திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி- சிவப்பிரகாச சுவாமிகள்! (Post.9629)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9629

Date uploaded in London – –  –21 May   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதியை இயற்றிய துறைமங்கலம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள்!

ச.நாகராஜன்

தமிழில் உள்ள பல சிறப்புக்களில் ஒன்று நிரோட்டக யமக அந்தாதி. நிரோட்டகம் என்றால் நிர் + ஒட்டகம் அதாவது உதடு ஒட்டாமல் இருப்பது. (நிரோஷ்டம் என்ற வடமொழிச் சொல்லுக்கு நிர் + ஒஷ்டம் என்று பொருள்; ஒஷ்டம் என்றால் உதடு) இப்படிப் பட்ட உதடு ஒட்டா எழுத்துக்கள் கொண்ட சொற்களை பொருள் வருமாறு இணைத்துப் பாடுவது நிரோட்டகச் செய்யுள் ஆகும்.

திருக்குறளில் இப்படி பல குறட்பாக்கள் நிரோட்டகமாக உள்ளன. எடுத்துக்காட்டாக ஒன்றை இங்குச் சுட்டிக் காட்டலாம்.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன் (குறள் எண் 341)

இப்படிப்பட்ட நிரோட்டகச் செய்யுளுடன் யமக வடிவைச் சேர்ப்பது நிரோட்டக யமகம் ஆகும். யமகம் என்றால் செய்யுளின் ஒவ்வொரு அடியிலும் முதல் சில எழுத்துக்கள் அல்லது சொற்றொடர் திருப்பித் திருப்பி வரவேண்டும், ஆனால் வெவ்வேறு பொருளில் வர வேண்டும். இப்படி வந்தால் யமகம் ஆகும்.

அந்தாதி என்றால் ஒரு செய்யுளின் இறுதி அடியில் வரும் இறுதிச் சொல்லோ அல்லது எழுத்தோ அடுத்த செய்யுளின் முதல் அடியின் முதல் சொல்லாக அமைந்து பாடல்களைத் தொடுக்க வேண்டும்.

இப்படி நிரோட்டகமாகவும் யமகமாகவும் அந்தாதியாகவும் அமைந்திருக்கும் ஒன்றையே நிரோட்டக யமக அந்தாதி என்று சொல்வோம்.

இப்படிப்பட்ட அபூர்வமான ஒரு நிரோட்டக யமக அந்தாதியை, திருச்செந்தில் முருகனைப் பாடிப் பரவி திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதியை அருளியவர் துறைமங்கலம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் ஆவார்.

ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் வேளாள  மரபினைச் சேர்ந்தவர். ஒரு முறை திருச்செந்தூரில்  முருகனை தரிசித்து பிரகாரத்தில் வலம் வந்த போது அங்கிருந்த புலவர் ஒருவர் அவரை வாதுக்கழைத்தார்.

அவர் சிவப்பிரகாச சுவாமிகள் திருநெல்வேலி சிந்து பூந்துறையில் இருக்கும் தர்மபுர ஆதீனத்து வெள்ளியம்பல சுவாமிகளிடம் பாடம் கேட்டவர் என்பதை அறிந்து அவரை தூஷணை செய்யவே சிவப்பிரகாச சுவாமிகள் அது பொறுக்காது வாதுக்கு வர ஒப்புக் கொண்டார்.

யார் ஒருவர் முதலில் நிரோட்டக யமக அந்தாதி ஒன்றை முதலில் பாடுகிறாரோ அவரே வென்றவர் என்பது தீர்மானிக்கப்பட்டது.

முருகனை வணங்கிய சிவப்பிரகாச சுவாமிகள் உடனே 30 பாடல்கள் அடங்கிய திருச்செந்தூர் நிரோட்டக யமக அந்தாதியைப் பாடி முடித்தார். வாதுக்கழைத்த புலவரோ ஒரு பாடலும் பாட முடியாமல் திகைத்திருந்தார்.

வாதில் தோற்ற அவர், சிவப்பிரகாச சுவாமிகளுக்கு அடிமையாக ஆனார், அவரை வெள்ளியம்பல சுவாமிகளிடம் அழைத்துச் சென்று ஒப்படைத்தார் சிவப்பிரகாச சுவாமிகள்.

