிகாரத்தை எழுதியவர் இளங்கோ. அவர் சேரன் செங்குட்டுவனின் சகோதரர். அவர் சமண மதத்தைத் தழுவினார்.
2.சிலப்பதிகாரம் இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த காவியம்.

நான் இதை மறுப்பதற்கான காரணங்கள்:
1.இளங்கோ என்பவர் இதனுடைய கருப்பொருளைக் கொடுத்திருக்கலாம். ஆயினும் காவியம் எழுந்தது இரண்டாம் நூற்றாண்டில் அல்ல. நிகழ்ச்சி நடந்தது இரண்டாம் நூற்றாண்டில்தான் என்பது மறுக்க முடியாத விஷயம். ஆனால் மொழி நடையும் காவியத்தில் காணப்படும் விஷயங்களும் சங்க காலத்துக்கு மிகவும் பிற்பட்டது. ‘அதிகாரம்’ — என்னும் சம்ஸ்கிருதச் சொல் வரும் திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் ஆகிய மூன்றும் நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் எழுந்தவை என்பது என் கணிப்பு. வேத, உபநிஷத நூல்களுக்கு மாக்ஸ்முல்லர் கையாண்ட உத்தியை நாம் இதற்கும் பின்பற்றலாம். மொழி மாற்றத்துக்கு அவர் 200 ஆண்டுகள் ஒதுக்கி வேதத்தின் காலத்தை கி.மு 1200 க்கு முந்தியது என்று சொன்னார்.

2. சிலப்பதிகாரம் இந்துமதக் கலைக் களஞ்சியம். ஒரு வேளை நாளைக்கே சம்ஸ்கிருதத்தில் உள்ள எல்லா நூல்களும் மறைந்து போனாலும், திருக்குறளும், சிலப்பதிகாரமும் இந்து மதத்தைக் காப்பாற்றும் அளவுக்கு அவற்றில் விஷயங்கள் உள்ளன.

3. சிலப்பதிகாரம் 95% இந்துமதமும், 4% சமண மதமும் 1% புத்த மதமும் உள்ள காவியம். இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் பிராமண ஆதிக்கம் மேலோங்கி இருப்பதாகும். காவியத்துக்குள் எங்குமே இளங்கோவின் சமயம் எது என்பது பிரஸ்தாபிக்கப் படவில்லை. சில உரை அசிரியர்கள் செவிவழிச் செய்தியை எழுதியதில் இப்படி ஒரு விஷயம் வந்தது. உரைகாரர்கள் சொன்ன எல்லாவற்றையும் எல்லோரும் ஏற்பதில்லை. ஆகையால் ஒதுக்கும் உரிமை எமக்குளது.

4.சமண மதத்தினரும் புத்த மதத்தினரும் தெய்வ நம்பிக்கை உடையவர்கள் அல்ல. அவற்றைத் தோற்றுவித்தவர்கள் தெய்வங்களைக் கும்பிடு என்றோ, வேதங்களை ஆதரி என்றோ எழுத மாட்டார்கள். ஆனால் இளங்கோவோ வரந்தரு காதையில் தன் கருத்துக்களை முன் வைக்கையில் தெய்வத்தைக் கும்பிடுங்கள் என்கிறார். (காண்க எனது சிலப்பதிகாரப் பொன்மொழிகள்). யாக யக்ஞங்களைப் போற்றுகிறார்.

5. சமண நாமாவளி, புத்த விஹாரம், சமணர் பள்ளிகளை இளங்கோ விதந்து ஓதி இருப்பதை மறுக்க முடியாது. இது அக்காலத்தில் பூம்புகாரில் நிலவிய உண்மை நிலையை உணர்த்த எழுதி இருக்கலாம். காவியத்தில் வரும் கவுந்தி அடிகள் என்ற சமணப் பெண் துறவி உண்மையிலேயே கோவலன், கண்ணகிக்கு உதவி செய்ததாலும் இப்படி எழுதி இருக்கலாம்.கதைப் போக்கை மாற்ற யாருக்கும் உரிமை இல்லையே!!

6. இனி இளங்கோ அடிகள் நுழைத்த பத்துப் பதினைந்து பிராமண கதா பாத்திரங்களையும் மதுரையை எரிக்கும்போது பிராமண ஜாதியினரை மட்டும் எரிக்காதே என்று அக்னி தேவனுக்கு கண்ணகி உத்தரவு போட்டதையும், இமயமலைக்குப் போனவுடன் செங்குட்டுவன், பிராமணர்களுடைய யாகங்களுக்கு எந்த ஊறும் செய்யக்கூடாது என்று படைகளுக்கு உத்தரவு போட்டதையும் ஒவ்வொன்றாகக் காண்போம். இவர் மட்டும் சமணராக இருந்திருந்தால் பிராமண என்னும் இடத்தில் எல்லாம் ஸ்ரமண (சமண) என்று நுழைத்திருப்பார்.

kannagi

7. சிலப்பதிகாரத்தில் வரும் பிராமணர்கள்:
1)மா முதுபார்ப்பான் மறைவழி காட்டிட கண்ணகி கல்யாணம்
2)தெய்வ மால்வரைத் திருமுனி அருள (அகத்தியர், பிராமணர்)
3)தூய மறையோன் பாசண்டச் சாத்தன்
4)தேவந்தி என்னும் பார்ப்பனி
5)வழிகாட்டும் மாமுது மறையோன் (காடுகாண் காதை)
6)கோசிகன் (கௌசிகன்) தூது
7)நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை மாமறை முதல்வன் மாடலன்
8) வளைந்த யாக்கை மறையோன் தன்னை- யானையிடமிந்து கோவலன் காப்பாற்றிய பிராமணன்
9) கீரிப்பிள்ளை- பார்ப்பனி கதை/ கோவலன் சம்ஸ்கிருதக் கடிதத்தைப் படித்து உதவி
10) பார்ப்பன கோலத்தில் அக்னி பகவான்
11)பிராமணர்களை எரிக்காதே: கண்ணகி உத்தரவு
12)மறை நாஓசை அல்லது மணி நா ஓசை கேளா பாண்டியன்
13)பார்ப்பன கீரந்தை மனைவிக்கு பொற்கைப் பாண்டியன் உதவி
14)வலவைப் பார்ர்பான் பராசரன் வைத்த போட்டி
15)வார்த்திகன்/கார்த்திகை/தட்சிணாமூர்த்தி கதை
16)மாடனுக்கு துலாபாரம்: எடைக்கு எடை தங்கம்!!!
17)வடதிசை மருங்கின் மறைகாத்து ஓம்புநர்…போற்றிக்காமின்
18)சாக்கையர் (பிராமண நடனக் குழு) நடனம்
19)மாடலன் சொற்படி மாபெரும் வேள்வி
பிராமணர்களின் புகழும் சோழ நாட்டின் புகழும் சிலப்பதிகார காவியத்தில் தூக்கலாக இருகிறது. இளங்கோ பெயரில் எழுதியது சோழிய பிராமணனா?

((கட்டுரையின் இரண்டாம் பகுதியில் மேற்கண்ட 19 விஷயங்களையும் சுருக்கமாக வரைவேன்)

contact swami_48@yahoo.com
தொடர்பு முகவரி: சுவாமி_48 @ யாஹூ.காம்