Post No. 10,293
Date uploaded in London – – 3 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நேற்று வெளியான ‘ரிக் வேதத்தில் புறா ஜோதிடம், தமிழர்களின் அதிசயக் கண்டுபிடிப்பு -1’– என்ற முதல் பகுதியைப் படித்துவிட்டு இதையும் படிக்கவும் .
ரிக் வேத RV.10-165 பாடலில் புறா பற்றிய ஆரூடத்தை நேற்று கண்டோம். ஆனால் முதலாவது மண்டலத்தில் உள்ள பாடல் சங்கத் தமிழ் இலக்கியத்தில் போல காதல் புறாக்களைக் காட்டுகிறது. புறாக்களை சமாதான தூதுவர்களாக தற்போது மேலை நாடுகள் சித்தரிக்கின்றன. இரண்டாவது உலக மஹா யுத்தம் முடிந்த 50-வது ஆண்டு விழாவினைக் கொண்டாட 1995-ல் பிரிட்டன் வெளியிட்ட இரண்டு பவுன் நாணயத்தில் கூட சமாதானப் புறா ஆலீவ் / ஒலிவ மர இலைகளுடன் பறப்பதை சித்தரித்துள்ளனர்
இந்துக்களின் பரத நாட்டிய முத்திரையில் கபோத / புறா முத்திரையும் ஒன்று.
இந்துக்களின் யோகாசனத்தில் கபோத / புறா ஆசனமும் ஒன்று .
ஆயினும் இணை பிரியா புறா ஜோடிகளை இந்தியா முதலிய நாடுகள் தபால் தலைகளாக வெளியிட்டுள்ளன. இதுவே ரிக் வேத முதலாவது மண்டல மந்திரமும் சங்கத் தமிழ் இலக்கியமும் நமக்குக் காட்டுகின்றன .
இதோ முதலாவது மண்டல மந்திரம் –
இது ரிஷி சுனச்சேபன் , இந்திரனை நோக்கிச் சொல்லும் துதி
ரிக். 1-30-4
“இந்த சோமரசம் உனக்காக்கத்தான் படைக்கப்படுகிறது; தன்னுடைய மனைவியான புறவிடம் அன்புடன் நெருங்கும் ஆண் புறா போல நீயும் வருகிறாய் ; எங்கள் துதியை ஏற்றுக் கொள்வாயாக” –1-30-4
எனது உரை
பத்தாவது மண்டலத்தில் ஒரு பயங்கரக் காட்சியைக் கண்டோம்.
இதற்கு அடிக்குறிப்பு எழுதிய Ralph T H Griffith ரால்ப் கிரிப்பித் சொல்கிறார்- “புறாவை அபசகுனப் பறவையாக மக்கள் கருதுகின்றனர். மரண தேவனின் தூதனாகக் கருதுகின்றனர் ; இங்கிலாந்தில் வடக்கு லிங்க்கன்ஸைர் பகுதியில் இப்படி ஒரு நம்பிக்கை இருப்பது, ‘கேள்வி பதில்’ பகுதியில் வெளியாகி இருக்கிறது. மரத்தில் உட்கார்ந்திருக்கும் புறவு வீட்டிற்குள் நுழை ந்தாலோ அல்லது ஆனந்தமாக ஆடி ஓடும் புறா திடீரென்று சாதுவாகி பேசா மடந்தையாக நின்றாலோ அது சாவுக்கு அறிகுறி” .
இது பற்றி நான் சொல்லுவது – இங்கும் கூட புறா சாகப்போகிறதா அல்லது வீட்டிற்குள் இருக்கும் ஒருவர் சாகப்போகிறாரா என்று தெளிவாக இல்லை.
மேலும் 10-165- 4 மந்திரத்தில் ஆந்தை (screeching owl ) காரணமில்லாமல் அலறுவது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, இரண்டையம் இணைத்துப் பார்த்தால் ஆந்தை திடீரென்று அலறுவதும் வீட்டிற்குள் தினசரி அவுபாசனம் செய்யும் இடத்தில் திடீரென்று புறா அமர்ந்ததும் ஏதோ கெட்டது நடக்கப்போவதைத் தெளிவாகக் காட்டுகிறது; ஆந்தை அலறுவதும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் அது குரல் கொடுப்பதும், மரணத்தின் அறிகுறி என்பது தமிழர்களின் நம்பிக்கை. சங்கத் தமிழ்ப் புலவர்கள் பாடிய பாடல்களிலும் ஆந்தை, கோட்டான், கூகை இருக்கும் இடங்கள் சுடுகாடு அல்லது பாழடைந்த இடமாகவே இருக்கிறது. புறம். 364 காண்க.