நிரோட்டகத்தில் ப, ம,வ, உ, ஒ ஆகிய எழுத்துக்கள் வராமல் செய்யுள்களை அமைக்க வேண்டும்.

கட்டளைக் கலித்துறையில் அமைக்கப்பட்ட நூல் இது. காப்பு மற்றும் முதல் ஐந்து பாடல்களைக் கீழே காணலாம்.

கட்டளைக் கலித்துறை

காப்பு


கொற்ற வருணனை நின்றன் றுழக்கிய கொக்குருவைச்
செற்ற வருணனை யன்னசெவ் வேற்படைச் செந்திலர்க்கு
முற்ற வருணனை யந்தாதி யென்று முதிர்மதப்பேர்
பெற்ற வருணனை யானனத் தாதியைப் பேசுவனே.

நூல்


யானைக்கண் டங்கரி சென்றேத் தெழிற்செந்தி லின்றடைந்தே
யானைக்கண் டங்கரி யங்கங் கயிலையை யேய்ந்ததகை
யானைக்கண் டங்கரி சேரெண்டிக் காக்கினற் கீநலிசை
யானைக்கண் டங்கரி தாகிய சீர்க்கதி யெய்தினனே. 1

தினகர னந்த நனியிலங் காநின்ற செய்யநற்செந்
தினகர னந்த நிதியா யினனடற் சீரயிலேந்
தினகர னந்த கனைச்செற்ற தாளர் திகழ்கனகா
தினகர னந்த நடனர் தனயனென் சிந்தையனே. 2

சிந்தனை யாகத் திசையந் தணர்க்கிறை சேரகங்க
சிந்தனை யாகத் தரையளித் தாடரை சென்றிரந்த
சிந்தனை யாகத் திடையிடைந் தான்றந்த சேயளியாற்
சிந்தனை யாகத்த நற்செந்தி லாய்நினைச் சேர்ந்தனனே. 3

தனத்தலங் கார நிறைநா ரியரந் தரத்தசைகே
தனத்தலங் கார நிகழரங் காடச்செய் தன்னினயத்
தனத்தலங் கார தராயியங் கத்தக்க தண்செந்திற்கந்
தனத்தலங் காரனை யானய னேத்திடத் தங்கினனே. 4

தங்கந் தனங்க ளடையத் தனியெனைத் தள்ளியங்கே
தங்கந் தனங்க டரச்சென் றனரறிந் தாரிலைகா
தங்கந் தனங்க ளலர்காக்க ணாரெழிற் றண்செந்திலார்
தங்கந் தனங்க நிகர்செக்கர் செய்சஞ் சலத்தினையே. 5

28வது பாடலாக அமைவது இது:-

கணக்காக நாய்கடின் காய நிலையெனக் கண்ணியென்ன
கணக்காக நானலைந் தெய்த்தே னெழிற்செந்திற் கந்தநெற்றிக்
கணக்காக னார்தந்த நின்றனை யேயினிக் காதலினாற்
கணக்காக னாநிகர்த் தேயழி யங்கத்தின் காதலற்றே. (பாடல் எண் :28)

இதன் பொருளைப் பார்ப்போம்:-

கணம் என்றால் கூட்டம். காயம் என்றால் உடல். கண்ணி என்றால் நினைத்து என்று பொருள்.நெற்றிக் கண் அக்கு ஆகனார் என்றால்  எலும்பினை உடலில் அணிந்த நெற்றிக்கண்ணன் -சிவபிரான் ஆனவர் என்று பொருள். கண+ கா என்றால், நினைக்க காப்பாயாக என்று பொருள்.

பாடலின் திரண்ட பொருள்:

கூட்டமான காக்கை மற்றும் நாய்கள் தின்னும்படியான இந்த உடலை நிலையாக நிற்பது என்று நினைத்து என்ன கணக்காக நான் அலைந்து திரிந்து இளைத்தேன்! எழில் செந்தில் கந்த பிரானே! உடலில் எலும்பணிந்த நெற்றிக்கண் பிரானாகிய சிவபிரான் தந்த நின்னையே இனிமேல் காதலினால் அன்பு கலந்து நினைக்க நீ (எமக்கு வரம் தந்து), கனவு நிகர்த்த, அழிகின்ற இந்த அங்கத்தின் மீது தேகாபிமானம் இல்லாமல் செய்து, காத்தருள்வாயாக!

