சம்ஸ்கிருத மொழி அதிசயங்கள்!

yogaveshti,indus style

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1498; தேதி 19 டிசம்பர், 2014.

ஒவ்வொரு மொழியிலும் பல அதிசயங்கள் இருக்கத்தான் செய்யும். தமிழில் 12 உயிர் எழுத்துக்களில் ஒன்றான ‘’ஔ’’ என்னும் எழுத்தில் ஒரு சொல் கூட சங்க இலக்கியத்தில் இல்லை! சங்க இலக்கியத்துக்கு பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னால் வந்த திருக்குறளிலும் இல்லை. நாம் அறிந்த ஔவையார் என்ற புலவர் பெயரையும் அவ்வையார் என்றே அக்காலத்தில் எழுதினார்கள். தமிழில் பல எழுத்துக்களுக்கு தேவையே இல்லை என்பதை வேறு ஒரு கட்டுரையில் பட்டியல் போட்டுக் காட்டியுளேன். இன்னும் பல அதிசயங்கள் தமிழ் மொழியில் உண்டு. அதைத் தனியே காண்போம்.

சம்ஸ்கிருத மொழி அதிசயங்கள் பற்றி மோனியர் வில்லியம்ஸ் என்ற அறிஞர் என்ன கூறுகிறார் என்று பாருங்கள்:
“எண்ணிக்கையில் அதிகமான நூல்களைப் படைத்தது மட்டும் நம்மை வியப்பில் ஆழ்த்தவில்லை. அவர்களுடைய நூல்களின் நீளத்தைப் பாருங்கள்! வர்ஜில் என்ற புகழ் பெற்ற கவிஞரின் ‘’ஏனிட்’’ என்னும் நூலில் 9000 வரிகள்! கிரேக்க நாட்டின் முதல் காவியமான – ஹோமர் எழுதிய — இலியட்டில் 12,000 வரிகள். அவரே எழுதிய மற்றொரு காவியமான ஆடிஸியில்15,000 வரிகள்! ஆனால் இந்துக்களின் மஹாபாரதத்திலோ இரண்டு லட்சம் வரிகள்! இத்தோடு அதன் பிற்சேர்க்கையான ஹரிவம்சத்தைச் சேர்த்தால் இன்னும் அதிகமாகும்!

அவர்களுடைய இலக்கியத்தில் உள்ள ஞானம், இயற்கை அழகு, குடும்பத்தினர் இடையே நிலவும் அன்பு, வாத்சல்யம், நீதி போதனை ஆகிய எதிலுமே கிரேக்க, ரோமானிய (லத்தீன்) காவியங்களுக்கு அவை சளைத்தவை அல்ல”.

ஹெர்மன் ப்ரமோபர் என்பவர் ஜெர்மானிய அறிஞர் — அவர் கூறுகிறார்: “நமக்குத் தெரிந்த ஐரோப்பிய மொழிகளில் கிரேக்க மொழிதான இலக்கியச் செறிவுடைய வளமான மொழி. ஆனால் அதில் ஒரு வினைச் சொல் 68 வடிவங்கள் எடுப்பதை நாம் அறிவோம். அது கண்டு வியக்கிறோம். சம்ஸ்கிருதத்தில் ‘’க்ரு’’ (செய்ய) என்ற வினைச் சொல் 336 வினை வடிவங்களை உடையது! இதில் இன்னும் எவ்வளவோ சேர்க்க முடியும். அவைகளைச் சேர்க்காமல் 336.

athithi devo bhava

உபநிஷத்துகள் பற்றி மூவர் எழுதிய ஆங்கிலப் புத்தகத்தில் சம்ஸ்கிருத மொழியீன் ஆழத்தை அளந்து காட்டுகின்றனர்.

