அற்புதப் பெண்மணி அருந்ததி!

Arundhati_(1994)
Vasistha and Arundhati in painting ( Picture from Wikipedia)

ஆய்வுக் கட்டுரை எழுதியவர்- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 1131; தேதி—26 ஜூன் 2014.

N.B. If you want to reproduce this article, please email me for permission. You must get written permission from me for each and every article separately. swami_48@yahoo.com

“அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல்” என்பது தமிழர்களின் திருமணச் சடங்கின் ஒரு பகுதி. இதில் அருந்ததி பார்த்தல் என்பது என்ன?

ஒவ்வொரு மணமக்களும் கல்யாணம் நடந்த அன்று இரவு சாந்தி முஹூர்த்த (முதல் இரவு) அறைக்குள் நுழைவதற்கு முன் கற்புக்கரசி அருந்ததி நட்சத்திரத்தைக் காணவேண்டும். எதற்காக?

“அருந்ததி போல கற்புக்கரசியாக வாழ்” என்று மணமகளுக்குச் சொல்வதற்காக இந்தச் சடங்கு. அது என்ன? பெண்களுக்கு மட்டும்தானா கற்பு? ஆண்களுக்குக் கிடையாதா? என்ற கேள்வி பலர் மனதில் எழும்.

ஆண்களுக்கும் இராம பிரான் போல
“இந்த இப்பிறவியில் சிந்தையாலும் இருமாதரைத் தொடேன்” –

என்ற கற்பு நெறியைத்தான் சான்றோர் வழங்கினர். ஆனால் ஒரு பெரிய வேறுபாடு உண்டு. ஆண்கள் கற்பு நெறி தவறினால் உலகம் தலைகீழாக மாறாது. ஆனால் பெண்கள் எல்லோரும் தன் கடைக் கண் பார்வையை வீசினாலேயே போதும் உலகம் தறிகெட்டுப் போகும். ஆகையால்தான் பெண்கள் கற்புநெறி வலியுறுத்தப்படும். தறிகெட்டு ஓடும் ஆண்களின் மனதுக்கு அணை போடுவது பெண்களின் கற்பு நெறி என்பதால்தான் மனு முதல் வள்ளுவன் வரை எல்லோரும் பெண்கள் கற்பை மட்டும் வலியுறுத்துவர்.

யார் இந்த அருந்ததி?
வடக்கு வானத்தில் ஏழு நட்சத்திரங்களைக் காணலாம். எதிலும் கடவுளைக் காணும் இந்துக்கள் மட்டும் இதை சப்தரிஷி மண்டலம் என்று அழைத்தனர். சப்த என்றால் ஏழு என்று பொருள். அத்ரி, ப்ருகு, குத்ச, வசிஷ்ட, கௌதம, காஸ்யப, ஆங்கிரசர் ஆகிய 7 ரிஷிகள் உலக மக்கள் இனத்தைத் தோற்றுவித்த முதல் எழுவர் ஆவர்.

பிராமணர்கள் நாள்தோறும் மும்முறை செய்யும் அந்திப் பொழுது நீர்க்கடனில் (ஸந்தியா வந்தனம்) இந்த எழுவரையும் தொழுவர். இதை சங்க இலக்கிய நூலான நற்றிணைப் பாடலும் உறுதி செய்யும். தமிழர்கள் அனைவரும் இந்த ஏழு நட்சத்திரங்களையும் தொழுததை நற்றிணை 231 பாடல் வரியில் காணலாம்:–
கைதொழும் மரபின் எழுமீன் போல – (இளநாகனார் பாடியது).

