கர்நாடக அதிசயங்கள்-1; 35,000 சிற்பங்கள்! (Post No.4167)

Written by London Swaminathan

 

Date: 27 August 2017

 

Time uploaded in London- 11-59 am

 

Post No. 4167

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.

 

 

எனக்கு ரொம்பநாளாக ஒரு ஆசை! பேலூர், ஹளபீடு, சோமநாதபுரம் சிற்பங்களைப் படங்களில் பார்க்கையில் என்றவது ஒரு நாள் நேரில் போய்ப் பார்க்கவேண்டும் என்று.

 

நாங்கள் பெங்களூரிலிருந்து காரில் புறப்பட்டு சிருங்கேரி சென்றபோது கொல்லூர் மூகாம்பிகை, உடுப்பி கிருஷ்ணன் கோவில் செல்ல திட்டமிட்டோம். ஆனால் போகும் போதோ அல்லது வரும்போதோ பத்து மணி நேரத்துக்கு மேல் காரில் அமர வேண்டியிருக்கும் என்று டிரைவர் எச்சரித்தார். ஏற்கனவே மதுரை, மாயுரம், மதறாஸ் என்று காரில் நீண்ட பயணம் செய்ததால் அது வேண்டாம் என்று தீர்மானித்தோம். ஆனால் டிரைவர் ஒரு போனஸ் திட்டத்தை முன் வைத்தார்.

 

பேலூர், ஹளபீடு, அன்னபூர்னேஸ்வரி கோவில்களும் சிரவண பெலகோலாவும் வழியில் இருப்பதால் அவைகளுக்கு அழைத்துச் செ வதாகச் சொன்னார். பரம சந்தோஷம்; ‘கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல’ இருந்தது. ஆனால் சிருங்கேரியில் கொட்டிய மழையைப் பார்த்தவுடன் அன்ன பூர்னேஸ்வரி கோவிலை விட்டுவிட்டு மற்ற இடங்களுக்குச் சென்றோம்.

 

ஹளபீடு சிற்பங்களைப் ஆர்த்தவுடன் நான் மீனாட்சி கோவில் பற்றி பெருமை பேசியதெல்லாம் தவறோ என்ற எண்ணம் மேலிட்டது. எனது மதுரை மீனாட்சி கோவில் உலகப் புகழ்பெற்றதுதான். கல்லூரிப் படிப்பு படிக்கும் வரை, தடுக்கி விழுந்தால் மீனாட்சி கோவிலில்தான் விழுவேன். ஊருக்கு வரும் விருந்தாளிகளைப் பெருமையுடன் சுற்றிக் காண்பிப்பேன். அப்போதெல்லாம் இந்தக் கோவில் கோபுரங்களிலும், பிரகாரங்களிலும் 30,00-த்துக்கும் மேலான சுதைகள்- சிற்பங்கள் இருப்பதாகப் பெருமை அடித்துக் கொள்வேன். அவ்வளவும் உண்மையே!

 

ஹளபீடு கோவிலில், கடுகு இடம் கூட வீணடிக்காமல் சிற்பங்களை அள்ளி வீசி விட்டார்கள் ஹோய்சாள வம்ச சிற்பிகள். சுமார் 1200 ஆண்டுப் பழமையான இந்தக் கோவிலில் வழிபாடு இல்லைதான். போய் தரிசிக்க கட்டணமும் இல்லை. ஒவ்வொரு சிற்பத்தையும் நன்றாகப் புகைப்படம் எடுத்தால் ஒவ்வொன்றும் போட்டோ போட்டியில் பரிசு பெறும்!

 

உலகிலேயே பணக்கார நாடு இந்தியா என்ற தலைப்பில் ஐந்து அல்லது ஆறு கட்டுரைகளை எழுதியபோது இதற்கு ஆதாரமாக ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டேன். அது என்ன வென்றால் இன்டிய சிற்பங்களில் காணப்படும் நகை நட்டுகள் போல உலகில் எந்த நாட்டிலும் காண முடியாது. கிரேக்க சிற்பங்களில் நகையே இராது. பாபிலோனிய, எகிப்திய, மாயன் நாகரீகங்களில் கொஞ்சம் நகைகள் இருக்கும். நமக்குக் கொஞ்சம் நெருங்கி வருவோர் எகிப்தியர்கள் மட்டுமே.

