Compiled by London Swaminathan
Pot No 939 dated 28th March 2014.
சம்ஸ்கிருதம் பற்றி பல அறிஞர்கள் சொன்ன பொன் மொழிகளில் சுவாமி விவேகாநந்தர் சொன்ன விஷயம் மிகவும் முக்கியமானது:
“ என்னுடைய ஐடியா (எண்ணம்/விருப்பம்) என்னவென்றால் காடுகளிலும், மடாலயங்களிலும் மறைந்து கிடக்கும், புத்தகங்களில் உள்ள நம்முடைய ரத்தினக் குவியலை வெளிக் கொணர்வதுதான். ஒரு சிலரின் உடைமைஅகளாக உள்ள அவற்றை மக்கள் அறியச் செய்ய வேண்டும் என்பதே என் ஆசை அவைகள் பாமர மக்கள் எளிதில் அணுகமுடியாத நூற்றாண்டுக் கணக்கில் பழமையான சம்ஸ்கிருத மொழியில் இருக்கின்றன. சம்ஸ்கிருத மொழி அறிந்தவர், அறியாதவர் ஆகிய எல்லோரின் பொதுச் சொத்தாக இதை ஆக்க வேண்டும்.
இதில் கஷ்டம் என்ன வென்றால் நமது பெருமைமிகு சம்ஸ்கிருத மொழிதான். நாம் எல்லோரையும் சம்ஸ்கிருத அறிஞர்களாக்கும் வரை இந்தக் கஷ்டம் நீடிக்கும். முடிந்தால் இதைச் செய்யலாம். நான் என் அனுபத்தைச் சொன்னால் இது எவ்வளவு கஷ்டம் என்பது உங்களுக்கும் புரியும். வாழ்நாள் முழுதும் இந்த மொழியைப் படித்து வருகிறேன். ஆயினும் ஒவ்வொரு புத்தகமும் புதிதாகவே தோன்றுகிறது. அப்படியானால் கொஞ்சமும் இதைப் படிக்க நேரமில்லதவர்களுக்கு எவ்வளவு கஷ்டம் பாருங்கள்.ஆகையால் தாய் மொழியிலேயே கற்பிக்க வேண்டும். அதோடு சம்ஸ்கிருதமும் சொல்லித் தரவேண்டும். ஏனென்றால் சம்ஸ்கிருதச் சொற்களின் கம்பீரமும் ஒரு சமூகத்துக்கு பலத்தையும், கௌரவத்தையும், சக்தியையும் தரும்.
கீழ்மட்டத்தில் இருந்தவர்களை மேல்நிலைக்குக் கொண்டுவர ராமானுஜர், சைதன்யர், கபீர் போன்றோர் செய்த அரிய பெரிய பணிகள் அபூர்வமான பலன் தந்தன. ஆனாலும் அந்த மஹாபுருஷர்கள் தோன்றிய ஒரு நூற்றாண்டுக்குள் அவைகள் அடைந்த தோல்விகளையும் விளக்க வேண்டும். இத்தான் ரகசியம். அவர்கள் கீழ்ஜாதி மக்களை உயர்த்தினர். ஆனால் சம்ஸ்கிருதத்தைப் பரப்பவில்லை. மாபெரும் மஹான் புத்தன் கூட பொது மக்கள் சம்ஸ்கிருத படிப்பதை நிறுத்தியன் முதல் தவறான பாதையில் அடி எடுத்துவைத்தார். உடனடியாக கை மேல் பலன் வேண்டும் என்று எண்ணி மக்களின் பேச்சு மொழியான பாலி மொழியில் சொற்பொழிவாற்றினார். மக்களுக்கும் நன்றாகப் புரிந்தது. மகத்தான பணி! அகல நெடுக விரிந்தது, பரந்தது அவர்தம் பணி. ஆனால் அத்தோடு சம்ஸ்கிருதத்தையும் அவர் கற்பித்திருக்க வேண்டும்.
என்ன நடந்தது? அறிவு பெருகியது. ஆனால் மதிப்பு போய்விட்டது. அவர்களிடையே பண்பாடு இல்லை. ஒரு நாட்டின் கலாசாரம்தான் பயங்கரமான அதிர்ச்சிகளை சமாளிக்க வல்லது. அறிவு எக்கச்சக்கமாக இருக்கலாம்.. அது நல்லது செய்யாது. ரத்தத்தில் பண்பாடு இருக்க வேண்டும். நாமும் பார்க்கிறோம். நவீன காலத்தில் சில நாடுகளில் அபாரமான அறிவு வளர்ச்சியை. என்ன கண்டோம்? அவர்கள் எல்லாம் புலிகள், காட்டுமிராண்டிகள். காரணம் பண்பாடு இல்லை.”