அருமையாக இப்படி ஒரு அந்தாதி அமைத்துப் பாடிய ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள வாழ்வு செம்மையான வாழ்வு! அவரைப் பற்றி நன்கு அறிவோமாக! (இன்னொரு கட்டுரை தொடரும்)

***

tags- திருச்செந்தில், நிரோட்டக, யமக அந்தாதி, சிவப்பிரகாச சுவாமிகள்,

துறைமங்கலம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் (Post No.9610)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9610

Date uploaded in London – –  –16 May   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

துறைமங்கலம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள்!

ச.நாகராஜன்

துறைமங்கலம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் தமிழ் மீது அளவற்ற காதல் கொண்ட சிவபக்தர். இவரைப் பற்றிய சுருக்கமான வரலாறு இங்கு தரப்படுகிறது.

காஞ்சிபுரத்தில் வேளாளர் மரபில் குமாரசாமி தேசிகர் என்பவர் குருவாக விளங்கி வந்தார். இவருக்கு சிவப்பிரகாசர், வேலையர், கருணைப்பிரகாசர், ஞானாம்பிகை என நான்கு மக்கள் பிறந்தனர். சிவப்பிரகாசரின் இளமைப் பருவத்திலேயே அவரது தந்தையாரான குமாரசாமி தேசிகர் மறைந்தார்.

அதன் பின்னர் அவர், தமது சகோதரர்களோடு திருவண்ணாமலை சென்றார். அங்கு தெற்கு வீதி திருமடத்தில் இருந்து கற்க வேண்டிய அனைத்து நூல்களையும் கற்றுத் தேர்ந்தார். இயற்கையிலேயே கவி பாடும் ஆற்றல் அவருக்கு அமைந்திருந்தது.

பின்னர், பெரம்பலூர் அருகில் உள்ள துறைமங்கலம் சென்று அங்கு சிவ பூஜையைச் சிறப்பாகச் செய்து வந்தார். அந்த ஊரின் பிரமுகரான அண்ணாமலை ரெட்டியார் அவரிடம் பெரிதும் ஈடுபாடு கொண்டார். அங்கேயே இருக்குமாறு அவர் வேண்ட அப்படியே சில காலம் அங்கிருந்தார் சிவப்பிரகாசர்.

பின்னர் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள சிந்துபூந்துறையில வாழ்ந்து வந்த தருமபுர ஆதீன வெள்ளியம்பல சுவாமிகளிடம் இலக்கண இலக்கியம் கற்க வேண்டும் என்ற ஆசையுடன் அவரை அணுகினார். அவரது தமிழறிவை சோதிக்க எண்ணிய ஆதீனம் ஒரு பரிட்சையை வைத்தார்.

“‘குவில் ஆரம்பித்து ‘கு என்ற எழுத்தில் முடிய வேண்டும். இடையில் ‘ஊருடையான் என்ற சொல் வர வேண்டும். இறைவனைப் புகழ்ந்து ஒரு பாடல் பாடுக என்றார் அவர்.

உடனே சிவப்பிரகாசர்,

“குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழல்

முடக்கோடு முன்னமணி வாற்கு – வடக்கோடு

தேருடையான் தெவ்வுக்குத் தில்லைதோல் மேற்கொள்ளல்

ஊருடையான் என்னும் உலகு என்னும் வெண்பாவை இயற்றிக் காட்டினார்.

இதனால் பெரிதும் மகிழ்ந்த ஆதீனகர்த்தர் அவருக்கு முறையாக இலக்கண பாடங்களைக் கற்பித்தார்.

இதற்கிடையில் அவரது குருவான வெள்ளியம்பல சுவாமிகளை அவமதித்த புலவரை திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி பாடி, வாதில் வென்று அவரை அடிமையாக்கித் தன் குருநாதரிடம் அழைத்துக் கொண்டு வந்து ஒப்படைத்தார்.

