சிங்கள மொழி அதிசயங்கள்!

sri lanka

ஆய்வுக் கட்டுரையாளர் : லண்டன் சுவாமிநாதன்

ஆய்வுக் கட்டுரை எண்: 1627; தேதி: 6 பிப்ரவரி 2015

இலங்கையில் பேசப்படும் சிங்கள மொழி பல புதிர்களின் உறைவிடமாக விளங்குகிறது. இந்தப் புதிர்களுக்கு மொழி ஆராய்ச்சியாளர்களுக்கு இதுவரை சரியான விடைகள் கிடைக்கவில்லை. “ரிக் வேதம்- ஒரு வரலாற்று ஆய்வு” — என்ற (The Rig Veda – A Historical by Shrikant Talageri) புத்தகத்தில் ஸ்ரீகாந்த் தலகரி என்பவர் இதை எடுத்துக்காட்டி சம்ஸ்கிருத மொழி இந்தியாவில் தோன்றி வெளி நாடுகளுக்குப் பயணம் செய்தது; அவர்கள் இந்தியாவுக்கு வெளியில் இருந்து இம்மொழியை இறக்குமதி செய்யவில்லை என்று வலியுறுத்துகிறார்.

இந்திய-ஆர்ய (Indo-Aryan) மொழிகள் என்னும் பிரிவின் கீழ் சிங்கள மொழி வைக்கப்பட்டபோதிலும் பல பொருந்தாத விஷயங்களும் இம் மொழியில் இருப்பதை வில்லியம் கெய்கர்(Wilhelm Geiger 1856-1943) முதலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். வில்லியம் கெய்கர் சொன்னதாவது: நெடில் வர வேண்டிய இடத்தில் குறிலும் , குறில் வர வேண்டிய இடத்தில் நெடில் எழுத்துக்களும் வந்து புதிர் போடுகின்றன. மற்ற இந்திய ஆரிய மொழிகளைப் போலல்லாது வேற்றுமை உருபுகள் இருக்கின்றன. சிங்கள மொழி இலக்கணப் புதிர்களை என்னால் விடுவிக்க இயலவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.”

king batiya abhya 19 bce

King Batiya Abhaya inscription (19 BCE)

பெல்லா, ககுலா, களுவா, ஒளுவா

சிங்கள மொழியில் உடல் உறுப்புகளைக் குறிக்கும் சொற்கள் எந்த மொழியில் இருந்து வந்தவை என்றே தெரியவில்லை. தமிழ், சம்ஸ்கிருதம், வெட்டா ஆகிய மொழிகளில் வந்த சொற்களே சிங்கள மொழியில் இருக்க வேண்டும். ஆனால் தலை, கழுத்து, கால், தொடை என்னும் சொற்களைக் குறிக்கும்  ஒளுவா, பெல்லா, ககுலா, களுவா, என்ற சொற்கள் எங்கிருந்து வந்தன என்பது புரியவில்லை.

மேலும் மஹாவம்ச நூலின் மூலம் சிங்கள மக்களின் முதல் மன்னன் விஜயன் என்றும் , இந்தியாவின் கலிங்க-வங்க தேசப் பகுதியில் இருந்து வந்து பாண்டிய மன்னனின் மகளையும், ஒரு யக்ஷர் குலப் பெண்ணையும் மணந்து கொண்டான் அவன் என்றும் அறிகிறோம். ஆனால் தற்போதைய ஆராய்ச்சிகள் சிங்கள மக்களின் மூதாதையர்கள் இந்தியாவின் சிந்து சமவெளிப் பகுதில் இருந்து வந்தவர்கள் என்று காட்டுகின்றன. இந்தியாவின் வட மேற்கு மூலையான ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய பிரதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்று தெரிகிறது. இவர்கள் குடியேறிய காலத்தில் அப்பகுதிகள் அகண்ட பாரதத்தின் ஒரு பகுதியாகும்.