வேறு பல காலாசாரங்கள் இந்த ஏழு விண்மீன்களை பெருங்கரடிக் கூட்டம், பெரிய வண்டி, மனிதனின் தொடை, பட்டம், கரண்டி, உழும் ஏர், ( Ursa Major, Great Bear, Big Dipper, Plough, Thigh, Wagon) என்றெல்லாம் வருணித்தன. அவைகள் இந்துக்கள் அளவுக்கு அறிவு முதிர்ச்சி பெறாத கிரேக்க, எகிப்திய, ரோமானிய நாகரீக வகையறாக்கள்!

arnhati2

அருந்ததி என்பவள் கர்தம ரிஷியின் மகள். ஏழு ரிஷிகளில் ஒருவரான வசிட்டனின் மனைவி– உலக மஹா உத்தமி– கற்புக்கு அரசி– வசிஷ்டர் எவ்வளவோ திட்டியும் “கணவனே கண்கண்ட தெய்வம்”– என்று வாழ்ந்தவள். ஒருமுறை மற்ற ஆறு ரிஷிகளின் மனைவியர் அக்னி (பகவான்) மீது காதல் கொண்டனர். கார்த்திகேயனுக்கு பாலூட்டினர். ஆனால் அருந்ததி மட்டும் கற்பு நெறி வழுவாமல் அந்தக் கூட்டத்தில் சேரவில்லை. ஆகையால் அவள் எல்லோரையும் விட உயர்ந்து நின்றாள் – என்பது புராணம் முதலியவற்றில் கிடைத்த செய்தி. முருகனுக்குப் பாலூட்டிய அப்பெண்கள் அறுவரும் கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் ஆயினர்.

உலகின் முதல் சட்ட நிபுணன் மனு மட்டும் வேறு ஒரு செய்தி சொல்கிறார். “கீழ்ஜாதியில் பிறந்த அக்ஷமாலா வசிஷ்டரின் மனைவியாக ஆகவில்லையா?” — ( மனு ஸ்மிருதி 9-23 ) என்று கூறுகிறார் (கணவன் அந்தஸ்து மூலம் மனைவியும் பெயர் வாங்க முடியும் என்ற தொனியில் கூறியது இது ). மஹாபாரதம் (1-224-27/29) இந்தக் கதையை உறுதி செய்கிறது. எது எப்படியானாலும் அவள் கற்புத் தெய்வம் என்பதில் எல்லோருக்கும் உடன் பாடே.

சங்கத் தமிழ் இலக்கிய நூல்கள் அவர்தம் புகழ் பாடுகின்றன. அதைத் தொடர்ந்து எழுந்த சிலப்பதிகாரம், திரிகடுகம் போன்ற நூல்களும் அருந்ததியின்ன் புகழை விதந்து ஓதுகின்றன. ஆக 2000 ஆண்டுகளுக்கு முன்னர், எல்லாத் தமிழ் பெண்களும் அறிந்த ஒரே பெண் அருந்ததி.

சிலப்பதிகாரம் வானளாவப் புகழும் கற்புக்கரசியான கண்ணகியின் பெயர் சங்கத் தமிழ் நூல்களில் யாண்டும் காணோம்! ஒரே ஒரு மறைமுகக் குறிப்பு மட்டுமே உண்டு.

LEO_1.TIF
Sapta Rishi Constellation

இதோ தமிழர்கள் வணங்கிய வடக்கத்திப் பெண் அருந்ததி:—
1)“வடமீன் புரையும் கற்பின் மடமொழி அரிவை” (புறநானூறு 122)
மலையமான் திருமுடிக்காரியின் மனைவி பற்றி கபிலர் பாடிய பாடல் இது. உனது மனைவி வடமீன் (அருந்ததி) போன்று (புரையும்) கற்பிற் சிறந்தவள். (மடமொழி அரிவை= இனிய சொற்களை உடைய பெண்).

2)“அருந்ததி அனைய கற்பின் “(ஐங்குறுநூறு 442, பேயனார் பாடிய பாடல்)
3)விசும்பு வழங்கும் மளிருள்ளும் சிறந்த செம்மீன் அனையள் (பதிற்றுப்பத்து 31—27/28)
பொருள்:– வான உலகத்தில் திரியும் தெய்வப் பெண்களில் சிறந்தவளான புகழ்மிகு விண்மீன் அருந்ததிக்கு நிகரானவள்.