அண்ணாமலை ரெட்டியார் அவரை மணமுடிக்குமாறு வேண்டினார். ஆனால் அதற்கு சிவப்பிரகாசர் உடன்படவில்லை.

“சேய்கொண்டா ருங்கமலச் செம்மலுட னேயரவப்

பாய் கொண்டானும் பணியும் பட்டீச்சுரத்தானே                    நோய்கொண்டா லுங்கொள்ளலாம் நூறுவய தளவிருந்து             பேய்கொண்டாலுங் கொளலாம் பெண்கொள்ளல் ஆகாதே

என்று பாடி  தனது நிலையை உணர்த்தினார்.

ஆனால் அவரது தம்பிகள் திருமணம் செய்து கொள்ள இசைந்தனர். அவர்களுக்கு மணமுடித்து வைத்தார்.

இவர் இயற்றிய நூல்கள் ஏராளம். சுமார் 34 நூல்கள் பற்றி நமக்குத் தெரிய வந்துள்ளது.

கற்பனைக் களஞ்சியம் என்றும் கவி சார்வ பௌமா என்றும் நன்னெறிப் பிரகாசர் என்றும் இவர் போற்றிப் புகழப்படுகிறார். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் 32 ஆண்டுகளே வாழ்ந்து சிவபதம் அடைந்தார். வாழ்வின் இறுதிக் காலத்தில், புதுச்சேரிக்கு மேற்கே 16 கி.மீ. தொலைவிலுள்ள நல்லாற்றுாரில் தங்கியிருந்து அங்கேயே அடக்கமுற்றார்.

ஆகவே நல்லாற்றுார்ச் சிவப்பிரகாசர் என்ற பெயராலும் இவர் வழங்கப் பெறுகிறார்

இவர் இயற்றிய நூல்கள் பற்றிய விவரம்:-

திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி

இந்த நூல் பற்றிய கட்டுரை தனியே வெளியிடப்பட்டுள்ளது. அதைக் காணவும்.

இயேசு மத நிராகரணம்

இந்த நூல் கிறிஸ்தவ மதக் கொள்கைகளை ஆதாரங்களுடன் மறுக்கும் நூல். இது இப்போது கிடைக்கப் பெறவில்லை. சிவப்பிரகாசர், ராபர்ட் டி நோபிளுடன் வாதம் புரிந்ததாகச் சிலர் கூறுவர்; இல்லை வீரமாமுனிவருடன் அவர் வாதம் புரிந்தார் என்று மாறுபட்ட கருத்தும் கூறப்படுகிறது.

நால்வர் நான்மணி மாலை

சைவ சமயக் குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரைப் போற்றி எழுதப்பட்ட நூல் நான்மணி மாலை. காப்புச் செய்யுள், திருஞானசம்பந்தரைப் போற்றி 10 நேரிசை வெண்பாக்கள், திருநாவுக்கரசரைப் போற்ரி 10 கட்டளைக் கலித்துறைப் பாடல்கள், சுந்தரரைப் போற்றி 10 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள், மாணிக்கவாசகரைப் போற்றி 10 நேரிசை ஆசிரியப்பாக்கள் ஆகியவற்றைக் கொண்டது இந்த நூல். எடுத்துக்காட்டிற்கு கீழே 4 பாடல்கள் தரப்படுகின்றன.

 திருஞானசம்பந்தர்   (நேரிசை வெண்பா)


பூவால் மலிமணிநீர்ப் பொய்கைக் கரையினியற்
பாவால் மொழிஞானப் பாலுண்டுநாவால்
மறித்தெஞ் செவிஅமுதாய் வார்த்தபிரான் தண்டை
வெறித்தண் கமலமே வீடு.

 திருநாவுக்கரசர் (கட்டளைக் கலித்துறை)


வீட்டிற்குவாயில் எனுந்தொடை சாத்துசொல் வேந்தபோது
ஆட்டிற்கு வல்லன் ஒருவற்கு ஞான அமுதுதவி
நாட்டிற் கிலாத குடர்நோய் நினக்குமுன் நல்கினுமென்
பாட்டிற்கு நீயும் அவனுமொப் பீரெப் படியினுமே.

