சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க இக்நோபல் பரிசு!(Post No.2930)

Article written by S NAGARAJAN

Post No.2930

Date: 30 June 2016

 

பாக்யா 1-7-16 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை 

 

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க இக்நோபல் பரிசு!

ச.நாகராஜன்

 

“நகைச்சுவை இல்லாதவர் ஒரு நல்ல விஞ்ஞானியாக இருக்க முடியாது”;

– ஆண்ட்ரீ ஜிம்

நோபல் பரிசு என்றால் தெரியும், அது என்ன இக்நோபல் பரிசு என்று சிலர் குழப்பம் அடையலாம். சில வித்தியாசமான சோதனைகளை மேற்கொண்டு வெற்றி பெறும் விஞ்ஞானிகளுக்கும் சில குறிப்பிட்ட  நபர்களுக்கும் தரப்படும் பரிசு தான் இக்நோபல் பரிசு!

Ignoble – இக்நோபிள் என்ற ஆங்கில வார்த்தைக்கு அகௌரவமான என்று அர்த்தம். இந்த வார்த்தையின் ஒலி அமைப்பை ஒத்திருக்கும் இக்நோபல் பரிசு  இந்தப் பொருளில்  வழங்கப்படவில்லை.

இது விஞ்ஞானிகளையோ அல்லது அவர்களை மதிப்பவர்களையோ கேலி செய்யும் நோக்கத்துடன் ஏற்படுத்தப்படவில்லை.

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் சோதனைகளைச் செய்பவரை ஊக்குவிக்கவே இந்தப் பரிசு அளிக்கப்படுகிறது. 1991 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டொன்றுக்கு பத்து வித்தியாச்மான நபர்களுக்கு இது தரப்படுகிறது.

அமெரிக்காவில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆண்டு தோறும் அக்டோபர் மாதத் துவக்கத்தில் நடைபெறும் இந்தப் பரிசளிப்பு விழாவில் நோபல் பரிசு பெற்றோரும் கலந்து கொள்கின்றனர்.

இந்தப் பரிசு பெறத் தகுதியுள்ளவ்ர்களை ஒரு குழு தேர்ந்தெடுக்கிறது.

உங்களுக்குப் பரிசு பெறச் சம்மதமா என்று தேர்வு செய்யப்பட்டுள்ளவரின் சம்மதத்தையும்  முன்னதாகவே கேட்டுப் பெறப் படுகிறது. இந்தப் பரிசு வேண்டாம் என்று சொல்வோரின் பெயர்களைப் பெரும்பாலும் பட்டியலிலிருந்து நீக்கி விடுவர்.

இந்த இக்நோபல் பரிசு பெற்ற ஒரு இயற்பியல் விஞ்ஞானி நிஜ நோபல் பரிசையும் பெற்று விட்டார்.

அவர் பெயர் ஆண்ட்ரி ஜிம் (Andre Geim).

 

ரஷியாவிலே பிறந்து ஜெர்மனியில் வாழ்ந்து பிரிட்டனின் குடியுரிமை பெற்ற அவர், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர்.

தனது இயற்பியல் ஆராய்ச்சிகளைத் தவிர வெள்ளிக்கிழமை இரவு நேரங்களில் சில விசித்திர ஆராய்ச்சிகளைப் பொழுதுபோக்காக அவர் செய்வது உண்டு. இந்த ஆராய்ச்சிகளை ஃப்ரைடே நைட் எக்ஸ்பெரிமெண்ட்ஸ் என்று அவர் விளையாட்டாகச் சொல்வது வழக்கம்.

அவருக்கு காந்த சக்தியின் மீது சற்று ஆர்வம் உண்டு. நெதர்லாந்தில் ராட்பௌட் பல்கலைக்கழகத்தில் அவர் பணியாற்றுகையில் ஒரு வெள்ளிக்கிழமை இரவு விலை உயர்ந்த இயந்திரம் ஒன்றில். எலக்ட்ரோ மாக்னடிக் சக்தியை முழு அளவில் வைத்தார். அதில் செங்குத்தாக இருந்த துளையில் தண்ணீரைக் கொட்டினார். என்ன ஆச்சரியம், நீர் உள்ளே செல்வது தடைப்பட்டதோடு அதிலிருந்து சில குமிழிகள் தோன்றின.

உடனே ஆண்ட்ரீக்கு தண்ணீருக்கு காந்த சக்தி பாதிப்பு சிறிதளவு உண்டோ என்று சந்தேகம் வந்தது..

 

இதை எப்படி நிரூபிப்பது. அந்த சிக்கலான இயந்திரத்தின் துளையில் நீரை விட்டு ஒரு தவளையைப் போட்டார். காந்த சகதியை முழு அளவுக்குக் கொண்டு வந்த போது அந்த தவளள  மேலே மிதக்க ஆரம்பித்தது.

உடனடியாக இந்தக் கண்டு பிடிப்பை 1997ஆம் ஆண்டு பிஸிக்ஸ் வோர்ல்ட் என்ற விஞ்ஞான இதழில் வெளியிட்டார். இது ஏப்ரல் மாதத்திய முட்டாள் தினத்தை ஒட்டி வெளியிடப்பட்ட கட்டுரை என்று பலரும் தமாஷாகச் சிரித்தனர். ஆனால் அவர் இது உண்மையான சோதனை தான் என்பதை விளக்கினார், இதற்காக   2000ஆம் ஆண்டு இக்நோப்ல பரிசு பெற அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அப்போது தான் அனைவரும் சோதனையைப் பற்றி நன்கு புரிந்து கொண்டனர்.

