கி.மு.1700-இல் ஒரு பெண் எம்.பி.! இந்திய அதிசயம்!!

025c5-parliament

Written by London swaminathan

Research Article No.1860; Dated 12 May 2015.

Uploaded in London at 16-42

உலகின் மிகப் பழைய நூல் ரிக் வேதம். இதை இந்து மதத்தைக் குறைகூறுவதையே வாடிக்கையாகக் கொண்ட அமெரிக்க “அறிஞர்களும்” கி.மு.1700 என்று தேதி குறித்துள்ளனர். இதில் சபா, சமிதி என்ற இரண்டு ஜனநாயக அமைப்புகள் பற்றி நிறைய துதிகளில் பாடப்படுகிறது. இதில் உறுப்பினர்களாக இருந்தவர்களில் பெண்களும் உண்டு!! உலகில் பெரும்பாலான நாடுகளில் நாகரீகம் என்பதே தெரியாமல் இருந்த காலத்தில்—அப்படியே நாகரீகம் இருந்த இடத்திலும் பெண்களுக்கு உரிமை தரப்படாத காலத்தில் – பெண்களும் உறுப்பினர் என்றும் அவர்கள் சிறந்த பேச்சாளர்கள் என்றும் ரிக் வேதம் கூறுவது எல்லா இந்தியர்களும் பெருமைப்பட்வேண்டிய விஷயம்.

இது உண்மை-வெறும் புகழ்ச்சி அல்ல- என்பதற்கு “உலகிலேயே மிகவும் புத்திசாலியான பெண்” என்ற கட்டுரையில் வேறு ஒரு உதாரணத்தையும் முன்னரே தந்தேன். 2850 ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் அகில இந்திய தத்துவ மாநாட்டை ஜனக மாமன்னன் கூட்டினான். அதில் யாக்ஞவல்கியர் என்பவர் ஆயிரம் பொற்காசுகள் பரிசை எடுத்துச் செல்ல முயல்கையில் செல்வி கார்க்கி வாசக்னவி என்ற பெண் தடுத்து நிறுத்தி தத்துவ விஷயங்களை அலசியதை முன்னரே நீங்கள் அறிவீர்கள். ஆக ரிக்வேதம் சொல்லுவது மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல.

8dbc0-tn2bassembly

சபை, சமிதி என்ற சொற்கள் இன்று இமயம் முதல் குமரி வரை, தமிழ், ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் அப்படியே பயன்படுத்தப் படுகின்றன. தொல்காப்பியர் ச- என்னும் எழுத்தைத் தமிழர்கள் முதல் எழுத்தாகப் பயன்படுத்தக் கூடாது என்று தடை போட்டு விட்டதால் நாம் “சபை” என்ற சொல்லை “அவை” என்று மாற்றிக் கொண்டோம். மற்ற மாநிலங்களில் விதான் சபா என்பர் ; நாம் சட்டப் பேரவை (சபை=அவை) என்போம். சமிதி என்ற சொல் கமிட்டீ (சமிட்டி=சமிதி=கமிட்டி) என்ற ஆங்கிலச் சொல்லாக மருவி உலகம் முழுதும் நிலவுகிறது.

நூற்றுக் கணக்கான ரிக் வேதச் சொற்களை இந்தியர்கள் தினமும் அன்றாடப் பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம் அதில் இந்த சபையும் சமிதியும் அடக்கம்.

இவை இரண்டும் அர்த்தம் மாறாமல் இன்றும் லோக் சபை, ராஜ்ய சபை, விதான் சபை என்ற சொற்களில் பயன்படுகின்றன. அதர்வ வேதமானது இவ்விரு சபைகளையும் பிரஜாபதியின் இரண்டு மகள்கள் என்று வருணிக்கும்.

e225f-bihar2bvidhan

பீஹார் சட்ட சபை

சபை சமிதி சம்பந்தமாகப் புழங்கும் சொற்களைப் பட்டியலிட்டால் இன்றைய தினம் போலவே அன்றும் சபாநாயகர், சபைத் தலைவர், பெண் அங்கத்தினர், சட்டம் இயற்றல், மக்களைக் கலந்தாலோசித்தல் முதலியன இருந்தது புலனாகிறது.

சபையை விடச் சமிதிக்கு குறைவான அதிகாரங்கள் இருந்தன. ஆனால் சமிதி என்பது போர்க்கால கவுன்சில் என்று சாயனர் பாஷ்யம் சொல்லும்.சபைக்கும் சமிதிக்கும் ராஜாவும் வந்தை வேதம் குறிப்பிடும்.

இன்றும் கூட பிரிட்டன் முதலிய நாடுகளில் அரசின் கொள்கைகளை அறிவிக்கவும், பார்லிமெண்டைத் துவக்கிவைக்கவும் ராணி அல்லது ராஜா வருகிறார். இதெல்லாம் அக்கால வழக்கை ஒட்டியதே.