சுந்தரர்  (அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்)


படியிலா நின்பாட்டில் ஆரூரா! நனிவிருப்பன் பரமன் என்பது
அடியனேன் அறிந்தனன்வான்தொழும்ஈசன்நினைத்தடுத்தாட்கொண்டுமன்றித்
தொடியுலா மென்கைமட மாந்தர்பால் நினக்காகத் தூது சென்றும்
மிடியிலா மனைகள்தொறும் இரந்திட்டும் உழன்றமையால் விளங்கு மாறே.

மாணிக்கவாசகர் (நேரிசையாசிரியப்பா)


விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கட்
காரணன் உரையெனும் ஆரண மொழியோ
ஆதிசீர் பரவும் வாதவூர் அண்ணல்
மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ
யாதோ சிறந்த தென்குவீ ராயின் 5
வேதம் ஓதின் விழிநீர்ப் பெருக்கி
நெஞ்சநெக் குருகி நிற்பவர்க் காண்கிலேம்
திருவா சகமிங் கொருகால் ஓதிற்
கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள்
தொடுமணற் கேணியிற் சுரந்துநீர்ப் பாய 10
மெய்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி
அன்பர் ஆகுநர் அன்றி
மன்பதை உலகில் மற்றையர் இலரே.

நன்னெறி

மின்னெறி சடாமுடி விநாயகன் அடிதொழ
நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே!

என்ற கடவுள் வாழ்த்துடன் இன்னும் 40 நேரிசை வெண்பாக்களைக் கொண்டது இந்த நூல். எடுத்துக்காட்டிற்கு ஒரு வெண்பாவைப் பார்ப்போம். (36வது வெண்பா)

முதல் இரண்டு அடிகளில் தான் கூற வந்த கருத்தைக் கூறும் இவர் அடுத்த இரு அடிகளில் அதற்கான தக்க உவமை ஒன்றைக் கூறித் தன் கருத்தை விளக்குவது படிப்போர்க்கு இன்பம் பயக்கும்.

தக்கார்க்கே ஈவர் தகார்க்கு அளிப்பார் இல்என்று
மிக்கார்க்கு உதவார் விழுமியோர்எக்காலும்
நெல்லுக்கு இறைப்பதே நீரன்றிக் காட்டுமுளி
புல்லுக்கு இறைப்பாரோ போய்.

பிரபுலிங்க லீலை

இந்த நூல் 25 கதிகளைக் கொண்டது. 1158 பாடல்கள் இதில் உள்ளன. கற்பனை வளம் நிரம்பிய இந்த நூல் அரிய பல உண்மைகளைத் தெளிவுற விளக்கும் நூல். அனைவரும் விரும்பிப் படிக்கும் நூல் இது.

சோணசைல மாலை

திருவண்ணாமலையில் இருந்த போது இயற்றப்பட்ட நூல் இது.

சிவஞான பாலைய தேசிகர் நெஞ்சு விடு தூது,

நெஞ்சு விடு தூது என்பது 96 பிரபந்த வகைகளில் தூது பற்றிய நூல் ஆகும். உமாபதி சிவம் உள்ளிட்ட பெரியோர் பலரும் நெஞ்சைத் தூதாக விட்டு நூல்கள் இயற்றியுள்ளனர். சிவபிரகாசரும் தூது நூல்களில் ஒன்றாக அமையும் இந்த சிவஞான பாலைய தேசிகர் நெஞ்சு விடு தூது என்னும் நூலை இயற்றியுள்ளார்.

