ஐன்ஸ்டீன் ‘காப்பி’ அடித்தாரா?

india eistein

Article No.2024

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 28  July 2014

Time uploaded in London : 10-16 am

இயற்பியலில் (பௌதீகம்) மிகவும் முக்கியமான சார்பியல் கோட்பாட்டைக் (Theory of Relativity) கண்டுபிடித்து வெளியிட்டவர் ஆல்பெர்ட் ஐன்ஸ்டைன் (ஜெர்மன் மொழியில் அவருடைய பெயர் ‘ஒரு கல்’. ஐன் = ஒன்று, ஸ்டைன்=கல்/ஸ்டோன்.

இவருக்கு இப்பேற்பட்ட ஒரு கொள்கை மனதில் உதித்தது எப்படி? இந்து மதத்தின் தாக்கம் காரணமா?

எதையும் ஒருவர் கண்டுபிடித்தபின்னர் “எங்களுக்கு அன்றே தெரியும் இது” – என்று சொந்தம் கொண்டாடுவது நியாயம் இல்லைதான். இருந்த போதிலும் காரண காரியங்களை ஆராய்வதில் தவறே இல்லை.

காலம் (Concept of TIME) – என்பது பற்றி மேலை நாட்டினருக்கு, பழங் காலத்தில் கொஞ்சமும் விஞ்ஞான பூர்வ அணுகுமுறை கிடையாது.உலகமே கி.மு.4004–ல் தோன்றியது என்ற கிறிஸ்தவ மதப் பிரசாரத்துக்கு ஏற்றபடி எல்லாவற்றையும் எழுதிவந்தனர்.

நாமோ உலகம் வியக்கும் கொள்கைகளைப் புராணத்தில் எழுதி வைத்தோம். ‘த்ரிகால ஞானிகள்’ என்பவர்கள் முக்காலத்தையும் பார்க்க வல்லவர்கள் என்று எடுத்துக் காட்டுகளுடன் காட்டினோம். ஒருவன் மலை உச்சியில் ஏறி நின்றுகொண்டு ஓடும் ஒரு நதியைப் பார்த்தால், எப்படி ஆற்றில் “சென்ற” தண்ணீர், “செல்லுகின்ற” தண்ணீர், “செல்லப்போகின்ற” தண்ணீர் ஆகிய மூன்றையும் பார்ப்பானோ அது போல, முனிவர்கள் காணமுடியும் என்று உணர்த்தினோம். ஆனால் நதிக்கரையில் நிற்பவனுக்கு “அப்பொழுது ஓடும் தண்ணீர்” (நிகழ்காலம் Present ) மட்டுமே தெரியும். இதே போல நாம் எப்படி டேப்ரிகார்டரில் அல்லது வீடியோ ரிகார்டரில் “பாஸ்ட் Fஆர்வர்ட்” Fast forward, “ரீவைண்ட் Rewind” செய்து எப்படி பார்க்கிறோமோ அது போல் சந்யாசிகளும் காலம் என்னும் விஷயத்தில் செய்ய முடியும் – என்றும் சொல்லிக் கொடுத்தோம்.

albert-ajnstajn-velika

பகவத் கீதையில் விஸ்வரூப தரிசனம் என்னும் அத்தியாயம் இதை மெய்ப்பிக்கிறது. நிகழப் போகும் நிகழ்ச்சிகளை அர்ஜுனனுக்கு முன்கூட்டியே காட்டிவிடுகிறான் கண்ணபிரான். இப்பொழுது கருந்துளைகள் (BLACKHOLE பிளாக் ஹோல்), ஜோடியான பிரபஞ்சம் ( PARALLEL UNIVERSE பாரல்லல் யுனிவெர்ஸ்) என்னும் விஷயங்கள் பற்றி வியப்பான செய்திகள் வெளியாகி வருகின்றன. பகவத் கீதை விஸ்வரூப தர்சன யோகம் இவைகளை எல்லாம் விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது. பிளாக் ஹோலில் மஹத்தான வேகத்தில் எல்லாப் பொருட்களும் உள்ளே இழுகப்பட்டு மாயமாய் மறைவது போல விஸ்வரூபத்தின் வாயில் படைகள் அனைத்தும் மஹத்தான வேகத்தில் நுழைந்து மறைகின்றன.

