‘நல்லோர்கள் எங்கே பிறந்தாலுமென்?’ – நீதி வெண்பாவும் மனு நூலும் (Post No.3832)

Written by London swaminathan

 

Date: 19 APRIL 2017

 

Time uploaded in London:- 21-51

 

Post No. 3832

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com 

 

மனு தர்ம சாஸ்திரத்தில் ஒரு அழகான பொன்மொழி உள்ளது. கீழ் ஜாதி மேல் ஜாதி பற்றியெல்லாம் கவலைப் படாதே.

 

“விஷத்திலிருந்தும் அமிர்தம் கிடைக்கும்;

குழந்தையிடமிருந்தும் புத்திமதி கிடைக்கும்;

எதிரியிடமிருந்தும் நற்குணத்தைக் கற்கலாம்;

தூய்மையற்ற பொருள்களிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கலாம்”

மனு ஸ்ம்ருதி 2-239

 

“பெண்கள், நகைகள், கல்வி, நீதி/சட்டம்,

தூய்மைபெறுதல், நல்ல அறிவுரை, கைவினைப் பொருட்கள்

ஆகியவற்றை எவரிடமிருந்தும் ஏற்கலாம்”.

மனு ஸ்ம்ருதி 2-240

 

“அரிய சந்தர்ப்பத்தில், பிராமணர் இல்லாதவரிடத்தும் வேதத்தைக் கற்கலாம். அவ்வாறு கற்கும் வரை, அவரைக் குருவாகக் கருதி அவர் பின்னால் கைகட்டி, வாய் புதைத்து மரியாதையுடன் செல்லலாம்”.

மனு ஸ்ம்ருதி 2-241

 

இதையே ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனும் புற நானூற்றில் சொன்னார் (183)

 

“வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,

மேற்பால் ஒருவனும் அவன் கண் படுமே”

 

பொருள்:-

“நான்கு ஜாதிகளில்,  கீழ்ஜாதிக்காரன் ஒருவன் கற்றறிந்த மேதாவியானால் மேல் ஜாதிக்காரனும் அவனிடம் போய்க் கற்கலாம்” (புறம்.183)

 

அதாவது 4 ஜாதிகளில், கற்றுத் தேர்ந்த சூத்திரனிடம் பிராமணனும் கற்கலாம் என்பது இதன் பொருள்

 

இதை நீதி வெண்பா வேறு வழியில் அழகாகச் சொல்லும். உலகில் உயர்ந்த பொருட்களாகக் கருதப் படும் 11 பொருட்களைப் பாருங்கள். அவை , கிடைக்கும் இடங்கள் உயர்ந்தவை அல்ல; அப்படியும் அதனைப் போற்றுகிறோம். அது போலத்தான் மேலோர்கள்/ சான்றோர்கள் எங்கும் தோன்றுவர்.

 

காந்தி, சத்ய சாய் பாபா போன்றோர் ஒரு சிறு கிராமத்தில் ஊர் பேர் தெரியாத தாய் தந்தையருக்குப் பிறந்தனர். ஆயினும் அவர்கள் பிறந்த இடமும் பெற்றோர்களும் வணக்கத்திற்குரியோர் ஆயினர். மஹாபாரதத்தில் கசாப்புக் கடைக்காரன் தர்ம வியாதன், ராமாயணத்தில் சபரி, குகன் ஆகியோர் காலத்தாலழியாத கவின்மிகு காவியத்தில் இடம்பெற்றுவிட்டனர்.

 

வள்ளுவனும் செப்புவது அஃதே

 

மேற்பிறந்தாராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்திலர் பாடு – குறள் 409

 

பொருள்:

மேல் ஜாதியில் பிறந்தவராக இருந்தாலும், கல்லாதவராக இருந்தால் கீழ்ஜாதியில் பிறந்து கல்விமானாக விளங்குவோர் போல பெருமை பெற முடியாது

நீதி வெண்பா சொல்லும் 11 பொருட்கள்:-

 

 

தாமரைபொன் முத்துச் சவரங்கோ ரோசனைபால்

பூமருதேன் பட்டுப் புனுகுசவ்வா – தாமழன்மற்

றெங்கே பிறந்தாலு மெள்ளாரே நல்லோர்கள்

எங்கே பிறந்தாலு மென்

நீதிவெண்பா 1

 

பொருள்:-

தாமரைப் பூவும் தங்கமும் முத்தும் சாமரையும் கோரோசனையும் பாலும், அழகிய மணமுள்ள தேனும், பட்டும் புனுகும் சவ்வாதும் எரியும் நெருப்பும் — ஆக இப்பதினொன்றும் — எவ்வளவு தாழ்ந்த இடத்திலிருந்து கிடை த்தாலும் மக்கள் இகழ மாட்டார்கள் ஆதலால் நல்லவர்கள் எந்த இனத்தில் எந்த இடத்தில் பிறந்தாலும் அதனால் என்ன?

(தாழ்வு உண்டாகாது)

தாமரை சேற்றில் விளையும்;

தங்கம் மண்ணில் கிடைக்கும்;

முத்து, சிப்பிப் பூச்சியின் வயிற்றில் பிறக்கும்;

சாமரம் என்பது ஒரு விலங்கின் மயிர்/ முடி;

கோரோசனை மாட்டின் வயிற்றில் கிடைக்கும்;

பால், பசுவின் மடியிலிருந்து கறக்கப்படும்;

தேன், மெழுகு போன்ற அடையிலிருந்து கிடைக்கும்;

பட்டு, பட்டுப் புழுவின் நூற்பு;

புனுகு, ஒரு பூனையின் அழுக்கு;

சவ்வாது மானிடத்திலிருந்து   கிடைக்கும்;

நெருப்பை, தாழ்ந்த கட்டையை எரித்தும் பெறலாம்;

அது போலவே நல்லோரும் எங்கும் பிறப்பர்.

 

–Subham–