இவர் இயற்றிய இதர சில நூல்கள்

சிவநாம மகிமை

அபிடேக மாலை

நெடுங்கழி நெடில்

குறுங்கழி நெடில்

நிரஞ்சன மாலை

கைத்தல மாலை

சீகாளத்தி புராணத்தின் கண்ணப்பச் சருக்கம்

நக்கீரச் சருக்கம்

கூவப் புராணம்,

பழமலை அந்தாதி,

பிட்சாடன் நவமணிமாலை,

பெரியநாயகியம்மை விருத்தம்,

பெரிய நாயகியம்மைக் கட்டளைக் கலித்துறை,

வேதாந்த சூடாமணி,

சிவஞான பாலைய தேசிகர் தாலாட்டு,

தர்க்க பரிபாஷை சதமணிமாலை,

சிவப்பிரகாச விகாசம்,

திருவெங்கை அலங்காரம்,

திருவெங்கைக் கலம்பகம்,

திருவெங்கையுலா,

திருவெங்கைக் கோவை,

சிவத்தொண்டில் சிறந்து விளங்கி பல தமிழ் நூல்களை இயற்றித் தமிழுக்கும் சைவத்திற்கும் ஏற்றமளித்த சிவப்பிரகாசர் பொன்னடி போற்றுவோம்; அவர் புகழ் வளர்ப்போம்!

***

tags- துறைமங்கலம், சிவப்பிரகாச சுவாமிகள், 

சிவ சிவ என்றால் தீய கோள்களின் குற்றம் போகும் (Post No.4463)

Date: 6 DECEMBER 2017

 

Time uploaded in London- 5-52 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4463

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

சிவ நாம மகிமை

 

சிவ சிவ என்றால் தீய கோள்களின் குற்றம் போகும்; ஆயுள் பெருகும்!

 

ச.நாகராஜன்

 

1

சிவ நாம மகிமையை முற்றிலும் சொன்னவர் யாரும் இல்லை.

தமிழில் ஆயிரக்கணக்கான துதிப் பாடல்களால் சிவனைத் துதிக்கலாம்.

பன்னிரெண்டு திருமுறைகளும், ஏராளமான துதிப் பாடல்களும் இருக்கின்றன. இத்துணை துதிகள் இருந்தாலும் கூட, சிவ சிவ என்று சொன்னாலே அனைத்து தீவினைகளும் போகும்; நல்வினை சேரும்; அதன் விளைவாக அனைத்து நலன்களும் அடைய முடியும் என்று சிவப்பிரகாச சுவாமிகள் அருளியுள்ளார்.

பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் அருளாளர் சிவப்பிரகாச சுவாமிகள். இவரை ‘துறைமங்கலம் சிவபிரகாசர், கற்பனைக் களஞ்சியம், சிவன் அநுபூதிச் செல்வர் என்ற பெயர்களால் பக்தர்கள் போற்றிப் புகழ்வர்.

 

32 வயதே வாழ்ந்தார்; 34 நூல்களுக்கும் அதிகமான நூல்களை இயற்றினார்; ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தினார்.

தமிழ் இவர் வாக்கில் விளையாடியது; அற்புதங்களை நிகழ்த்தியது.

 

கிறிஸ்தவ மதக் கொள்கைகளை கண்டனம் செய்து இவர் இயற்றிய ஏசு மத நிராகரணம் அபூர்வமான ஒரு நூல். ஆனால் அதன் பிரதிகளில் ஒன்று கூட இப்போது கிடைக்கவில்லை.

ராபர்ட் டி நொபிலி என்ற கபட வேஷதாரியிடம் வாதிட்டு அவரை இவர் வென்றார் என்பர். சிலரோ வீரமாமுனிவருடன் வாதிட்டு அவரை இவர் தோற்கடித்தார் என்பர்.

தமிழ் கற்க விரும்பும் அனைவரையும் முதலில் சிவப்பிரகாச சுவாமிகளின் நூலைப் படிக்குமாறு தமிழ்ப் பண்டிதர்கள் கூறுவது மரபு.

 

அப்படி ஒரு அற்புதமான கற்பனை வளமும் கருத்து வளமும் சொல் வளமும் இலக்கண நயமும் இவரது நூல்களில் மிளிரும்.

சிறந்த சிவ பக்தரான இவர் இயற்றியுள்ள நூல்களில் ஒன்று தான் சிவ நாம மகிமை என்னும் குறு நூல். அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

 

2

சிவ நாம மகிமை என்ற இந்த நூல் பத்துக் கலிவிருத்தப் பாடல்களையும் இறுதியில் ஒரு அறுசீர் விருத்தத்தையும் கொண்டுள்ளது.