இப்படி பகவத் கீதைக்கும், பிளாக் ஹோலுக்கும் முடிச்சுப் போடுவது, அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் முடிச்சுப்போடுவது போலத் தோன்றலாம் அல்லது கோகுலாஷ்டமிக்கும் குலாம்காதருக்கும் முடிச்சுப்போடுவது போலத் தோன்றலாம். அது சரியல்ல. நான் தான் இப்படி முதலில் செய்வதாக நினைக்காதீர்கள். முதல் அணுகுண்டு வெடித்தைப் பார்த்தவுடன் அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படும் ராபர்ட் ஓப்பன்ஹைமரும் பகவத் கீதை ஸ்லோகத்தைச் சொல்லி வியந்தார் (ROBERT OPPENHEIMER, Theoretical Physicist); அந்த ஸ்லோகம் இதோ…….

“வானத்தில் ஆயிரம் சூரியன்களின் பிரகாசம் ஒரே நேரத்தில் நேரத்தில் உதிக்குமானால் எவ்வளவு பிரகாசம் இருக்குமோ அவ்வளவு பிரகசத்தில் விஸ்வரூபம் தோன்றியது” (கீதை 11-12)

திவி சூர்ய சஹஸ்ரஸ்ய பவேத் யுகபதுத்திதா

யதி பா: ஸத்ருசீ ஸா ஸ்யாத் பாஸஸ் –தஸ்ய மஹாத்.

இப்பொழுது ஐன்ஸ்டீன் – இந்துமத நூல்கள் தொடர்பு  பற்றிய இரண்டு தடயங்களைக் காண்போம்:

usa e=mc2

தடயம் 1

ரவீந்திரநாத் தாகூர் உள்பட பல இந்துமதக் கவிஞர்களையும் அறிஞர்களையும் ஐன்ஸ்டீன் சந்தித்து அளவளாவியிருக்கிறார். அவருடைய நூல்நிலையத்தில் ப்ரம்ம ஞான சபையினர் வெளியிட்ட ‘தி ஸீக்ரெட் டாக்ட்ரைன்’ (The Secret Doctrine by Theosophical Society) என்னும் புத்தகம் இருந்தது. இது இந்துமத நூல்களை அவர் விரும்பிப் படிக்கும் பழக்கத்தைக் காட்டுகிறது. ஆனால் இதில் சார்பியல் கோட்பாட்டுக்கான மூலம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தபோதிலும் நமது நூல்களைப் படித்தால் சார்பியல் கொள்கையை உருவாக்கத் தேவைப்பட்ட Lateral Thinking “லேடரல் திங்கிங்”- ‘பன்முக சிந்தனை’ கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

தடயம் 2

பெரியோர்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள் என்ற பழைய ஆங்கில நூல் ஒன்றில் ஐன்ஸ்டீன் சொன்னதாக உள்ள கதை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட, உலகிலேயே மிகப்பெரிய கதைத் தொகுப்பான கதாசரித் சாகரத்தில் இருக்கிறது. ஆக ஐன்ஸ்டீனுக்கு நம்முடைய சம்ஸ்கிருத நூல்கள் அத்துபடி என்பது இதிலிருந்து உள்ளங்கை நெல்லிக் கனி என விளங்கும். இதோ அந்தக் கதையை ஐன்ஸ்டீன் பயன்படுத்தும் ஒரு சுவையான நிகழ்வு:-

ஐன்ஸ்ட்டினை விருந்துக்கு அழைத்த ஒருபெண்மணி, ‘சார்பியல் கோட்பாட்டை’ விளக்கும் படி ஐன்ஸ்டீனை கேட்டுகொண்டார். உடனே ஐன்ஸ்டீன் சொன்னார்:

“பெண்ணே! நான் ஒரு நாள், கண் தெரியாத ஒரு நண்பருடன் கடும் வெய்யிலில் நடந்து கொண்டிருந்தேன். எனக்கு கொஞ்சம் குடிப்பதற்குப் பால் வேண்டுமே – என்றேன்.