எந்தக் கற்புக்கரசியைப் புகழ்ந்தாலும் அவளை இப்படி அருந்ததியோடு ஒப்பிடுதல் தமிழர்தம் மரபு.
4)பெருநல் வானத்து வடவயின் விளங்கும்
சிறுமீன் புரையின் கற்பின் நறுநுதல் (பெரும்பாணாற்றுப்படை 302-303)

5)வடமீன் போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள் (கலித்தொகை 2—21)

6)கடவுள் ஒருமீன் சாலினி (பரிபாடல் 5).

7)தீதிலா வடமீனின் திறம் இவள் திறம் (சிலப்பதிகாரம் 1-27)
8)சாலி ஒருமீன் தகையாளை — (சிலப்பதிகாரம்)
9)அங்கண் விசும்பின் அருந்ததி அன்னாளை (சிலப்பதிகாரம்)
சிலப்பதிகாரத்தில் கண்ணகியை வருணிக்கும் இளங்கோ அடிகள், அவளை அருந்ததிக்கு ஒப்பீட்டுப் பாடிய வரிகள் இவை.

கடவுளையே கும்பிடாமல் கணவனை மட்டும் கும்பிடும் பத்தினிப் பெண் ‘பெய்’ — என்று சொன்னால் மழை பெய்யும் என்று சொன்னானே வள்ளுவன். அந்த வகையைச் சேர்ந்தவள் அருந்ததி.
தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் எனப் பெய்யும் மழை — (திருக்குறள் 55)

star arndhati

கம்பன் போடும் சக்கைப் போடு
இவர்களுக்கு எல்லாம் ஒரு படி மேலே போய்விட்டான் கவிச் சக்ரவர்த்தி கம்பன்!! அக்ஷமாலா என்னும் கீழ் ஜாதிப் பெண் உயர்ந்தது, வசிஷ்டரைச் சேர்ந்ததனாலே என்றான் மனு. ஆனால் கம்பனோ வசிட்டனுக்குப் புகழ் கிடைத்தது அருந்ததியினாலே என்னும் தொனியில் வசிட்ட முனிவன் பெயரைச் சொல்லாமல் “அருந்ததி கணவன் என்கிறான்!!

ராமனுக்கும் சீதைக்கும் கல்யாணம். உலகமே அயோத்தி மாநகரை நோக்கி வெள்ளம் போல நகர்ந்து செல்கிறது. ரகு வம்ச குல குருவான வசிட்ட மாமுனிவன் 2000 பிராமணர்கள் புடை சூழ முத்துப் பல்லக்கில் பிரம்மா போல அயோத்தி நோக்கி பவனி போகிறார். அதை வருணிக்கும் கம்பன்:—
10)கவிகையின் நீழல் கற்பின் அருந்ததி கணவன் முத்துச்
சிவிகையில் அன்னம் ஊரும் திசைமுகன் என்னச் சென்றான் (801)

சீதையை அருந்ததிக்கு ஒப்பிடும் கம்ப ராமாயண வரிகள்:—
11)கன்னி அருந்ததி காரியை காணா
நல்மகனுக்கு இவள் நல்லணி என்றார் (1254)
12) அருந்ததி அனையாளே! அமுதினும் இனியாளே! (2006)
சீதையை ராமன் அருந்ததி என்று போற்றியது தெரிகிறது.

