கேசவர், த்ரோணர், கௌரவரை வைத்து ஒரு புதிர்!

Written by S NAGARAJAN

Research Article No: 1824

Date: 24 April 2015; Uploaded in London at 8-22 am

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்பாகம் 3

2. கேசவர், த்ரோணர், கௌரவரை வைத்து ஒரு புதிர்!

.நாகராஜன்

கம்பன் ஒரு மஹா கவி. அவனைப் போல் ஒரு கவி இனி பிறப்பானா என்பது சந்தேகமே. சரஸ்வதியின் அருள் இருந்தால் மட்டுமே அப்படி ஒரு மஹாகவி இனி தமிழ் நாட்டில் பிறக்கக் கூடும்.

 

 

 அபார கற்பனை மின்னல்களை ஆங்காங்கு பளிச்சிடச் செய்து கவிதை வானில் பறந்து கொண்டே இருப்பான் அவன்.

 

உதாரணம் இந்திரஜித்தின் மாளிகை காவலர்களும் புதிர்களும். இது என்ன? இந்திரஜித்தின் மாளிகைக் காவலர்களுக்கும் புதிர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று திகைப்பு ஏற்படுகிறதல்லவா! கம்பனால் மட்டுமே இப்படிப்பட்ட திகைப்புகளைத் தர முடியும்!

 

 

அபார வீரனான இந்திரஜித்தை வெல்ல யாராலும் முடியாது. அவன் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அனைவரும் நடுநடுங்குவர். அப்படிப்பட்ட வீரனின் மாளிகையில் காவல் காப்போர் பெயருக்குத் தான் காவல் வீரர்கள்! அவர்கள் யாரைக் காவல் காப்பது? அவர்களுக்குப் பொழுதே போகவில்லையாம், என்ன செய்வது? ஆகவே அவர்கள் இரவு  முழுவதும் விழித்துத் தங்கள் பணியை ஆற்ற ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள்! அது தான் ஒருவர் புதிர்களைப் போட வேண்டியது, மற்றவர் அதை விடுவிக்க வேண்டியது. பழங்கதைகளைப் பேசிக் கொண்டே இருப்பது, இப்படி பொழுதைப் போக்கினார்களாம், அவர்கள்!

பாடலைப் பார்ப்போம்:-

 

 

ஏதி யேந்திய தடக்கையர்  பிறையெயி றிலங்க                            

மூதுரைப் பெருங்கதைகளும் பிதிர்களு மொழிவார்                        

ஓதி லாயிர மாயிர முறுவலி யரக்கர்                                          

காது வெஞ்சினக் களியினர் காவலைக் கடந்தான்

                    சுந்தர காண்டம்ஊர்தேடு படலம்பாடல் 138

 

இதன் பொருள் : சொல்லப் போனால், ஆயுதங்களை ஏந்திய அகன்ற கைகளைக் கொண்டவர்களும் பகைவரைக் கொல்ல வல்ல கோபமாகிய கள்ளை அருதியவரும் தம் பிறைகளை ஒத்த பற்கள் தெரியும்படி  பழமையாகச் சொல்லப்பட்டு வரும் பெரிய கதைகளையும் விடுகதைகளையும் தமக்குள் பேசிக் கொண்டிருப்பவருமான பல ஆயிரம் மிக்க வலிமை பெற்ற அரக்கர்கள் அமைந்த காவலை அனுமன் தாண்டி உள்ளே சென்றான்.

 

 

இதற்கு உரை எழுதிய உ.வே.சாமிநாதையர், மூதுரை – ‘பழமொழிகளும் ஆம். பிதிர்கள்வழக்க்கு அழிப்பாங்கதைகள் ; இவற்றை உறக்கம் வராதபடி உரைப்பர் என்பது பழைய உரைஎன்று விளக்குகிறார்.

இன்னொரு பிரபல உரையாசிரியரான வை.மு.கோபாலகிருஷ்ண மாச்சாரியார் பாடலின் மூன்றாம் அடியில் உள்ள முறுவலி அரக்கர்என்பதற்கு பதிலாக உணர்விலி அரக்கர் என்ற பாட பேதத்தைத் தருகிறார்.

அவரது விளக்கவுரை:-

 

 

மூதுரைமுதுமொழி; அதன் இலக்கணம் – :நுண்மையும் சுருக்கமும் ஒளி உடைமையும், மென்மையும் என்று இவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரும் , ஏது நுதலிய முது மொழியானஎன தொல்காப்பியத்தில் காண்க.

 

பெரும் கதை:- தேவாசுர யுத்தம், க்ஷீராப்தி மதநம், பூர்வீக ராக்ஷஸர் வரலாறு போல்வன.