ஆதாரம்: சுவாமி விவேகாநந்தரின் முழு சொற்பொழிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள், ஆங்கில வெளியீடு, அத்வைத ஆஸ்ரம, கல்கத்தா, 700 014. வெளியீடு 1990
“ இந்தியாவிடமுள்ள மிகப் பெரிய பொக்கிஷம் என்ன என்று யாராவது என்னிடம் கேட்டால், இந்தியாவின் மிகச் சிறந்த பாரம்பர்யச் சின்னம் என்ன என்று யாராவது என்னிடம் கேட்டால், உடனே தயங்காமல் பதில் சொல்வேன்: சம்ஸ்கிருத மொழியும், சம்ஸ்கிருத இலக்கியத்தில் அடங்கி இருக்கும் எல்லா விஷயங்களும் என்று.
—இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு.
தேவ பாடையில் இக்கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம்முள் முந்திய
நாவினார் உரையின்படி நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்பரோ
(கம்ப ராமாயணம் தற்சிறப்புப் பாயிரம், செய்யுள் 10)
சம்ஸ்கிருதத்தை தெய்வ மொழி என்றும் மூன்று ராமாயணங்களில் தான் பின்பற்றுவது வால்மீகி ராமாயணத்தையே என்றும் கம்பர் சொல்கிறார்).
வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை, உலகமெலாம் தொழுதேத்தும்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகர்
கடல் வரைப்பின் இதன் பெருமை யாவரே கணித்தறிவார்
–பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம்
இதில் வடமொழியும் தமிழ் மொழியும் சிவனிடமிருந்து தோன்றின. ஒன்றை பாணினிக்கும் மற்றொன்றை அகத்தியனுக்கும் அருளினார். இரண்டும் தொடர்புடைய மொழிகள் என்று பரஞ்சோதி முனிவர் கூறுகிறார்.
இருமொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவரியல் வார்ப்ப
இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசை பரப்பு
இருமொழியுமான்றவரே தழீஇயனா ரென்றாலிவ்
இருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதோ
தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டு மொழிகளுக்கும் சிவனே கர்த்தா. இரண்டும் கண்ணின் இரு விழிகள். இவ்விரு மொழிகளும் சமம் என்பதில் என்ன சந்தேகம் என்பார் காஞ்சிப் புராணம் எழுதிய சிவஞான முனிவர்.
“சம்ஸ்கிருத மொழி – எந்தத் தொல் பழங்காலத்தில் வேண்டுமானாலும் தோன்றியிருக்கட்டும் — அதன் அமைப்பு அற்புதமானது. கிரேக்க மொழியை விட சிறப்புடையது — லத்தீன் மொழியை விட வளம் பெற்றது – இந்த இரண்டு மொழிகளுடனும் சொல்லமைப்பிலும், இலக்கணத்திலும் சம்ஸ்கிருதம் நெருக்கமானது, ஆனால் கட்டமைப்பில் அவற்றை விட செம்மைப் படுத்தப்பட்டது – இதை தன்னிச்சையாக நடந்ததென்று சொல்லலாம் – ஆயினும் மொழிவரலாறு தெரிந்த எவரும் ஒரே மூலத்தில் இருந்து இவை மூன்றும் வந்தன என்பதை ஒதுக்கமுடியாது –மூன்றையும் சேர்த்தே ஆராயவேண்டி இருக்கும்—மூல மொழி இப்போது இல்லாமற் போயிருக்கும்.– இதே போல வேறு ஒரு வகையில் காதிக், கெல்டிக் மொழிகளையும் சொல்லலாம். பாரசீக மொழியையும் இந்த அணியில் சேர்க்கவேண்டும்.
–வில்லியம் ஜோன்ஸ் (1744 – 1796 ), மொழியியல் அறிஞர்
காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் (1894 – 1994)
“காஞ்சீபுரத்தில் காமாக்ஷி ஸந்நிதியில் ஊமை ஒருவர் உபாஸனை செய்து மஹா கவி ஆனார். அவர் அம்பிகையின் விஷயமாக 500 ச்லோகம் செய்திருக்கிறார். மூகபஞ்ச சதி என்று அவற்றின் பெயர். அவை மிகவும் சுவையுள்ளனவாக இருக்கும். ஸம்ஸ்க்ருதம் தெரியாவிடின் அவைகளின் ரஸத்தை அனுபவிக்கமுடியாது. ஸம்ஸ்க்ருதம் தெரிந்தால் மூககவி, காளிதாசன் முதலியவர்களுடைய வாக் மாதுர்யத்தை ( சொல் இனிமை) அனுபவிக்கலாம். பகவத் பாதளுடைய (ஆதி சங்கரர்) வாக் மஹிமையை அனுபவிப்பதற்கும் ஸம்ஸ்க்ருத ஞானம் வேண்டும். இந்த மூன்றுக்காகவாவது எல்லோரும் சம்ஸ்கிருதம் வாசிக்க வேண்டும்.