“சம்ஸ்கிருதத்தில் 800 வேர்ச் சொற்கள் இருக்கின்றன. அவைகளை அறிந்துவிட்டால் அவை மூலம் உருவாகும் நூற்றுக் கணக்கான சொற்களை அறிய முடியும். ஒரு எடுத்துக் காட்டு ‘’ராம’’ என்ற சபத்துக்கு வேரான ‘’ரம்’’, ரம்யதி என்பதை எடுத்துக் கொண்டால் அமைதியாக இரு, ஆனந்தமாக இரு, ஓய்வாக இரு, இன்பமாக இரு, மற்றவர்களுக்கு ஆனந்தம் கொடு,காதல் செய், விளையாடு, இன்பம் ஊட்டு, சாந்தமாக இரு, நிறுத்து, அசையாமல் நில் எனப் பல பொருள் தொனிக்கும்.

இதை எப்படி எல்லாம் பயன்படுத்த முடியும் என்பதற்குக் கீழே உள்ள எடுத்துக் காட்டைப் பாருங்கள்:
மூஷ் என்றால் திருடு என்று பொருள். மூஷிகம் என்றால் எலி. எல்லாப் பொருட்களையும் திருடிச் செல்லும் பிராணி. மூஷிக ரதி என்றால் பூனை என்று பொருள். இதில் ரம் என்ற இணைப்பு இருக்கிறது அதாவது எலியைத் தடுத்து நிறுத்தும் பிராணி அல்லது எலியினால் மகிழ்ச்சி கொள்ளும் பிராணி என்று பல பொருள் சொல்லலாம்—மூஷிக+ரதி.

இதையே ஆன்மீக விஷயங்களில் கூடப் பயன்படுத்தலாம். மூசிக என்பது ஆத்மா. மூஷிகரதி என்பது ஆன்மஞானம் பெற்றவன்.

இதையே வேத மந்திரங்களுக்கும் நாம் பயன்படுத்திப் பார்க்கலாமம். வேத மந்திரங்களின் பொருள் ஒரு மட்டத்தில் ஏதோ எலி, பூனை கதை சொல்லுவது போல இருக்கும். அதன் அடையாள பூர்வ அர்த்தமோ ஆன்மீக ரகசியமாக இருக்கும். அதன் மந்திர சப்தமோ, மந்திர ஒலியினால் வரும் பலன்களைக் கொடுக்கும்.

four vedas

வேத கால மொழி பல ‘’மறை’’கள் (ரகசியங்கள்) நிறைந்தவை. அது மட்டுமல்ல சொல்லின் இலக்கணம் முக்கியமல்ல. அந்தச் சொல்லுக்கு என்ன என்ன பொருள் என்று பார்த்தால் பக்கம் பக்கமாக எழுத முடியும். அந்தக் காலத்தில் குருகுல வாசத்தில் குரு தனது சீடர்களுக்கு இந்த ரகசியங்களை அவரவர் தராதரம் அறிந்து போதிப்பார்.

ரிக் வேதத்தில் 24 பிரிவுகள் இருந்தன. வியாசர் என்னும் மாபெரும் அறிஞர் அவை அழிந்து வருவது கண்டு, வருத்தப்பட்டு அவற்றைக் காப்பாற்ற முயன்றார். பெரிய ‘’கம்பெனி எக்ஸிகியுட்டிவ்’’ மாதிரி திட்டம் எல்லாம் போட்டு, நான்கு உலக மகா அறிஞர்களை அழைத்து வேதத்தை நான்காக வகுத்து அவைகளைப் பாதுகாக்கும் பொறுப்பைக் கொடுத்தார். அப்படியும் நமக்குக் கிடைத்தது ரிக்வேதத்தின் ஒரே பிரிவு மட்டும்தான். பெரும்பகுதி அழிந்துவிட்டன. அந்த ஒரு பகுதியைக் கூட எவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. அவ்வளவு பழமையானது — ரகசியங்கள் நிறைந்தது. சுமேரிய ஜில்காமேஷ் காவியம் போல எளிமையானது அல்ல. அதைப் போல சுவையில் மட்டமானதும் அல்ல. ரிக் வேத மந்திரங்கள் 10,000-க்குமேல் இருக்கின்றன. ரிக் வேத துதிகளின் எண்ணிக்கை 1028. சில துதிகளில் ஒரு மந்திரம் மட்டும் உண்டு. அதிகமாக ஒரே துதியில் 58 மந்திரங்கள் இருப்பதையும் காணலாம்.