மேலும் பிராமணர்களின் அக்கிரஹாரம் மிகவும் சுத்தமான இடம். அங்கு நாயும் கோழியும் கூட நுழையாது என்கிறார் சங்கப் புலவர்- பார்ப்பனர் உருத்திரன் கண்ணனார் – காண்க பெரும். 299, இன்னாநாற்பது -3
ஆக, நாயோ கோழியோ நுழையாத இடத்தில் திடீரென்று ஆந்தையும் புறவும் வந்ததே அப சகுனமாகக் கருதப்படுகிறது. புறவினால் மட்டும் அப்படி வந்ததாகக் கூற முடியாது என்பதே என்னுரை.
முதலாவது மண்டலப் ‘பா’வை மொழிபெயர்த்த ஜம்புநாத ஐயர் , கருத்தரித்த பெட்டையிடம் வரும் புறாப் போல என்கிறார். ஒருவேளை கர்ப்பிணிப் புறவு என்பது சாயனர் உரையாக இருக்கும். இது மேலும் அன்பைக் காட்டுகிறது
xxx
தமிழர்கள் கண்ட அற்புதக் காட்சி!
சிபிச் சக்ரவர்த்தி கதையை இந்தியர்கள் எல்லோரும் அறிவர். அக்நி தேவன் புறா வடிவில் வர, அதை கழுகு வடிவில் இந்திரன் துரத்த, அந்தப்புறா சிபிச் சக்ரவர்த்தியின் மடியில் தஞ்சம புகுந்தது. அதைக் காப்பாற்ற அவன் த ன் உடலையே தருவதற்கு துலாபாரம் செய்ய முயன்று தராசுத் தட்டில் ஏறினான். அப்போது இரண்டு தேவர்களும் அவன் பெருந்தன்மையை உலகத்துக்குக் காட்டவே அவ்வாறு செய்வதாகக் கூறுகின்றனர். இந்தக் கதை புறநானூறு, சிலப்பதிகாரம் நெடுகிலும் உளது. கண்ணகி தான் வாழ்ந்த சோழர்குடி மன்னனாக சிபியை சித்தரிக்கிறாள். அதற்கு முன் சங்க இலக்கியத்திலும் உளது. (என்னுடைய பழைய ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் காண்க – சோழர்கள் தமிழர்களா?) . இரண்டு புறாக்கள் ஒரு வேடனுக்காக தங்கள் உயிரையே மாய்த்துக் கொண்ட புறாக்கதையும் மஹாபாரதத்தில் உளது.)
ஆக வடக்கும் தெற்கும் – இமயம் முதல் குமரி– வரை புறாவை அன்பின் சின்னமாகவே காட்டியுள்ளன.
ஆண்புறா, வெய்யிலில் வாடிய பெண் புறாவுக்கு விசிறி வீசிய பாடல் கலித்தொகையில் பாலை பாடிய பெருங் கடுங்கோ பாடலில் வருகிறது:
அன்புகொள் மடப்பெடை அசை இய வருத்தத்தை
மென் சிற கரால் ஆற்றும் புறவு (பாலைக் கலி , பாடல் 10, )
இதைவிட அருமையான ஒரு காட்சியைப் பிராமணப் புலவன் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பட்டினப்பாலையில் படம் போட்டுக் காட்டுகிறார். புறவுகள் ‘கல் உண்ணும் காட்சி’ அது.