அந்தக் குருடர் கேட்டார்: பாலா, அப்படியானால் என்ன?

அதான், வெள்ளை நிற திரவம்.

திரவம் எனக்குத் தெரியும். ஆனால் வெள்ளை என்றால் என்ன?

அதுதான்; கொக்கு என்னும் பறவையின் சிறகுகளின் நிறம்.

ஓ, கொக்கின் இறகுகள் எனக்குத் தெரியும். ஆனால் கொக்கு எப்படி இருக்கும்?

அதுதான், வளைந்த கழுத்துள்ள பறவை – என்றேன்.

கழுத்து எனக்குத் தெரியும். ஆனால் வளைந்த என்றால் புரியவில்லையே என்றார் அந்த அந்தகர்.

உங்கள் கைகளைக் கொடுங்கள் என்று சொல்லி, ஒரு கையை நன்கு நீட்டினேன். இதுதான் ‘நீட்ட வாக்கு’ என்று சொல்லிவிட்டு அவர் கையைக் கொஞ்சம் முறுக்கியும் மடக்கியும் வளைத்துக் காட்டி இப்படித்தான் இருக்கும் கொக்கின் வளைந்த கழுத்து என்றேன்.

ஓ! எனக்கு பால் என்றால் என்ன என்று தெரிந்துவிட்டது என்றார் அந்த அந்தகர்.

eistein quote

(உலகிலுள்ள எல்லாக் கதைகளுக்கும் மூலம் சம்ஸ்கிருதத்திலுள்ள, கதாசரித் சாகரம் (கதைக்கடல்) தான். இதிலிருந்தே அராபிய இரவுக் கதைகள் முதலியன வந்தன. பஞ்ச தந்திரக் கதைகள், வேதாளம்-விக்ரமாதித்தன் கதைகள், கதாசரித் சாகரம் (கதைக்கடல்) ஆகிய மூன்றும்தான் வெவ்வேறு உருவில் ‘காமிக்’ கதைப் புத்தகங்களாகவும் “ஹாரி பாட்டர்” கதைகளாகவும் வருகின்றன! சம்ஸ்கிருதம் படித்தோருக்கு எதுவுமே புதுமை இல்லை.

ஷேக்ஸ்பியரின் 37 நாடகங்களுக்கும் கூட சம்ஸ்கிருதக் கதைகளே மூலம். ஆனால், அவர் சம்ஸ்கிருதத்தைக் காப்பி அடித்தார் என்று நான் சொல்ல வரவில்லை. ஒரு மனிதன் எப்படியெல்லாம், எல்லா விஷயக்களைப் பற்றியும் சிந்திக்க முடியுமோ அவை அத்தனையையும் சம்ஸ்கிருதத்தில் முன்னமேயே எழுதிவிட்டனர். பின்னர் வந்தவர்கள் அதில் ஒன்றிரண்டு விஷயங்களைப் பயன்படுத்தி தங்களுடைய – சொந்த சரக்குகளையும்- கற்பனையையும்—சொற்சிலம்பத்தையும் சேர்த்துப் பயன்படுத்தி புகழ் எய்தினர் என்றால் தவறில்லை.

அடுத்த ஒரு கட்டுரையில் ஐன்ஸ்டீன் வாழ்வில் நடந்த சில சுவைமிகு சம்பவங்களைத் தருவேன்.

–சுபம்—