ரிக்வேதம் தவிர வேறு மூன்று வேதங்களும் இருக்கின்றன. ஏறத்தாழ 20 வெளிநாட்டு அறிஞர்கள் இவைகளை மொழி பெயர்க்கிறேன் என்று வந்து திக்கு முக்காடித் திணறிப் போனதை அவர்கள் மொழிபெயர்ப்பு என்னும் ‘’தமாஷைப்’’ படிப்பவர்களுக்கு விளங்கும். ஒரு சொல்லை ஒருவர் மரம் என்றால் மற்றொருவர் நதி என்பார். இன்னும் ஒருவர் இது இராக்கதர் என்பார். இன்னும் ஒருவர் இது பொருளே விளங்காத பிதற்றல் என்பார். இன்னும் ஒருவர் படி எடுத்தவர் பிழை செய்திருக்கலாம், அந்தச் சொல்லுக்குப் பதில் இந்தச் சொல்லைப் போட்டால் எப்படி இருக்கிறது? என்று இடைச் செருகல் செய்வார். வேத மொழி பெயர்ப்புகளை அருகருகே வைத்துக் கொண்டு ஒப்பீட்டுப் பார்ப்பவர்களுக்கு நிறைய ‘’ஜோக்’’குகள் கிடைக்கும்.

classical skt

அந்தக் காலத்தில் இவர்கள் காசியில் உள்ள பண்டிதர்களை அழைத்தபோது வேதத்தின் புனிதத்தை உணர்ந்தவர்கள் மொழிபெயர்க்க உதவிசெய்ய மறுத்துவிட்டனர். பிராமணர்களில் மூன்றாந்தர ஆட்கள், காசுக்காக ஆசைப்பட்டு இவர்களுக்கு அரைக்குறை அர்த்தத்தைச் சொல்ல, ஆங்கிலமும் தெரியாமல் உளர, அவர்கள் சம்ஸ்கிருதமும் தெரியாமல் திணற, எல்லாம் கோளாறாகப் போயிற்று.

இப்பொழுது அமெரிக்காவில் சில புதுரக அறிஞர்கள் தோன்றியுள்ளனர். வேதத்தில் எதை எடுத்தாலும் ‘’செக்ஸ்’’ என்று சொன்னால் நன்றாகப் புத்தகம் விற்கும் என்று ஒரு சிலர் எழுதி பெரிய புத்தகக் கம்பெனிகள் மூலம் அவைகளை ஏற்றுமதி செய்கின்றனர். இன்னும் சிலர் இந்து மதத்தில் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்று ‘’சமுத்ரம்’’ என்றால் அது ‘’கடல்’’ அல்ல, அது வெறும் குளம், ‘’புரம்’’ என்றால் சிந்து சம்வெளிக் ‘’கோட்டை’’கள் என்றெல்லாம் தத்துப் பித்து என்று எழுதி வருகின்றனர். இவர்கள் எல்லார் வங்கிக் கணக்குகளிலும் சேரும் பணம் எங்கே இருந்து வருகிறது என்பதைப் பார்த்தால் இவர்களின் பின்னால் இருக்கும் ஆட்களையும் சூழ்ச்ச்சிகளையும் சதிகளையும் நாம் அறியலாம்.

வெற்றி எட்டும் திக்கும் எட்ட கொட்டு முரசே!
வேதம் என்றும் வாழ்க வென்று கொட்டு முரசே! — பாரதி