கல்யாணம் கட்டாதே; முனிவர்கள் அறிவுரை; வள்ளுவர் எதிர்ப்புரை (Post No.4461)

கல்யாணம் கட்டாதே; முனிவர்கள் அறிவுரை; வள்ளுவர் எதிர்ப்புரை (Post No.4461)

 

Written by London Swaminathan 

 

Date: 5 DECEMBER 2017 

 

Time uploaded in London-  6–53 am

 

 

Post No. 4461

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

கல்யாணம் செய்யலாமா வேண்டாமா என்பதற்கு கிரேக்க நாட்டறிஞன் சாக்ரடீஸ் சொன்ன பதில் நமக்குத் தெரியும்:

 

“மகனே! வாய்ப்பு கிடைத்தால் விடாதே; கல்யாணம் கட்டு; நல்ல மனைவி வாய்த்தால் நீ சுகமாக இருப்பாய்; கெட்ட மனைவி கிடைத்தாலோ நீ (என்னைப் போல) தத்துவ ஞானி ஆகிவிடுவாய்; உலகமே பயனடையும்!”

 

இன்னொரு சாக்ரடீஸ் கதையும் உங்களுக்குத் தெரிந்ததே! சாக்ரடீஸ் வழக்கம்போல இளஞர்களைக் கண்டவுடன் கதைத்தார். இதைப் பிடிக்காத அவரது மனைவி மேல் மாடியிலிருந்து அவரைத் திட்டித் தீர்த்தாள்; அசராது, அலங்காது அவர்பாட்டுக்கு உபதேசத்தைத் தொடர்ந்தார். மேல் மாடியிலிருந்து அவரது மனைவி ஒரு வாளி தண்ணீரை எடுத்து அவர் தலையில் கொட்டினாள்; அவர் சொன்னார்: “இவ்வளவு நேரம் இடி இடித்தது; இப்போது மழை பெய்கிறது!”

 

 

வள்ளுவரும் மனுவும் திருமணம் செய்துகொள்; ஏனெனில் கிருஹஸ்தன் என்பவனே மற்ற மூவர்க்கும் உதவுபவன் ; ஆகையால் அவனுக்கு மற்ற மூவரை விட புண்ணியம் கிடைக்கும் என்கின்றனர். பிரம்மச்சாரி, வானப்ரஸ்தன், சந்யாசி ஆகிய மூவர்க்கும் சோறுபோட்டு ஆதரவு கொடுப்பவன் இல்வாழ்வான்தான் (கிரஹஸ்த) என்று செப்புவர் அவ்விருவரும்.

 

கண்ணகியும் சீதையும் ‘அடடா! இந்த மூவரையும் கவனிக்கும் வாய்பை இழந்துவிட்டோமே’ என்று புலம்புவதை சிலப்பதிகாரத்திலும் கம்பராமாயாணத்திலும் காண்கிறோம்.

 

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை (குறள் 41)

மனு புகல்வது யாது?

“மற்ற மூவர்க்கும் அறிவினாலும் உணவினாலும் ஆதரவு அளிப்பதால் மனை   வி யுடன் வாழ்பவனே மற்ற மூவரையும்விடச் சிறந்தவன்” என்பார் மனு (3-78)

 

இன்னும் பல இடங்களிலும் கிரஹஸ்தனே சிறந்தவன், மனைவியே குடும்ப விளக்கு என்கிறார் மனு.

 

ஆனால் நாலடியார் இயற்றிய சமண முனிவர்களோ நேர் மாறான கருத்தைக் கொண்டுள்ளனர். திருவள்ளுவர் சமணர் அல்ல என்பதற்குக் கொடுக்கப்படும் ஏராளமான ஆதாரங்களில் இதுவும் ஒன்று. அதாவது கல்யாணம் வேண்டுமா, வேண்டாமா என்னும் பட்டிமன்றத்தில் சமண முனிவர் கல்யாண எதிர்ப்பு கோஷ்டி; வள்ளுவனும் மனுவும் கல்யாண ஆதரவு கோஷ்டி!

 

கல்லால் அடித்துக்கொள்வதே திருமணம்

 

இதோ நாலடியார் பாடல்கள்:

 

கடியெனக் கேட்டும் கடியான் வெடிபட

ஆர்ப்பது கேட்டும் அது தெளியான் – பேர்த்துமோர்

இற்கொண்டு இனிதிரூஉம் ஏமுறுதல் என்பவே

கற்கொண்டு எறியும் தவறு – நாலடியார் 364

 

பொருள்:

கல்யாணம் கட்டாதே என்று பெரியோர் சொல்லக்கேட்டும் அதை ஏற்காமல், தலை வெடிக்கும்படி சாக்கொட்டு ஒலித்து, அதைக்கேட்டும், இல்வாழ்க்கை நிலை இல்லாதது என்பதை உணராதவனாய் மறுபடியும் ஒருத்தியை மணம்புரிந்து இன்புற்றிருக்கும் மயக்கம், ஒருவன் கல்லை எடுத்து தன் தலையிலேயே போட்டுக்கொண்டது போலாகும் என்பர் சான்றோர்.

 

திருமணம் என்பதே துன்பம்

 

மாண்ட குணத்தொடு மக்கட்பேறு இல்லெனினும்

பூண்டான் கழித்தற்கு அருமையால் — பூண்ட

மிடியென்னும் காரணத்தின் மேன்முறைக்கண்ணே

கடியென்றார் கற்றறிந்தார் — நாலடியார் 56

 

பொருள்:

நல்ல குணங்களும் புத்திரப்பேறு என்னும் பாக்கியமும் மனைவியிடம் இல்லாவிட்டாலும் கல்யாணம் செய்துகொண்ட புருஷன் அவளை விட்டுவிட முடியாது. எனவே திருமணம் என்பது ஒருவன் தானே வலிய ஏற்றுக்கொண்ட துன்பம் ஆகும். ஆகையால்தான் உயர்ந்த ஒழுக்க நூல்களைக் கற்றுணர்ந்த ஞானிகள் திருமணம் செய்து கொள்ளாதே என்றனர்.

 

ஆக, நாலடியார் இயற்றிய சமண முனிவர்கள் திருமண எதிர் கோஷ்டி; தீவிர இந்துக்களான திருவள்ளுவனும் மநுவும் திருமண ஆதரவு கோஷ்டி.

 

 

TAGS: -சாக்ரடீஸ், திருமணம், கல்யாணம், சமண முனிவர், மநு, வள்ளுவன்

 

 

சுபம், சுபம் —