6-Sinhala-ConsonantsS

எம்.டபிள்யூ. எஸ். டி சில்வா என்பவர் சிங்கள மொழி பற்றி எழுதிய கட்டுரையில், மற்ற மொழிகளில் இல்லாத சிறப்பு அமசங்கள் இதில் இருப்பதானது மிகவும் உற்சாகமாக ஆய்வு நடத்த உந்துகிறது. தற்போதைய மொழிக் கொள்கைகள் சரியா, இல்லையா என்ற சவாலையும் இது வீசுகிறது. நாம் அறிந்த வரை தற்கால இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தில் இதற்கு ஒரு இடம் ஒதுக்குவது கடினமாகவே உள்ளது – என்று எழுதியுள்ளார்.

சிங்கள மூதாதையர்கள், வட மேற்கு இந்தியாவில் இருந்து குஜராத்தில் உள்ள லாட தேசத்தில் வந்து தங்கி,  பின்னர் இலங்கையில் குடியேறினர் என்றும் டி சில்வா கூறுகிறார். கெய்கர், பரனவிதான போன்ற அறிஞர்களும் இது பற்றி ஆராய்ந்து எழுதியுள்ளனர்.

தண்ணீர், தண்ணீர்

தண்ணீர் என்ற பொருள்படும் வடுரா என்ற சிங்களச் சொல் ஜெர்மானிய மொழிக் குடும்பத்தில் உள்ள “வாட்டர்” என்ற சொல்லுக்கு இணையானது பற்றியும் சர்ச்சை நீடிக்கிறது. ஹிட்டைட் மொழியிலும் ‘வதர்’ உள்ளது. ஆனால் இந்தோ ஆரிய மொழிக் குடும்ப விதிகளின்படி இப்படி வர முடியாது என்றும் ஏற்கனவே விக்ரமசிங்க என்ற அறிஞர் கூறியது போல் ‘வரதுக’ என்னும் சம்ஸ்கிருத மூலத்தில் இருந்து இச் சொல் வருவது சாத்தியமல்ல என்றும் கெய்கர் கூறுகிறார். ஆனால் பி.குணசேகர கூறியது போல விஸ்தார (பரவுதல்) என்ற சம்ஸ்கிருத சொல்லுக்குத் தொடர்புடையது இது என்பதை ஒப்புக் கொள்கிறார்.

தலகாரி இது பற்றிக் கூறுவதாவது: இந்திய- ஆரிய மொழிக் குடும்பத்தில் சேராத , இப்பொழுது வழக்கொழிந்த ஒரு இந்திய-ஐரோப்பிய (Indo – European) மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது இது என்று ஏன் அவர்களுக்குத் (மேற்படி ஆராய்ச்சியாளர்களுக்கு) தோன்றவில்லை. மேலும் இந்திய மொழிகள் இந்த பூமியில் இருந்து வெளியே சென்று பரவின என்பதே உண்மை. வெளியில் இருந்து இந்திய மொழி பேசுவோர் பாரதத்தில் குடியேறவில்லை என்பதையும் இது காட்டுகிறது. (இதற்கு முந்தைய ‘பாரா’க்களில் பங்கானி என்னும் வேறு ஒரு மொழி பற்றி ஆராய்ந்ததன் அடிப்படையில் அவர் இந்த முடிவை வெளியிட்டார்)

pgss_sinhala_image1

என் கருத்து: 200 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டு “அறிஞர்கள்” எழுதிய இந்திய வரலாறு, இந்தோ ஆரிய மொழிக்கொள்கைகள் அனைத்தும் தவறானவை. திராவிடர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்று கால்டுவெல் போன்றோர் நம்பியதன் அடிப்படையிலும், ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்று மாக்ஸ்முல்லர் போன்றோர் நம்பியதன் அடிப்படையிலும் எழுந்த தவறான கொள்கைகள் இவை. இதை மாற்றி எழுதும் இன்றியமையாத கடமை நமக்கு உள்ளது.

வாழ்க சம்ஸ்கிருதம்! வளர்க தமிழ்!!

Contact swami_48@ yahoo.com