“நம்முடைய மதம் எப்படிப் பொது மதமோ அது போல ஸம்ஸ்க்ருதம் பொதுப்பாஷை. அதற்கும் ஊர் இல்லை.தெலுங்கு, தமிழ், இந்துஸ்தானி முதலியவற்றிற்குத் தேசம் உண்டு. ஸம்ஸ்க்ருதத்துக்குத் தேசமே இல்லை. இந்த ஸம்ஸ்க்ருதத்தைச் செத்துப்போன பாஷை என்று சிலர் சொல்லுகிறார்கள்.
எங்கள் அம்மாவுக்கு எனக்கு முன் ஒரு குழந்தை இருந்தது. அவள் ஒரு ஞானி. அந்தக் குழந்தை செத்துப் போய்விட்டது. அதற்காக அவள் அழவில்லை. அம்மாவுக்கு என்னிடம் நிரம்பப் பிரியம். ஒரு நாள் நான் அவளைப் பார்த்து, “ அம்மா பெரியவன் செத்துப் போனதற்கு நீ அழவில்லை; நான் செத்துப் போனால் அழுவாயோ மாட்டாயோ?” என்று கேட்டேன் “நீயும் அவனைப் போல பிள்ளைதானே; அவன் உடம்பில் செத்துப் போனான், நீ மனசில் செத்துப் போ” என்றாள். செத்துப்போன மனசை உடையவனாக வேண்டும் என்பது அவள் எண்ணம். அந்த மாதிரிதான் ஸம்ஸ்க்ருதம் செத்துப் போயிற்று.
தனக்கு என்று ஒரு இடம் இருந்தால் பயம் இருக்கும். எல்லாம் தன்னுடைய இடமாக இருப்பது ஸம்ஸ்க்ருதம் . இப்பொழுது லோகத்திலுள்ள பாஷைகள் எல்லாவற்றிலும் ஸம்ஸ்க்ருதம் கலந்திருக்கிறது. அவற்றில் பெரும்பலானவை ஸம்ஸ்க்ருதத்திலிருந்து உண்டானவை. நாம் பேசும் தமிழில் எவ்வளவோ ஸம்ஸ்க்ருத வார்த்தைகள் கலந்திருக்கின்றன. தமிழ் செய்யுளாக இருந்தால் அதற்கு உரை ஸம்ஸ்க்ருதம் ஸம்பந்தம் உடையதாக இருக்கிறது. குற்றம் என்ற தமிழ் வார்த்தைக்கு, தோஷம் என்று ஸம்ஸ்க்ருதத்தில் அர்த்தம் சொல்லுகிறோம். தேச பாஷையிலுள்ள கடினமான சொற்களுக்கு ஸம்ஸ்க்ருத வார்த்தைகளால் அர்த்தம் சொல்லி விளங்க வைக்கிறோம்.
சாவு என்பது என்ன? எதற்குச் சாவு உண்டு? உடம்புதானே சாகிறது. அது உயிரோடு இருக்கிறது. பின்பு சாகிறது. உயிர் இல்லாதபோது அது செத்துப் போகிறது. உயிருக்கு மற்றோர் உயிர் ஏது? அது எப்பொழுதும் செத்ததுதான். ஸம்ஸ்க்ருதம் எல்லா பாஷைக்கும் உயிராக இருக்கிறது.
இத்தகைய நமது மதமும் பாஷையும் லோகம் முழுவதும் பரவியிருந்தன. நமது மதத்துக்கு வேதம் பிரமாணம். எல்லா மதமும் நம்முடைய மதங்களே. எல்லாம் சேர்ந்து மறுபடியும் ஒன்றாகிவிடலாம். அஹம்பாவம் இல்லாமல் அன்பொடே சொன்னால் எல்லோரும் நமது வார்த்தையை ப்ரியமாகக் கேட்பார்கள். மனஸும் ஒன்றாகும். அப்பொழுது இந்த மதம் பழையபடி அகண்டமான மதமாக ஆகும்”.
— (12-10-1932-ல் காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் சென்னையில் ஆற்றிய சொற்பொழிவு).
இந்த சொற்பொழிவு 15 ஜூலை 2012–ல் சம்ஸ்கிருதத்துக்கு உயிர் இருக்கிறதா? என்ற தலைப்பில் நான் வெளியிட்ட கட்டுரையின் ஒரு பகுதி..
contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.