சிந்தனைச் சிற்பிகள் (ஜய வருடம்) 2014 ஆகஸ்ட் மாத காலண்டர்
(( முக்கிய 31 சிலப்பதிகார மேற்கோள்கள் ))
Post No. 1195 Date: 26 July 2014
Prepared by London swaminathan (copyright)
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாரதி போற்றிய சிலப்பதிகாரக் காவியத்தில் இருந்து முக்கிய 31 பாடல்கள் இந்த ஆகஸ்ட் மாத காலண்டரை அலங்கரிக்கின்றன.
முக்கிய நாட்கள்: ஆகஸ்ட் 8 வெள்ளி-வரலெட்சுமி நோன்பு; 10 ஞாயிறு – ஆவணி அவிட்டம்/ ரக்ஷா பந்தன், பௌர்ணமி
ஆகஸ்ட் 11-காயத்ரி ஜபம்; 15 வெள்ளி- இந்திய சுதந்திர தினம்; 17 ஞாயிறு ஜன்மாஷ்டமி 19- கிருஷ்ண ஜயந்தி; 29 வெள்ளி- கணேஷ் சதுர்த்தி;
சுபமுஹூர்த்த நாட்கள்:– 20, 22, 29, 31; பௌர்ணமி – 10; அமாவாசை– ஆகஸ்ட் 24,; ஏகாதசி 7 & 21.
ஆகஸ்ட் 1 வெள்ளி
திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!
கொங்கு அலர்தார்ச் சென்னி வெண்குடை போன்று இவ்
அம் கண் உலகு அளித்தலான்
ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு
மேரு வலந்திரிதலான்–மங்கல வாழ்த்துப் பாடல்
ஆகஸ்ட் 2 சனி
தீது இலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்
மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெருங் குணத்துக்
காதலாள்; பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ
–மங்கல வாழ்த்துப் பாடல்
ஆகஸ்ட் 3 ஞாயிறு
பொதியில் ஆயினும், இமயம் ஆயினும்
பதி எழு அறியாப் பழங்குடி கெழீ இய
பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும்
நடுக்கு இன்றி நிலைஇய என்பது அல்லதை- –மங்கல வாழ்த்துப் பாடல்
ஆகஸ்ட் 4 திங்கள்
வான் ஊர் மதியம் சகடு அனைய, வானத்துச்
சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட
தீவலம் செய்வத் காண்பார் கண் நோன்பு என்னை!
-மங்கல வாழ்த்துப் பாடல்
ஆகஸ்ட் 5 செவ்வாய்
மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசறு விரையே ! கரும்பே! தேனே!
அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!
பெருங்குடி வணிகன் பெரு மட மகளே!– மனையறம்படுத்தகாதை
ஆகஸ்ட் 6 புதன்
குழல் வழி நின்றது யாழே; யாழ் வழித்
தண்ணுமை நின்றது தகவே: தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே; முழவொடு
கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை –அரங்கேற்றுக் காதை
ஆகஸ்ட் 7 வியாழன்
ஐம்பெருங் குழுவும், எண்பேர் ஆயமும்
அரச குமரரும் பரத குமரரும்
கவர் பரிப் புரவியர், களிற்றின் தொகுதியர்
இவர்பரித்தேரினர், இயைந்து ஒருங்கு ஈண்டி — இந்திர விழவு ஊரெடுத்த காதை
ஆகஸ்ட் 8 வெள்ளி
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் – இந்திர விழவு ஊரெடுத்த காதை
ஆகஸ்ட் 9 சனி
சிமையத்து இமையமும், செழுநீர்க் கங்கையும்
உஞ்சை அம் பதியும், விஞ்சத்து அடவியும்
வேங்கட மலையும், தாங்க விளையுள்
காவிரி நாடும், காட்டிப் பின்னர் — கடல் ஆடு காதை
ஆகஸ்ட் 10 ஞாயிறு
நெடியோன் குன்றமும் தொடிதோள் பௌவமும்
தமிழ் வரம்பு அறுத்த தண் புனல் நல் நாட்டு
மாட மதுரையும், பீடு ஆர் உறந்தையும்
கலிகெழு வஞ்சியும், ஒலி புனல் புகாரும்
அரைசு வீற்றிருந்த உரைசால் சிறப்பின் – வேனிற் காதை
ஆகஸ்ட் 11 திங்கள்
கரியவன் புகையினும், புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
கால்பொரு நிவப்பின் கடுங்குரல் ஏற்றொடும்
சூன்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்ப — நாடுகாண் காதை
ஆகஸ்ட் 12 செவ்வாய்
வடிவேல் எறிந்த வான் பகை பொறாது,
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி! — காடுகாண் காதை
ஆகஸ்ட் 13 புதன்
இவளோ கொங்கச் செல்வி; குடமலையாட்டி;
தென்றமிழ்ப் பாவை; செய்தவக் கொழுந்து;
ஒருமாமணி ஆய், உலகிற்கு ஓங்கிய
திருமாமணி எனத் தெய்வம் உற்று உரைப்ப — வேட்டுவ வரி
ஆகஸ்ட் 14 வியாழன்
கோள்வல் உளியமும் கொடும் புற்று அகழா
வால்வரி வேங்கையும் மான் கணம் மறலா;
அரவும், சூரும், இரைதேர் முதலையும்
உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா –
செங்கோல் தென்னவர் காக்கும் நாடு — புறஞ்சேரி இறுத்த காதை