ராஜாவே தனது மகனை அடுத்த ராஜாவாக நியமிக்கும் அதிகாரம் இருந்தபோதிலும் மக்களில் முக்கியமான தரப்பினரை அழைத்து ஒப்புதல் பெறுவது வழக்கம். தசரதனும் தனது முடிவை நாட்டு மக்களுக்கு அறிவிப்பதற்கு முன்னர் முக்கியப் பிரமுகர்களை அழைத்து ஆலோசித்த பின்னரே ராமனுக்கு முடிசூட்ட முடிவு செய்வதாகப் படிக்கிறோம். விஜயன் என்பவன் செய்த கெட்ட செயல்களால் நாடு கடத்தப்பட்டு இலங்கையில் ஒரு புதிய அரசை நிறுவியதை மஹாவம்சம் மூலம் நாம் அறிவோம். மனு ஸ்மிருதியும் தீய செயல்களால் பதவி இழந்த மன்னர்களின் பட்டியலைத் தருகிறது.

276ca-rajasthan_vidhansabha

ராஜஸ்தான் சட்ட சபை

இனி வேதத்தில் இருந்து சில குறிப்புகள்:

1.சபையின் பெண் உறுப்பினர்கள் சபாவதி என்று அழைக்கப்பட்டனர் (RV 1-167-3) அவர்கள் சபையில் உரிய சொற்களையே பேசுவர். சட்டத்தைப் பாதுகாக்கும் பெண் மூன்று முறை சபைக்கு வருவார் என்றும் ஒரு மந்திரம் (RV 3-56-5) சொல்லும். இன்று நாம் இதன் முழுப் பொருளையும் உணரமுடியாது.

2.சபையில் முக்கிய உறுப்பினர்கள் சந்தித்து, முக்கிய விஷயங்களை விவாதித்தனர். அதை ஏற்பாடு செய்பவர் சபாஸ்தாணு (அவையின் தூண்) என்று அழைக்கப்பட்டார் (RV.6-28-6; 8-4-9; 10-34-6; 7-12-1; 8-10-5; 12-1-56; 19-55-6 etc). சபையில் சண்டை, சச்சரவுகளும் தீர்த்துவைக்கப்பட்டதாக மஹீந்தரா என்பவர் வாஜசனேயி சம்ஹிதை உரையில் சொல்லுகிறார். கிராம சபை கூடும் இடம் என்றும், செல்வந்தர்கள் அங்கம் வகித்ததாகவும் குறிப்புகள் உள (பிரிட்டனில் இப்பொழுதும் செல்வந்தர்கள், பிரபுக்கள் இடம்பெறும் ஹவுஸ் ஆப் லார்ட்ஸ் உள்ளது!)

3.முக்கியப் பங்காற்றியவர்கள் ‘சபேயர்கள்’ என்று அழைக்கப்பட்டனர்.சபையில் தரமான உயர்ந்த சொற்கள் பேசுவதை ஒரு மந்திரம் குறிப்பிடுகிறது (RV 2-24-13; AV 20-12-8; VS 22-22)

a179a-tn2bseats

4.சமிதி, சபைக்கு ராஜா வருவது பற்றியும் மந்திரங்கள் உள்ளன. அவர்களுடைய கருத்துக்களை ராஜா கேட்டறிந்தார். பிற்கால தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்களில் இது பற்றிய குறிப்புகள் மற்றும் எண்பேராயம் (எட்டு பேர் அமைச்சரவை), ஐம்பெருங்குழு ( ஐந்து பேர் ஆலோசனைக் குழு), அஷ்ட திக் கஜங்கள், நவரத்னங்கள் முதலிய பல அமைச்சர்/அறிஞர் குழுக்கள் பற்றியும் தகவல்கள் கிடைக்கின்றன.

5.வேதத்தில் சபை, சமிதி பற்றி வரும் குறிப்புகளையும், அது தொடர்பாக உண்டாக்கப்பட்ட சொற்றொடர்களையும் பார்க்கையில் கி.மு.1700-க்கும் நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னரே சபையும் சமிதியும் உண்டாகி இருக்கும் என்பதை ஊகிப்பது கடினமில்லை. சுமேரிய, எகிப்திய, மினோவன், மைசீனிய, கிரேக்க சாம்ராஜ்யங்களில் கி.மு 1700ஐ ஒட்டி இத்தகைய அமைப்புகள் எதுவுமில்லை. ஆகவே உலகின் முதல் ஜனநாயக நாடு இந்தியாதான். பெண்களையும் உறுப்பினர் ஆக்கும் மனப்பக்குவம் உலகில் வேறு எங்கும் காணக்கிடைக்காதது! அரசன் மனைவியோ, மகளோ அதிகாரம் பெறுவதில் வியப்பில்லை. அது குல முறைப்படி அல்லது ராஜா வகித்த பதவி வழியாகக் கிடைக்கக்கூடியது. செல்வி வாசக்னவி, மைத்ரேயி போன்ற தனிநபர் ஒரு சபைக்குச் செல்வது அறிவு முதிர்ச்சியின் உச்சம் ஆகும்!

கீழே மக்களவையின் படம் (லோக் சபா)