உலகம் முழுதும் பல பறவைகள் கற்களை உண்ணுவதும் அது ஜீரணத்துக்காக செய்யப்படும் நிகழ்வு என்பதும், இப்போது யூ ட்யூப்பில் You Tubeல் மலிந்து கிடக்கிறது. மகேஷ் ராஜா என்பவர் நீலகிரி காடுகளில் கல் உண்ணும் பறவையைப் படம்பிடித்துப் போட்டுள்ளார். வடக்கில் ஒரு இந்திக்காரர், இந்தி மொழி வீடியோவில், செம்மை நிற கற்களைப் பொடித்து, பரப்ப அதை புறாக்கள் ஆனந்தமாக உண்ணுவதை யூ ட்யூபில் காணலாம். ஆக இப்போது இது எல்லோரும் அறிந்த செய்தியாகிவிட்டது; ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பார்ப்பான் இதைப்பார்த்து அதை அப்படியே எதிர்கால சந்ததிக்கு எழுதிவைத்த அற்புதத்தைக் காணுங்கள் :-
பட்டினப்பாலை நூலை இயற்றிய பார்ப்பனன் உருத்திரங்கண்ணனாரும் குறிஞ்சிக்கலி இயற்றிய பார்ப்பனன் கபிலனும் நிறைய இயற்கை அற்புதங்களை நமக்கு அளிக்கின்றனர். பார்ப்பான் கபிலன் நமக்கு 99 மலர்களை குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் அளித்தான். குருவி, கிளி மூலம் பாரிக்கு உணவு சேகரித்து மூவேந்தர் முற்றுகையை முறியடித்தான்.’ புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ என்று போற்றப்பட்டான்; ஜாதி வெறியை ஒழித்த முதல் தமிழனும் அவன்தான். அங்கவை , சங்கவை என்ற க்ஷத்ரிய குலப் பெண்களை தனது மகள்கள் போலாகி கருதி திருமணம் செய்வித்தான். இப்படி இரண்டு பிராஹ்மணர்கள் நமக்கு அற்புதமான செய்தியை 2000 ஆண்டுக்கு முன் எழுதிவைத்தனர்.
அவிர் சடை முனிவர் அங்கி வேட்கு
மாவுதி நறும்புகை முனைஇக் குயிறம்
மாயிரும் பெடையோ டிரியல் போகிப்
பூதங் காக்கும் புகலருங் கடிநகர்த்
தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கு
—பட்டினப்பாலை , வரிகள் 54-58
xxxx
ஆய் தூவி அனம்என, அணிமயில் பெடை எனத்
தூதுணம் புறவு எனத் …………………………..
கலித்தொகை 56, கபிலன் பாடிய குறிஞ்சிக் கலி
தூதுணம் புறவு என்பதற்குக் கல் = தூது , உணம் = உண்ணும் என்று உரைகாரர்கள் செப்புவர்
இதை உலகிற்குப் பதிவு செய்து கொடுத்த 2 அந்தணர்க்கும் வந்தனம் சொல்லுவோம். இப்போது நிறைய You Tube வீடியோ காட்சிகளைக் கண்டு மகிழுங்கள்.
ஜோடிப் புறாக்களையும் காதல் புறாக்களையும் கீழ்கண்ட பாடல்களில் காணலாம் :-
குடவாயில் கீரத்தனார் அக நானூறு பாடல் 287, 315ல் புறா பற்றிப் பேசுகிறார்.
குன்றியனார், குறுந்தொகை நூலில் பாடல் 79ல் புறாவைப் பாடுகிறார் .
மகிழ்ச்சியுடன் கொஞ்சும் இரண்டு புறாக்களை கள்ளி மரக் காய்கள் வெடித்து , ஒலி உண்டாக்கி விரட்டும் காட்சியை வெண் பூதியார் குறுந்தொகைப் பாடல் 174ல் காட்டுகிறார்; ஆக பல இடங்களில் ஜோடிப் புறாக்கள் பறப்பதை தமிழ்ப் புலவர்கள் காணத் தவறவில்லை.
முடிவுரையாக நான் சொல்லுவது புறாக்கள் மூலம் சகுனம் பார்ப்பது இல்லை. ஆனால் அசாதாரண சூழ்நிலையில் அவை வீட்டிற்குள் வந்து, அப்போது ஆந்தையும் அலறினால் மரணம் சம்பவிக்கும் என்பதே சரி ; பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை உற்பாதங்கள் வருவதற்கு முன்னரும் இப்படி பிராணிகள் அலறுகின்றன.
வாழ்க ஜோடிப் புறாக்கள் !!
–subham–
tags- ரிக் வேதத்தில் ,புறா ஜோதிடம், தமிழர் ,கண்டுபிடிப்பு , சிபிச் சக்ரவர்த்தி, தூதுணம் புறவு,கல் உண்ணும்,