 

பிதிர்ஒரு சமயத்தில், கம்பர் ஔவையாரை நோக்கி,                   

ஒரு காலடீ  நாலிலைப் பந்தலடீஎன்று சொல்லி, “இதன் பொருள் என்?” என்று வினாவியதும், “ஆரையடா சொன்னாயடாஎன்று விடை கூறியதும் போல்வன! (ஆரைக்கீரை முதலின் காம்புகள் நான்கு பிளவுபட்ட இலையை உடையனவாய் இருக்கும்.)

 

எதிர்ப்பார் இல்லாமையால் புதிர்களைச் சொல்லிக் காலம் போக்கினர் காவல் வீரர்கள் என்பது கம்பனின் மின்னல் கற்பனை!

இனி இப்படிப்பட்ட அரும் புதிர்கள் தமிழ் மொழியிலும் சம்ஸ்கிருத மொழியிலும் ஆயிரக் கணக்கில் உள்ளன. அவற்றைத் தொகுப்பவர் தான் இல்லை.

 

ஆக இப்படிப்பட்ட பழம் பெரும் வரலாற்றைக் கொண்டவை கவிதைப் புதிர்கள்! அதை எடுத்துக் காட்டவே மேலே உள்ள கம்பனின் பாடல் உதாரணமாகத் தரப்பட்டது!

 

மேலும் சில சம்ஸ்கிருத புதிர் கவிதைகளைக் காண்போம்.

இப்போது காண இருப்பது கூட ஸ்லோகம்என்னும் புதிர் கவிதை. இதை விடுவிப்பது சற்று சிரமமான காரியம்.

 

கேசவம் பதிதம் த்ருஷ்ட்வா த்ரோணோ ஹர்ஷசுபாகத: I                   

ருதந்தி கௌரவா: சர்வே ஹா கேசவ கதம் கத:      II

 

 

இதன் பொருள் : ஒரு சவம் (பிணம்) நீரில் விழுவதைப் பார்த்த கழுகு ஒன்று  மிக்க மகிழ்ச்சியை அடைந்ததுதனக்கு சரியான விருந்து தான் என்று! ஆனால் நரிகள் ஏமாற்றத்துடன் ஊளையிடுகின்றன – “, கேசவா, எப்படி அது இப்படிப் போய்விட்டது” –என்று!

 

இந்தப் பாடலில் கே+ சவம் = கேசவம் ஆகிறது. சவம் என்றால் பிணம்; கே என்றால் நீர். த்ரோண என்றால் கழுகு; கௌரவா என்றால் நரிகள்.

ஆனால் பாடலை முதலில் கேட்கும் போது கேசவன், த்ரோண, கௌரவா என்றவுடன் பாண்டவ, கௌரவர்களை நினைத்தும் துரோணரை மனதில் கொண்டும் புதிரை அவிழ்க்கத் தோன்றும்.

 

உண்மையான விடையைக் கேட்டவுடன் புன்முறுவல் தான் தோன்றும்!

இப்படி ஒரு வகைப் புதிரும் இது போல் உண்டு!

இது அமைந்துள்ள விருத்தம் ஆர்யா விருத்தம்.

இனி பஹிர் ஆலாப வகை புதிர் ஒன்று இது:-

 

கேசரத்ருமதலேஷு சம்ஸ்தித: கீத்ருஷோ பவதி மத்தகுஞ்சர: I

தத்தவத: சிவமபேக்ஷ்ய லக்ஷணைர் அர்ஜுன: சமிதி கீத்ருஷோ பவேத் II

 

இது அமைந்துள்ள விருத்தம் –  ரதோத்தாத விருத்தம்

 

 

இதன் பொருள் :-

மத்த யானை கேசர மரத்தின் அருகே இறந்து பட்டால் என்ன ஆகும்?

சிவனை ஆராதித்து அர்ஜுனன் போர்க்களத்தில் எப்படி போர் புரிந்தான்?

 

இதற்கான விடை :- தானவகுலப்ரமரஹிதா:

இப்படிப் பார்த்தால் முதல் கேள்விக்கு விடை கிடைக்கும்–  கேசர மரத்தில் உள்ள தேனீக்களுக்கு யானையிடமிருந்து ஒழுகும் மதம் இதமான ஒன்றாகும்.

 

தானவகுலப்ரமரஹிதா:  – என இப்படிப் பார்த்தால் இரண்டாவது கேள்விக்கு விடை கிடைக்கும்.

அரக்கர்களின் கூட்டத்திலிருந்து ஏற்படும் கவலையிலிருந்து அர்ஜுனனுக்கு விடுதலை கிடைக்கும்.

