சம்ஸ்கிருத செல்வம்–அத்தியாயம் 25
அறிவு வளரும் விதம்!
Post No.822 Date 6th February 2014
சூரியனைக் கண்டதும் நளினமான தாமரை மலர் மலர்கிறதல்லாவா! அது எப்போது தோன்றும் என்று சூரிய உதயத்திற்காக எங்குகிறது கமல மலர். இதைப் பார்த்தார் கவிஞர், அவருக்கு உடனே ஞாபகம் வருவது பண்டிதனைப் பார்த்தவுடன் மனம் மகிழும் அறிவு ஜீவி தான்! தன் மனதில் எழுந்த எண்ணத்தைக் கவிதையாகப் பொழிகிறார் இப்படி:
ய படதி லிகதி பஷ்யதி, பரிப்ரச்சதி பண்டிதானுபாஸ்ரயதே I
தஸ்ய திவாகர-க்ரணைர் நளினிதளாமிவ விகாஸயதே புத்தி: II
இதன் பொருள்:
யார் ஒருவன் எழுத வல்லவனோ (லிகதி), எவன் எதையும் உற்றுக் கவனிப்பவனோ (பஷ்யதி), எவன் ஒருவன் எதையும் ஆராயும் மனப்பான்மை கொண்டவனோ (பரிப்ரச்சதி) அவன் பண்டிதர்களுடைய சகவாசத்தால் (பண்டிதான் உபாஸ்ரயதே) மனம் மிகவும் மகிழ்கிறான். அது எது போல இருக்கிறது என்றால், தாமரை மலரின் இதழ்கள் (உயிரைத் தரும்)திவாகரனின் கிரணங்களைக் கண்டவுடன் மலர்வது போல இருக்கிறது!
அறிவு எப்படி அதிகரிக்கிறது என்பதை இன்னொரு கவிஞரின் பாடல் தெரிவிக்கிறது.
ஆசார்யாத் பாதமேகம் ஸ்யாத் பாதம் ஸப்ரஹ்மசாரிபி: I
பாதம் து மேதயா ஞேயம் சேஷம் காலேன பச்யதே II
அறிவின் ஒரு பகுதியே ஆசார்யரிடமிருந்து பெறப்படுகிறது (ஆசார்யாத் ஏகம் பாதம் ஸ்யாத்)
இன்னொரு பகுதி கூடப் படிக்கும் சக தோழர்களிடம் விவாதிப்பதால் உண்டாகிறது. (ஏகம் பாதம் ச:ப்ரஹ்மசாரிபி:)
மூன்றாவது பகுதியோ சுயமாகப் பிரகாசிக்கும் ஒருவனது அறிவிலிருந்து பெறப்படுகிறது (ஏகம் பாதம் து மேதயா ஞேயம்)
மீதிப் பகுதியோ காலம் செல்லச் செல்ல உலகின் தொடர்பினால் பெறப்படுகிறது (சேஷம் காலேன பச்யதே).
இந்த நான்கு பகுதியுமே முக்கியம் தான்; இவை அனைத்தும் இணையும் போது ஒரு மேதை உருவாகிறான். ஆசார்யரும் அருமையாக இருந்து சக மாணவர்களும் புத்திசாலிகளாக இருந்து இயல்பினாலேயே அறிவு பிரகாசித்து, உலகியல் தொடர்பு நல்லறிவை இன்னும் அதிகரிக்குமானால் அப்படிப்பட்டவனுடைய மேதைத் தன்மை சமுதாயத்திற்கு எவ்வளவு நலத்தை உண்டாக்கும்!
இதை செய்யவே பண்டைய நாட்களில் குரு குலங்கள் நிறுவப்பட்டன.
ஆங்கிலேயன் வகுத்த குமாஸ்தா படிப்பு வந்தவுடன் இந்த மேதைத் தன்மை அழிந்து விட்டதே என்று வருத்தம் தான் பட வேண்டும். இன்றைய நாட்களில் இந்த நான்கு வகை அறிவையும் நாமே முயன்று தான் பெற வேண்டும்.
Compiled by S. Nagarajan
Contact us for more of the same: swami_48@yahoo.com
***************
picture is used from another website;thanks.
You must be logged in to post a comment.