13) அருந்ததி ! உரைத்தி – அழகற்கு அருகு சென்று உன்
மருந்தனைய தேவி நெடுவஞ்சர் சிறைவைப்பில்……. (5350)
என்று அனுமன் பகர்வான். இது போல இன்னும் பல குறிப்புகள் உள (அகம் 16, பரிபாடல்-20—68; பதிற்றுப்பத்து 89- 17/19)

alcor_mizar

நீங்களும் பார்க்கலாம்
யாருக்காவது அருந்ததி நட்சத்திரம் தெரியாவிட்டால் மரணம் சம்பவிக்கும் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு. பழங்காலத்தில் கண் பார்வையை அறியும் ஒரு மருத்துவ பரிசோதனையாக அருந்ததி பார்த்தலைப் பயன்படுத்தினர் என்பது தெரிகிறது. வடக்கு வானத்தில் ஏழு நட்சத்திரங்கள் (Ursa Major or Great Bear Constellation) ஒரு பட்டம் பறப்பது போலக் காணப்படும். பட்டத்தின் வால் போன்ற பகுதியில் கடைசி நட்சத்திரத்துக்கு முந்தைய நட்சத்திரம் வசிஷ்ட மஹரிஷி. அதை உற்று நோக்கினால் இன்னொரு நட்சத்திரம் தோன்றும். அது தோன்றித் தோன்றி மறையும். ஏனெனில் இவை இரட்டை நட்சத்திரங்கள் (Double Star System) ஆகும். ஒன்றை ஒன்று சுற்றி வட்டமிடும் இரட்டை நட்சத்திர மண்டலம். விஞ்ஞானிகள் இவைகளை மிசார் MIzar (வசிட்டன்) என்றும் ஆல்கர் Alcor (அருந்ததி) என்றும் அழைப்பர்.

அருந்ததி நியாயம்
வடமொழியில் பாடம் கற்பிக்க பல்வேறு உத்திகளைப் பயன்படுத்துவர். அவைகளில் ஒன்று அருந்ததி நியாயம். அதாவது ஒரு பொருளை நேரடியாக விளக்கினால் புரிவது கடினம் என்பதால் அதைப் படிப்படியாக விளக்கி — “இதுதான் அது”– என்பர். அருந்ததி நட்சத்திரத்தையும் ஒருவர் எடுத்த எடுப்பில் காணமுடியாது.

“அதோ பார்! ஒரு மரம் தெரிகிறதா? அதற்கு மேல் ஏழு நட்சத்திரங்கள் தெரிகிறதா? அதில் வால் போன்ற பகுதியில் கடைசி நட்சத்திரம் தெரிகிறதா? அதற்கு முன் ஒரு நட்சத்திரம் இருக்கிறதல்லவா? அதுதான் வசிஷ்ட நட்சத்திரம். இப்போது அதையே உற்றுப் பார். அருந்ததி வருவாள்” – என்று சொல்லிக் காட்டுவர்.

வேதாந்த பாடத்திலும் மஹாவல்லமை பொருந்திய இறைவனை அவ்வளவு எளிதாக புரிந்துகொள்ள முடியாது . ஆகவே அத்வைதம் முதலிய கொள்கைகளை விளக்குவோர் அருந்ததி நியாயம் என்னும் உத்தியைப் பயன்படுத்தி விளக்குவர்.

ஆரியக்கூத்து !!!
ஆரிய – திராவிட இனவாதக் கொள்கைக்கு இந்திய வரலாற்றில் இடமில்லை, அது ஒரு பொருந்தாக் கூற்று — என்று சுவாமி விவேகாநந்தர், ஹரிஜன மக்களின் தனிப்பெருந்தலைவர்–சட்ட நிபுணர் அம்பேத்கர், அரவிந்த மகரிஷி, மஹாத்மா காந்தி, நம் காலத்தில் வாழ்ந்து 1994-ல் மறைந்த காஞ்சி மாமுனிவர் ஆகியோர் கூறியது ஏன் என்பது சங்க இலக்கிய நூல்களின் 27,000+ வரிகளைப் பயிலுவோருக்கு வெள்ளிடை மலை என விளங்கும். வடக்கில் வாழ்ந்த வசிட்ட மாமுனிவன் மனைவி, தெற்கில் வாழ்ந்த தமிழர்க்கும் தெய்வம்!!!

வாழ்க தமிழ் ! வளர்க அருந்ததி புகழ் !! — சுபம் —