18-ம் நாள் போர்: சல்ய பர்வம் தரும் துர்நிமித்தங்கள்!(Post.8746)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8746

Date uploaded in London – – 28 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

மஹாபாரதம் அறிவோம்!

பதினெட்டாம் நாள் போர்: சல்ய பர்வம் தரும் துர்நிமித்தங்கள்!

ச.நாகராஜன்

1

கோரமான மஹாபாரதப் போர் இறுதி கட்டத்தை அடைந்து விட்டது.

பதினெட்டாம் நாள் போர்.

பீஷ்மர் கொல்லப்பட்டு விட்டார். துரோணர் கொல்லப்பட்டு விட்டார். கர்ணனும் கொல்லப்பட்டு விட்டான்.

அலறி அடித்தவாறே வந்த ஸஞ்சயன் திருதராஷ்டிரனிடம் நடந்த விவரங்களைக் கூறுகிறான்.

யாரை சேனாபதியாக ஆக்குவது என்று துரியோதனன் அஸ்வத்தாமாவிடம் யோசனை கேட்க அஸ்வத்தாமா, சல்யனை சேனாதிபதி ஆக்கலாம் என்று கூறுகிறார்.

“குலத்தாலும் உருவத்தாலும் தேஜஸினாலும் கீர்த்தியாலும் ஐஸ்வர்யத்தாலும் நிறைந்தவனும், எல்லாக் குணங்களும் நிறைந்தவனுமான இந்தச் சல்யன் நமக்குச் சேனாபதியாக ஆகட்டும். நன்றி அறிவுள்ள இந்தச் சல்யன் தன் மருமக்களை விட்டுவிட்டு நம்மை வந்தடைந்தான். இவன் பெரிய சேனையை உடையவன். நீண்ட கைகளை உடையவன். வேறொரு ஸ்கந்தருக்கு நிகரானவன். ஜயிக்கப்படாத சுப்ரமண்யரை எப்படி சேனாபதியாகக் கொண்டு தேவர்கள் வெற்றி அடைந்தார்களோ அதே போல இந்த அரசனை சேனாபதியாகக் கொண்டு  நம்மால் ஜயம் அடையப்படட்டும்” என்று இவ்வாறு அஸ்வத்தாமன் கூற துரியோதனன் சல்யனை சேனாபதியாக இருக்க கை குவித்து வேண்டுகிறான்.

சல்யன் அதை ஏற்றுக் கொள்கிறான்.

யுத்தம் ஆரம்பிக்கிறது.

தர்மர் மத்ர ராஜனான சல்யனை எதிர்கொள்கிறார்.

அப்போது பற்பல உருவங்கள் உள்ள நிமித்தங்கள் பலவாறு தோன்றின.

மலைகளுடன் கூடிய பூமி சத்தத்தை வெளியிட்டுக் கொண்டு அசைந்தது.

தண்ட சூலங்களுடன் கூடியவைகளும், ஜொலிக்கும் நுனிகளை உடையவைகளும், நாற்பக்கத்திலிருந்தும் பிளவுபடுகின்றவைகளுமான உற்கைகள்  சூரிய மண்டலத்தைத் தாக்கிக் கொண்டு ஆகாயத்திலிருந்து பூமியில் விழுந்தன.

மிருகங்களும், எருமைக்கடாக்களும், பட்சிகளும் அப்போது கௌரவர் சேனையை பல தடவை இடப்பக்கமாகச் சுற்றி வந்தன.

பூமி முழுவதையும் அனுபவிக்கப் போவதைக் காட்டும் விதமாக பாண்டவர்களின் முதல்வரான தர்மரை நோக்கி சுக்ரன், செவ்வாய், புதன் ஆகிய மூன்று கிரகங்களும் அவரது ஜாதகத்தில் லக்னத்திலிருந்து ஏழாவது இடத்தில் இருந்து கொண்டு அவருக்குப் பலத்தை உண்டுபண்ணுவையாக அமைந்திருந்தன.

இந்த மூன்று கிரகங்கள் பாண்டுபுத்திரர்களுக்குப் பின்னாலும் கௌரவர்களுக்கு எதிரிலும் இருந்தன.

சஸ்திரங்களின் நுனிகளில் ஜ்வாலை தோன்றியது. அது கண்களைக் கூசும்படி செய்து கொண்டு பூமியில் விழுந்தது.

காக்கைகளும், கோட்டான்களும், தலைகளிலும் கொடிகளிலும் அதிகமாக உட்கார்ந்தன.

2

ஒன்பதாம் பர்வமாக மஹாபாரதத்தில் அமைந்துள்ள சல்ய பர்வத்தில் பத்தாவது அத்தியாயத்தில் இந்த துர்நிமித்தங்களைப் பார்க்கிறோம்.

ஒரு விஷயத்தில் வெற்றி, தோல்வியைக் காண்பிப்பவை நம்மைச் சுற்றி நடக்கும் நல்ல அல்லது கெட்ட விஷயங்களே என்பதை இந்த அத்தியாயம் சுட்டிக் காட்டுகிறது.

துர் நிமித்தங்கள் என்னென்ன என்பதையும் பார்க்கிறோம். பூமி அசைதல் என்றால் பூமி அதிர்ச்சி அல்லது பூகம்பம் ஆகும்.

பட்சிகள், மிருகங்கள் இடப்பக்கமாகப் போகக் கூடாது.

கிரகங்களின் சேர்க்கை நல்ல பலத்தைத் தர வேண்டும்.

இப்படிப்பட்ட பல நிமித்தங்களை இந்த அத்தியாயம் தெரிவிக்கிறது.

பண்டைய காலத்திலேயே நல் நிமித்தங்கள் மற்றும் துர் நிமித்தங்கள் பற்றி இயற்கையைக் கூர்ந்து கவனித்த நமது அறிஞர்கள் அவற்றைத் தொகுத்து சாஸ்திரமாகத் தந்தனர்.

மஹாபாரதத்தில் இப்படி நல் நிமித்தங்கள் மற்றும் துர் நிமித்தங்கள், பக்ஷி பாஷைகள், சாமுத்ரிகா லக்ஷணங்கள் உள்ளிட்ட பல அபூர்வ கலைகளைக் காண்கிறோம்.

இவற்றைத் தொகுத்துப் படித்தால் இயற்கை நமக்குக் கூறும் கலைகள் பலவற்றையும் உள்ளது உள்ளபடி அறியலாம்.

tags– சல்ய பர்வம் , துர்நிமித்தம் 

***