நல்லவர்களை யாருடன் தான் ஒப்பிடுவது?

சம்ஸ்கிருதச் செல்வம்-3 by S Nagarajan 

நல்லவர்களை யாருடன் தான் ஒப்பிடுவது?

 

அந்தப் புலவர் ஊர் ஊராகச் செல்பவர். பலரையும் பார்த்த பழுத்த அனுபவஸ்தர். ஒரு நாள் தான் கண்ட நல்லவர்களை எண்ணி எண்ணி நெஞ்சம் நெகிழ்ந்தார். அவர்களின் மேன்மையை ஒரு பாடலாகப் பாட எண்ணினார். அவர்களை யாருடன் ஒப்பிடலாம்? யோசித்தார்.

 

முதலில் பரந்த கடலைப் பரந்த நெஞ்சம் உள்ள அவர்களுடன் ஒப்பிடலாமா! அது உப்புக் கரிக்குமே

க்ஷாரோ வாரிநிதி:

 

குளிர்ந்த சந்திரனுக்கு அவர்களின் குளிர்ந்த பார்வை மற்றும் மனத்திற்காக ஒப்பிடலாமா?

சந்திரனுக்குக் களங்கம் உண்டே! நல்லவருக்குக் களங்கமே கிடையாதே!

களங்க கலுஸ்சந்த்ரோ

 

பிரகாசமான சூரியனுக்கு அவர்களின் பிரகாசத்தை ஒப்பிடலாமா?

ஆனால் சூரியன் சுட்டெரிக்குமே! அவர்கள் ஒரு நாளும் யாரையும் எரித்தது இல்லையே!

ரவி ஸ்தாபக்ருத:

 

மழை பொழியும் மேகத்திற்கு அவர்களது வள்ளன்மையை ஒப்பிடலாமா? ஆனால் மேகமோ சபல புத்தியுடையது. சில சமயம் பொழியும். சில சமயம் பொழியவே பொழியாது. என்றுமே பொழியும் வள்ளல்களுக்கு அதை ஒப்பிடுவது சரியில்லையே!

சரி வானம் ஒப்பிடுவதற்கு சரிப்படுமா. அதன் அகன்ற தன்மையைச் சொல்லலாமா! ஆனால் வெறும் சூன்யமான இடமாயிற்றே! சரிப்படாது.

 

பர்ஜன்யஸ்சபலாஸ்ரயோ(அ)ப்ரபடலாத்ருஷ்ய: ஸுவர்ணாசல:

 

சரி ஆழ்ந்த தன்மையைக் குறிக்க பாதாளத்தை ஒப்பிடலாமா! அங்கு பாம்புகள் அல்லவா நிறைந்திருக்கும். நல்லோரிடம் விஷம் ஏது?

சரி, ஸ்வர்க்கத்தில் உள்ள கேட்டவற்றையெல்லாம் வாரி வழங்கும் காமதேனுவுடன் ஒப்பிடலாமா? ஆனால் அது  கேவலம் ஒரு மிருகம் தானே! நல்லவர்கள் மனிதர்கள் ஆயிற்றே! ஒப்பிடுவது சரியில்லையே!

 

ஷூன்யம் வ்யோம ரஸா த்விஜிஹ்ன விதூதா ஸ்வர்கமதேனு: பசு:

 

சரி,கற்பகத் தருவை ஒப்பிடலாமா! அதுவோ மரம்; அதுவும் சரியில்லை.

சரி,நினைத்ததை வழங்கும் சிந்தாமணிக்கு ஒப்பிடலாமா. ஹூம், அது வெறும் கல்! கல்லுடனா நல்லவர்களை ஒப்பிடுவது?

காஷ்டம் கல்பதருர்த்ருஷஸ்த்சுரமணிஸ்தத்

கேன சாம்யம் சதாம் II

 

புலவர் குழம்பிப் போனார். நல்லவர்களை யாருடன் தான் ஒப்பிடுவது?

யாருடனும் ஒப்பிட முடியாது. தன் இயலாமையை அப்படியே கவிதையாகப் பொழிந்து விட்டார். பாடலை

முழுவதும் பார்ப்போம்:

 

க்ஷாரோ வாரிநிதி: களங்க கலுஸ்சந்த்ரோ ரவி ஸ்தாபக்ருத:

பர்ஜன்யஸ்சபலாஸ்ரயோ(அ)ப்ரபடலாத்ருஷ்ய: ஸுவர்ணாசல: I

ஷூன்யம் வ்யோம ரஸா த்விஜிஹ்ன விதூதா ஸ்வர்கமதேனு: பசு:

காஷ்டம் கல்பதருர்த்ருஷஸ்த்சுரமணிஸ்தத்

கேன சாம்யம் சதாம் II

 

 

கடலோ உப்புக் கரிக்கும்.சந்திரனோ களங்கமுடையது. சூரியனோ சுட்டெரிக்கும். மழைமேகமோ சபலமானது.வானமோ சூன்ய மயம். பாதாளமோ பாம்புகள் நிறைந்தது.ஸ்வர்க்கத்தில் உள்ள காமதேனுவோ ஒரு மிருகம். கற்பகத் தருவோ ஒரு மரம். சிந்தாமணியோ ஒரு கல். நல்லவர்களை யாருடன் தான் ஒப்பிடுவது?!

 

இது அமைந்துள்ள சந்தம்  சார்தூலவிக்ரிதம் என்னும் சந்தம்.

 

*****************