 

அவரது வெள்ளிக்கிழமை இரவு சோதனைகளில் தவளை சோதனனயைத் தவிர இன்னும் இரு சோதனைகளும் அவருக்கு வெற்றியைத் தந்து புகழையும் தந்தன.

 

இதில்  மூன்றாவது சோதனை தான் க்ராபீன் (graphene)என்ற உலோகத்தைப் பற்றியது. இதை அவர் ஆய்வுப் பேப்பராக வெளியிடுகையில் நேச்சர் பத்திரிகை  இரு முறை நிராகரித்து விட்டது.

ஆனால் 2010ஆம் ஆண்டில் க்ராபீன் ஆராய்ச்சிக்காகத் தான் அவர் நோபல் பரிசையும் பெற்றார்.

இந்த இக்நோபல் பரிசு பெற்றவர்களைப் பற்றிச் சற்று தெரிந்து கொண்டால் பரிசு அளிப்பதன் நோக்கம் நன்கு விளங்கிவிடும்.

வேறு துறைகளில் இக்நோபல் பரிசு பெற்ற இன்னும் இருவரைப் ப்ற்றிப் பார்ப்போம்.

பெலாரஸ் நாட்டின் அதிபரும் சர்வாதிகாரியுமான அலெக்ஸாண்டர் லுகாஷெங்கோவிற்கு 2013 இல் அமைதிக்கான இக்நோபல் பரிசு வழங்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் அவர் பிறப்பித்த விசித்திரமான உத்தரவு தான் இதற்குக் காரணம். பொது இடங்களில் கை தட்டக் கூடாது என்று கைதட்டலுக்குத் தடை உத்தரவு பிறப்பித்தார் அவர்.

2012ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான இக்நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது தெரியுமா? அமெரிக்க அரசின் ஜெனரல் அக்கவுண்டபிலிடி அலுவலகத்திற்குத் தான். அந்த அலுவலகத்தின் இலக்கிய சாதனை என்ன? அது அறிக்கைகளைப் பற்றிய அறிக்கைகளுக்கான ஒரு அறிக்கையை பரிந்துரை செய்தது தான். அறிக்கைகளைப் பற்றிய அறிக்கைகளைப் பற்றி ஒரு அறிக்கை தயார் செய்யுமாறு அது உததரவிட்டதற்காக இந்த இலக்கிய இக்நோபல் பரிசு (The US Government General Accountability Office, for issuing a report about reports about reports that recommends the preparation of a report about the report about reports about reports.)

இக்நோபல் பரிசு பெற்றோரைப் பற்றியும் அதற்கான காரணங்களையும் பற்றிப் படித்தால் சிரிப்பு பொங்கி வரும். ஆனால் பின்னர் சிந்திக்கவும் செய்வோம்.

 

அறிவியல் அறிஞர் வாழ்வில்

 

விஞ்ஞானிகளிலேயே சற்று குஷியான விஞ்ஞானி என்று சொல்லக் கூடியவர் நோபல் பரிசு பெற்ற பிரபல விஞ்ஞானியான ஆர்தர் எல். ஷாலோ (Arthur L. Schawlow) என்பவர் தான்! (தோற்றம் 5-5-1921 மறைவு 29-4-1999)

தனது 78வது பிறந்தநாளுக்குச் சில நாட்களுக்கு முன்னர் மறைந்த அவர் தன்னைப் பற்றி “நீங்கள் சந்தித்தவர்களிலேயே போட்டியற்ற ஒரே மனிதர் நான் தான்!” என்று விளையாட்டாகக் கூறுவது வழக்கம். அனைவருடனும் மிகவும் இணக்கமாகச் செயல்படும் சந்தோஷமான மனிதர் அவர்.

அவருக்கு 1981ஆம் ஆண்டு நோபல் பரிசு  கிடைத்ததும் ஸ்வீடனுக்குப் பரிசைப் பெறச் சென்றார். சாதாரணமாக பரிசு பெறுவோர் ஸ்வீடன் மன்னரைப் பார்க்கும் போது அவருக்கு நினைவுப் பரிசாக ஏதேனும் ஒன்றை வழங்குவது மரியாதை நிமித்தமான ஒரு மரபாகும்.

மன்னருக்கு என்ன பரிசை  ஷாலோ வழங்கியிருப்பார்? வெள்ளித் தட்டா? தங்கக் கோப்பையா? எதுவுமில்லை.

60 வயது ஆன புரபஸர் ஷாலோ கலிபோர்னியாவிலிருந்து கொண்டு சென்று ஸ்வீடன் மன்னரான பதினாறாம் கார்ல் குஸ்டாஃபிற்கு கொடுத்தது ஒரு அளவு பார்க்கும் ஸ்கேல். அதாவது ஆங்கிலத்தில் ரூலர் என்று சொல்வோமே அது. ரூலருக்கு ஒரு ரூலர் என்றார் அவர். (A ruler for a ruler). ரூலர் என்றால் ஆட்சி புரிபவர் என்றும் அர்த்தம் உண்டல்லவா. ஆகவே ரூலருக்கு ஒரு ரூலர் என்று சொன்னதும் அனைவரும்  மகிழ்ந்தனர். மன்னரும் தான்!

அவரது கள்ளங்கபடில்லாத எளிய நகைச்சுவை உணர்வுடன் கூடிய படாடோபமற்ற ஊக்கமளிக்கும் வார்த்தைகளை அனைவருமே ரசித்து வந்தனர்!

 

***********