(தானவஅரக்கர்)

எப்படி தானவகுலப்ரமரஹிதா: என்ற சொற்றொடரை இரு விதமாகப் பிரித்தால் புதிர் கேள்விகளுக்கு விடை கிடைக்கிறது.

 

 

விடைகளுடன் படிப்பதால் எளிதாக ரஸிக்க முடிகிறது. கேள்வியைக் கேட்டு விடையைக் கண்டு பிடியுங்க்ள் என்றால் சம்ஸ்கிருத பண்டிதராக இருந்தாலும் இரவுத் தூக்கம் போய்விடும்!

 

*************

 

அனுமன் ராமனைக் கொன்றான் ! சம்ஸ்கிருத புதிர் !!

anjaneya,fb

By London Swaminathan
Post No. 1013; Dated 1st May 2014.

தமிழைப் போலவே சம்ஸ்கிருதமும் வளமான மொழி. ஆனால் சம்ஸ்கிருதம் தமிழைவிட 1500 ஆண்டுப் பழமையான மொழி என்பது தொல்பொருட் சின்னங்களால் நிரூபிக்கப்படுள்ளது இது பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். துருக்கி- சிரியா எல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் வேத கால தெய்வங்கள் பெயர், ரிக் வேதத்தில் உள்ள அதே வரிசையில், ஒரு உடன்படிக்கையில் இருப்பது எல்லோரும் அறிந்ததே. காஞ்சிப் பெரியவர் தனது உரையில் இதை 1932 ஆம் ஆண்டிலேயே சுட்டிக்காட்டினார்.

எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட தசரதன் கடிதங்களும் (ராமாயண தசரதன் அல்ல), கிக்குலி எழுதிய குதிரைப் பயிற்சி நூலும், இராக்-துருக்கி-சிரியா பகுதியை ஆண்ட மிட்டன்னி நாகரீக மன்னர்கள் பிரதர்தனன், தசரதன் ஆகியோர் பெயர்களும் மறுக்கமுடியாத தொல்பொருட் துறை சான்றுகளாகப் பட்டொளி வீசிப் பறக்கின்றன.

இந்தோநேசியாவில் மனிதர்கள் புகமுடியாத காடு என்று எண்ணியிருந்த போர்னியோ தீவில் மூலவர்மனின் நாலாம் நூற்றாண்டு சம்ஸ்கிருதக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதையும் காஞ்சி மாமுனிவர் தனது உபந்யாசங்களில் குறிப்பிட்டதை நாம் அறிவோம்.

வியட்நாம், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, இநதோநேஷியா பகுதிகளில் 800-க்கும் அதிகமான சம்ஸ்கிருத கல்வெட்டுகள் இருப்பதையும் அறிஞர் உலகம் நன்கு அறியும். ஆசியா கண்டம் முழுதும் சம்ஸ்கிருதக் கல்வெட்டுகள் இருப்பதையும் ஆப்பிரிக்காவில் எகிப்தில் தசரதன் கடிதங்கள் இருப்பதையும் அறிஞர் உலகம் எந்தவித ஆட்சேபணையும் இன்றி ஒப்புக்கொள்வது மகிழ்ச்சிக்குரியது.

என்னைப் போன்றோர் எழுதிய மாயா- இந்து தொடர்புகளைப் பலர் ஏற்பதில்லை. அது ஏற்கப் பட்டால் தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள மாயா, ஒலமக், ஆஸ்டெக் (ஆஸ்தீக), இன்கா நாகரீகங்களும் சம்ஸ்கிருதமே என்பதை உலகம் ஏற்கும். நிற்க.

இனி புதிருக்கு வருவோம். தமிழில் 20,000 பழமொழிகள் இருப்பதைப் போல சம்ஸ்கிருதத்திலும் பல்லாயிரக் கணக்கான பழமொழிகள் உண்டு. இது தவிர விடுகதைகளும், புதிர்களும், ஏராளம், ஏராளம். எண்ணி மாளாது. யாரேனும் ஒருவர் தமிழ் மொழி இலக்கியங்களையும் சம்ஸ்கிருத இலக்கியங்களையும் படிக்காமல் இந்தியப் பண்பாட்டை எடைபோட முன்வந்தால், அது குருடன் யானையைப் பார்த்த கதையாக முடியும். குருடர்கள் யானை பார்த்த கதையை திருமூலரும், சம்ஸ்கிருத, பாலி இலக்கியங்களும் பாடி இருப்பதை ஏற்கனவே எழுதிவிட்டேன்.

அனுமன் ராமனைக் கொன்றான்!