 

சிவ நாமம் எல்லையற்ற மகிமை கொண்டது. சாதாரணமாக சிவ சிவ என இரட்டித்து இந்த நாமத்தைக் கூறுவது வழக்கம்.

எல்லையற்ற பெருமைகளில் சிலவற்றை இந்த நூல் விளக்குகிறது.

 

வேத மாகமம் வேறும் பலப்பல

ஓதி நாளு முளந் தடு மாறன்மின்

சோதி காணிருள் போலத் தொலைந்திடுந்

தீதெ லாமுஞ் சிவசிவ வென்மினே

என்பது முதல் பாடல்.

 

வேதம் ஆகமம் போன்ற அனைத்தும் கற்பதற்குக் கடினம். அதை ஓதி உளம் தடுமாற வேண்டாம். எளிமையாக சிவ சிவ என்று கூறுங்கள் தீதெலாம் தொலைந்திடும் என்று அருளுகிறார் சுவாமிகள் இதி.

 

சாந்தி ராயண மாதி தவத்தினான்

வாய்ந்த மேனி வருத்த விறந்திடாஅப்

போந்த பாதக மேனும் பொருக்கெனத்

தீந்து போகுஞ் சிவசிவ வென்மினே

என்பது நான்காவது பாடல்.

சாந்திராயணம் உள்ளிட்ட கடினமான விரத முதாலனவற்றை மேற்கொண்டு உடலை ஏன் வருத்துகிறீர்கள்? எந்தப் பாதகமானாலும் பொருக்கெனப் போய் விடும் சிவ சிவ என்று சொன்னால் என்று அருளுகிறார் சுவாமிகள் இந்தப் பாடலில்.

தீய நாளொடு கோளின் செயிர்தபும்

நோய கன்றிடு நூறெனக் கூறிய

ஆயுள் பல்கு மறம் வளர்ந் தோங்குறுந்

தீய தீருஞ் சிவ சிவ வென்மினே

என்பது ஆறாவது பாடல்.

 

நவ கிரகங்களின் தோஷம் சிலரது ஜாதகத்தில் காணப்படும். சில நாள்கள் தீய பலனைத் தருவதாக அமையும். இந்த தீய நாளொடு, நவ கிரகங்களின் குற்றமும் தீரும் – சிவ சிவ என்று சொன்னால் என்று அருளுகிறார் சுவாமிகள் இதில்.

இறுதியாக உள்ள ஆசிரிய விருத்தப் பாடல் மூலம் எப்படிப்பட்ட இழிந்தவன் ஆனாலும் கூட சிவ நாமத்தால் உய்யலாம் என்று அறுதியிட்டு உறுதி கூறி மனித குலத்திற்கு ஆறுதல் அளிக்கிறார் சிவப்பிரகாச சுவாமிகள்.

 

 

இழிவுறுபுன் கருமநெறி யினனெனினுங்

கொலைவேட னெனினும் பொல்லாப்

பழிமருவு பதகனெனி னும் பதிக

னெனினுமிகப் பகரா நின்ற

மொழிகளுண்முற் றவசனாய்ச் சிவசிவவென்

றொரு முறைதான் மொழியில் லன்னோன்

செழியநறு மலரடியின் றுகளன்றோ

வெங்கள் குல தெய்வ மென்ப.

 

எப்படிப்பட்ட பாதகனாக இருந்தாலும், பதிதனாக – இழிந்தவனாக – இருந்தாலும் கூட சிவ சிவ என்று ஒரு முறை சொன்னாலும் கூட அவன் உய்வான் என்பதை அநுபூதி கண்ட பெரியவர் கூறுகிறார்.

 

 

சிவப்பிரகாச சுவாமிகளின் வரலாறு மிக அற்புதமானது. அவரது பாடல்களோ நம்மை மேல் நிலைக்கு உடனடியாக உயர்த்தக் கூடியது.

 

பாடலகளை ஓதுவோம். சிவ சிவ என்போம். நாளும் கோளும் நமக்குத் தீயன செய்யா; நல்லதே செய்யும் என்று நம்புவோம்.

 

சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ!

***