Article No. 2045
Written by London swaminathan
Swami_48@yahoo.com
Date : 5 August 2015
Time uploaded in London : – 12-05
மஹாராஷ்டிர மாநிலத்தில் புனே நகருக்கு அருகில் துலாப்பூர் என்ற சிற்றூர் இருக்கிறது. இவ்வூர் பல சிறப்புகளை உடையது:
1.துலாப்பூர் என்று பெயர் ஏற்படக் காரணமான இரண்டு சம்பவங்கள்
2.வீர சிவாஜியின் புதல்வன் சம்பாஜி,வெட்டிக் கொலை செய்யப்பட இடத்தில் உள்ள சமாதி
3.பீமா, இந்த்ராயனி, பாமா ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்திலுள்ள சங்கமேஸ்வரர் சிவன் கோவில்
4.சம்பாஜியின் உடலைத் தைத்து ஈமச் சடங்கு செய்த செவாலி இனம்.
காட்டுமிராண்டி வம்சம்
மொகலாய சாம்ராஜ்யத்தை நடுநடுங்கவைத்த சிவாஜியின் மகன் பெயர் சம்பாஜி. அவனைப் பிடித்த அவுரங்கசீப், அவனது உடலைக் கண்டம் துண்டமாக வெட்டி பீமா நதியில் தூக்கி எறிந்தான். நம் நாட்டின் மீது படை எடுத்த முஸ்லீம்கள் வெறியர்கள். எதிரிகளைச் சாகடிக்கும் முறையும் அவர்கள் சடலங்களை அவமதிக்கும் விதமும் அவர்களை காட்டுமிராண்டிகள் என்பதைத் தெள்ளிதின் விளக்கும். ஆப்கனிஸ்தானத்தில் இருந்த உலகிலேயே மிக உயரமான 2000 ஆண்டுப் பழமையான புத்தர் சிலைகளை குண்டு வைத்து தகர்த்ததையும், இராக், சிரியாவிலுள்ள சுமேரிய, பாபிலோனிய சின்னங்களை சின்னாபின்ன மாக்கியதையும் இப்பொழுதும் உலகமே கண்டிக்கிறது.
(சம்பாஜியின் 2 சமாதிகள்)
இது அவுரங்க சீப்புக்கும் முன்னால் துவங்கிய அநாகரீக வழக்கம். மதுரைக்கு வந்த மொராக்கோ நாட்டுப் பயணி இபின் படுடா எழுதிய குறிப்புகள் மிகவும் பிரசித்தமானவை. மதுரையை ஆண்ட கியாசுத்தீன் என்பவன், வீர வல்லாளன் என்ற ஹொய்சாள மன்னனைப் பிடித்து ஆசை வார்த்தை காட்டி அத்தனை செல்வத்தையும் பிடுங்கிக் கொண்டு அவன் தோலை உரித்து, வைக்கோலை அடைத்து, மதுரைக் கோட்டை வாசலில் தொங்கவிட்டான் என்று 1341ல் இபின் படுடா எழுதிவைத்தான்.
மதுரை மீது படை எடுத்து வந்த விஜய நகர மன்னன் குமார கம்பன்னன் 1346-ஆம் ஆண்டில் துலுக்க ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து 40 ஆண்டுகள் மூடிக் கிடந்த மீனாட்சிம்மன் கோவிலை திறந்துவத்தான். அவனுடன் வந்த அவனது மனைவி கங்காதேவி “மதுரா விஜயம்” என்னும் நூலில் மதுரைத் தெருக்களின் இருமருங்கிலும் ஈட்டியில் சொருகப்பட்ட பாண்டிய நாட்டு வீரர் தலைகள் இருந்ததை அப்படியே அவளுடைய சம்ஸ்கிருத நூல் “மதுரா விஜய”த்தில் எழுதி வைத்துள்ளார்.
இதே காட்டுமிராண்டிததனத்தை அவுரங்க சீப்பும் செய்தான். சிவாஜியின் புதல்வன் சம்பாஜியின் உடலை வெட்டி பீமா ஆற்றில் எறிந்தான். அந்தக் கரையில் வாழ்ந்த வீரப் புதல்வர்கள் நீந்திச் சென்று உடல் உறுப்புகளைச் சேகரித்து அவைகளை ஒன்றாகத் தைத்து சம்பாஜிக்கு இந்து முறைப்படி தகனக் கிரியைகளைச் செய்தனர் ஆகையால் இவர்களுக்கு இன்றுவரை செவாலியர் (தையல் போட்டோர்) என்ற பெயர் நீடித்து வருகிறது.