வேதங்களிலும் , ராமாயண மஹாபாரத இதிஹாசங்களிலும் ஏராளமான நகைகள் குறிப்பிடப்படுகின்றன. சீதையின் மோதிரமும் சகுந்தலையின் மோதிரமும் நம் இதிஹாசங்களில் முக்கியப் பங்காற்றுகின்றன. அது மட்டுமல்ல; சிந்துவெளி நடன மாது கழுத்தில் கூட நகை இருக்கும்; 2300 ஆண்டுகளுக்கு முந்தைய புத்தமத சிற்பங்களில் இருந்து இன்றுவரையுள்ள சிற்பங்களில் எண்ணற்ற நகைகளை காணலாம். இதில் என்ன அதிசயம் என்றால் பெண்களுக்குப் போட்டியாக, ஆண்கள் உடம்பிலும் ஏராளமான நகைகள் இருக்கும் இது உலகில் வேறு எங்கும் இல்லாத புதுமை.

 

ஹளபீடு சிற்பங்களில் யானை, குதிரை, மன்னர்கள், கடவுளர் அத்தனை பேருக்கும் நகைகள். ஒரு மனிதன் கற்பனையில் சில விஷயங்களை எழுத வேண்டுமானாலும், அது அந்தக் காலத்தில் இருந்தால்தான் எழுத முடியும், வரைய முடியும், செதுக்க முடியும்.

 

இது ஒரு புறமிருக்க சிற்பியின் கைவண்ணத்தை எப்படிப் புகழ்வது! இதை நேரில் சென்று பார்த்தால்தான் புரியும். நாங்கள் ஒரு மணி நேரம் கண்டு களித்தோம். ஆயினும் பல நாட்கள் தங்கி ஆராய்ந்தாலோ அ ல்லது புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டே பார்த்தாலோதான் எல்லாம் விளங்கும்.

 

உஙகளுக்கு ஹளபீடு செல்ல வாய்ப்புக் கிடைத்தால் நழுவ விடாதீர்கள்.

 

இனி சில புள்ளி விவரங்கள்:–

 

1.ஹோய்சாள மன்னர்களின் தலைநகர் இது. பழைய பெயர் துவாரசமுத்திரம். 1200 ஆண்டுப் பழமை உடைத்து

 

2.விஷ்ணுவர்த்தனின் மகனான இரண்டாம் வீர வல்லாளன் காலத்தில் புகழ் கொடிகட்டிப் பறந்தது. காவிரி நதி முதல் கிருஷ்ணா நதிவரை இடைப்பட்ட பிரதேசம் எல்லாம் அவன் வசப்பட்டது.

 

3.ஆயினும் 1311ல் டில்லித் துருக்கர் வசமானது. நல்லவேளை. முஸ்லிம்களின் அழிவுப்படை இந்தச் சிறபங்களில் கை வைக்கவில்லை. நாம் செய்த புண்ணியமே!

 

  1. துருக்கப் படைத் தளபதி, டன் கணக்கில் தங்கத்தையும் ரத்தினக் கற்களையும் மட்டும் எடுத்துச் சென்றான்.

 

5.ஹளபீடு என்றால் பழைய தலை நகர் என்று பொருள்; காரணம்- இதற்குப் பின்னர் புதிய தலைநகர் உருவானது.

 

150 அற்புதக் கோவில்கள்

 

6.ஹோய்சாலர்கள் கர்நாடகம் மாநிலம் முழுதும் 150 கோவில்களைக் கட்டினர். ஒவ்வொன்றும் சிற்பக் கலையின் அற்புதம்.

