முன்னேறுவதற்குள்ள ஆறு தடைகள்!

knocking-down-hurdles-

17.சம்ஸ்கிருத செல்வம்
ச.நாகராஜன்

மனிதன் வாழ்க்கையில் முன்னேற உள்ள தடைகள் எவை என்று ஆராயப் புகுந்தார் கவிஞர். தீவிர ஆராய்ச்சிக்குப் பின்னர் தெளிவான விடையை இப்படித் தருகிறார்:-

ஆலஸ்யம் ஸ்த்ரீசேவா சரோகதா ஜன்மபூமி வாத்ஸல்யம் I
அபிமானோ பீருத்வம் ஷட்வ்யாகாதா மஹத்வஸ்ய II

ஆறு தடைகள் ஒருவன் மஹத்தானவன் ஆவதைத் தடுக்கின்றன.
ஆலஸ்யம் – சோம்பேறித்தனம்
ஸ்த்ரீ சேவா – பெண்களுக்கு இணங்கி இருப்பது
சரோகதா – வியாதிகளுடன் இருப்பது
ஜன்மபூமி வாத்ஸல்யம் – பிறந்த இடத்தைப் பெரிதும் நேசித்திருப்பது
அபிமானோ – கர்வம்
பீருத்வம் – பயம்

இந்த ஆறு தடைகளும் தான் ஒருவனை முன்னேறாமல் தடுப்பவை என்கிறார் கவிஞர். எவ்வளவு உண்மை!
hurdles3

சோம்பேறித்தனம் இருந்தால் எதிலும் உருப்பட முடியுமா?திருவள்ளுவர் மடி இன்மை என்ற ஒரு அதிகாரத்தையே (அதிகாரம் 61) வகுத்து பத்து முத்தான குறள்களைத் தந்துள்ளார்.

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடி மடியும் தன்னினும் முந்து (குறள் 603)

ஒருவனது குடியை அழிக்கும் இயல்பினை உடைய சோம்பலை மடியிலே கட்டிக் கொண்டு திரியும் அறிவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கும் முன்னதாகவே அழிந்து விடும் என்பதே இதன் பொருள்.

“Shun idleness. It is a rust that attaches itself to the most brilliant metals” என்று வால்டேர் கூறியதை இங்கு நினைவு கூரலாம்.

பெண்களின் நேசத்தால் பிணையுண்டு இருப்பவர் வெளியில் வேலை பார்க்கச் செல்வது எப்படி?

வியாதிகளுடன் இருக்கும் ஒருவன் அதைத் தீர்க்கும் முயற்சியை மேற்கொள்ளாதவரை எந்த வேலையையாவது செய்யத் தான் முடியுமா?

பிறந்த இடத்தை விட்டு நகரப் பிடிக்காமல் அதன் மீது அதிக வாத்ஸல்யம் கொண்டிருப்பவன் வெளியில் செல்வது எப்படி?’திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்றல்லவா ஆன்றோர்கள் அறிவுரை பகர்ந்துள்ளனர்!

கர்வமும், பயமும் முன்னேற்றத் தடைக் கற்கள் அல்லவா!
நன்கு சிந்திக்கும் ஒருவன் இந்த ஆறு தடைகளையும் அகற்றி விட்டால் மஹத்தானவன் ஆவது நிச்சயம் தானே!

Hurdles_Bislett

Pictures are taken from various sites; thanks.
contact london swaminathan:- swami_48@yahoo.com
********