சம்பாஜிக்கு துலாப்பூரிலும், தகனம் நடந்த ‘வது’ என்னும் கிராமத்திலும் இரண்டு சமாதிகள் உள்ளன.
(சங்கமேஸ்வரர் கோவில்)
துலாக் கதை 1
துலா என்றால் நிறுக்கும் தராசு. சங்க இலக்கியத்தில் ஒரு சிறுமிக்கு மரண தண்டனை விதித்த நன்னனிடம் எடைக்கு எடை தங்கம் தருவதாக ஊரே கெஞ்சியது. இது பற்றி முன்னரே எழுதி விட்டேன். தமிழகத்திலும் சுமேரியாவிலும், சிபிச் சக்ரவர்த்தி கதையிலும் இப்பொழுது குருவாயூர், திருப்பதி முதலிய கோவில்களிலும் துலா பாரச் சடங்குகளைப் பார்க்கிறோம். இதேபோல அக்காலத்தில் ஒருவர் எடைக்கு எடை 24 பொருள்களை நிறுத்துக் கொடுத்ததால் இந்த ஊருக்கு துலாப்பூர் என்று பெயர் ஏற்பட்டது; முதலில் நகர்கவன் என்ற பெயரே இருந்தது.
அடில்ஷா சபையில் பெரிய பதவி வகித்த முராபந்த் ஜகதேவின் உடலில் வெள்ளைப்பட்டை விழுந்ததால் அவர் துலாப்பூரில் வசித்த ருத்ர தேவ் மஹராஜ் என்னும் மஹானின் காலில் வந்து விழுந்தார். அவர், முராபந்தின் வியாதியைக் குணப்படுத்தியவுடன் தங்கம், வெள்ளி முதலிய எல்லாவற்றையும் தன் எடைக்கு எடை தந்தார். அத்தனையையும் ஏழை மக்களுக்கும், சங்கமேஸ்வரர் கோவிலுக்கும் தானம் செய்யும்படி சாமியார் கட்டளையிட்டார். ஒரு முறை ஒரு யானையின் எடைக்கு தங்கத்தை நிறுத்துக் கொடுததால் இவ்வூருக்கு துலாப்பூர் என்று பெயர் உண்டாகியது.
துலாக் கதை 2: யானையை நிறுக்க முடியுமா?
இன்னொரு கதை அவுரங்க சீப் பற்றியது. சிவாஜியின் மகனை வெட்டிக்கொலை செய்த பின்னர் பீமா நதியைக் கடக்க யானை, குதிரைகளுடன் வந்த போது ஒரு படகுக்காரனைச் சந்திதார். படகில் எவ்வளவு எடை ஏற்ற முடியும் என்று கவலை கொண்டார்.
படகுக்காரனிடம் எவ்வளவு எடை ஏற்ற முடியும் என்று கேட்டார். அவனோ தான் உலகிலுள்ள எந்தப் பொருளுக்கும் எடை சொல்ல முடியும் என்று பெருமை பேசினான். உடனே அவுரங்கசீப், எங்கே, என் யானையின் எடை என்ன? என்று சொல் பார்ப்போம் என்றார்.
மன்னவா, இதுவா கஷ்டம்? இதோ சொல்கிறேன். உங்கள் யானையை அதோ அந்தப் படகில் நிறுத்திவைக்கும் படி உங்கள் வீரர்களுக்குக் கட்டளை இடுங்கள் – என்றான்.
மன்னனும் அப்படியே செய்தான். படகின் வெளிப்பகுதி எந்த அளவுக்கு தண்ணீரில் அமிழ்ந்தது என்று குறித்து வைத்துக் கொண்டான். பின்னர் யானையை இறக்கிவிட்டு கற்களை ஏற்றச் சொன்னான். நீர்மட்டம் பழைய குறியீட்டுக்கு வரும் வரை கற்களை ஏற்றச் செய்தான் யானை ஏறியபோது அடைந்த நீர்மட்டத்தை எட்டியவுடன் அந்தக் கற்களை நிறுத்தான். அந்த எடையைக் குறித்துக் கொண்டு அவுரங்க சீப்பிடம் யானையின் எடை இதோ, என்று கொடுத்தான்.
(படம்: புளூட்டோ கிரஹத்தில் யானையி்ன் எடை)
படகுக்காரனின் புத்திசாலித்தனத்தை மெச்சி அவனுக்கு பெரும் பரிசுகள் கொடுத்தான் அவுரங்க சீப்.
—-சுபம்—
You must be logged in to post a comment.