ஆகஸ்ட் 15 வெள்ளி
அருந்தெறல் கடவுள் அகன் பெருங் கோயிலும்
பெரும்பெயர் மன்னவன் பேர் இசைக் கோயிலும்
பால்கெழு சிறப்பின் பல் இயல் சிறந்த
காலை முரசக் கனைகுரல் ஓதையும்
நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும்— புறஞ்சேரி இறுத்த காதை
ஆகஸ்ட் 16 சனி
உலகு புரந்தூட்டும் உயர் பேர் ஒழுக்கத்து
புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக் கொடி —
‘புனல்யாறு அன்று; இது பூம் புனல்யாறு’ – – புறஞ்சேரி இறுத்த காதை
ஆகஸ்ட் 17 ஞாயிறு
நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலும்
உவணச் சேவல் உயர்த்தோன் நியமும்
மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும்
கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும் — ஊர்காண் காதை
ஆகஸ்ட் 18 திங்கள்
பெண்டிரும் உண்டியும் இன்பம் என்று உலகில்
கொண்டோர் உறூவும் கொள்ளாத் துன்பம் — ஊர்காண் காதை
ஆகஸ்ட் 19 செவ்வாய்
நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை
மாமறை முதல்வன் மாடலன் என்போன்
மாதவ முனிவன் மலைவலம் கொண்டு
குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து —- அடைக்கலக் காதை
ஆகஸ்ட் 20 புதன்
ஞான நன்னெறி நல்வரம்பு ஆகியோன்
தானம் கொள்ளும் தகைமையின் வருவோன்
தளர்ந்த நடையின் தண்டுகால் ஊன்றி
வளைந்த யாக்கை மறையோன்— அடைக்கலக் காதை
ஆகஸ்ட் 21 வியாழன்
கற்புக் கடம் பூண்ட இத் தெய்வம் அல்லது
பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்;
வானம் பொய்யாது; வளம் பிழைப்பு அறியாது;
நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது;
பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு — அடைக்கலக் காதை
ஆகஸ்ட் 22 வெள்ளி
என்னொடு போந்த இளங்கொடி நங்கை – தன்
வண்ணச் சீரடி மண்மகள் அறிந்திலள்; — அடைக்கலக் காதை
ஆகஸ்ட் 23 சனி
“அறவோர்க்களித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும்,
தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” (கொலைக்களக் காதை)
ஆகஸ்ட் 24 ஞாயிறு
மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர் பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தாரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே?
நாராயணா என்னா நாவென்ன நாவே?”
–சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை, இளங்கோ அடிகள்.
ஆகஸ்ட் 25 திங்கள்
பெரியவனை மாயவனைப் பேர் உலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார் – தம் கண்ணென்ன கண்ணே? –ஆய்ச்சியர் குரவை
ஆகஸ்ட் 26 செவ்வாய்
மூ உலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடிசேப்பத் தம்பியொடும் கான் போந்து,
சோ அரணும் போர்மடியத் தொல் இலங்கைக் கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே!
திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே! — ஆய்ச்சியர் குரவை
ஆகஸ்ட் 27 புதன்
“வடவரையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி
கடல் வண்ணன்! பண்டொரு நாள் கடல் வயிறு கலக்கினையே;
கலக்கிய கை அசோதையார் கடை கயிற்றால் கட்டுண்கை!
மலர்க்கமல உந்தியாய்! மாயமோ மருட்கைத்தே! — ஆய்ச்சியர் குரவை
Picture of Vaigai River and Dam
ஆகஸ்ட் 28 வியாழன்
தேரா மன்னா ! செப்புவது உடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்
வாயிற் கடைமணி நடு நா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடதான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர் புகார் என்பதியே— வழக்குரை காதை
ஆகஸ்ட் 29 வெள்ளி
அல்லவை செய்தார்க்கு அறங் கூற்றம் ஆம் என்னும்
பல்லவையோர் சொல்லும் பழுதன்றே — வழக்குரை காதை
ஆகஸ்ட் 30 சனி
பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்
மூத்தோர், குழவி, எனும் இவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்க — வஞ்சின மாலை
ஆகஸ்ட் 31 ஞாயிறு
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்மின்; தவம்பல தாங்குமின்.
Pumpukar now.
Contact swami_48@yahoo.com