உமாபதி சிவம் இயற்றிய தமிழ், சம்ஸ்கிருத நூல்கள்! (Post.9078)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9078

Date uploaded in London – –26 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உமாபதி சிவம் – 4

இயற்றியுள்ள தமிழ் மட்டும் சம்ஸ்கிருத நூல்கள்!

ச.நாகராஜன்

ஸ்ரீ உமாபதி சிவாசாரியர் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் சிறந்த விற்பன்னர்.

தமிழ் நூல்கள்

சைவ சித்தாந்தத்தை விளக்கும் மெய்கண்ட சாத்திர நூல்கள் மொத்தம் 14.

அவற்றில் உமாபதி சிவாசாரியர் அருளிய நூல்கள் 8.

அவையாவன :-

சிவப்பிரகாசம்

திருவருட்பயன்

வினாவெண்பா

போற்றிப் பஃறொடை

உண்மை நெறி விளக்கம்

கொடிக்கவி

நெஞ்சு விடு தூது

சங்கற்ப நிராகரணம்

மெய்கண்ட சாத்திர நூல்கள் தவிர பல்வேறு நூல்களையும் இவர் இயற்றியுள்ளார்.

சேக்கிழார் பெருமான் அருளிச் செய்த பெரிய புராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணத்தைச் சுருக்கி திருத்தொண்டர் புராணசாரம் என்ற நூலை இவர் யாத்துள்ளார்.

அடுத்து சேக்கிழாரின் வரலாற்றை சேக்கிழார் புராணம் என்ற நூலில் கூறியுள்ளார்.

அடுத்து சிதம்பரம் கோயிலின் வரலாற்றை அற்புதமாக கோயிற் புராணம் என்று எழுதியுள்ளார். இதில் மொத்தம் 100 பாடல்கள் உள்ளன.

மேலும் திருமுறை கண்ட புராணம்,திருத்தொண்டர் புராண வரலாறு, திருப்பதிகக் கோவை, தேவார அருள்முறைத் திரட்டு, ஞான ஆசார சாத்திர பஞ்சகம் உள்ளிட்ட நூல்களையும் இவர் இயற்றி அருளியுள்ளார்.

சம்ஸ்கிருத நூல்கள்

சம்ஸ்கிருத விற்பன்னர் என்பதால் இவரது சம்ஸ்கிருத நூல்களும் பெரும் புகழைப் பெற்றுள்ளன.

பௌஷ்கராகமத்திக்குப் பௌஷ்கர சங்கிதா பாஷ்யம் என்ற பெயரில் விளக்கவுரையை இவர் எழுதியுள்ளார்.

தில்லையில் நடனமாடும் நடராஜரின் தாண்டவத்தைக் கண்டு பிரமித்து அவர் நடராஜ த்வனி மந்த்ர ஸ்தவம் என்ற நூலையும் குஞ்சிதாக்ரி ஸ்தவம் என்ற நூலையும் படைத்துள்ளார்.

ஸ்ரீ உமாபதி சிவாசாரியார்  காலம்

சங்கற்ப நிராகரணம் என்ற இவரது நூலின் அடிப்படையில் இவரது காலம் பதினான்காம் நூற்றாண்டு என்று சொல்லப்படுகிறதி.

ஸ்ரீ உமாபதி சிவாசாரியார் ஸ்துதி

இவ்வளவு பெருமை வாய்ந்த உமாபதி சிவாசாரியரைப் போற்றித் துதி செய்யும் துதிப்பாடல் இது:-

அடியார்க் கெளியன் எனத்தில்லை

    யண்ணல் அருளுந் திருமுகத்தின்

படியே பெற்றான் சாம்பாற்குப்

    பரம முத்தி அப்பொழுதே

உடலுங் கரைவுற் றடைந்திடுவான்

   உயர்தீக் கையினை அருள் நோக்காற்

கடிதிற் புரிகொற் றங்குடியார்

    கமல மலரின் கழல் போற்றி.

லண்டன் ஸ்ரீ கல்யாணசுந்தர சிவாசாரியாரின் அரும் பணி!

லண்டனில் இன்று வேத அடிப்படையிலான அனைத்து நல்ல காரியங்களையும் முன்னிட்டு நடத்துபவர் லண்டன் ஸ்ரீ கல்யாணசுந்தர சிவாசாரியார்.

கந்தபுராண பாராயணம், அதைப் பதித்தல் உள்ளிட்ட அரும் பணியை அவர் ஆற்றி அனைவராலும் மதிக்கப்படுபவர் அவர்.

உமாபதி சிவாசாரியாரின் நூல்களை ஆழக் கற்று அவற்றின் பால் தீராக் காதல் கொண்ட அவர் பல பழம் பெரும் ஓலைச் சுவடிகளை ஒப்பு நோக்கி வருகையில்  ஒரு அரிய செல்வத்தைக் கண்டார். satatatnasangraham நூலில் 100 பாடல்கள் இருக்க வேண்டிய சத சங்க்ரஹத்தில் இதுவரை கிடைக்கப் பெற்றவை 93 மட்டும் தான். ஸ்ரீ கல்யாணசுந்தர சிவாசாரியார் இது வரை கிடைக்காதிருந்த 7 ஸ்லோகங்களையும் ஒரு ஓலைச் சுவடியில் கண்டு அவற்றின் மூலம் நூலை முழுமையாக்கியுள்ளார்.

இவர் செய்யும் அனைத்துப் பணிகளும் பிரம்மாண்டமானவை; பொருளுதவி தேவைப்படுபவை. இந்த அரும் பணியில் தங்கள் பங்கையும் செய்ய விழைவோர் இவரைத் தொடர்பு கொள்ளலாம்.

tags– உமாபதி சிவம், தமிழ், சம்ஸ்கிருத நூல்கள்

***