“ஹதோ அனூமதா ராமா, சீதா ஹர்ஷம்
உபாகதா ருதந்தி ராக்ஷசா சர்வே ஹா ஹா ராமோ ஹதோ ஹத:”

என்ற சம்ஸ்கிருத ஸ்லோகத்தை இரண்டுவிதமாகப் பிரிக்கலாம்.
ராம என்பது எல்லோரும் அறிந்த புனிதனின் பெயர். ‘ஆராம’ என்றால் தோட்டம். இந்த ஒரு சொல் தெரிந்தால் போதும். புதிரை விடுவித்து விடலாம்.

முதலில் எழுதப்பட்ட ஸ்லோகத்தின் பொருள்: அனுமன் ராமனைக் கொன்றான். சீதைக்கு மகிழ்ச்சி. ராக்ஷசர்களும் ஹா, ஹா, ராமன் கொல்லபட்டான் என்று கூத்தாடுகின்றனர்.

ஆராம என்ற சொல்லுடன் அர்த்தம் கொண்டால் கிடைக்கும் பொருள்: “அனுமன் தோட்டத்தை (அசோகவனம்) அழித்தான், சீதைக்கு மகிழ்ச்சி. ராக்ஷசர்கள், ஹா, ஹா, தோட்டம் அழிக்கப்பட்டுவிட்டது” என்று கூச்சல் இட்டனர்.

இதே போல தமிழிலும் ஏராளமான சுவைமிகு பகுதிகள் உண்டு. அவைகளைத் தனியாகக் காண்போம்.

angry ram

சம்ஸ்கிருத சிலேடை

கவி காளமேகம் பொழிந்த சிலேடைக் கவிதைகளைப் பள்ளிக் கூடத்திலேயே தமிழ்ப்பாட வகுப்பில் படித்து இருக்கிறோம். அதே போல ஒரு சம்ஸ்கிருத (ஸ்லேச) சிலேடைக் கவிதை:
பாணன் என்ற கவிஞன் காளிதாசனுக்குப் பின் தோன்றி புகழ் அடைந்தவன். அவன் எழுதிய காதம்பரி என்னும் புகழ் பாடும் சிலேடைக் கவிதை இதோ:

யுக்தம் காதம்பரீம் ஸ்ருத்வா கவயோ மௌனம் ஆஸ்ரித:
பாணத்வனாவ் அனத்யாயோ பரிதிர் ஸ்ம்ருதிர்யத:

பாண என்ற சொல்லில் இருபொருள் (சிலேடை) அமைந்துள்ளது. பாண என்பது மாபெரும் கவிஞனின் பெயர். இதற்கு ‘அம்பு’ என்ற பொருளும் உண்டு .ராம பாணம் என்ற சொல் தமிழிலும் வழக்கில் உண்டு.

kadambari
முதல் பொருள்: காதம்பரீயைக் கேட்ட மாத்திரத்தில் புலவர்கள் மௌனம் ஆகிவிடவேண்டும் என்பது சரியே ( நிசப்தமாகக் கேட்க வேண்டும் ). ஏனெனில் பாணன் கவிதை என்ற உடனேயே மற்ற கவிதைகளை நிறுத்திவிட வேண்டும் என்பது ஒரு புனித விதி ஆகும்.
அம்பு என்ற பொருள் கொண்டால் வரும் பொருள்:

காதம்பரீயைக் கேட்ட புலவர்கள் மௌனம் ஆகிவிடவேண்டும் என்பது சரியே ( நிசப்தமாகக் கேட்க வேண்டும் ). ஏனெனில் அம்பு ஒலி கேட்ட உடனேயே மற்றவைகளை நிறுத்திவிட வேண்டும் என்பது ஒரு புனித விதி ஆகும்.

போர்க்காலத்தில் அம்பு ஒலி சப்தம் வரும்போது அங்கு கவிதைக்கு என்ன வேலை?

மஹாபாரதத்தை எழுதிக் கொடுக்க பிள்ளையார் போட்ட நிபந்தனையும் அதற்கு வியாசர் போட்ட பதில் நிபந்தனையும் நாம் அனைவரும் அறிந்ததே. யக்ஷப் ப்ரஸ்நம் என்ற பகுதியில் மரதேவதை கேட்ட பல கேள்விகளுக்கு தர்மன் திறம்பட பதில் அளித்ததையும் நான் ஏற்கனவே எழுதிவிட்டேன். இவை அனைத்தும் அந்தக் காலத்தில் இந்துக்களின் அறிவு, குறிப்பாக விடுகதை, புதிர், சிலேடை விஷயங்களில் எவ்வளவு முன்னேறி இருந்தது என்பதைக் காட்டுகின்றன.

bana

contact swami_48@yahoo.com