 

  1. இந்த ஊர், பெங்களூரில் இருந்து 214 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது

 

8.முக்கியக் கோவில் ஹோய்சாளேஸ்வரர் சிவன் கோவில். ஜேம்ஸ் பெர்குசன் இதை ஏதென்ஸின் பார்த்தினானுடன் ஒப்பிட்டுள்ளார். ஆனால் நான் சென்ற மாதம் பார்த்தினானைப் பார்த்து வந்ததால், ஹளபீடுக் க்கு 100 மார்க்கும் இன்றுள்ள பார்த்தினான் கோவிலுக்கு 35 மார்க்கும் கொடுப்பேன் (எல்லா சிலைகளையும் கிறிஸ்தவ, முஸ்லீம் படை எடுப்பாளர்கள் ஒழித்துக் கட்டி விட்டார்கள் ஏதென்ஸில்)

 

9.இரண்டு கோவில்கள் அருகருகே உள்ளன. ஒன்றில் பெரிய நந்தி. இது விஷ்ணுவர்த்தனின் அன்பு மனைவி சாந்தலாதேவியின் பெயர் சூட்டப்பட்ட கோவில்.

 

  1. என்ன என்ன சிற்பங்களைக் காணலாம்?

எல்லா வகை மிருகங்களோடு மகரம் , ஹம்சம் போன்ற கற்பனை உருவங்கள்;

எல்லா வகை தெய்வங்கள்

பால கிருஷ்ணனின் லீலைகள்

கர்ண– அர்ஜுனன் யுத்தம்

கோவர்தன மலையைத் தூக்கும் கிருஷ்ணன்

கஜேந்திர மோட்சம்

சிவ தாண்டவம்

சிவனின் ரிஷப வாஹன கோலம்

ராவணன் தூக்கும் கயிலை மலை

ராமாயணக் காட்சிகள்

சிவலிங்கம், நந்தி, மந்தாகினி என்னும் அழகிகள், ஏழு குதிரைகளுடன் சூரியனின் ரதம், வித விதமான தூண்கள், விஷ்ணுவின் அவதாரங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

 

35,000 சிற்பங்கள்!

மீனாட்சி கோவிலில் 14 கோபுரங்கள் 14 ஏக்கர் கோவில் பரப்பில் 30000 சுதைகளைக் காணலாம்; ஹலபீடிலோ அரை மணி நாரப் பார்வையில் கண் வீச்சில் 35000 சிற்பங்களைக் காணலாம்! அதனால்தான் பிரம்மாண்ட மீனாட்சி கோவிலைவிட இது சிறந்த வேலைப்பாடு உடைத்து என்கிறேன்.

 

‘கடுகைத்துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தறித்த குறள்’ என்று தி ருக்குறளை எப்படி பாராட்டினரோ அப்படி, குறுகி இடத்தில் 35000 சிற்பங்களை உருவாக்கிய காட்சி உலகில் வேறு எங்கும் இல்லை! இல்லவே இல்லை!!!

 

 

  1. காளிதாசி என்ற சிற்பி இதை உருவாக்கியதாகக் கல்வெட்டு சொல்கிறது

 

  1. உண்மையைச் சொல்லி விடுகிறேன்; எனது காமிரா பார்த்த அளவுக்கு என் கண்கள் காணவில்லை

வானிலுள்ள நடசத்திரங்களை பைனாகுலரும் , டெலஸ்கோப்பும் நன்கு காணும்; நமது ஊனக் கண்களோ மேம்போக்காகவே காணும்.

 

அருகிலுள்ள ஏனைய கோவில்களைக் காண நேரம் கிடைக்கவில்லை. அடுத்த முறை போகும்போது லண்டனில் நூலத்திலுள்ள புத்தகங்களைப் படித்துவிட்டுப் போவேன்!

 

 

வாழ்க ஹோய்சாளர்கள் (ஹோய்சாள = புலிகடிமால்);

வளர்க அவர்தம் கலைகள்!

 

–subam—